என் வானவில்-34

என் வானவில்-34

மித்ராவின் தாத்தா கிளம்பியதும், பிரகாஷ், சுஜி, ராம், அபிராமி, நால்வரும் வீட்டிற்கு முன் உள்ள தோட்டத்திற்கு வந்தனர்.

ராமோ ,என்ன பிரகாஷ் நீ மித்ராவுக்கு அங்க போக விருப்பமிருக்கா, இல்லையானுக் கூட தெரியாம நீ பாட்டுக்கு கமிட் பண்ணிட்ட, அவளுக்கு அங்க போக விருப்பமில்லைனா அவளை  நீ கட்டாயப்படுத்துற மாதிரி இருக்காதா?

பிரகாஷ் சொன்னா மித்ரா கேட்பா, பிரகாஷ் இதை சொல்றதிலும் அர்த்தம் இருக்கு. இப்போ மித்ரா அங்கு போகலைனா அவங்க தொடர்ந்து பிரச்னை கொடுத்துட்டு தான் இருப்பாங்க. எனக்கு என்னவோ மித்ரா தாத்தாவை பார்த்தா நல்லவர் மாதிரி தான் தோணுது என்று சுஜி கூற,

மித்ரா தாத்தா நல்லவர் தான் கூட வந்த அந்த ரெண்டு பேரையும் பார்த்தியா? அதிலும் அந்த ரோஹித் நம் பிரகாஷை பார்த்த பார்வையே சரியில்லை. எனக்கென்னவோ இதெல்லாம் சரியா வரும் என்று தோணல என்றான் ராம்

பிரகாஷ் ஏதோ கூறுவதற்கு முன் அபிராமி இடை புகுந்து, அண்ணா அந்த பிரச்சனை எல்லாம் அப்புறம் பேசிக்கலாம், நான் சொல்றேன்னு  தப்பா நினைக்காதீங்க உங்களை விட மித்ராவை பற்றி வேற யாருக்கும் நல்லா தெரியாது. யாருக்கும் அவள் மீது  அவ்வளவு அக்கறை இருக்குமான்னு கூட தெரியல, ஆனால் இப்போ அவளுக்கு கண்டிப்பா நீங்க தேவை. ரொம்போ குழம்பி இருக்கா, பயந்துபோய் இருக்கா நீங்கள் முதலில் அவள் கிட்ட போய் பேசுங்க என்று கூற,  சுஜியும் ராமும் அதை ஆமோதித்தனர்.

மித்ராவை பார்க்க செல்ல திரும்பிய பிரகாஷை ஒரு நிமிடம் நிறுத்திய அபிராமி,

அண்ணா, நான் ஒரு விஷயம் சொல்லணும், நான் சொன்ன பிறகு நீ ஏன் சொன்ன? எதுக்கு சொன்ன? என்று எந்த கேள்வியும் என்கிட்டே நீங்க கேட்க கூடாது. என்ன நடந்தாலும் சரி, யார் என்ன சொன்னாலும் சரி, எவ்வளவு பெரிய பிரச்சனைகள் வந்தாலும் சரி, மித்ராவே உங்களை பார்த்து கோபமா ஏதாவது சொன்னாலும் சரி, எந்த நிலையிலும் அவளை மட்டும் நீங்க விட்டுடாதீங்க அண்ணா என்று கூற,

பிரகாஷ் அபிராமியை ஆச்சர்யமாக பார்த்தான். அவன் அறிந்து இந்த மூன்று ஆண்டுகளில் அவள் அவனிடம் அதிகமாக பேசியதே கிடையாது. கிஷோர் பிரச்சனை வந்தபோது கூட சுஜி தான் அபிராமியிடம் பேசினாலே தவிர, பிரகாஷ் பேசியது கிடையது. இந்த இரண்டு நாட்களில் தான் அபிராமி பிரகாஷிடம் ஓரிரு வார்த்தைகள் பேசியிருக்கிறாள். அப்படியிருக்க, இன்று இவள் இப்படி கூறியது அவனுக்கு ஆச்சர்யமாக இருந்தது. அவளோ அதை பற்றி எந்த கேள்வியும் கேட்க கூடாது என்று முன்னரே கூறியதால் அவன் எதுவும் சொல்லாமல் சரி என்று மட்டும் தலை அசைத்து விட்டு உள்ளே சென்று விட்டான்.

அபிராமியிடம் சிறிது காலம் பேசி பழகி இருந்த சுஜிக்கோ அபிராமி கூறியதற்கு பின்னால் ஏதோ காரணம் இருக்கிறது என்று தோன்றியது. அவள் அதை அபிராமியிடம் கேட்க முற்படுவதற்குள் அபிராமியோ,

எனக்கு தூக்கம் வருதுக்கா என்று கூறிவிட்டு அங்கிருந்து வேகமாக சென்று விட்டாள்.  செல்லும் அவளையே  யோசனையோடு பார்த்துக்கொண்டிருந்த சுஜியிடம் ,

 என்ன ஆச்சு சுஜி ஏன் அபிராமியையே இப்படி பார்த்துட்டு இருக்க, என்று கேட்டான் ராம். இல்லை ராம் நான் அபி கூட ஒன் இயரா பேசிக்கிட்டு இருக்கேன், ரொம்போ கலகலன்னு பேசுவா, எதையும் மனசுல வச்சிக்கமாட்டா, ஏன் மித்ராவுக்கு கிஷோர் மூலமா ஏற்பட்ட பிரச்சனையை கூட அபிராமி தான் எங்களுக்கு சொன்னா. அதுக்கு பிறகு இப்போ வரை  மித்ராகிட்ட   இருந்து மறச்சு தான் வச்சிருக்கா. இன்னைக்கு சம்மந்தமே இல்லாமல் இந்த விஷயத்தை பிரகாஷ் கிட்ட சொல்றதுக்கு என்னமோ காரணம் இருக்கு என்று சொல்ல,

ராமோ, சுஜி கொஞ்சம் நாளாவே நீ இந்த பிரகாஷ் கூட சேர்ந்து எல்லாத்துக்கும் ரொம்போ  யோசிக்க  ஆரம்பிச்சிட்ட, எனக்கென்னவோ அபிராமி சாதாரணமா சொன்ன மாதிரி தோணுது. நீ அதிகம் யோசிக்காத வா, வந்து ரெஸ்ட் எடு என்று சொல்லி தோழியுடன் உள்ளே சென்றான்.

வீடே அமைதியாக இருக்க பிரகாஷ் மித்ராவை தேடி அவளது அறைக்கு சென்றான். அவள் அறை  கதவு திறந்திருக்க, அங்கு அவள் இல்லாதது கண்டு ஒரு நிமிடம் பயந்து போனவன், அவளை தேடி செல்லலாம் என்று திரும்ப அவளோ  மாடி பால்கனியில் இருட்டில் நின்று கொண்டிருந்தாள். அவளை அங்கு பார்த்ததும் சற்று நிதானத்திற்கு வந்தவன், அவளிடம் சென்றான்.

தன் பின்னால் காலடி ஓசை கேட்டு திரும்பியவள் பிரகாஷை கண்டதும் ஒன்றும் சொல்லாமல் அமைதியாக நின்றாள்.

என் மீது கோபமா? மித்ரா

உங்க மேல கோபம் எல்லாம் இல்லை சத்யா ஆனால் எனக்கு என்  வாழ்க்கையில் என்ன நடக்குதுனே புரிய மாட்டேங்குது. எங்கையோ இருந்தேன், ஏதேதோ பிரச்சனைகள் வந்தது, முழுசா கூட அறிமுகம் ஆகாத நீங்க என் வாழ்க்கையில் ஒரு நாள் வந்தீங்க, எங்கையோ இருந்த என்னை இங்க கொண்டு வந்து சேர்த்துனிங்க, அதுக்கு பிறகு என் வாழ்க்கையோட போக்கே மாறிடுச்சு, கிடைக்குமா? என்று கனவு கண்டுக்கிட்டு இருந்த படிப்பு எனக்கு கிடைச்சுது. எப்போதும், ஏச்சும் பேச்சும் கேட்டுட்டு இருந்த எனக்கு நிறைய அன்பு நிறைய பாசம் என்னை சுத்தி எனக்காக அன்பு காட்டும் மனிதர்கள் என்று என் வாழ்க்கை ரொம்போ நல்லா இருந்தது. திடீரென ஒரு நாள் புதுசா ஒருத்தன் வந்தான், அவன் எனக்கு சொந்தம்னு சொன்னான், இங்கிருக்கும் பாட்டி எனக்கு சொந்தம்னு சொன்னான், இங்கிருக்கும் அனைத்திற்கும்   நான் வாரிசுன்னு சொன்னான். அதெல்லாம் உண்மைன்னு நீங்க சொன்னீங்க.

 நான் அப்பான்னு இவ்வளவு  நாளா நினைச்சவர் நான் உன் சொந்த அப்பா இல்லை வளர்த்தவன் தானு சொன்னாரு. உன்னை பெத்த அம்மா நீ உன் அப்பா வீட்டுக்கு போக கூடாதுன்னு நினைச்சாங்க அதனால் தான் உன்னை பற்றிய உண்மையை மறைச்சேன்னு சொன்னார், சரி அம்மா சொன்னது போல அம்மா வீட்டில் தான இருக்கோம் என்று நான் ஒரு நிலைக்கு வருவதற்குள் தாத்தான்னு ஒருத்தர் வந்து நிக்குறார், நான் அவர் வீட்டு வாரிசு, நான் அவரோடு தான் இருக்கணும்னு சண்டை போடுறார்.

இப்போ நீங்க என்ன மூணு மாசம் அங்க போய் தங்க சொல்றிங்க அதை வச்சு ஒரு முடிவுக்கு வரலாம்னு சொல்றிங்க எனக்கு புரியல சத்யா, நான் இப்போ என்ன செய்யணும்?  நான் இப்போ யார் கூட இருக்கணும்? என் வாழ்க்கையில் அடுத்து என்ன நடக்க போகுது?  இந்த புது சொந்தங்கள் எல்லாம் உண்மையா? இனி என் வாழ்க்கை முழுக்க இவர்களோடு தான் பயணம் பண்ண போறேனா?  அப்படினா? என் அம்மா சொன்னதையும் மீறி நான் என் அப்பா வீட்டுக்கு போக போறேனா? எனக்கு ரொம்போ தலை வலிக்குது. எங்கேயாவது யாருக்கும் தெரியாமல் கண்காணாத இடத்திற்கு போயிடணும்னு தோணுது என்று கூற,

பிரகாஷிற்கு வேதனையாக இருந்தது. இந்த மன கஷ்டமெல்லாம் இருக்க கூடாது என்று தான் இவன் அவளை அங்கிருந்து இங்கு கொண்டு வந்து சேர்த்தான். இன்று அந்த நிலையே பரவாயில்லை என்று இவள் நினைக்கும் அளவிற்குப் பிரச்னைகள் இவளை சூழ்ந்து கொண்டிருக்கிறது. கொஞ்சம் அவள் வளரனும்,அவளுக்கான மெச்சூரிட்டி வரணும் அதுக்கப்புறம் அவள் வாழ்க்கையில் நடந்ததை சொல்லலாம் என்று பிரகாஷ் நினைச்சிருக்க, அதுக்குள்ள ரோஹித் வந்து ஏற்படுத்திய குழப்பங்கள் எல்லாரையுமே ரொம்ப பாதிச்சிருக்கு. மித்ரா இப்போ தான் அவளது கூட்டைவிட்டு  தைரியமா வெளியில் வந்து ஒன்றிரண்டு வார்த்தைகள் பேச ஆரம்பிச்சிருக்கா இந்த நிலையில் இந்த குழப்பங்கள் நல்லதல்ல என்று யோசித்த பிரகாஷ், மித்ராவிடம்,

மித்ரா நீயே சொன்ன மாதிரி முழுசா என்னை  யாருன்னே தெரியாதப்போவே என்னை நம்பி நீ திருச்சியில் இருந்து இவ்வளவு தூரம் வந்திருக்க, இப்போ உனக்கு என்னை நல்லா தெரியும், உனக்காக ஒரு விஷயம் செய்ரதுக்கு முன்னாடி  எத்தனை முறை யோசிப்பேன்னு உனக்கு தெரியும். அப்படி நான்  யோசிச்சி எடுத்த முடிவு தான் நீ உன் தாத்தாக்கூட போய் ஒரு மூணு மாசம் இருக்கனுங்குறது. இப்போ   எல்லாமே பிரச்சனையாக இருப்பது உண்மை, ஆனால் இந்த பிரச்சனைக்கெல்லாம் ஒரே தீர்வு நீ இந்த பிரச்னைகளை எதிர்கொள்ள ஆரம்பிக்கனும், ஒவ்வொரு முறை பிரச்சனை வரும்போதும் நீ எங்கயாவது ஓடி ஒழிய முடியாது மித்ரா, இந்த மூனு வருஷத்துல இதை நீ கத்துக்குவன்னு நான் நினச்சேன்,…….

எனக்கு புரியுது ஏகப்பட்ட குழப்பங்கள் ஏகப்பட்ட புது மனிதர்கள் நான் இல்லைன்னு சொல்லல, ஆனால் இதை எல்லாம் நீ ஃபேஸ் பண்ணி தான் ஆகனும், எவ்வளவு நாள் நீ ஒடி ஒழிஞ்சுக்கிட்டே இருப்ப? நீ நல்லா யோசிச்சு பாரு  இப்படி கலங்கி நீ கஷ்டப்படுறது  உன் அம்மா அப்பாவிற்கோ இல்லை உன்னை வளர்த்தின அம்மாவுக்கோ சந்தோஷமா இருக்குமா? அவங்க எல்லாம் உன்னை பார்த்துட்டு தான் இருக்காங்க.  நீ உங்க அப்பா வீட்டுக்கு போக கூடாதுன்னு  உங்க அம்மா சொன்னதுக்கான காரணம் எனக்கு தெரியல ஆனால் இன்னைக்கு அதே அம்மா ஏன்  நீ அங்கு போகணும்னு நினைச்சிருக்க கூடாது.  இத்தனை வருஷம் இல்லாம இப்ப நீ என் கண்ணில் பட்டு பாட்டிகிட்ட வந்து சேர்ந்து இப்போ உன் அப்பா வீட்டு ஆளுங்ககிட்டயும் போற, நீயே கேட்ட மாதிரி யாருமே வேண்டாம்னு வீட்டை விட்டு ஓடி போய் கல்யாணம் பண்ணிக்கிட்ட உன் அம்மா அப்பாக்கு ஒரு வருஷத்தில் என்ன நடந்தது என்பதற்கான விடை உனக்கு ஒரு வேளை உன் அப்பா வீட்டில் கிடைக்கலாம் இல்லையா? என்று கூற,

பிரகாஷை பார்த்தவள் நீங்கள் சொல்றது உண்மையா? அதுக்கான விடை அங்கு கிடைக்குமா? என்றாள்

கிடைக்கும் ஆனால் அந்த விடையை தேடி நீ தான் போகணும், தைரியமா போகணும். இந்த வாழ்க்கையை நீ ஃபேஸ் பண்ணனும் மித்ரா என்று கூற,

அவனை பயத்தோடு பார்த்தவள் நீங்க ஏன்  இப்படி பேசுறீங்க சத்யா,  இந்த வாழ்க்கையை நான் தனியா  ஃபேஸ் பண்ணனுனு  நீங்க சொல்றீங்களா?

அவளை பார்த்து புன்னகைத்தவன், இந்த மூன்று வருடத்தில் எப்போவாது உன்னை நான் தனியா விட்டுருக்கேனா என்ன? கண்டிப்பா நான் உன் கூட இருப்பேன், ஆனால் இனி எந்த பிரச்சனையும் முன்னாடி நின்னு உனக்காக நான்  ஃபேஸ் பண்ணமாட்டேன்.  நீ ஃபேஸ் பண்ணு உனக்கு நான் மாறல் சப்போர்ட்டா இருக்கேன். அன்னைக்கு நான் லண்டனில் இருந்து வந்தப்போ அந்த ரோஹித்தை ஒரு வாங்கு வாங்கினியே அந்த மாதிரி நீயே பிரச்சனையை டீல் பன்னு நான் உனக்கு பின்னால் இருந்து சப்போர்ட் பண்றேன் என்று கூற,

ஆமாம் அவனெல்லாம் ஒரு ஆளு அவனை பார்த்தாலே எனக்கு பிடிக்கறது இல்லை சத்யா. அவனும் அவன் பேச்சும் யாருக்குமே மரியாதை கொடுக்க தெரியுறது இல்லை. அங்க போய் தாத்தா வீட்டில் அவன் எதாவது சொல்லட்டும் நான் பேசிக்கிறேன் என்று கூற,

வாய் விட்டு சிரித்த பிரகாஷ், மித்ரா உனக்கு கோபம் எல்லாம் வருது இந்த மூணு வருசத்துல இப்போ தான் பார்க்குறேன் ஆனால்  ஒவ்வொரு முறையும் உன் கோபத்துக்கு அந்த ரோஹித் தான் பலியாகுறான் என்று  கூறி சிரித்தான்.

அவனுடன் இணைந்து சிரித்தவள் ஒரு நிமிடம் தன்னை மறந்து அவனை பார்த்தாள். அதே கணம் பிரகாஷும் நிமிர்ந்து  அவளை பார்க்க, சட்டென பார்வையை திருப்பி கொண்டாள். ஆனால் அந்த ஒரு வினாடி நேரத்தில் பிரகாஷ் மித்ராவின் பார்வையை கவனித்துவிட்டான். இது வரை மித்ராவிடம் அவன் பார்க்காத பார்வை. ஏன்னோ அந்த நிமிடம் அபிராமி கூறியது பிரகாஷிற்கு நினைவில் வந்தது, மித்ராவின் பார்வையையும் அபிராமி கூறியதும் பிரகாஷிற்கு வித்தியாசமாக இருந்தது.

பிரகாஷ் மித்ராவின் காதலை அறிவானா? என்று அறிய தொடர்ந்து வாசியுங்கள் “என் வானவில்”. –

நறுமுகை

4

No Responses

Write a response