என் வானவில்-11

என் வானவில்-11

மித்ராவிற்கு காய்ச்சல் விட்டிருந்தாலும் இன்னும் கொஞ்சம் நாளைக்கு ரெஸ்ட் எடுக்க வேண்டும் என்று டாக்டர் சொல்லிவிட, அவளை எந்த வேலையும் செய்ய விடாமல் பார்த்துக்கொண்டனர் பிரகாஷும் தெய்வநாயகியும்.

 ஒரு வாரம் அப்படி செல்ல, அன்று காலை எப்போதும் போல அவுட் ஹவுசில் இருந்து வேலையை ஆரம்பிக்க வந்த வள்ளி,வீட்டிற்குள் நுழையும்போது வீட்டுவாசலில் கோலம் போட்டுக்கொண்டிருந்த மித்ராவை பார்த்து கன்னத்தில் கை வைத்து நின்றுகொண்டாள்.

மித்ராம்மா!இவ்வளவு பெரிய கோலத்தை நீங்க தனியாகவா போட்டீங்க.. எப்போ இருந்து போட்டுக்கொண்டிருக்கீங்க என்று அவள் கேட்க,

 அவளை பார்த்து புன்னகைத்த மித்ரா இப்போ தான் கொஞ்சம் நேரத்திற்கு முன்பு தான் ஆரம்பித்தேன்  வள்ளி அக்கா என்றாள்.

கோலத்தை பார்த்துக்கொண்டிருந்த வள்ளியின் நாசியில் எதோ புது வாசனை வர, இது என்ன வாசம் நம் வீட்டிற்குள் இருந்து என்று கோலத்தை பார்ப்பதை விட்டுவிட்டு அப்படியே வீட்டிற்குள் சென்றாள். அங்கு பூஜை அறையில் சாமி படங்களுக்கு பூ போட்டு அலங்கரித்து விளக்கு ஏற்றி இருந்தது.இதை யார் செய்தது என்று நினைத்தவள் வேகவேகமாக தெய்வநாயகியின் அறைக்கு சென்றாள். 

அப்பொழுது தான் குளித்துவிட்டு  வெளியில் வந்த தெய்வநாயகி வள்ளி வேகவேகமாக வருவதை பார்த்து

 என்ன வள்ளி என்று கேட்க,

 அம்மா இப்போ தான் நீங்க குளித்துவிட்டு வருகிறீர்களா? அப்போ நம் பூஜை அறையில் யார் அவ்வளவு அழகா பூவை அடுக்கி அலங்கரித்தது? என்று கேட்க,

பூஜை அறையில் பூ அடுக்கி இருக்கிறதா … வா போய் பார்க்கலாம் என்று வள்ளியுடன் நடந்தார்.

அதே சமயம் தன் மாடி அறையில் இருந்து இறங்கி வந்தான் பிரகாஷ்.

இவர்கள் இருவரும் காலையிலேயே என்ன இவ்வளவு வேகமாக போகிறார்கள் என்று அவர்களை பின் தொடரந்தான்,

அவர்கள் பூஜை அறையை பார்த்த தெய்வநாயகிக்கு, மகிழ்ச்சியாக இருந்தது.

எவ்வளவு அழகா இருக்கிறது இது நம் பூஜை அறையா? என்று அவர் நினைத்துக்கொண்டு இருக்க, அவர் பின்னால் வந்து நின்ற பிரகாஷ்,

யார் பாட்டி இதை எல்லாம் செய்தது, வள்ளி நீயா என்று கேட்க,

நீங்க வேற சும்மா இருங்க பிரகாஷ் தம்பி வெளியில் வந்து பாருங்க மித்ரா பாப்பா எவ்வளவு பெரிய கோலம் போட்டுக்கொண்டிருக்கிறது என்று, இது  எல்லாம் மித்ரா பாப்பா வேலை என்று கூற,

மூவரும் வெளியில் வந்து பார்த்தனர்.

அப்போது தான் மித்ரா கோலம் போட்டுவிட்டு எழுந்திரிக்க, அவள் போட்டிருந்த மிகப்பெரிய கோலத்தை பார்த்து தெய்வநாயகி இவ்வளவு பெரிய கோலத்தையும் நீயேவா போட்டாய்? என்று கேட்க,

பிரகாஷோ அங்க ரெண்டு வீட்டிற்கும் போட்டுக்கொண்டிருந்தாங்க இங்க இரண்டு வீடு கிடைக்கவில்லை என்று ஒரே வீட்டிற்கு சேர்த்து மொத்தமாக போட்டிருக்காங்க என்று மித்ராவை கிண்டல் செய்தான்.

அதை கேட்ட, மித்ரா சும்மா என்னை ஓட்டிக்கொண்டு இருக்காதீர்கள் ஒரு வாரம் உடல்நிலை சரி இல்லை என்று ரெஸ்ட் எடுத்தேன். அப்படியே இருக்க முடியுமா, எப்போதும் செய்கின்ற வேலை தானே என்றாள்.

தெய்வநாயகியோ அதுசரி இப்போ தான் உடம்பு சரி ஆகிக்கொண்டிருக்கிறது. இந்த வால்பாறை குளிரில் இந்த நேரத்திற்கு எழுந்து தலைக்கு குளித்துவிட்டு வெளியில் உட்கார்ந்து கோலம் போட்டுக்கொண்டிருக்கிறாய், என்று கடிந்து கொண்டார்.

அதெல்லாம் எனக்கு ஒன்றும் ஆகாது பாட்டி, நான் உங்களுக்கு காபீ போட்டிருக்கிறேன், வாங்க போய் குடிக்கலாம் என்று கூப்பிட்டாள் மித்ரா,

நீ எத்தனை மணிக்கு எழுந்த, விடிய விடிய முழிச்சிட்டு இருந்தாயா? பூஜை ரூமை அடுக்கி இருக்கிறாய்? காபீ வேற போட்டிருக்க,அதுல இந்த கோலம் வேற என்று தெய்வநாயகி கேட்க,

நான் அங்கே இருக்கும்பொழுது இதை விட நேரமாக எழுந்து நிறைய வேலை செய்வேன். இங்க எனக்கு அவ்வளவு வேலை எல்லாம் இல்லை. சும்மா இருக்க போர் அடிக்கிறது பாட்டி, என்று கூறி அவர்களோடு உள்ளே நடந்தாள்.

அவர்களோடு செல்லாமல் பின்னே வந்த பிரகாஷ் தன் மொபைலில் அந்த கோலத்தை புகைப்படம் எடுத்தான். பின் சிறிது நேரம் அங்கு நின்று பார்த்து விட்டு உள்ளே வந்தான்.

அங்கு தெய்வநாயகியோடு பேசிக்கொண்டு காபி அருந்திக்கொண்டிருந்த மித்ராவை பார்த்தவன் அவளை கேலி செய்யும் எண்ணத்தில் தெய்வநாயகியிடம் பாட்டி எதற்கும் உங்கள் பேத்தியை பார்த்து, பத்திரமாக வைத்திருங்கள். இங்கு  கோலம் போடுவது போதவில்லை என்று அப்படியே பக்கத்து எஸ்டேட் வரை போய்விட போகிறாள் என்று சொல்ல,

அவனை பாத்தவள், தெய்வநாயகியிடம் பாருங்க பாட்டி எப்போ பாரு என்னை ஏதாவது சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள் என்றாள்.

தெய்வநாயகியோ, அவன் சொல்லுவது இருக்கட்டும் இப்போ நீ எதற்கு, அவனை வாங்க போங்க என்று மொட்டையாக கூப்பிடுகிறாய்? அவன் பெயரை சொல்லி கூப்பிடு என்றார்.

பெயரை சொல்லியா  அவர் என்னை விட பெரியவர் இல்லையா? எப்படி பெயர் சொல்லி அழைப்பது? என்று கேட்டாள் மித்ரா.

உடனே பிரகாஷ் ஆமாம் எனக்கு 60 வயது ஆகிடுச்சு இல்லையா நீ எப்படி பெயர் சொல்லி கூப்பிடுவது என்று அவளை கேலி செய்தான்.

அவள் ஒன்றும் சொல்லாமல் அமைதியாகி இருக்க,

அது தான் பாட்டி சொல்லியாச்சே, என்னை இனி நீ சத்யானு கூப்பிடு என்றான்.

அதை கேட்டுக்கொண்டு அங்கே வந்த வள்ளியோ உங்கள் பெயர் பிரகாஷ் தான தம்பி ஏன் சத்யா என்று அழைக்கனும் என்று கேட்க,

அவளை மித்ரா அறியாமல் முறைத்த பிரகாஷ், என் பெயர் சத்ய பிரகாஷ் அதனால் சத்யா என்றும் கூப்பிடலாம் என்று கூறினான்.

மித்ரா இனிமேல் என்னை சத்யா என்று தான் கூப்பிடுற, என்று கூறிவிட்டு அந்த இடம் விட்டு நகர்ந்தான்.

போகும் அவனையே பார்த்தவள் எதையும் ஆர்டராக தான் சொல்லுவது என்று மனதிற்குள் அவனுக்கு பழிப்பு காட்டினாள்.

அவள் முகத்தையே வாஞ்சையாக பார்த்துக்கொண்டிருந்த தெய்வநாயகி உனக்கு எதற்கு இந்த வேலை எல்லாம் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கலாம் இல்லையா? என்று கேட்டார்.

எத்தனை நாளைக்கு பாட்டி ரெஸ்ட்டே எடுப்பது என்று சொன்னவள். அன்று முழுவதும் வள்ளியோடு சேர்ந்து கொண்டு சமையல் வேலை, தோட்டத்தில் காய் பறிப்பது, பூ பறிப்பது என்று எதையாவது செய்துகொண்டிருந்தார். அவள் அப்படி துறு துறு என்று இருப்பதை பார்த்த தெய்வநாயகி எப்படி தான் இந்த பொண்ணை கறிச்சு கொட்ட அவளுக்கு மனசு வந்ததோ என்று அவளது சித்தியை திட்டிக்கொண்டிருந்தார்.

அன்று மாலை மித்ராவை தேடிக்கொண்டு வந்த பிரகாஷ் மித்ராவிடம் கொஞ்சம் தூரம் நடந்துவிட்டு வரலாமா என்று கேட்டான்.

ஹ்ம்ம் என்று வேகமாக தலையை ஆட்டியவள் தெய்வநாயகியிடம் சொல்லிக்கொண்டு நடக்க தயாரானாள்.

வந்ததில் இருந்து வீட்டிற்குள்ளேயே இருந்தவளுக்கு அந்த மலை பிரதேசத்தில் நடப்பது மிகவும் பிடித்திருந்தது. சிறிது நேரம் அமைதியாக  வந்த பிரகாஷ்,

மித்ரா, நாளை இருவரும் கோயம்பத்தூர் போவோம் அங்கு உனக்கு காலேஜில் பி.காம் சீட் ரெடியாக இருக்கிறது. போய்  பார்த்துவிட்டு உனக்கு ஹாஸ்டெல் பீஸ் எல்லாம் கட்டிவிட்டு வந்துவிடலாம் என்றான்.

என்னது காலேஜா????  நான் எல்லாம் எங்கேயும் வரவில்லை, நான் பாட்டியை பார்த்துக்கொண்டு இங்கேயே இருந்துவிடுகிறேன் என்றாள்.

என்னது? பாட்டியை பார்த்துக்கொண்டு இங்கேயே இருக்கிறாயா? பாட்டியை பார்த்துகொள்ளவா உன்னை இவ்வளவு தூரம் கஷ்டப்பட்டு கூட்டிக்கொண்டு வந்தேன் என்று கேட்க,

பாட்டியை விட்டுவிட்டு நான் எங்கேயும் போக மாட்டேன் என்றாள்.

இதை கேட்டால் பாட்டியே உன்னை திட்டுவார்கள். இங்க பாரு நீ படிக்கணும் என்று ஆசைப்பட்டாய், அதற்காக தானே உன்னை அவ்வளவு ரிஸ்க் எடுத்து அங்கே இருந்து இங்கு அனுப்பி வைத்தேன். இப்போ என்னவென்றால் பாட்டியை பார்த்துக்கொள்கிறேன், நான் படிக்கமாட்டேன்னு சொல்கிறாய் ? என்று அவன் அவளிடம் கோபமாக கேட்க,

சிறிது நேரம் அமைதியாக இருந்தவள் அப்படி இல்லை, ஆல்ரெடி என்னை நீங்க இங்க அனுப்பியதற்கு, பின் உடல்நிலை வேறு சரி இல்லாமல் போய் ……. உங்களுக்கு அதிக செலவு இதில் காலேஜ் என்றால் நிறைய செலவு ஆகும் அதெல்லாம் வேண்டாம் என்றாள்.

ஒரு நிமிடம் அவளையே அர்த்தத்தோடு பார்த்தவன், நான் சொல்லுவதை கேளு மித்ரா பாட்டிக்கு ஏகப்பட்ட சொத்து இருக்கிறது. ஆனால் இதை எல்லாம் பத்திரமாக பார்த்துக்கொள்ள அவர்களுக்கு ஆள் கிடையாது நீயோ இப்போ தான் ஸ்கூல் முடித்திருக்கிறாய் உன்னை நம்பி எல்லாம் இவ்வளவு பெரிய பொறுப்பை அவர்களால் கொடுக்க முடியாது. இதே நீ மூன்று வருடம் கஷ்டப்பட்டு படித்து முடித்துவிட்டால் பாட்டிக்கு ஹெல்ப்பா இதை  நீ பார்த்துக்கொள்ளலாம் இல்லையா? பாட்டி உனக்கு பீஸ் கட்டட்டும். நீ படித்து முடித்ததும் பாட்டிக்கு பிரீயா வேலை செய் அவ்வளவு தான் என்றான் பிரகாஷ்.

என்ன தான் அவன் சொன்னாலும் ஏற்கனவே தன்னால் அவர்களுக்கு கஷ்டம் என்று நினைத்துக்கொண்டிருந்த மித்ராவால்  அவ்வளவு செலவையும் இன்னொருவர் செய்து படிக்க செல்ல அவளுக்கு விருப்பம் இல்லை. அவள் அமைதியாகவே வர,

இங்க பாரு மித்ரா, நீ கண்டிப்பாக படிக்க போற, உன்னை திரும்ப இங்க வீட்டு வேலை செய்வதற்காக நான் அனுப்பவில்லை. நீ படிக்கவேண்டும் என்று ஆசைப்பட்டாய். நீ படிக்க தான் நான் உன்னை இங்கு அனுப்பி வைத்தேன். இப்படியே வீட்டில் உட்கார்ந்துகொண்டு வள்ளியுடன் சேர்ந்துகொண்டு சுற்றிக்கொண்டிருக்கலாம் என்று நினைக்காதே ஒழுங்கா நாளை என்னுடன் காலேஜ் வந்து ஜாயின் பண்ணும் வழியை பாரு என்றான்.

அவள் அமைதியாக வர,

நான் சொல்லுவது உன்ன காதில் விழுகிறதா இல்லையா?என்றான்

தலையை மட்டும் ஆட்டியவள் இருந்தாலும் முழு மனதோடு இல்லாமல் அவனோடு நடந்து வந்தாள்.

வீட்டிற்கு வந்ததும் எதுவும் பேசாமல் அமைதியாகி தெய்வநாயகியின் அருகில் அமர்ந்துகொண்டாள்.

போகும்போது கலகலப்பாக சென்றவள் இப்போது இப்படி அமைதியாக இருக்கவும் என்னடா பிரகாஷ் பண்ணின குழந்தையை, போகும்போது கலகலப்பாக இருந்தாள் இப்போது என்னவென்றால் அமைதியாக இருக்கிறாள்? என்று கேட்க,

ஆமாம் ஆமாம் உங்கள் குழந்தையை நான் தான் அப்படியே மிரட்டிவிட்டேன்… நீங்களே கேளுங்க பாட்டி காலேஜ்க்கு படிக்க போ என்று கூறினால் வீட்டிலேயே இருந்து உங்களை பார்த்துக்கொள்கிறாளாம், உங்களுக்கு ஓகேவா ? ஓகே என்றால் எனக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை என்று சற்று எரிச்சலுடனே கூறினான் பிரகாஷ்.

அவளை திரும்பி பார்த்த தெய்வநாயகி அப்படியா மித்ரா சொன்னாய்?  என்று கேட்க, ஆமாம் பாட்டி நான் இங்கேயே இருந்துகொள்கிறேன். எனக்கு காலேஜ் எல்லாம் வேண்டாம் என்றாள்.

சரியாக போச்சு போ, நீ, பி.காம் முடித்து, எம்.காம் முடித்து இந்த பிசினெஸ் எல்லாம் பார்த்துக்கொள்வாய், நானும் அப்படியே உன் மேற்பார்வையில் வீட்டில் ரெஸ்ட் எடுக்கலாம் என்று பார்த்தால் நீ என்ன இப்படி சொல்லவிட்டாய் என்று தெய்வநாயகி கேட்க,

பாட்டி பி. காம், எம். காம் முடித்த ஆட்களா உங்களுக்கு கிடைக்க மாட்டார்கள்? என்னை படிக்க வைத்து தான் இதை நான் செய்ய வேண்டுமா என்ன? என்று கேட்டாள்.

பிரகாஷும், தெய்வநாயகியும், ஆனாலும் இவள் இவ்வளவு புத்திசாலியாக இருந்திருக்க வேண்டாம் என்று மனதோடு நினைத்துக்கொண்டனர்.

அதை வெளியில் காட்டிக்கொள்ளாமல் இங்க பாரு சொல்வதை கேளு, காலேஜ் போ, உனக்கு வெளியுலகம் தெரிய வேண்டாமா? நீ  இப்படியே இருந்துவிட முடியுமா,

காலெஜ்ஜில் என்ன அங்கேயேவா இருக்க போகிறாய், திங்கட்கிழமை போய்விட்டு வெள்ளிக்கிழமை வந்துவிட போகிறாய்,  சனி, ஞாயிறு என்னுடன் இருக்க போகிறாய் என்று  இதமாக கூறினார் தெய்வநாயகி.

அவளுக்கும் படிக்க வேண்டும் என்று ஆசை இருந்தது. ஆனால் எப்படி அவர்களுக்கு சிரமம் கொடுப்பது என்று அமைதியாக இருந்தவள் அவர்கள் இருவரும் மாற்றி மாற்றி கூறவும் சரி படித்து முடித்துவிட்டு அதன் பிறகு பாட்டியை பத்திரமாக பார்த்துக்கொள்ளவேண்டும்,

வீக்கெண்ட்ஸ்ல வரும்பொழுதும் பாட்டிக்கு வேண்டியதை பார்த்து பார்த்து செய்துவிட வேண்டும் என்று தன் மனதோடு முடிவு செய்துகொண்டவள் மெல்ல சம்மதம் என்று தலை ஆட்டினாள். அவள் அப்படி சொல்லவும், அப்போ நாளை காலை நாம் காலேஜ் போகலாம் என்று கூறிவிட்டு அங்கிருந்து வேகமாக சென்றான் பிரகாஷ்,

கோபமோ ஏன் இப்படி போகிறார் என்று யோசித்தவள் அப்போதைக்கு எதுவும் சொல்லாமல் இரவு சாப்பாடு முடிந்த பின்பு அவனை தேடி சென்றாள்,

அவன் மாடியில் பால்கனியில் அமர்ந்திருக்க, அவனிடம் சென்றவள்,

என்மீது கோபமா? என்று கேட்டாள்,

அவள் அப்படி கேட்டும் அவன் திரும்பாமல் இருக்க,

மீண்டும் உங்களிடம் தான் கேட்கிறேன், என் மீது கோபமா? என்று கேட்டாள்.

அவன் அப்போதும் பதில் சொல்லாமல் இருக்க,

மெதுவாக சத்யா என் மீது கோபமா? என்று கேட்டாள் .

அப்போது திரும்பியவன் ஓஹ் நீ என்கிட்ட்தான் கேட்டியா? என்றான்.

 இவன் வேண்டுமென்றே செய்கிறான் என்று அவளுக்கு அப்போது தான் புரிந்தது. நான் உங்களை தான் கூப்பிடறேன்னு உங்களுக்கு தெரியும் பிறகு ஏன் வேண்டுமென்றே இப்படி பண்றீங்க என்றாள்.

நான் மதியம் தானே சொன்னேன், என்னை சத்யா என்று பெயர் சொல்லி கூப்பிடு என்று, இப்படி மொட்டையாக பேசினால் நான் யாரை என்று நினைப்பது? என்றான்.

அவள் அதற்கு எதுவும் சொல்லாமல் என் மீது கோபமா என்றாள் ?

எதற்கு கோபம் என்றான் பிரகாஷ்,

நான் காலேஜ் போக மாட்டேன் என்று சொன்னதற்கு?

போக மாட்டேன் என்று சொன்னால் உன்னை யாரு இப்போ விட போகிறார்கள்? உன்னை காலேஜ் சேர்த்திவிட்டு தான் நான் வேலைக்கு போக போகிறேன். அதானால் எனக்கு கோபம் எல்லாம் இல்லை.

வேறு ஒன்று யோசித்துக்கொண்டிருக்கிறேன், நீ அதை பற்றியெல்லாம் நினைக்காமல் போய் தூங்கு என்று அனுப்பி வைத்தான்.

சரி என்றவள் கொஞ்சம் தூரம் சென்றுவிட்டு திரும்பி அவனை பார்த்து குட் நைட் சத்யா என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டாள்.

செல்லும் அவளையே பார்த்துக்கொண்டிருந்த பிரகாஷ், அவள் படித்து முடிக்கும் வரை வாயை திறக்கக் கூடாது என்று தனக்குள்ளேயே சொல்லிக்கொண்டு தனது அறையை நோக்கி நடந்தான்.

பிரகாஷ் மித்ராவிற்காக வைத்திருக்கும் திட்டங்கள் என்ன? பிரகாஷ் வாயையே திறக்க கூடாது என்று தனக்குள்ளாக மறைக்கும் விஷயம் என்ன? என்று அறிய தொடர்ந்து வாசியுங்கள் ” என் வானவில்”.

நறுமுகை

4

No Responses

Write a response