என் வானவில்-28

என் வானவில்-28

மித்ரா நீ யார் என்று தெரிந்த பிறகு, பாட்டி  எப்படியாவது உன்னை அவர்களிடம் கொண்டு வந்து சேர்த்த சொல்லிக்கேட்டாங்க. ஏற்கனவே உனக்கு உங்கள் சித்தியால் ஏகப்பட்ட பிரச்சனை, அதனால் அவர்களுக்கு தெரியாமல், உங்கள் அப்பா வீட்டை சேர்ந்தவர்களுக்கும் எந்த சந்தேகமும் வராமல் உன்னை பாட்டியிடம் கொண்டு வந்து சேர்த்த வேண்டும் என்று நான் நினைத்தேன்.

உன் அப்பாவிடம் இதைப்பற்றி பேசும்பொழுது அவசரப்படாமல் தெளிவாக ஒரு முடிவெடுக்க வேண்டும், சின்னதாக ஒரு விஷயம் தப்பானாலும், உங்கள் சித்தியாலும், உன் அப்பா வீட்டு ஆட்களாலும் உனக்கு பிரச்சனை வரும் என்று நினைத்து பொறுமையாக தான் இதை செய்ய வேண்டும் என்று முடிவு செய்தோம்.

உங்கள் சித்தியால் ஏற்கனவே தொல்லையாக இருக்கிறது என்று தெரிந்து கொண்ட பாட்டி, பக்கத்தில் இருந்து பார்த்துக்கொள்ள சொல்லி, என்னை உடனடியாக ஊருக்கு அனுப்பினார்கள். அப்படி நான் ஊருக்கு வந்த அன்று தான் உன் சித்தி பன்னீர் செல்வம் என்னும் ரவுடிக்கு உன்னை திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்தார்கள். நீ அன்றைக்கு மிகவும் மனதுடைந்து போனாய் என்று உன் அப்பா சொல்லி எனக்கு தெரிந்தது.

நானும் உன் அப்பவும் சேர்ந்து அன்றைக்கு இரவு உனக்கு உணவில் தூக்க மருந்து கொடுத்து உன்னை அங்கிருந்து கடத்தி கொண்டுவந்துவிடலாம் காலையில் நீ விழித்த பிறகு உன் அப்பாவை போனில் பேச வைத்து, நான் தான் உன்னை அனுப்பி வைத்தேன், உனது பாதுகாப்பிற்காக தான்  என்று உன்னிடம் சொல்ல வைத்துவிடலாம் என்று நினைத்து நாங்கள் அனைத்து ஏற்பாடுகளும் செய்திருந்தோம்.

ஆனால் நாங்களே எதிர்பார்க்காத நிகழ்வு, நீ அன்றைக்கு சாப்பிடவும் இல்லை, கூடவே தற்கொலைக்கு வேறு முயற்சி செய்தாய், நீ சாப்பிடாததால் அடுத்து என்ன செய்யலாம், இல்லை நீ இந்த மாதிரி ஏதாவது தவறான முடிவு எடுத்துவிடுவாயோ? என்ற சின்ன யோசனையில் தான் அன்றைக்கு நான் உங்கள் வீட்டின் கிணற்றடியில் அமர்ந்திருந்தேன். நான் நினைத்த மாதிரி தான் நடந்தது. அப்படி ஏதாவது நடந்தால் உன்னை நான் சமாதானம் செய்தோ, இல்லை உன் அப்பாவிடம் கூறியோ, எப்படியாவது உன்னை அங்கிருந்து வால்பாறைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று நினைத்தேன்.

நான் கூறுவதை புரிந்து கொள்ளும் நிலையில் நீ ஆரம்பத்தில் இல்லை. அதன் பிறகு உனக்கு என் மீது இருந்த எதோ ஒரு நம்பிக்கையில் நீ அங்கிருந்து கிளம்புவதற்கு சம்மதித்தாய். சரி இந்த விஷயம் உன் அப்பாவிற்கு தெரியும், அவரிடம் சொல்லி உன்னை ரயில்வே ஸ்டேஷனுக்கு அனுப்பி வைக்க சொல்லலாம் என்று நினைத்திருந்தேன். அதற்குள் அருண் வெளியில் வந்துவிட்டான். அவன் வந்ததை நானே எதிர் பார்க்கவில்லை. அவனுக்கு உங்கள் அப்பாவும் இதற்கு உடந்தை என்று தெரிந்தால் நீ யார் ? என்ன? ஏன் அப்பா உனக்கு இதெல்லாம் செய்கிறார்? என்ற கேள்வி எழும் , அதை தவிர்க்கவே உன் அப்பாவை இதற்குள் இன்வால்வ் செய்யவில்லை. அருணின் உதவியுடன் உன்னை ரயில்வே ஸ்டேஷனுக்கு அனுப்பி சுஜியிடம் சேர்த்துவிட்டேன்.

அதன் பிறகு நீயும் பத்திரமாக வால்பாறை வந்து சேர்ந்துவிட்டாய். ஆனால் பன்னீர்செல்வம் உன்னை தேட ஆரம்பித்தால் ஒருவேளை ஏதாவது சந்தர்ப்பத்தில்  நீ யார் என்ற உண்மை வெளியில் வந்துவிடுமோ என்பதால் தான் பாட்டியின் தயவில் போலீஸிடம் பணத்தை கொடுத்து அவனது பழைய கேஸை தோண்டி எடுத்து அவனை கைது செய்வதுப்போல பார்த்துக்கொண்டோம்.

நீ காணாமல் போனது உண்மை, இந்த திருமணம் பிடிக்காததால் தான் நீ காணாமல் போய்விட்டாய் என்பதை அனைவரும் நம்பவேண்டும் என்பதற்காக உன் அப்பா உன்னிடம் கூட பேசாமல் நீ காணாமல் போன விஷயம் அவருக்கும் தெரியாத மாதிரி போலீஸ் ஸ்டேஷனுக்கு வீட்டிற்கும் அலைந்து அனைவரையும் நம்ப வைத்தார்.

உன்னை இங்கு கொண்டு வந்து சேர்க்க நாங்கள் போட்ட திட்டம் ஒன்று, ஆனால்  நீயாகவே எங்களுக்கு ஒரு வழி செய்து கொடுத்தாய். இங்கு வந்த புதிதில் உன்னை படிக்க அனுப்ப வேண்டும் என்று சொன்னதற்கு காரணம் கூட பாட்டிக்கு பிறகு, இந்த சொத்துக்கள் அனைத்தையும் நீ தான் பாதுகாக்க வேண்டும், தனியாக இருந்து இவை அனைத்தையும்  நீ தான் சமாளிக்க வேண்டும் என்பதாலும் அதற்கு போதிய அறிவும் திறமையும் வேண்டும் என்று உன்னை போர்ஸ் செய்து கோர்சஸ் காலேஜ் எல்லாம் அனுப்பி வைத்தோம். உன்னிடம் சொல்லாமல் நான் இதை எல்லாம் செய்தது தவறு தான் ஆனால் அன்றைக்கு இருந்த சூழலில் பயந்திருந்த மித்ராவிற்கு நான் செய்தது தான் சரி என்று எனக்கு தோன்றுகிறது. தப்பாக இருந்தால் மன்னித்துக்கொள், என்று பிரகாஷ் மீண்டும் அவளிடம் மன்னிப்பு கேட்க,

எனக்கு கொஞ்ச நேரம் தனியாக இருக்கனும் போல் இருக்கிறது, என்று சொன்னவள் எழுந்து தனியாக தன் அறைக்குள் சென்று கதவை அடைத்துக் கொண்டாள்.

தெய்வநாயகிக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. அவரது அருகில் அமர்ந்த பிரகாஷ்,

பாட்டி கவலைப்படாதீர்கள் எப்போதாவது அவளுக்கு தெரியப்போகின்ற விஷயம் தானே அதற்கு ஏன் நீங்கள் இவ்வளவு வருத்தப்படுறீங்க? என்று கேட்க,

எனக்கு அதை பற்றி எந்த பிரச்சனையும் இல்லை பிரகாஷ், அவள் இந்த வீட்டு பொண்ணு இந்த வீட்டில் அவள் யாரோ மாதிரி இருப்பது எனக்கு கஷ்டமாக தான் இருந்தது. இனிமேல் அப்படி இல்லாமல் உரிமையோடு அவள் இருந்தால் அதுவே எனக்கு போதும்,

ஆனால் என் கவலை எல்லாம் நாம் யாருக்கு இது தெரியக்கூடாது என்று நினைத்தோமோ அவர்களுக்கு தெரிந்துவிட்டது. ஏன் காயத்ரி தனக்கு ஒரு குழந்தை இருப்பதை அவர்களிடம் இருந்து மறைத்தாள், என்பதையே நம்மால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. இது இவளது உயிருக்கு ஆபத்தாக முடிந்துவிடுமோ? என்று ஏனோ என் மனதிற்கு படபடவென இருக்கிறது என்று கூற,

பாட்டி அதெல்லாம் ஒன்றும் ஆகாது, மித்ராவிற்கு அப்படி எதுவும் ஆகாமல் நாம் பார்த்துக்கொள்வோம், எனக்கென்னவோ மூன்று வருடத்திற்கு முன் இங்கு வந்த மித்ரா மாதிரி தெரியவில்லை, இப்போது அவளிடம் நிறைய மாற்றங்கள் இருக்கிறது. நீங்களே பார்த்தீர்களே, அந்த ரோஹித்தை என்ன வாங்கு வாங்கினாள் என்று,…எனப்பிரகாஷ் கூற,

தெய்வநாயகி ஒரு புன்னகையுடன் உண்மை தான் நல்லாவே மாறிவிட்டாள். இதெல்லாம் உன்னால் தான் என்று சொல்லி தெய்வநாயகி அவனுக்கு நன்றி சொல்ல,

பார்த்தீங்களா? உங்கள் பேத்தி வந்தவுடன் எனக்கு தேங்க்ஸ் எல்லாம் சொல்லி என்னை மூன்றாவது மனிதனாக்குகிறீர்கள் என்று பிரகாஷ் செல்ல,

போடா படவா! எப்போதும் நீ தான் எனக்கு செல்ல பேரன், என்று பிரகாஷை கொஞ்சினார் தெய்வநாயகி. அதன் பின் ஞாபகம் வந்தவராக,ஆமாம்… நீ எப்படி லண்டனில் இருந்து சரியாக இந்த நேரத்திற்கு வந்தாய்? என்று கேட்க,

நான் லீவில் வந்தேன் பாட்டி, நான் ஊருக்கு போய்விட்டால் உடனே இங்கு வரமுடியாது அதனால் அடுத்தவாரம் தான் ஊருக்கு வருவதாக அம்மா அப்பாவிடம் சொல்லிவிட்டு நேராக இங்கு வந்தேன்.

உங்களுக்கெல்லாம் ஒரு ஷாக் சர்ப்ரைஸாக இருக்கும் என்று நினைத்தேன்,

ஆனால் அது எனக்கே ஷாக்கிங் சர்ப்ரைஸாக இருக்கும் என்று நான் நினைக்கவே இல்லை, என்று சொன்னவன், நீங்கள் ஒன்றும் கவலைப்படாதீங்க அந்த ரோஹிதோ இல்லை அந்த குடும்பத்தை சேர்ந்த யாரும்.. நம் மித்ராவை ஒன்றும் செய்ய முடியாது. நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொன்னான் பிரகாஷ்.

பிரகாஷ் கூறியதை போல அவனால் மித்ராவை வரப்போகும் ஆபத்துகளில் இருந்து பாதுகாக்க முடியுமா? என்று அறிய தொடர்ந்து வாசியுங்கள் ” என் வானவில்” 

-நறுமுகை

3

No Responses

Write a response