என் வானவில்-2

என் வானவில்-2

 நன்றாக உறங்கிக்கொண்டிருந்த பிரகாஷ் ஏதோ சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்தான். எழுந்து அவன் ரூம் ஜன்னல் வழியாக பார்த்தவன் அந்த சத்தம் பக்கத்து வீட்டில் இருந்து வருகிறது என்று உணர்ந்தான். யாரோ ஒரு பெண்மணி உச்ச பட்ச  குரலில் கத்திகொண்டிருந்தார்.

யார் இது இப்படி கத்துவது  என்று நினைத்துக்கொண்டே  சரி இனி தூங்கப்போவதில்லை என்று நினைத்து முகத்தை கழுவிக்கொண்டு கீழே வந்தான். அங்கு அவனது அன்னை  சமையல் வேலையில் மும்முரமாக இருக்க,

அவரிடம் சென்றவன் யார் அம்மா இது,  பக்கத்து வீட்டில் இப்படி கத்திக்கிட்டு இருக்காங்க என்று கேட்டான்.

ஒஹ், அதுவா பிரகாஷ்  காலையில் வந்ததும் பார்த்தாயே அந்த பொண்ணு மித்ரா அவளோட சித்தி புவனா. அவளுக்கு வேலையே அந்த பொண்ணை கறிச்சு கொட்டுவது மட்டும் தான். அதை கூட மெதுவாக செய்ய மாட்டாள் இந்த தெருவிற்கே கேட்கும்படி தான் செய்வாள்.

ஸ்கூல் போய் கொண்டு இருந்தவரை அந்த பொண்ணு காலையிலும் மாலையிலும் மட்டும் தான் திட்டு வாங்கிக் கொண்டிருந்தது. இப்போ எக்ஸாம்ஸ் முடிச்சு லீவ் விட்டபிறகு தினம் நினைத்த நேரம் எல்லாம் அந்த பொண்ண போட்டு வாட்டி வதக்கிக் கொண்டிருக்கிறாள். பாவம் அந்த பொண்ணு மித்ரா என்றாள்  ஜெயலட்சுமி.

சித்தியா??? ஏன் அந்த பொண்ணோட அம்மா அப்பா எங்க? என்று கேட்டான் பிரகாஷ்.

அப்பா இருக்காரு, அந்த பொண்ணுக்கு ஆறு வயசு இருக்கும்போதே அவங்க அம்மா உடம்பு சரி இல்லாமல் இறந்துட்டாங்க. சின்ன பொண்ணை வைத்துக்கொண்டு எப்படி தனியா வளர்த்துவ, என்று மித்ராவின் அப்பாவை அவருடைய சொந்தக்காரர்கள் எல்லாம் சமாதானம் செய்து இந்த லேடிக்கு கட்டி வச்சிட்டாங்க. அப்போதும் கூட அவர் ஒன்றும் சும்மா கட்டிக்கொள்ளவில்லை என்னை போல வாழ்க்கை இழந்த ஒரு பொண்ணை தான் கல்யாணம் செய்து கொள்வேன் என்று திருமணம் ஆகி இரண்டு குழந்தையுடன் இருந்த இந்த பெண்ணை கல்யாணம் பண்ணிகிட்டார். அந்த நன்றி கொஞ்சம் கூட இல்லாமல்  அவருடைய பொண்ணை தினம் தினம் இந்த அம்மா சித்திரவதை செய்துகொண்டிருக்கிறாள், என்று கூறினாள் ஜெயலட்சுமி.

இப்படி கூட இருப்பார்களா என்று பிரகாஷ் கேட்க,

அதை ஏன் கேட்கிறாய் மித்ராவின் சித்திக்கு ஒரு பெண்ணும் ஒரு பையனும் இருக்கிறார்கள். அவளுடைய பொண்ணு ஹேமா, மித்ராவை விட ஒரு வயசு பெரியவள் இப்போது இன்ஜினீயரிங் காலேஜ்ல படித்துக்கொண்டிருக்கிறாள். அவள் வந்துவிட்டால் அவளது அம்மாவே பரவாயில்லை என்னும் அளவிற்கு மித்ராவை போட்டு டார்ச்சர் செய்துவிடுவாள் . அந்த வீட்டிலேயே மித்ராவை மனுஷியாக நினைப்பது இருவர் தான். ஒன்று அவளது அப்பா சண்முகம், இன்னொன்று அவளது தம்பி அருண். அவர்கள் இருவர் மட்டும் இல்லை என்றால் இந்த பொண்ணு எப்போதோ தன் உயிரை விட்டிருப்பாள் என்று கூறினாள்.

தன்  அன்னையை பார்த்து புன்னகைத்த பிரகாஷ், வந்து மூன்று மாதம் தான் ஆகிறது அதற்குள் பக்கத்துக்கு வீட்டு ஜாதகமே சொல்றீங்க எப்படிம்மா,  பொண்ணுங்க மட்டும் எப்படியாவது இந்த மாதிரி விஷயங்களை கலெக்ட் பண்ணிடுறீங்க என்று கேட்டான்.

அவனை பொய்யாக முறைத்த ஜெயலட்சுமி, பேசாமல் வேலையை பார்த்துக் கொண்டிருந்தவளிடம் வந்து பக்கத்து வீட்டில் என்னம்மா நடக்கிறது என்று கேட்டுவிட்டு இப்போது என்னையே நக்கல் செய்கிறாயா என்று அவன் தோளில் தட்டினார்.

சரி சரி நான் தான் கேட்டேன் என்றவன், ஆனாலும் அந்த பொண்ணு ரொம்போ பாவம் என்று கூறிவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்.

அன்று மாலை மகனை அழைத்துக்கொண்டு ஜெயலட்சுமியும் ராஜராஜனும் அந்த தெருவில் உள்ள கோயிலுக்கு சென்றனர். கோயிலில் சாமி தரிசனம் முடித்துவிட்டு ஜெயலட்சுமி தன் வயதை ஒத்த பெண்களிடம் பேசஅமர்ந்துவிட, ராஜராஜன் தன் பள்ளியில் வேலை செய்யும் ஆசிரியரை பார்த்துவிட்டு அவரோடு பேச நின்றுவிட்டார்.

இவர்கள் இருவரும் இப்போதைக்கு நம்மை கவனிக்க போவதில்லை என்று நினைத்த பிரகாஷ் கோயிலை வலம் வர தொடங்கினான். அப்போது தெப்பக் குளத்தின் அருகில் அமர்ந்திருந்த மித்ரா அவனது கண்களில் பட்டாள். அவனையும் அறியாமல் அவன் தெப்பக் குளத்தை நோக்கி சென்றான். அப்போது அங்கு வந்த ஒருவர் மித்ராவிடம் வந்து மித்ராம்மா, வந்து ரொம்போ நேரம் ஆச்சா என்று கேட்டுக்கொண்டே அவளது அருகில் வந்து அமர்ந்தார்.

யார் இவர் என்று பிரகாஷ் யோசித்துக் கொண்டிருக்க,

இல்லைப்பா இப்போ தான் வந்தேன் என்று கூறியவள் என்னப்பா ரொம்போ சோர்வா தெரியுறீங்க வேலை அதிகமா என்று கேட்டாள்.

அதெல்லாம் ஒன்னும் இல்லைடா என்றவர், உனக்கு பிடிக்குமேனு பஸ் ஸ்டாண்ட் போய் மக்கா சோளம் வாங்கிக்கொண்டு வந்தேன் என்று கூறி தான் வாங்கி வந்த மக்கா சோளத்தை தன் மகளிடம் கொடுத்தார்.

இதற்காக அவ்வளவு தூரம் போகாட்டி என்னப்பா என்று கேட்ட மித்ராவிடம்,

என்னால் முடிந்ததே அவ்வப்போது உனக்குபிடிக்கின்ற மாதிரி இப்படி எதாவது  வாங்கிக் கொடுப்பதுதான், இதில் எனக்கு என்ன சிரமம் என்று கூறியவர், தன்  மகளை சாப்பிடுமாறு கூறினார்.

அவளும் வாங்கி சுவைத்துவிட்டு சூப்பரா இருக்குப்பா என்று கூறினாள்.

மித்ராவின் தந்தை சண்முகம் ஒரு பிரைவேட் கம்பெனியில் மானேஜராக வேலை செய்கிறார். அவர் சம்பாத்யத்திற்கு அவரது மகளை இன்னுமே நன்றாக பார்த்துக்கொள்ள முடியும். ஆனால் வெளிப்படையாக அப்படி பார்த்துக்கொண்டால் அதற்கும் சேர்த்து தன் தர்ம பத்தினி தன் மகளை உண்டு இல்லை என்று ஆக்கிவிடுவாள் என்று, பெரும்பாலும் அவர் மித்ராவிற்கு அவளது தேவைக்கு மீறி எதையும் செய்ய மாட்டார். சாப்பிடும் தன் மகளையே வாஞ்சையோடு பார்த்துக்கொண்டிருந்தவர், என்னம்மா இப்பயெல்லாம் தினம் கோவிலுக்கு வர என்று கேட்டார்.

சும்மா தான்பா வரணும் போல தோணுச்சு என்று கூறி சாப்பிட தொடங்கினாள் மித்ரா.

அவளையே பார்த்துக்கொண்டிருந்தவர் ஹ்ம்ம் தன் மகளுக்கு இப்படி கோயிலுக்கு வந்தால் தான் சிறிது நேர நிம்மதியாவது கிடைக்கிறது என்று நினைத்து திரும்பி கோயிலை பார்த்தவர், இறைவா!!! என் பொண்ணை ஏன் இப்படி சோதிக்கின்றாய், அவளுக்கு நல்ல காலமே பிறக்காதா??? என்ன பாவம் செய்தாள் என்று அவள் இப்படி சித்திரவதை அனுபவிக்கிறாள்,  நீ அவள் மீது கருணை காட்டக் கூடாதா? என்று வேண்டினார்.

தன் அப்பாவை திரும்பி பார்த்தவள் என்னப்பா ஏதோ யோசனையில் இருக்கிறீர்கள் என்று கேட்க,

இல்லை மித்ரா உன் எக்ஸாம்ஸ் ரிஸல்ட்ஸ் வரபோகுதே வந்த பிறகு  நீ என்ன படிக்கலாம் என்று இருக்கிறாய்? என்று கேட்டார்.

“பி.காம்” பண்ணனும்பா அது முடிச்சிட்டு “எம்.பி.ஏ” படிக்கணும் எனக்கு மேனேஜ்மென்ட் லைன்ல ஒர்க் பண்ணனும்னு ஆசை என்று கனவோடு கூறினாள்.

அவளை ஒரு நிமிடம் ஆராய்ந்து பார்த்தவர் ஏன் மித்ரா உனக்கு டாக்டர்க்கோ, என்ஜினீயர்க்கோ படிக்கணும்னு ஆசை இருந்ததா? இந்த அப்பாவால் அது முடியாது என்று மறைக்கிறாயா என்று கேட்டார்.

அவரை பார்த்து புன்னகைத்தவள் கண்டிப்பாக இல்லைப்பா, எனக்கு எப்போதுமே “மேனேஜ்மென்ட் லைன்ல” போகணும்னு தான் ஆசை. அதனால் தானே நான் “காமெர்ஸ் குரூப்பே” எடுத்தேன். நீங்க அப்படி எல்லாம் ஒன்னும் வருத்தபடாதீங்க என்று கூறினாள் மித்ரா.

உடனே சரி சரி ரிசல்ட் வந்ததுமே நம்ம பக்கத்துக்கு வீட்டு ராஜராஜன் சார் கிட்ட கேட்டு உன்னை நல்ல காலேஜ்ல பி.காம்  சேர்த்து விடுகிறேன் என்று கூறினார்.

அவர்கள் பேசுவதை தள்ளி நின்று கேட்டுக்கொண்டிருந்த ப்ரகாஷிற்கு அவனது தந்தையிடம் இருந்து போன் வந்தது.

பிரகாஷ் எங்க போயிட்ட, என்று அவர் கேட்க,

இங்க தான் அப்பா தெப்பக் குளத்திற்கு அருகில் இதோ வருகிறேன் என்று எழுந்து சென்றுவிட்டான்.

தன் தந்தையிடம் பேசிக்கொண்டிருந்த மித்ராவோ, அங்கு  பிரகாஷ் வந்ததையோ, தாங்கள்  பேசியதை கேட்டதையோ கவனிக்கவில்லை.

மித்ராவின் கனவு நிறைவேறுமா? பிரகாஷ் மித்ராவின் கனவுக்கு துணை வருவானா?? அறிய தொடர்ந்து வாசியுங்கள் என் வானவில்…..

-நறுமுகை

3

No Responses

Write a response