New Tamil Novel | Meendum Malarvai

மீண்டும் மலர்வாய்-31

வெளியில் வந்தவுடன் செல்வகுமார் கணேஷிற்கு அழைத்தார். போனை எடுத்ததும் கணேஷ் கடுப்புடன் யோவ், அந்தம்மாக்கு மனசுக்குள்ள பெரிய நீதி தேவதைனு நினைப்பா? ஒரு நாள்ல தீர்ப்பு சொல்றன்னு சொல்லுது. என்னையா நினைச்சுட்டு இருக்கு அந்தம்மா மனசுல?

சார் கோவப்படாதீங்க, ஏன் அப்படி சொன்னாங்கனு எனக்கே தெரியலை.

இந்த மாதிரியெல்லாம் நடந்ததே கிடையாது. இவ்வளோ பெரிய கேஸ்ல ஒரு நாள்ல தீர்ப்பு சொல்லுவாங்கனு யாரு எதிர்ப்பார்த்தா? அந்தம்மா மனசுல ஏதோ வெச்சுட்டுதான் இப்படி முடிவு எடுத்துருக்காங்க.

அது சரி அந்தம்மா பாட்டுக்கு அந்த மூனுபேரையும் தூக்கி உள்ள போட்டுட்டா கூடவே நானும் சேர்ந்து உள்ள போக வேண்டியதுதான். எதையாவது பண்ணி நிறுத்தியா.

இங்க பாருங்க சார் அந்த மூனுபேரு உங்களுக்கு மட்டும் கிடையாது நிறைய பேருக்கு நிறையா வேலை செஞ்சுருக்காங்க. அவங்க உள்ள போனா உங்க தல மட்டுமில்ல நிறைய பேரோட தலைகளும் உருளும். அதனாலதான் அவங்க உள்ள போகாம இருக்க உங்கள மாதிரி  நிறைய பேரு என்ன இந்த கேஸ்ஸை எடுத்துக்க சொல்லி கட்டாயப்படுத்துனாங்க.

ஆனா பப்ளிக்ல இவ்வளோ பெருசா இருக்க இந்த கேஸ்ஸை அவ்ளோ சீக்கிரம் நம்ம ஜெயிச்சுட முடியாது. நான் ஏதாவது குட்டைய குழப்பி வாய்தானு இழுத்து இந்த கேஸ்ஸை கொஞ்சம் நீர்த்து போக செய்யலாம்னு நினைத்தேன்.

ஆனா அந்தம்மா ஒரு நாள்ல தீர்ப்பு சொல்றன்னு குண்ட தூக்கி போட்டு போயிருச்சு. நான் சொல்றத கேளுங்க உங்கள விட பெரிய ஆளுங்கயெல்லாம் இதுல சம்மந்தபட்டிருக்காங்க. அவனுங்க அப்படியே ஜெயிலுக்கு போனாலும் அவர்களை எப்படி கவனிக்கனுமோ அந்த விதத்துல கவனிச்சு எந்த விஷயமும் வெளிய வராத மாதிரி பார்த்துப்பாங்க. இதுக்குமேல இந்த கேஸ்ல நீங்க ஆர்வம் காட்டி மாட்டிக்காதீங்க.

என்னையா சொல்ற கண்டிப்பா அவனுங்க உள்ள போயிருவாங்களா? சார் எனக்கென்னவோ அப்படிதான் தோணுது. இந்த கேஸ்ல இதுக்குமேல நம்ம விளையாடவெல்லாம் முடியாது. இருந்திருந்து இவனுங்கள கொண்டு வந்து ஸ்கூல்லயா விடுவீங்க? என்ன வேலை பார்த்து வெச்சுருக்கானுங்க. முன்னாடி மாதிரி என்ன வேணா பண்ணிட்டு தப்பிச்சு போயிரலாம்னு கிடையாது. அதுவும் இது சின்ன பொண்ணு விஷயம். இன்வெர்ஸ்டிகேட் பண்ண இன்ஸ்பெக்டர்ல இருந்து ஒருத்தனும் கொஞ்சம் கூடவிட்டு கொடுத்து காசுக்கு மயங்கல. காசச்சு, நீயாச்சு நான் உண்மையைத்தான் பேசுவனு ஒரே குறியா நிக்குறானுங்க.

ஏன் உங்க வாட்ச்மன், அவ்வளவு வறுமையிலும், அவன் பொண்டாட்டிய கடத்தி வெச்சுட்டு நம்ம சொல்ற மாதிரி சொல்ல சொன்னதுக்கு, நான் எல்லாம் வாழ்ந்து முடிச்சுட்டேன். என் பொண்டாட்டி செத்தாலும் பரவாயில்ல, நான் உண்மையைத்தான் சொல்லுவ. நான் அந்த பொண்ணுக்கெதிரா பொய் சொல்லிட்டு வீட்டுக்கு போனா என்னோட பொண்டாட்டியே எனக்கு விஷம் வெச்சு கொன்றுவானு சொல்றான்.

அவன் அளவுக்கே நம்மனால ஒன்னும் பண்ண முடியலைங்கறப்ப இந்த கேஸ்ல நம்ம ஒன்னும் பண்ண முடியாது சார். என்னக்கேட்ட இந்த கேஸ்க்கும் உங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லங்கற மாதிரி நீங்க பேசாம ஒதுங்கிக்கோங்க. இவனுங்களுக்காக சுப்ரீம் கோர்ட்ல அப்பில் பண்றனு போய் எங்கப்பா குதுருக்குள்ள இல்லனு நீங்களே காட்டி கொடுத்திடாதீங்க.

சரி சரி அங்க என்ன நடக்குதுன்னு பார்த்துட்டு எனக்கு சொல்லு.

சார் அதெல்லாம் நான் தகவல் கொடுக்குறேன். அந்த இன்ஸ்பெக்ட்டர் இர்ஃபான் கிட்ட கவனமா இருங்க. அவன் உங்கமேல தான் குறியாயிருக்கான். எனக்கு தெரிஞ்ச சோர்ஸ் சொன்னதை வெச்சு சொல்ற அவன் உங்களோட நிறைய இல்லிகள் ஆக்டிவிட்டீஸ்யெல்லாம் டீப்பா நோண்டிட்டு இருக்கான். எனக்கு தெரிஞ்சு நீங்க பேசாம இந்த கேஸ்ல தீர்ப்பு வந்தவுடன், மீடியாவை அழைத்து இவர்கள் இப்படி ஒரு மோசமான ஆளுங்கன்னு நான் நினைக்கவே இல்லனு சொல்லி அந்த பொண்ணுக்கு ஆதரவா பேசற மாதிரி பேசி தயவு செஞ்சு உங்க இமேஜ்ஜை காப்பாத்திக்குங்க என்று கூறிய செல்வகுமார் போனை வைத்துவிட்டார்.

கணேஷிற்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. யாருமே நீதிபதி ஒரு நாளில் தீர்ப்பு சொல்லுவார் என்று எதிர்பார்க்கவே இல்லை. காளிதாஸே குழப்பத்தில் தான் இருந்தார். இர்ஃபான், காளிதாஸ், ஆதித்யன், சஞ்சனா நால்வரும் பேசிக்கொண்டிருந்தனர்.

என்ன சார், மேடம் சேம் டே ஜட்ஜ்மென்ட்னு சொல்றாங்க?

எனக்கும் அதான் ஒண்ணுமே புரியலை. நானும் இப்படி சேம்டே ஜட்ஜ்மென்ட் கேள்விப்பட்டதே கிடையாது. மேடம் மனசுல என்ன வெச்சுருக்காங்கன்னே தெரியலையே?

அதே சமயம் மாயா வரவும் சஞ்சனா வேகமாக மாயாவிடம் சாரி மாயா, எங்களுக்காக கோர்ட்க்கு வந்து இப்படி ஆகுனு நான் நினைக்கவேயில்ல என்று கூற, மேம் நீங்க எதுக்கு என்கிட்ட சாரி சொல்றீங்க, கோர்ட்டுனு வந்தா இந்த மாதிரியெல்லாம் நடக்குனு நமக்கு தெரியாதா? நீங்க இதை பற்றி நினைச்சு கவலைபடாதீங்க என்று மாயா கூற, ஆதியோ மிகுந்த தருமசங்கடத்தில் இருந்தான்.

மாயாவோ ஆதியிடம் சார் நீங்க ஏன் இப்படி இருக்கீங்க? அந்த ஆளுக்கு பேச எதாவது காரணம் வேணுமே. இன்ஸ்பெக்ட்டர் சாரும் லாயர் சாரும் சொன்ன மாதிரி விலை கொடுத்து வாங்க முடியாத விட்னஸ் நான் மட்டும்தான். அவங்க என்ன அட்டாக் பண்ணதான் நினைப்பாங்கனு நம்ம எதிர்பார்த்ததுதான்.

கரெக்ட் தான் மாயா, ஆனா இருந்தாலும் கொஞ்சம் எல்லை கடந்து போயிடுச்சு. இதுனால உன்னோட வாழ்க்கையை பாதிச்சுட்டா? சார் அவளோ எல்லாம் யோசிக்காதீங்க, அவர் பாவம் காசு போட்டு டெல்லில இருந்து வந்துருக்காரே இவ்வளவு கூட பேசலனா எப்படி?

அது சரி டெல்லில இருந்து வந்து உன்கிட்ட மாட்டிருக்கான் அந்த ஆளு என்று காளிதாஸ் கூற, அனைவருமே சற்று இறுக்கம் தளர்ந்து புன்னைகைத்தனர்.

பின்பு கோர்ட் நேரம் தொடங்க அனைவரும் கோர்டுக்குள் சென்றனர். கோர்ட் நேரம் தொடங்கியதும் பேச தொடங்கிய செல்வகுமார், யுவர் ஹானர் முழுசா விசாரணை முடிக்காத நிலையில நீங்க இன்னிக்கே தீர்ப்புனு சொன்னது ஏத்துக்க முடியாது. எல்லாருக்கும் நீதி சமமானது. எங்க சைடுல இருந்து நாங்க முறையானா விளக்கங்களும் ,சாட்சிகளை சமர்ப்பிக்கவும் எங்களுக்கு நேரம் வேணும். இப்படி ஒரே நாள்ல தீர்ப்புனு சொன்னா எப்படி?

மிஸ்டர்.செல்வகுமார் உங்கள விட அதிக நாள் இந்த கேஸ்ல நான் இன்வால்வ் ஆகியிருக்கேன். பாதிக்கப்பட்ட பாரதிக்கிட்ட வாக்கு மூலம் வாங்கியிருக்கேன். இன்னும் சொல்ல போனா இந்த விசாரணை வரைக்கும் காத்திருந்திருக்கனுன்னு அவசியமே கிடையாது. பாரதியோட வாக்குமூலம் ரொம்ப தெளிவா இருந்துச்சு, கூடவே வாக்குமூலம் கொடுக்கற சமயத்துல பாரதி தெளிவாதான் இருந்தாங்கனு டாக்டர் செர்டிபிகேட்டு இருக்கு. அதேமாதிரி ஐடின்டிபிகேஷன் பரேட் நடக்கும் போதும் அந்த பொண்ணு தெளிவா இருந்ததுக்கான செர்டிபிகேட்டு எங்ககிட்ட இருக்கு. மேலும் அந்த ஸ்கூலோட வாட்ச்மேன் கொடுத்த வாக்குமூலம் போலீஸாரால பதிவு செய்யப்பட்டிருக்கு.

நீங்க வேணுனா அந்த வாட்ச்மேனை குறுக்கு விசாரணை செய்யலாம். உங்களுக்கு இன்னும் ஒருமணி நேரம்தான் டைம். நீங்க அந்த ஒரு மணிநேரத்துல என்ன ஃப்ரூப் பண்ணணுன்னு நினைக்குறீங்களோ செய்யலாம். இந்த கேஸ்க்கு இன்னிக்கு கண்டிப்பா தீர்ப்பு சொல்லியே தீருவேன். என்ன நினைக்குறீங்க? இன்னும் ஒரு ஆண்டு இந்த கேஸ்ஸை இழுத்து, ஒரு ஒரு தடவ இந்த கேஸ் ஹியரிங்க்கு வரப்பவும் அந்த பொண்ண பத்தியும், அன்னிக்கு நடந்த சம்பவத்தை பத்தியும் திரும்ப திரும்ப டிவி, மீடியாவுல எல்லாம் போட்டு அந்த பொண்ணோட வாழ்க்கையையும் இந்த கேஸ்ஸையும் முடிச்சிடலானுநினைக்குறீங்களா?

இது ரொம்ப சென்சிட்டிவான விஷயம். பாரதி ரொம்ப சின்ன பொண்ணு, நீங்க பொறுமையா சாட்சிய தேடிட்டு வர வரைக்கும் அந்த பொண்ணோட வாழ்கையை நான் தினம்தினம் சித்ரவதைய மாத்த முடியாது.

இன்னிக்கு இருக்க சூழ்நிலையில சோசியல் மீடியாவோட தாக்கம் ரொம்ப அதிகம். அதுவும் இந்த மாதிரி ஒரு கேஸ்ல ஆளாளுக்கு ஒரு கருத்து சொல்லி அந்த குடும்பத்தையும், அந்த பெண்ணையும் நடந்த சம்பவத்துல இருந்து வெளிய வரவே விட மாட்டாங்க.

அதுக்கெல்லாம் இங்க இடமே கிடையாது. நான் இன்னும் கொஞ்ச நாள்ல ரிட்டையர் ஆக போறேன். இப்ப நான் கொடுக்க போற தீர்ப்புனால எந்த பாதிப்பு வந்தாலும் எனக்கு கவலையில்ல, இந்த தீர்ப்ப நான் எமோஷனலா எடுக்கல. எல்லா சாட்சியங்களையும் அலசி ஆராய்ந்து தான் தீர்ப்பு சொல்ல தயாராயிருக்கேன்.

உங்களுக்கு வேணுனா இங்க இருக்க சாட்சியங்களை குறுக்கு விசாரணை செஞ்சுக்கலாம். அதை தாண்டி இன்னிய நாள் தாண்டி இந்த கேஸ் ஒரு நாள்கூட நடக்காது.

யுவர் ஹானர் நீங்க இப்படி சொன்னா, நாங்க சுப்ரீம் கோர்ட்ல அப்பீல் பண்ண வேண்டியதாயிருக்கும்.

மிஸ்டர். செல்வகுமார் இன்னும் தீர்ப்பு சொல்லவேயில்லை. தீர்ப்பு யாருக்கு சாதகமா வருனு உங்களுக்கு தெரியாது. இருந்தும் நாங்க கண்டிப்பா சுப்ரீம் கோர்ட்ல அப்பீல் பண்ணுவோன்னு சொல்றத வெச்சே தீர்ப்பு உங்களுக்கு சாதகமா வராதுங்குறதுல தெளிவா இருக்கீங்க, அப்ப தப்பு உங்க பக்கம்தான்னு ஒத்துக்குறீங்களா?

யுவர் ஹானர் நான் அப்படி சொல்லல….

வேற எப்படி சொல்ல வரீங்க? ஆரம்பத்துல இருந்து விசாரிச்ச இன்ஸ்பெக்ட்டர்ல இருந்து எல்லாரையுமே ஃபேக் சாட்சிங்கனு சொல்றீங்க? விசாரணை சரியா பண்ணலைன்னு சொல்றீங்க? வாக்குமூலம் வாங்குனதும், ஐடின்டிபிகேஷன் ஃபரேட்க்கு போனது நான் தான், அப்ப நான் சொல்ல போற தீர்ப்பும் ஃபேக்குனுதா சொல்லபோறீங்களா? நீங்க அப்படி சொல்லலாம், சுப்ரீம் கோர்ட்ல அப்பீலும் பண்ணலாம். அது உங்க கட்சிகாரரோட உரிமை. அதை யாரும் தடுக்கமுடியாது. ஆனா இந்த கோர்ட் ரூம்ல என்னோட இந்த கேஸ்க்கு இன்னிக்கு நான் தீர்ப்பு சொல்லியே தீருவேன் என்று கூறிவிட, செல்வகுமாருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.

அவருக்கு தெரியும் வாட்ச்மேனை அழைத்தால் தனக்கு சாதகமாக ஒரு வார்த்தை கூட கூறப்போவதில்லை என்று தெரியும், இருந்தாலும் செல்வகுமார் பாரதிக்கு டிரீட்மென்ட் கொடுத்த டாக்டர், இர்ஃபான், அந்த வாட்ச்மேனை குறுக்கு விசாரணை செய்தார்.

செல்வகுமார் எதிர்பார்த்தது போல அவருக்கு சாதகமாக ஒரே ஒரு பாயிண்ட் கூட கிடைக்கவில்லை. யாரும் தவறி கூட ஒரு வார்த்தை மாற்றியோ, தவறாகவோ பேசவில்லை. இனி இந்த கேஸ்ல இவர்கள் தப்பிக்க வழியேயில்லை என்று உணர்ந்த செல்வகுமார் அமைதியாகிவிட, ஜட்ஜ் தீர்ப்பை வாசிக்க ஆரப்பித்தார்.

இந்த கேஸ் ஒரு சென்சிட்டிவான கேஸ். ஏற்கனவே சில மாதங்களாக இந்த கேஸ் எல்லா தரப்புலயும் பரபரப்பா பேசப்பட்டு வருது. பாதிக்கபட்டது ஒரு சின்ன பெண் என்பதாலும், மேலும் எல்லாருடைய கவனத்துளையும் இருந்த ஒரு ஸ்டேட் மீட்ல கலந்துக்க வந்த பெண் என்பதாலும் இது நிறைய கவனத்தை தன் பக்கம் ஈர்த்திருக்கு. தொடக்கத்திலிருந்தே போலீஸ் இந்த கேஸ்ஸை ரொம்ப சின்ஸியராவும், நேர்மையாகவும் விசாரிச்சிருக்காங்க. ஜோடிக்கப்பட்ட சாட்சியங்கள் இல்லாத இந்த கேஸ், ஒரு நேரடியான கேஸ். இந்த கேஸ்ஸை உடனடியா முடிவுக்கு கொண்டுவராம, வாய்தா கொடுத்துக்கிட்டிருந்த பாதிக்கப்படப்போறது அந்த பொண்ணுதான்.

நாட்டுல சட்டமும் ஒழுங்கும் மக்களை காப்பாத்துறதுக்காகத்தான், முக்கியமா நீதி துறைங்குறது, ஒரு குற்றவாளியை தண்டிக்கறதவிட, எந்த நிரபராதியும் தண்டிக்கப்படக்கூடாதுங்குறதுல ரொம்ப கவனமா இருக்கும். அந்த வகைல பாரதிங்குற ஒரு சின்னபொண்ணு எந்த தப்புமே செய்யாம பாதிக்கப்பட்டிருக்க. இன்னைக்கு பாரதிக்கு துணையாக சரியான நேரத்தில் நீதி வழங்கப்பட்டால்தான் நாளைக்கு பாரதி மாதிரியான பெண்கள் தங்களுக்கு அநீதி நிகழும்போது தைரியமா அதை எதிர்த்து நிற்பாங்க. இன்னைக்கு இந்த நீதி தாமதிக்கப்பட்டால், திரும்ப திரும்ப இந்த விஷயம் விவாதிக்கப்பட்டு பாரதியும், அவள் குடும்பமும் என்றும் இந்த துயரத்தில் இருந்து வெளியில் வரமுடியாது, எனவே இந்த கேஸ்ஸை ஒரு முடிவுக்கு கொண்டுவரவேண்டியது அவசியமாகிறது. இவர்கள் மூன்றுபேரும் தான் பாரதிய வன்கொடுமை செய்தார்கள் என்பதற்கு எல்லா சாட்சியங்களும் தெளிவா இருக்கு. அதுல எந்த சந்தேகமும் இல்லை. ஒரு சிறு பெண்ணை இப்படி மிருகத்தனமாக வன்புணர்வு செய்ததற்காக இவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கிறேன்.

மேலும் எந்த சோசியல் மீடியாக்களிலும் எந்த டிவி, பத்திரிகைகளிலும் இதை பற்றிய விவாதங்கள், பாரதியை பற்றிய கருத்துகள் பரப்புவதும் கூடாது என்று இந்த கோர்ட் தீர்ப்பளிக்கிறது. மீறி இதை ஒரு விவாத பொருளாக கொண்டு விவாதங்களை மேற்கொண்டால் அவர்கள் கைது செய்யப்பட வேண்டும் என்று போலீஸ்க்கு உத்தரவிடப்படுகிறது. மேலும் திரு. செல்வகுமார் மாயாவிடம் நடந்துகொண்ட முறைக்காக அவர் மீது நடவடிக்கை எடுக்க பார் கவுன்சிலுக்கு இந்த கோர்ட் பரிந்துரைக்கிறது.

அதித்தியனுக்கும், சஞ்சனாவிற்கும் தீர்ப்பு மிக பெரிய ஆறுதலை கொடுத்தது. அவர்களுக்கு தண்டனை கிடைப்பது நிச்சயம் என்று உணர்ந்திருந்த செல்வகுமார் தனக்கு இப்படி ஒரு பின்விளைவை எதிர்பார்க்கவில்லை.

எந்த பத்திரிகைகளிலும், சோசியல் மீடியாக்களிலும் விவாதம் செய்ய கூடாது என்று கோர்ட் தீர்பளித்ததை பலரும் வெகுவாக பாராட்டினர். ஒருநாளில் தீர்ப்பு வழங்கியது மட்டுமில்லாமல் அந்த தீர்ப்பை ஏன் ஒரு நாளில் வழங்க வேண்டும் என்கின்ற அவசியத்தையும் விளக்கிய அந்த தீர்ப்பு மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

வீட்டிற்கு வந்தவர்களை பாரதி ஆவலுடன் பார்க்க கோர்ட்டில் நடந்த முழுவதையும் சொல்லாமல் ஆனால் இந்த நிலைமைக்கு ஆளாகியவர்களுக்கு தண்டனை கிடைத்துவிட்டதாகவும் அதே போல் இனி இதை பற்றி யாரும் பேச போவதில்லை என்றும் கூற பாரதிக்கு ஏதோ ஒருவிதமான அமைதிகிட்டியது.

கோர்ட்டில் கேஸ் முடித்திருக்கலாம்,குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைத்திருக்கலாம். ஆனால் இதுநாள் வரை வீட்டிற்குள்ளேயே இருந்து தன்னை பிடித்தவர்கள், தன்னை காக்கவேண்டுமென்று நினைப்பவர்களோடு மட்டுமே இருந்த பாரதி இனி அடுத்து எப்படி இந்த சமூகத்தை எதிர் கொள்ள போகிறாள்? அறிய தொடர்ந்து வாசியுங்கள் மீண்டும் மலர்வாய்….

-நறுமுகை

58

No Responses

Write a response