என் வானவில்-26

என் வானவில்-26

ரோஹித் சொன்னதைக் கேட்டு அனைவரும் உறைந்து போய்  நின்றனர்.

மித்ராவோ அவன் என்ன சொல்கிறான் என்பதே புரியாமல் நின்றவள்  பின் ஏதோ தோன்ற, நீங்கள் ஏதோ  பொய் சொல்கிறீர்கள், நீங்கள் தேவை இல்லாமல் பாட்டியை எதோ சிக்கலில் மாட்டிவிடப் பார்க்கிறீர்கள் நீங்கள் சொல்வதை எல்லாம் இங்கு யாரும் நம்புவதற்கு தயாராக இல்லை. முதலில் இங்கிருந்து வெளியில் செல்லுங்கள் என்று ரோஹித்தைப் பார்த்து கூறினாள்.

ரோஹித்தோ, கண்டிப்பாக ஆனால் உன் பாட்டியை,” உன்னை பார்த்து நான் கூறியது பொய் என்று சொல்ல சொல் நான் இங்கிருந்து போய் விடுகிறேன் என்றான் .

அது எங்கள் பிரச்சனை பாட்டி உங்கள் முன்னால் எதையும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை நீங்கள் முதலில் கிளம்புங்கள் என்று கூற,

அது முடியாது, ஏனெனில் நீ பாட்டியின் பெண்ணிற்கு மட்டும் சொந்தம் இல்லையே, என் மாமாவிற்கும் நீ சொந்த பொண்ணு தானே, உன்னிடம் அனைத்து விஷயங்களையும் கூறுவதற்கு எனக்கு முழு உரிமை உண்டு என்று கூற,

மித்ரா மேலும் குழம்பினாள்.

அந்த நேரம் சரியாக பிரகாஷ் வந்தான்.. வாசலிலேயே வாட்சமேனும் முருகனும் கூறியதைக் கேட்டு, யாராக இருக்கும் என்ற யோசனையோடு உள்ளெ வந்தவன் யார் பாட்டி யார் வந்திருப்பது என்று கேட்டுக்கொண்டே வந்தான்,

அங்கே அவனை யாரும் சற்றும் எதிர் பார்க்கவில்லை.

முக்கியமாக ரோஹித் இவன் எப்படி இங்கே வந்தான் இவன் வருவதற்கு முன் இந்த விஷயத்தை நான் பேசி முடித்துவிடலாம் என்று நினைத்தேனே  என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டிருக்க,

பிரகாஷை பார்த்ததும் வேகமாக ஓடிச்சென்று அவனை அணைத்துக்கொண்டாள் மித்ரா.

இதை பிரகாஷ் எதிர் பார்க்கவில்லை அவனை அணைத்துக்கொண்டு அழத்தொடங்கியவள் சத்யா,இவர் என்னென்னவோ சொல்கிறார், எனக்கு பயமாக இருக்கிறது முதலில் இவரை இங்கிருந்து போக சொல்லுங்கள் என்று கூற,

அவள் பயத்தில் தான் தன்னை வந்து அணைத்திருக்கிறாள் என்று பிரகாஷ் புரிந்துகொண்டு

மித்ரா, ரிலாக்ஸ் முதலில்  அவர் யார் என்ன என்று கேட்போம் என்று அவளை அமைதிப்படுத்தியவன் ரோஹித்திடம் திரும்ப,

ரோஹித்தோ, சத்யபிரகாஷ்…. ரைட், உனக்கும் இந்த விஷயம் எல்லாம் தெரியும் இல்லையா? என்று கேட்க,

பிரகாஷிற்கு முன் மித்ரா முந்திக்கொண்டு , உங்களுக்கு யாரிடமும் மரியாதை கொடுத்து பேச தெரியாதா? நீ வா போ என்று உங்கள் இஷ்டத்திற்கு பேசுகிறீர்கள், மரியாதை கொடுத்து பேசுவது என்றால் பேசுங்கள் இல்லையென்றால் முதலில் இந்த இடத்தை விட்டு வெளியில் செல்லுங்கள் என்று சொல்ல,

பிரகாஷ் அந்த மித்ராவை புதிதாக பார்த்தான்.

ரோஹித்தோ, ஓகே…..ஓகே…  மிஸ்டர் சத்யபிரகாஷ் …. உங்களுக்கு எல்லா விஷயமும் தெரியும், ஆனால் நீங்கள்  சங்கமித்ராவிடம் எதுவும் சொல்லவில்லை, அவளிடம் அவளது அடையாளத்தை மறைத்து அவளை இப்படி ஏமாற்றுவது தவறு என்று உங்களுக்கு தோன்றவில்லையா? என்று கேட்டான்.

அவளிடம் என்ன சொல்லவேண்டும் சொல்லக்கூடாது என்பதை நாங்கள் முடிவு செய்து கொள்கிறோம், இதை எல்லாம் பற்றி கேட்க நீங்கள் யார்? என்றான் பிரகாஷ்.

ரோஹித்தோ, நான் மித்ராவின் சொந்த அத்தை பையன் அதாவது, இங்கு இருக்கும்  பாட்டியம்மாவின் மகள் காயத்ரியைத் திருமணம் செய்துகொண்ட அசோகனின் தங்கை மகன் நான்,

அந்த நிமிடத்திலேயே பிரகாஷிற்கு  வந்திருப்பவன் யார்? அவன் என்ன நோக்கத்திற்காக வந்திருக்கிறான் என்பது புரிந்தது. ஆனால் எப்படி மித்ரா பற்றிய விஷயங்களை அவன் அறிந்து கொண்டான் என்பது அவனால் புரிந்து கொள்ள  முடியவில்லை.

இங்கிருக்கும் யாருக்கும் மித்ரா யார்? எங்கிருந்து வந்தாள் என்று அவளை பற்றி எதுவும் தெரியாது. பாட்டி பிரகாஷ், மித்ராவின் அப்பாவை தவிர, மித்ராவின் பின்புலம் வேறு யாருக்குமே தெரியாமல் இருந்தது. இவன் எப்படி அதை தெரிந்துகொண்டான் என்று ஒரு நிமிடம் யோசித்தவன் அதை யோசிப்பதற்கு இது நேரமல்ல என்று உணர்ந்து,

 சரி இப்போது அதற்கென்ன, என்று பிரகாஷ் கேட்க,

மித்ரா இப்போது கலவரத்துடன் பிரகாஷை திரும்பி பார்த்தாள்.

ரோஹித்தோ மித்ராவிடம், நான் தான் சொன்னேனே உன்னை சுற்றி இருக்கும் அனைவருக்கும் நீ யார் என்று தெரியும் உன்னிடம் உண்மையை மறைத்து பொய்யான வேடம் போடுகிறார்கள் இப்போதாவது நான் சொல்வதை கேள்,

நீ ஏன் இங்கு யாருமே இல்லை என்னும் எண்ணத்தில் இருக்க வேண்டும்? என்று பேசத்தொடங்க அவனை கையைக் காட்டி மறித்தவள்,

பாட்டியும் சத்யாவும் எனக்கு இந்த விஷயம் தெரியக்கூடாது, நான் இப்படி தான் இருக்க வேண்டும் என்று விருப்பப்பட்டால் நான் அப்படியே இருந்து கொள்கிறேன். என் அடையாளத்தை நீங்கள் ஒன்று எனக்கு தேடித் தரத் தேவை இல்லை முதலில் இங்கிருந்து வெளியில் செல்லுங்கள் என்று சொல்ல,

ரோஹித் ஏதோ சொல்ல வருவதற்குள் பிரகாஷோ,

அது தான் வெளியில் செல்லுங்கள் என்று இத்தனை முறை சொல்லிவிட்டார்களே இன்னும் எதற்கு இங்கே நின்று கொண்டிருக்கிறீர்கள்? நீங்கள் நினைத்து வந்த காரியம் நடக்காது முதலில் இங்கிருந்து வெளியில் செல்லுங்கள் என்று கூற,

பிரகாஷை விரோதத்துடன் பார்த்தவன் அங்கிருந்து வெளியேறினான்.

அதன் பின் தெய்வநாயகி கலவரத்துடன் அமர்ந்திருக்க,

அவரது அருகில் வந்த மித்ரா, பாட்டி யாரோ என்னவோ வந்து சொல்லிவிட்டு போகிறார்கள், நான் உங்களிடம் அவர் கூறியது உண்மையா? என்ன ? ஏதென்று எதுவும் கேட்கமாட்டேன். நீங்கள் ஏன் இப்படி இருக்கிறீர்கள் என்று கேட்க,

அம்மாடி… அப்படி இல்லைம்மா, யாருக்கு விஷயம் தெரியக்கூடாது என்று நினைத்து, உன்னிடம் உண்மையை மறைத்தமோ அவர்களுக்கே உண்மை தெரிந்துவிட்டது இனி உனக்கு சொல்வதில் எந்த பிரச்சனையும் இல்லை. இனியாவது நான் உன்னை எல்லாருக்கு என் பேத்தி என்று உரிமையோடு அறிமுகம் செய்வேன்.

இன்னும் சொல்லப்போனால் வெளிப்படியாக நீ யார் என்று சொல்லாமல் இருந்ததற்கு காரணமே இவர்கள் வந்து உறவு கொண்டாட கூடாது என்பதற்காக தான். இப்போது தான் அவர்களுக்கே தெரிந்துவிட்டதே இனி உன்னிடம் மறைத்து என்ன பயன்? பிரகாஷ் நீயே நடந்ததை கூறிவிடு என்று செல்ல,

மித்ரா தன் வாழ்க்கையில் என்ன தான்  நடக்கிறது? தான் யார்? என்ற குழப்பத்துடன் பிரகாஷை பார்த்தாள்.

பிரகாஷ் கூறப்போகும் உண்மை என்ன? “காயத்ரி அசோகன்” மகள் எப்படி சண்முகத்தின் மகளாக திருச்சிக்கு சென்று சேர்ந்தாள் என்று அறிய தொடர்ந்து வாசியுங்கள் என் வானவில்

                                  –நறுமுகை

5

No Responses

Write a response