என் வானவில்-31

என் வானவில்-31

தெய்வநாயகி மித்ராவை அறிமுகம் செய்துவைக்க ஏற்பாடு செய்ததும் பிரகாஷ் மித்ரா பற்றிய  உண்மைகளை தன் வீட்டில் சொல்லிவிடுவது என்று முடிவு செய்தான். நாளை யாரோ மூலமாக அவர்களுக்கு தெரிந்து அவர்கள் வருத்தப்படுவதைவிட தானே சொல்லிவிடுவது நல்லது என்று நினைத்து அந்த வாரமே திருச்சிக்கு சென்றான்.

திருச்சிக்கு சென்றவன் தன் அப்பா அம்மா இருவரையும் அமர வைத்து, ஆரம்பத்தில் இருந்து நடந்த அனைத்தையும் கூற, அவர்கள் இருவரும் அதிர்ந்து போய் அமர்ந்திருந்தனர்.

இவ்வளவு நடந்திருக்கு  நீ எங்ககிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லலையே? ஏண்டா இப்படி  செய்த என்று பிரகாஷின் அம்மா கேட்க, அவனது அப்பாவோ நீ கொஞ்சம் அமைதியா இரு லட்சுமி அவன் செய்ததில் என்ன தவறு இருக்கு,

அன்று இங்கு நடந்ததெல்லாம் பார்த்த நானே அந்த பொண்ணை யாருக்கும் தெரியாமல் ஒரு ஹாஸ்டலில் சேர்த்து படிக்க வைத்தால் என்ன என்று நினைத்தேன்.ஆனால் என் வயதும் நான் இருக்கின்ற பதவியும் அது  செய்ய முடியாது என்று தோன்றியது. அதை இன்று இவன் செய்திருக்கிறான், நீ கொஞ்சம் யோசிச்சி பாரு அன்னைக்கு மட்டும் இவன் சரியான நேரத்தில் மித்ராவை காப்பாத்தாமல் போயிருந்தால் ஒன்று இன்னைக்கு அந்த பொண்ணு உயிருடன் இருந்திருக்காது  இல்லை அந்த புவணாவிடம் மாட்டி தினம் தினம் சித்திரவதை பட்டிருக்கும் அதற்கு இவன் செய்ததில் என்ன தப்பு இருக்கிறது? அந்த பொண்ணை அதற்குரிய இடத்தில் தானே கொண்டு சேர்த்தியிருக்கான் என்றார் ராஜராஜன்.

ஜெயலட்சுமியோ அது சரிங்க ஆனால் அதை நம்மிடம் சொல்லிவிட்டு செய்திருக்கலாம் இல்லையா இடையில் இவனுக்கு எதாவது பிரச்சனை வந்திருந்தால் … என்று புலம்ப,

அது தான் ஒன்றும் நடக்கவில்லையே  அதை பற்றி ஏன் இப்போ கவலைப்படுகிறாய்? என்று சொல்ல,

ஜெயலட்சுமியோ அதுவும் சரி தான் என்று நினைத்து பின் பிரகாஷிடம் மித்ரா எப்படிடா இருக்கா? பார்த்து மூணு வருஷம் ஆச்சு நல்லா வளர்ந்து இருப்பா இல்லையா? என்று கூற,

ஆமாம்மா அவள் நல்லா இருக்கா,  பாட்டி அவளை ரொம்ப நல்லாவே பார்த்துகிறார்கள் அங்கு போனதில் இருந்து அவள் சந்தோசமாக தான் இருக்கிறாள், என்று கூறியவன் பாட்டி அவர்களையும் அந்த விழாவிற்கு அழைத்ததாக கூறி பாட்டிக்கு போன் செய்து கொடுத்தான்,

தெய்வநாயகி, ஜெயலட்சுமியிடமும் ராஜராஜனிடமும் நடந்தவற்றிற்காக மன்னிப்பு கேட்டார். என்ன தான் இருந்தாலும் உங்களிடம் கேட்காமல் பையனை இந்த வேலைகளை எல்லாம் நான் செய்ய சொல்லியிருக்க கூடாது, என்று மன்னிப்பு கேட்க,

நீங்கள் வயதில் பெரியவர் இதற்கெல்லாம் போய் நீங்கள் மன்னிப்பு கேட்பதா? மித்ராவும் எங்களுக்கு ஒரு பொண்ணு மாதிரி தான் அவள் நன்றாக இருந்தால் சரி,என்று ராஜராஜனும் ஜெயலட்சுமியும் கூறி கண்டிப்பாக விழாவிற்கு வருவதாக சொல்லி போனை வைத்தனர்.

அதன் பின் விழாவிற்கான ஏற்பாடுகள் செய்வதற்காக பிரகாஷ் ஒரு வாரத்திற்கு முன்னரே வால்பாறை சென்றுவிட,

ஜெயலட்சுமியும் ராஜராஜனும் விழாவிற்கு முந்திய நாள் வருவதாக கூறினர். சண்முகமும் அலுவலகத்தில் இருந்து வேலை இருப்பதாகவும் அதற்கு வெளியூர் செல்ல வேண்டும் என்று கூறி விழாவிற்கு செல்ல தயாரானார்.

தெய்வநாயகி கூறியதன் பெயரில் பிரகாஷ், ராம், சுஜி அவனது அக்கா ஸ்வாதி அனைவரையும் அழைத்திருந்தான். தெய்வநாயகி, மித்ராவிடம் கூறாமல் பிரகாஷிடம் சொல்லி மித்ராவின் தோழி அபிராமியையும் வர சொல்லியிருந்தார். அவர்கள் அனைவரும் ஒரு நாள் முன்னரே வந்துவிட,மித்ராவிற்கு நாள் மிக கலகலப்பாக சென்றது.

ஜெயலட்சுமியை பார்த்ததும் ஓடி சென்று கட்டிக்கொண்டவள் எப்படி இருக்கீங்க ஆன்ட்டி உங்களை எல்லாம் நான் ரொம்ப மிஸ் பண்ணுறேன், என்று கூறினாள். ஜெயலட்சுமியோ நான் உனக்கு என்ன ஆனதோ என்று எவ்வளவு கவலைப்பட்டிருப்பேன் தெரியுமா? ஒரு நாள் கூட இந்த பையன் நீ பத்திரமாக தான் இருக்கிறாய் என்று என்னிடம் சொல்லவே இல்லை. என்று சொல்லி தன் மகனை செல்லமாக கடிந்து கொண்டார் ஜெயலட்சுமி.

அனைவரும் சம்பிரதாய நலம் விசாரிப்புகள் முடித்துவிட்டு சுஜி, ராம் பிரகாஷின் அக்கா என்று அனைவரும் அமர்ந்து அரட்டை அடித்து கொண்டிருந்தனர்.

தெய்வநாயகிக்கு பல வருடங்களுக்கு பின் தன் வீடு இப்படி கலகலப்பாக இருப்பது மகிழ்ச்சியாக இருந்தது.

அன்று மாலை வந்த சண்முகத்தை பார்த்த மித்ரா ஓடி சென்று அவரை அணைத்து அழ தொடங்கினாள். அப்பா ஏன்ப்பா இவ்வளோ நாள் என்ன பாக்க வரலை. உங்ககிட்ட கூட சொல்லாம வந்துட்டான்னு எவ்வளோ நாள் வருத்தப்பட்ட தெரியுமா? எனக்கு போன் பண்ணி பேசனுனு உங்களுக்கு தோணலையா என்று கேட்ட தனது மகளின் தலைகோதியவர்,

மித்ரா, நீ ஏற்கனவே என்னோட பொண்ணா நிறைய கஷ்டப்பட்டுட்ட, பிரகாஷ் தம்பி மூலமா உன்ன உனக்குரிய இடத்துல சேர்த்துனதுக்கப்புறம் தான் எனக்கு நிம்மதியா இருந்துச்சு. நீ காணாம போனதுல இருந்து உங்க சித்தி என்ன சந்தேகப்பட்டு என்னோட போன் எல்லாம் எனக்கு தெரியாம செக் பண்ணிட்டு இருந்த, கூடவே அந்த பன்னிர்செல்வம் ஆளுங்க என்ன வாட்ச் பண்ணிட்டு இருந்தாங்க நீ யாருனு உனக்கு தெரியாத சமயத்துல உனக்கு எந்த பிரச்சனையும் வரக்கூடாதுனு தான் உன்னவிட்டு தள்ளி இருந்த. ஆனா நீ எப்படி இருக்க, எப்படி படிக்குறனு வாரம் வாரம் பிரகாஷ் தம்பிகிட்ட கேட்டுப்பேன் என்று கூறிய தந்தையை பாசத்தோடு பார்த்தாள் மித்ரா. இத்தனை ஆண்டு தன்னை அன்போடு வளர்த்தியவர், அவள் சித்தி கொடுத்த நெருக்கடிகளை தாண்டி அவளை பத்திரமாக பார்த்துக்கொண்டவர், இன்று தனது மகள் என்ற உரிமையை விட்டுக்கொடுத்துவிட்டு அவளது  நலனுக்காக ஒதுங்கி இருக்கிறார், இந்த அன்புக்கு அவள் என்ன செய்யபோகிறாள். 

மித்ரா இப்படி எண்ணி கொண்டிருக்க நிலைமையை சகஜமாக்க எண்ணி பிரகாஷ், அடடா அங்கிள் இப்படியே பேசிட்டே இருந்த எப்படி எவ்வளோ வேலை இருக்கு உங்க பொண்ணுக்கு நீங்கதான செய்யனும் வாங்க வாங்க என்று கூறி அவரை அழைத்து கொண்டு சென்றான்.

தன்னை சமாதானப்படுத்தத்தான் அவன் இப்படி பேசுகிறான் என்று உணர்ந்து மித்ரா கண்களில் காதலோடு அவனை பார்த்தாள், ஒரு நொடி சுற்றுப்புறம் மறந்து அவனை பார்த்தவள், மற்றவர் கவனிக்கும் முன் பார்வையை விலக்கிகொண்டாள்.

தெய்வநாயகி அருகில் இருந்த எஸ்டேட் ஓனர்களையும் விழாவிற்கு அழைத்திருந்தார். அதை கேள்வி பட்டதும் மித்ராவிற்கு பயம் எழுந்தது, எங்கே கிஷோர் விழாவிற்கு வந்து பிரகாஷிடம் அனைத்தையும் சொல்லிவிடுவானோ என்று பயந்தவள், தனியாக சென்று கிஷோருக்கு போன் செய்தாள்.

மித்ராவின் நம்பரை பார்த்தவன் முதலில் எடுக்க வேண்டாம் என்று நினைத்தான் பின் எதற்காக இத்தனை நாட்கள் கழித்து அழைத்திருக்கிறாள் என்றும் அதுமட்டுமில்லாமல் இப்போது பாட்டியின் சொந்த பேத்தி என்பது அவனுக்கும் தெரிந்திருந்தது,அதனால் என்னவாக இருக்கும் என்று போனை எடுத்தான்.

சிறிது நேரம் என்ன பேசுவது என்று தெரியாமல் தயங்கிய மித்ரா, பின்னர் சீனியர் உங்ககிட்ட ஒரு ஹெல்ப் என்று கேட்க, நான் என்ன உதவி செய்ய முடியும் மித்ரா? என்று வெறுமையான குரலில் கேட்டான்,

அன்று நான் உங்ககிட்ட சொன்ன விஷயத்தை நீங்கள் வெளியில் யாரிடமும் சொல்லிடாதீங்க என்று கூற,

எந்த விஷயத்தை நீ சத்யபிரகாஷை லவ் பண்ணுவதாக சொன்னாயே அந்த விஷயத்தையா? என்று கேட்க,

ஆமாம் என்று கூறினாள் .

ஏன் என்று கிஷோர் கேட்க,

அவரிடம் சொல்ல வேண்டாம் என்று நினைக்கின்றேன். என்னோட வாழ்க்கையே முடிஞ்சுடுச்சுனு நினைச்சு இருந்த போது என்ன காப்பாத்தி இன்னைக்கு இந்த வாழ்க்கையை கொடுத்தது சத்யா தான். இந்த மூணு வருசத்துல தப்பா ஒரு பார்வை கூட அவரு பார்த்தது கிடையாது. அவ்ரகிட்ட போய் லவ்னு சொன்ன ஹெல்ப் பண்ணினதற்காக சொன்ன மாதிரி இருக்கும், அதனால எனக்கு அவரிடம் சொல்ல வேண்டானு தோணுது என்று கூறினாள்,

இப்ப சொல்ல வேண்டானு நினைக்குறைய இல்ல எப்பவுமேவா என்று கேட்டான் கிஷோர்

மித்ரா அமைதியாக இருக்க, கிஷோரோ நான் இதை பத்தி யாரிடமும் சொல்ல மாட்டேன், உனக்கு எப்ப எந்த உதவி வேணுனாலும் ஒரு நண்பனா நீ என்கிட்ட கேட்கலாம். மனச போட்டு குழப்பிக்காம பங்க்ஷன்கு ரெடி ஆகு என்று கூறினான்.

அவனுக்கு ஒரு நன்றியை சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டு திரும்பியவள் அதிர்ந்து போனாள், அங்கு அவளையே பார்த்தபடி அபிராமி நின்றிருந்தாள்.

அபிராமி மித்ராவின் காதலை பிரகாஷிடம் தெரியப்படுத்துவாளா?????? அறிய தொடர்ந்து வாசியுங்கள் “என் வானவில்”.

-நறுமுகை

3

No Responses

Write a response