என் வானவில்-36

என் வானவில்-36

தேனி  சென்று இறங்கிய மித்ராவை அன்போடு வரவேற்றார் அவருடைய தாத்தா கார்மேகம். ரோஹித்தின் அம்மா ராஜேஸ்வரியோ வேண்டா வெறுப்பாக அவளுக்கு ஆலத்தி சுற்றி உள்ளே அழைத்துச் சென்றார். கார்மேகத்தைத் தவிர வேறு யாரும் பிரகாஷை வா என்று கூட அழைக்கவில்லை. அதுவே மித்ராவிற்கு பிடிக்கவில்லை என்றாலும், சரி இங்கு தான் இருக்க போகிறோம் என்று பல்லைக் கடித்து கொண்டு அமைதியாக நின்றாள். அந்த வீடு வெளியில் இருந்து பார்க்க பழங்காலத்து கட்டிடமாக இருந்தாலும் உள்ளே அனைத்தையும் நவீனமாக்கி இருந்தனர் விஸ்வநாதனும் ரோஹித்தும்.

பிறந்ததில் இருந்து திருச்சியில் கஷ்டப்பட்டு வளர்ந்த மித்ரா அந்த வீட்டை ஆவலோடு பிரமித்துப்போய் பார்ப்பாள்   என்று ரோஹித் நினைத்திருக்க, மித்ராவோ அந்த வீட்டை நிமிர்ந்தும் கூட பார்க்காமல் அங்கு அமர்ந்திருந்தாள்.

 கார்மேகம் கேட்கும் கேள்விகளுக்கு பெரும்பாலும் பிரகாஷே பதில் சொல்லிக் கொண்டிருக்க,

பிரகாஷை அவமானப்படுத்தும் பொருட்டு ரோஹித், எங்க தாத்தா கேள்வியை மித்ரா கிட்ட கேட்டுட்டு இருக்கார் நீ ஏன் தேவை இல்லாமல் பதில் சொல்லிட்டு இருக்க? அதான் அவளை கொண்டு வந்து விட்டாச்சு இல்லை இனி நீ கிளம்பு எங்க வீட்டு பொண்ணை நாங்க பார்த்துக்குறோம் என்றான்.

அவன் அப்படி கூறியதும் , மித்ராவோ, அவரும் ஒன்னும் இங்கேயே தங்க வரல எனக்கு தான் வேற வழி  இல்லை அவருக்கென்ன தலை எழுத்தா?  இங்க தங்கணும்னு….. நீங்க கிளம்புங்க பிரகாஷ் என்று வெடுக்கென கூறினாள்.

அவள் கூறியதைக் கேட்ட கார்மேகத்தின் முகம் சுருங்கிவிட, ரோஹித்தோ இவனை என்ன சொன்னாலும் அவனுக்கு முன்னாடி இவ தான் பதில் சொல்றா, முதல்ல இவங்க ரெண்டு பேருக்கும் நடுவுல இருக்கிற இந்த பாண்டிங்கை உடைக்கனும் என்று மனதில் கருவிக்கொண்டான்.

ராஜேஸ்வரியோ உன்னை மட்டும் இங்க இருக்கணும்னு யார் சொன்னா? நீயும் வேணும்னா கிளம்பி போ என்று கூற,

கார்மேகமோ தன் மகளை ராஜி நீ ஏன் இப்படி பேசுற? எப்போ இருந்து இப்படி பேச கத்துகிட்ட? இவள் உன் அண்ணன் பொண்ணு இல்லையா? நீ இப்படி தான் பேசுவியா? என்று கேட்க,

அண்ணனே இல்லேனு ஆன பிறகு அண்ணன் பொண்ணு மட்டும் எதுக்குப்பா? நீங்க தான் தேவை இல்லாம முடிஞ்சு போன உறவை எல்லாம் இழுத்துட்டு இருக்கீங்க? இவ அண்ணனின் பொண்ணு தான் அப்டிங்கிறதுக்கு என்ன சாட்சி அந்த அம்மா தான் சொன்னாங்கன்னா நீங்களும் நம்பி இவளை நடு வீட்டில் உட்கார வச்சிருக்கீங்க எனக்கு இதுல கொஞ்சம் கூட இஷ்டம் இல்லைப்பா என்னமோ பண்ணுங்க என்று கூறிவிட்டு வெடுக்கென உள்ளே சென்று விட்டாள்.

 அப்படி இங்கு தங்கி தான் ஆக வேண்டுமா என்று மித்ரா மனதிற்குள் பொருமிக்கொண்டிருக்க,

கார்மேகமோ உங்க அத்தை பேசினதை மனசுல வச்சிக்காதம்மா அவளுக்கு உங்க அப்பா வீட்டை விட்டு போனதும் அதன் பிறகு உங்க பாட்டி இறந்து போனதும் ரொம்போ மனவருத்தம்.அதனால் தான் அவ அப்படி பேசுறா, அவளே சரியாகி ரெண்டு மூணு நாளில் உன் கிட்ட நல்லா பேசுவா என்று கூறினார். நீ வா நான் உன் ரூமை காட்டுறேன் என்று கூட்டி சென்றார். கூடவே நீயும் வா தம்பி வந்து ஒரு நாள் தங்கிட்டு போ என்று பிரகாஷிடம் கூறினார்.

இல்லைங்க ஐயா நான் மித்ராவை உங்க கிட்ட விட்டுட்டு போக தான் வந்தேன். இனி நீங்க அவளை பத்திரமா பார்த்துப்பிங்கன்னு  நம்பி தான் விட்டுட்டு போறேன், என்று சொன்னவன் மித்ராவிடம் திரும்பி,

மித்ரா எதாவது வேணும்னா போன் பன்னு சரியா? மறக்காம டெய்லி பாட்டிக்கு பேசிடு என்று கூற,

ரோஹித் எதோ சொல்ல வாய் எடுக்க, விஸ்வநாதன் அவன் கையைப் பிடித்து தடுத்து விட்டார்.

நான் கிளம்புறேன் என்று சொல்லி அவன்  கிளம்பவும் ஏதோ அத்துவான காட்டில் மாட்டி கொண்டது போன்ற உணர்வு எழுந்தது மித்ராவிற்கு,

வேறு வழி இல்லாமல் கார்மேகத்துடன் உள்ளே நடந்தாள். அவளது அறை என்று ஒன்றை காட்ட சரி என்று மட்டும் தலை அசைத்துவிட்டு தன் பேக் எடுத்துக்கொண்டு உள்ளே சென்றவள் கதவை அடைத்து தாழிட்டுக்கொண்டாள்.

அவளுக்கு மூச்சு முட்டுவது போல இருந்தது, வந்து கொஞ்சம் நேரம் தான் ஆகுது இப்போவே மூச்சு முட்டுது இங்கு எப்படி மூணு மாசம் இருக்க போறோம் என்று நினைத்தாள். யாரைப் பார்த்தாலும் கொஞ்சம் கூட நம்பிக்கையே வர மாட்டேங்குது. சத்யா சொன்ன மாதிரி இவங்க எல்லாம் தப்பானவர்கள் என்று நினைச்சு பார்ப்பதற்கு பதிலா கொஞ்சம் நாளைக்கு ஓப்பன் மைண்டடா இவங்க என்ன தான் பன்றாங்க என்று ஒரு பார்வையாளர் மாதிரி இருந்து பார்க்கணும், என்று நினைத்துக் கொண்டவள் தன் பெட்டியைத் திறந்து துணிகளை எடுத்து அடுக்கி வைத்தாள்.

அங்கு தெய்வநாயகியோ மித்ரா அங்கிருந்து சென்றதும் வீடே வெறிச்சோடி இருக்க, சற்று வருத்தத்தோடு இருந்தார்,

அவரது அருகில் வந்த வள்ளி, என்னம்மா நீங்க இப்படி சோர்ந்து போய்  உட்கார்ந்திருக்கீங்க மித்ரா பாப்பா கொஞ்சம் நாளைக்கு தானே போயிருக்கு சீக்கிரம் வந்திடும் என்று ஆறுதல் கூறினாள்.

சரி தான் அவளும் இல்லையா, பிரகாஷும் வேற அவ கூடவே கிளம்பி போயிட்டானா அது தான் ஒரு மாதிரி இருக்கு, சரி சரி, நீ வா கொஞ்சம் நேரம் வெளியில் நடந்து விட்டு வருவோம் என்று வள்ளியை கூட்டிக்கொண்டு வெளியில் நடக்க சென்றார். 

அதே சமயம் தேனியில் இருந்து கிளம்பி பிரகாஷ் திருச்சி சென்று சேர இரவு ஆகிவிட்டது. அடுத்த நாள் காலை அவன் வீட்டு வாசலில் ஏதோ சத்தம் கேட்டு எழுந்து வர அங்கு சண்முகத்தின் மனைவி மித்ராவின் சித்தி புவனா பிரகாஷ் வீட்டு முன் நின்று கத்திக்கொண்டிருந்தாள்.

யோவ் வாத்தியாரே வெளியில் வாயா, உன்கிட்ட பிள்ளைகளை பாடம் படிக்க அனுப்பினா உன் பையனை விட்டு அவர்கள் ஊரை விட்டு ஓடிப்போக ஏற்பாடு செய்றியா? இது தான் நீ ஸ்கூல்ல செய்யும் வேலையா? என்று கத்த அந்த தெருவே கூடியது.

ராஜராஜனும் ஜெயலட்சுமியும் என்னவோ ஏதோ என்று வெளியில் வர, பிரகாஷும் அவர்களை தொடர்ந்து வெளியில் வந்தான்,

இப்போ எதற்கு இங்க நின்னு கத்திகிட்டு இருக்கீங்க என்று ஜெயலட்சுமி கேட்க,

ஏன்மா கேக்க மாட்ட ? புள்ளையா வளர்த்து வச்சிருக்க? எங்க வீட்டு பொண்ணை கூட்டிட்டு போய் மூணு வருஷமா ஏதோ ஒரு வீட்டில் வச்சிருக்கான் அது உங்களுக்கும் தெரிஞ்சி குடும்பமே அமுக்கமா இருந்துருக்கீங்க. உங்களுக்கு இதெல்லாம் அசிங்கமா இல்லை, இந்த பிழைப்புக்கு நீங்க நாண்டுக்குட்டு சாகலாம்,  என்று கத்த

ராஜராஜனும் ஜெயலட்சுமியும் அமைதியாக நின்றனர், பிரகாஷ் எதோ சொல்ல வர,

அதற்குள் சண்முகம், சும்மா நிறுத்து அவ ஒன்னும் என் பொண்ணுமில்லை உன் பொண்ணுமில்ல அவ எங்க போகணுமோ அங்க தான் போயிருக்கா அவளை கூட்டிட்டு போனது ஒன்னும் பிரகாஷ் தம்பி கிடையாது அவளை நான் தான் அனுப்பி வச்சேன். அவளைக் கூட்டிட்டு போய் ட்ரெயின் ஏத்தி விட்டது உன் பையன் தான் கேளு. அவன் செஞ்சானா? இல்லையானு? சும்மா உன்கிட்ட இருக்கிற தப்பை மறைக்குறதுக்கு ஊர்ல இருக்கிறவங்களை எல்லாம் தப்பு சொல்லிட்டு இருக்காதா.

அதே மாதிரி நீ நினைக்கிறது போல மித்ரா ஒன்னும் சாதாரண பொண்ணு கிடையாது. அவ அம்மா அப்பா ரெண்டு பேரும் பரம்பரை பணக்காரர்கள், அவளை எதாவது பண்ணினா உன்னை சும்மா விட மாட்டாங்க. தேவை இல்லாம கூச்சல் போடாத என்று சண்முகம் புவனாவை மிரட்ட,

புவனாவோ கப்பென்று வாயை மூடிக்கொண்டு மனதிற்குள் கணக்கு போட்டு கொண்டே உள்ளே சென்றாள், என்னது பரம்பரை பணக்காரரா? இத்தனை நாள் அவளை வச்சி சோறு போட்டிருக்கோம் அதுக்கெல்லாம் சேர்த்து அவர்களிடம் காசு வாங்காம விடுறது இல்லை . கிட்டத்தட்ட சொத்தில் பாதி வாங்கி என் பொண்ணை ஒரு பெரிய இடத்துல கல்யாணம் பண்ணி கொடுக்க வேண்டும் என்று மனதோடு நினைத்து கொண்டே சென்றாள்.

மித்ரா மீது கவனம் செலுத்த முடியாத அளவிற்கு பிரகாஷிற்கு நெருக்கடிகளை ஏற்படுத்த வேண்டும் என்ற விசுவநாதன் திட்டத்தின் முதல் படி தான் புவனாவுக்கு விஷயத்தை வேறு ஒருவர் மூலம் தெரியப்படுத்தி அவர்கள்  வீட்டின் முன்னால் நின்று பிரச்னை செய்ய வைத்தது.

விஸ்வநாதனின் திட்டம் என்ன? விஸ்வநாதனின் சூழ்ச்சியில் இருந்து பிரகாஷ் மித்ராவை மீட்பானா? இல்லையா? என அறிய தொடர்ந்து வாசியுங்கள் “என் வானவில்.

நறுமுகை

4

No Responses

Write a response