என் வானவில்-16

என் வானவில்-16

அன்று மாலை தோட்டத்தில் அமர்ந்திருந்த மித்ராவிடம் சென்று அமர்ந்தான் பிரகாஷ்.

அவனை பார்த்ததும் புன்னகைத்தவள், வந்ததும் உங்களிடம் கேட்கவேண்டும் என்று நினைத்தேன், சுஜி அக்கா எப்படி இருக்கிறார்கள் என்று கேட்டாள்.

ஹ்ம்ம் அவள் நன்றாக இருக்கிறாள், அவளே உன்னிடம் வீடியோ கால் பேசுவதாக கூறினாள் நாளை பேசலாம் என்று கூறினான்.

சரி என்றவள் இன்னும் இங்கு இரண்டு மூன்று நாட்களுக்கு இருப்பீர்களா? என்று கேட்டாள்.

இரண்டு மூன்று நாட்களுக்கு கஷ்டம், ஆனால் திங்கட்கிழமை வரை இங்கு தான் இருப்பேன் என்றான் பிரகாஷ்.

ஒஹ்… என்றவளிடம் , ஆமாம் என்னை இரண்டு மூன்று நாட்களுக்கு இங்கு இருக்க சொல்கிறாய் உனக்கு காலேஜ் லீவா? என்று கேட்டான்.

ஹ்ம்ம் எனக்கு இரண்டு நாட்கள் லீவ் காலேஜில் ரெனவேசன் ஒர்க் போய்க்கொண்டிருக்கிறது. எங்களுக்கு காலேஜ் திரும்பவும் புதன்கிழமை தான் ஓபன் பண்ணுவாங்க, வரும் வாரமும் அதற்கு அடுத்த வாரமும் சனிக்கிழமை காலேஜ் இருக்கிறது என்றாள் .

ஒஹ்..சனிக்கிழமை காலேஜ் இருந்தால் நீ எப்படி ஊருக்கு வருவாய்? என்று பிரகாஷ் கேட்க,

ஒரு நாள் என்றாலும் வந்து பாட்டியை பார்த்துவிட்டு தான் போகிறேன் என்றாள் மித்ரா.

ஹ்ம்ம் அதுவும் சரி தான் பாட்டி உன்னை பார்க்கவில்லை என்றால் இளைத்து போய்விடுவார்கள் என்று கூறி சிரித்தான்.

எங்கள் இருவரையும் கிண்டல் செய்கிறீர்களா என்று மித்ரா கேட்க,

கிண்டல் எல்லாம் இல்லை நிஜமாக தான் கூறுகிறேன். காலையில் இருந்து பாட்டியுடன் தானே பேசிக்கொண்டிருக்கின்றேன் , ஒரே மித்ரா புராணம் தான் என்றான்.

அதெல்லாம் ஒன்றும் இல்லை நீங்கள் இல்லாதபொழுது எப்போதும் உங்கள் புராணம் தான் பாடுவார்கள் கேட்டு கேட்டு எனக்கு போர் அடித்துவிட்டது என்றாள் மித்ரா.

அவள் கூறியதை கேட்டு வாய் விட்டு சிரித்தவன் நல்லதிற்கே காலம் இல்லை. நல்லவர்கள் என்று இருந்தால் நான்கு பேர் புகழ தான் செய்வார்கள் மித்ரா,அதற்காக எல்லாம் போர் அடித்துவிட்டது என்று கூறுவதா? என்று கேட்க,

ஆமாம் ஆமாம் சரி தான் என்று அவனை கேலி செய்தாள்.

அதன் பின் இருவரும் வெகுநேரம் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.அவளது படிப்பு, அடுத்து அவள் என்ன செய்ய போகிறாள், போன்று நிறைய விஷயங்களை பற்றி பேசினர்.கூடவே அவன் கொண்டு வந்திருந்த சில புத்தகங்களை மித்ராவிடம் கொடுத்தான்.

அதை பார்த்தவள் இதெல்லாம் என்ன புக்ஸ் என்று கேட்க,

 நீ காலேஜ் புக் மட்டும் படித்தால் போதாது மித்ரா, கொஞ்சம் வாழ்க்கையையும் படிக்கவேண்டும்.அப்போ உங்கள் சித்தியினால் பிரச்சனை நான் காப்பாற்றி உன்னைக்கொண்டு வந்து இங்கே விட்டு இருக்கேன். இங்கேயே நீ உன் வாழ் நாள் முழுவதும் இருந்துவிட முடியாது இல்லையா?. உலகத்தை எதிர்த்து போராடுவதற்கு, உனக்கு தனியாக மன தைரியம் வேண்டுமே அதற்கு தான் இந்த புக்ஸ் எல்லாம், என்று கூறினான்.

நான் ஏன் இங்கிருந்து போக வேண்டும், பாட்டியைப் பார்த்துக்கொண்டு இப்படியே இங்கேயே இருந்துவிடுகிறேனே? என்று  மித்ரா கேட்க,

பாட்டியை பார்த்துக்கொள்வது என்றால் கூட, பாட்டியை யார் ஏமாற்றுகிறார்கள், பாட்டியிடம் வேலை செய்பவர்கள் நல்லவர்களா? கெட்டவர்களா? அவர்களது இன்டென்ஸன் என்ன? என்று தெரிந்துகொள்ளவாவது உனக்கு உலக அறிவு வேண்டாமா? என்று கேட்டான் பிரகாஷ்.

அதுவும் சரி  தான் என்றவள், இந்த புக் எல்லாம் படித்தால் போர் அடிக்காதா என்று கேட்டாள்.

அதெல்லாம் ஒன்றும் அடிக்காது, உனக்கு என்னை பற்றி பேசினாலும் போர் அடிக்கும், புக் படித்தாலும் போர் அடிக்குமா ? என்று கேலி செய்தான்.

அப்படி சொல்லவில்லை, சரி படிக்கிறேன் என கூறி வாங்கிகொண்டாள்.

 அதன் பின் வள்ளி வந்து அவர்களை உணவு உண்பதற்காக அழைக்க, இருவரும் உள்ளே சென்றனர்.

அவர்கள்  உள்ளே வருவதையே பார்த்துக் கொண்டிருந்த தெய்வநாயகியை பார்த்த பிரகாஷ், என்ன பாட்டி அப்படி பார்க்கின்றீர்கள்  என்று கேட்க,

ஹ்ம்ம் அதெல்லாம் ஒன்றும் இல்லை, சும்மா தான் என்றவர், ஆமா பிரகாஷ் ஊரில் அம்மாவிற்கு நீ இங்கு வந்திருப்பது தெரியுமா, தெரிந்திருந்தால் இந்த நேரத்திற்கெல்லாம் போன் செய்திருப்பாளே ? என்று கேட்க,

இல்லை பாட்டி நான் இங்கு வந்திருப்பதாக இன்னும் அவர்களிடம் சொல்லவில்லை, இனிமேல் தான் சொல்லவேண்டும். அம்மாவும் அப்பாவும் கோவிலுக்கு சொந்தக்காரர்களுடன் சென்றிருக்கிறார்கள்.அந்த சமயத்தில் அவர்களுக்கு எதற்கு சொல்லவேண்டும் என்று தான் சொல்லவில்லை என்றான்.

சரி சரி அவளிடம் பேசினால் மறக்காமல் கொடு, நானும் பேசி எவ்வளவு நாட்கள் ஆகிறது என்று கூற,

பாட்டி பேச்சு வாக்கில் நீங்கள் மித்ராவின் பெயரை சொல்லிவிட்டால் அம்மா என்னை ஒரு வழி  பண்ணிவிடுவார்கள்.அதற்கு தான் உங்களிடம் அவர்களை பேசவிடாமல் வைத்திருக்கிறேன் என்றான் பிரகாஷ்.

சரி டா அது கூடவா எனக்கு தெரியாது,  எத்தனை முறை தான் என்னிடம் கூறுவாய்? என்றார் தெய்வநாயகி.

எத்தனை முறை சொல்லி என்ன செய்ய? என்னிடமே நீங்கள் மித்ராவின் பெயரை நிமிடத்திற்கு நிமிடம் கூறுகிறீர்கள், பேச்சுவாக்கில் நீங்கள் மித்ரா என்று சொல்லிவிட்டாலே போதும்,எங்கள் அம்மா என் அப்பாவை விட நன்றாக கணக்கு போடுவார்கள் என்று கூற அங்கிருந்த அனைவரும் சிரித்தனர்.

மித்ராவோ இப்போ எதற்கு தேவை இல்லாமல் எங்கள் சாரை பற்றி கிண்டல் செய்கிறீர்கள்? என்று கேட்க,

அதுசரி என்னை தவிர வேறு யாரை கிண்டல் செய்தாலும் நீ சண்டைக்கு வந்துவிடுவாயே? என்று அவளை வாரினான் பிரகாஷ்.

இப்படியே பேச்சும் சிரிப்புமாக அனைவரும் சாப்பிட்டு முடித்துவிட்டுஉறங்க சென்றனர்.

பிரகாஷ் அங்கிருந்த இரண்டு நாட்களுமே முடிந்தவரை மித்ராவுடனும், தெய்வநாயகியுடனும் செலவழித்தான்.

மாலையில் மூவரும் சேர்ந்து வாக்கிங் செல்வது, காலையில்  தோட்டத்தில் அமர்ந்து அரட்டை அடிப்பது என்று, மூன்று நாட்களும் இனிமையாக கழிந்தது,அந்த நினைவிலேயே மித்ரா கல்லூரி சென்று சேர்ந்தாள்.

அங்கு கல்லூரி  விடுதியில் அவளது தோழி  அபிராமி அவளுக்காக காத்துக்கொண்டிருந்தாள்.

முகம் முழுவதும் மகிழ்ச்சியோடு தன் அறைக்கு வந்த மித்ராவை அனைத்துக்கொண்டவள். மித்ரா நான்கு நாட்களாக உன்னை பார்க்காமல் என்னக்கு பொழுதே போகவில்லை.

வீட்டில் கூட உன்னை பற்றியே தான் பேசிக்கொண்டிருந்தேன்.அடுத்த முறை வரும்பொழுது அம்மா உன்னையும் அழைத்துக்கொண்டு வர சொன்னார்கள் என்றாள்.

கண்டிப்பாக அபி, ஒரு நாள் வருகிறேன் என்றவள்,

எனக்கு இந்த நான்கு நாட்கள் செம ஜாலியாக இருந்தது. காலேஜிற்கு வரவே மனது இல்லை தெரியுமா? என்று கூற,

அப்படியா என்று அபிராமி கதை கேட்க தொடங்கினாள்,

நான் தான் சொல்லி இருக்கிறேனே என்னுடைய கார்டியன் அவர் ஊரிலிருந்து வந்திருந்தார்.

யார்? சத்யாவா என்று அபிராமி கேட்க,

உதை விழும் பிரகாஷ்னு சொல்லு, அவளை செல்லமாக மிரட்டினாள் மித்ரா.

இதோ பார் டா, நீ சொல்லும்பொழுது சத்யா என்று தானே சொல்கிறாய் என்று அபி கேட்க,

அது எனக்கு மட்டும் தான் என்றாள் மித்ரா.

ஹ்ம்ம் போட்டோ காட்டு என்றால் காட்ட மாட்டேன் என்கிறாய்? கதை மட்டும் சொல்கிறாய். இதில் நாங்கள் சத்யா என்று கூப்பிடக்கூடாது என்று கண்டிஷன் வேறு?

ஒரு நாள் அவரை நான் பார்க்கும்பொழுது இதை எல்லாம் நான் போட்டுக்கொடுக்கிறேன் என்று சொன்னால் அபி.

நீ ஒன்றும் போட்டு கொடுக்க வேண்டாம், சும்மாவே அவருக்கு என்னை கிண்டல் பண்ணுவது தான் வேலை என்றவள், செம ஜாலியா போனது தெரியுமா? அவர் வரேன் என்று சொல்லவே இல்லை,செம சர்ப்ரைஸ் என்று பிரகாஷுடன் செலவழித்த நாட்களை பற்றி அபிராமியிடம் கதை சொல்லி கொண்டிருந்தாள் மித்ரா.

கதை சொல்லிக்கொண்டிருக்கும் மித்ராவையே உற்று பார்த்துக்கொண்டிருந்த அபி, ஏதோ தோன்ற தனக்குள் புன்னகைத்துக்கொண்டவள் அதை தோழியிடம் கூறவில்லை.

மித்ரா, தனக்கு யாருமில்லை என்றும் பாட்டிதான் அவளை பார்த்துக்கொள்கிறார்கள் என்றும் பாட்டியால் அதிகமா ட்ராவல் செய்ய முடியாது எனவே அவருடைய பேரனை தனக்கு கார்டியானாக  போட்டிருப்பதாக காலேஜில் அனைவரிடமும் சொல்லியிருந்தாள். அபிராமியும் மித்ராவும் ஒரே கிளாசில் இருந்தனர், கூடவே அவர்களுக்கு ஹாஸ்டலிலும் ஒரே அறை கொடுக்கப்பட்டிருந்தது. அபிராமியும், மித்ராவும்  குறுகிய காலத்திலேயே நெருங்கி பழக தொடங்கினர், அப்படியிருந்தும் மித்ரா தன்னை பற்றி எந்த உண்மையையும் அபிராமியிடம் சொல்லவில்லை. ஆனால் அவள் பாட்டியை பற்றியும் பிரகாஷை பற்றியும் அபிராமியிடம் இயல்பாக பேசுவாள்.

அப்படி மித்ரா கூறியவைகளை வைத்து அபிராமிக்கு சில விஷயங்கள் புரிந்தன.

அபிராமி தெரிந்துகொண்ட ரகசியம் என்ன? என்று அறிய தொடர்ந்து வாசியுங்கள் “என் வானவில்”

                                                                                  நறுமுகை

3

No Responses

Write a response