New Tamil Novel | Meendum Malarvai

மீண்டும் மலர்வாய்-3

சஞ்சனா தான் தங்குவதற்கும் உணவுக்குமான பணத்தை மாதா மாதம் கொடுத்துவிடுவதாக கூறினாள். பாரதி விஷயம் தவிர அவளின் வேறு எந்த விஷயத்திலும் ஆதித்தியன் தலையிட கூடாது, மேலும் ஆதித்தியனின் உறவினர்கள் யாரும் அவர்களது பிரிவு பற்றி எதுவும் பாரதி முன்னால் பேசாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது ஆதித்தியனின் பொறுப்பு என்று கூறினாள்.

அவளின் நிபந்தனைகளை ஆதி ஏற்றுக்கொண்டான்.

அந்த வார ஞாயிறு அன்று அவன் வந்து அவர்கள் இருவரையும் அழைத்துச் செல்வது என்று முடிவானது.

அன்று மாலை வீட்டிற்கு சென்றவள், தன் அண்ணன் வந்தபிறகு அனைவர் முன்னிலையிலும் தானும், பாரதியும் தங்கள்  வீட்டிற்குச் செல்ல போவதாக கூறினாள்.

உங்க வீடா அதுக்கு வழியில்லாம தான இங்க ஒட்டிக்கிட்டு இருக்க, இப்போ என்ன புதுசா கதை சொல்ற, என்று நக்கலாக கேட்டாள் ரேணுகா.

பாலகுமார் பல்லைக்கடித்துக்கொண்டு தன் கோபத்தைக் கட்டுப்படுத்த,

சஞ்சனா ரேணுகாவைத் தவிர்த்து தன் அண்ணனிடம் ஞாயிற்றுக்கிழமை அவரே வந்து கூட்டிட்டு போறேன்னு சொன்னரு அண்ணா, என்று கூறினாள்.

அவரா?? அடுத்த ஆள புடிச்சிட்டியா? இவன் கூட எத்தன நாள், ஆனா அவனையும் கழட்டிவிட்டுட்டு திரும்பவும் இங்க வரலான்னு எல்லாம் நினைக்காத, என்று ரேணுகா சொல்லி முடிப்பதற்குள், அவளது கன்னத்தில் ஓங்கி அறைந்தான் பாலகுமார்.

கிருஷ்ணவேணி மகனைத்தடுக்க முயலவில்லை.

நானும் பார்த்துகிட்டே இருக்கேன் உன் ஆட்டம் அளவு கடந்து போயிட்டு இருக்கு. இனி ஒரு வார்த்தை பேசின உன் அப்பா  வீட்டுக்கு போக வேண்டியது தான், என்று விரல் நீட்டி எச்சரித்தான்.

பாலகுமார் அடித்தான் என்பதைத் தாண்டி ரேணுகாவின் ஆத்திரம் முழுவதும் சஞ்சனா மீது தான் இருந்தது. எனவே வாங்கிய அடியைப் பொருட்படுத்தாமல் எதுக்கு நான் எங்க அப்பா வீட்டுக்கு போகணும்? நான் என்ன உங்க தங்கச்சி மாதிரின்னு நினைச்சீங்களா? புருஷன் கூட வாழாம பொறந்த  வீட்டுக்கு வந்து அண்ணன் வாழ்க்கையும் கெடுக்குறதுக்கு, என்று ஆத்திரத்தோடு கேட்க, அவளை அடிக்க மீண்டும் கை ஓங்கினான் பாலகுமார்.

அவர்களுக்கிடையில் வந்த சஞ்சனா, அண்ணா இது என்ன பழக்கம் அவங்க திருப்பி அடிச்சா நீ சும்மா இருப்பியா? என்று கேட்டுக்கொண்டிருக்க,

அவளைத் தன் பக்கம் திருப்பிய ரேணுகா, நீ ஒன்னும் நல்லவ வேஷம் போட வேண்டாம். என் புருஷனே என்னை அடிக்கிற மாதிரி செஞ்சுட்ட இல்ல இனி உனக்கு இந்த வீட்டுல இடம் இல்ல, இனி எதாவது பிரச்சனைன்னு இந்த வீட்டு பக்கம் வந்துடாத, என்று உச்ச குரலில் கத்தினாள்.

அவளை அமைதியாக பார்த்த சஞ்சனா என்னை இந்த வீட்டுக்கு வரக்கூடாதுன்னு சொல்ல உங்களுக்கோ உங்க புருஷனுக்கோ எந்த உரிமையும் இல்ல, இந்த வீடு எங்க அப்பா கட்டுனது, அவரோட மறைவுக்கு பிறகு இந்த வீட்டை எங்க அம்மா பேருல தான் மாத்தினோம். இந்த வீட்டோட மொத்த உரிமையும் எங்க அம்மாக்கு மட்டும் தான் இருக்கு.

இங்க யாரு இருக்கனும், இருக்கக் கூடாதுன்னு முடிவு பண்ற உரிமை எங்க அம்மாக்கு மட்டும் தான் இருக்கு. அதாவது…. அவங்க நினச்சா உங்களை வீட்டை விட்டு வெளியில போக சொல்ல முடியும், அது புரிஞ்சு நடந்துக்கிட்டா உங்களுக்கு நல்லது என்று அழுத்தமாக கூறினாள்  சஞ்சனா.

சஞ்சனா கூறியதைக் கேட்டு ரேணுகாவின் முகம் கன்றி சிவந்தது, யாரையும் நிமிர்ந்து பார்க்காமல் அறைக்குள் சென்று அடைந்து கொண்டாள்.

நல்லா திருப்பி கொடுத்த சஞ்சும்மா, இவல்லாம் திருந்தாத ஜென்மம், நீ சொல்லு மாப்பிள்ளைக்கும் உனக்கும் நடுவுல இருந்த பிரச்சனை சரியாயிடுச்சா என்று ஆர்வமாக கேட்டான் தமையன்.

அண்ணா அதைப் பத்தி இப்ப எதுவும் கேக்காத, இப்போதைக்கு நாங்க அங்க போகப்போறோம் அவ்வளவுதான் என்றாள்.

தங்கையின் வாழ்க்கை இப்படி ஆனது பற்றி மிகவும் வருத்தத்தில் இருந்த பாலகுமாருக்கு தங்கை அவளது கணவன் வீட்டிற்கு போகப்போகிறாள் என்பதே மகிழ்ச்சியாக இருந்தது.

கிருஷ்ணவேணியும் அதே மனநிலையில் தான் இருந்தாள். தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக அன்று தன் மகளுக்கு பிடித்ததை சமைத்தாள் அன்னை.

ரேணுகா உணவு வேண்டாம் என்று தன் அறையிலேயே அடைந்து கொண்டாள்.

அன்று இரவு சஞ்சனா தன் அறைக்கு சென்றதும் மகளைத் தன் அருகில் அமர்த்தி நாம் இனி அப்பாவுடன் ஒரே குடும்பமாக இருக்கப்போவதைத் தெரிவித்தாள்.

மகிழ்ச்சியில் தன் அன்னையை அணைத்துக்கொண்டாள் பாரதி. பின் மெதுவாக அம்மா எனக்காக நீங்க இந்த முடிவுக்கு வந்தீங்களா? என்று கேட்டாள்.

மகளைக் கண்ணோடு கண் பார்த்து இல்ல ரதிம்மா இந்த முடிவை நமக்காக எடுத்தேன் என்றாள்.

அன்னை சந்தோஷமாக இருந்தால் தன்னை ரதி என்று அழைப்பார் என தெரிந்திருந்த பாரதி அதற்கு மேல் எதுவும் கேட்காமல் இனி அன்னை, தந்தையோடு சேர்ந்திருக்கும் குஷியில் உறங்கி போனாள்.

நிர்மலமாக உறங்கும் தன் மகளைப் பார்த்த சஞ்சனாவிற்கு தானும் ஒரு காலத்தில் இதுபோல் தான் இருந்தோம் என்பது ஏதோ முன்ஜென்மம் போல் தோன்றியது. அப்படியே சஞ்சனாவின் எண்ணங்கள் பின்னோக்கி போனது.

சஞ்சனா முதுகலை இறுதியாண்டு படித்துக் கொண்டிருந்தாள். சிறுவயதில் இருந்து அன்னையுடன் வெள்ளிக்கிழமைகளில் கோயிலுக்குப் போகும் பழக்கம் இன்றளவும் சஞ்சனாவிடம் உண்டு.

அன்றும் அதுபோல ஒரு வெள்ளிக்கிழமையில் கோயிலுக்கு சென்றவள் அங்கு இருந்த குழந்தைகளோடு விளையாடிக் கொண்டிருந்தாள். அவள் அடிக்கடி அந்த கோயிலுக்கு செல்வதால் அங்கு ஐயர் முதற்கொண்டு பலருக்கும் சஞ்சனாவை நன்றாக தெரியும், பூஜை முடித்து வந்த சஞ்சனா தன் கையில் விளக்கு எண்ணெய் சிந்திவிட்டதால் அதைக் கழுவுவதற்காக கிணத்தடிக்குச் சென்றாள்.

அதே நேரம் மறைந்த தன் தாயின் பிறந்தநாளுக்காக கோயிலுக்கு வந்திருந்த ஆதித்தியன் ஒரு முக்கியமான போன் கால் அட்டென்ட் செய்ய சற்று ஒதுங்கி இருந்த கிணத்தடி பக்கமாக வந்து பேசிக்கொண்டிருந்தான்.

சூரியன் மறையும் நேரம் அங்கு சற்று வெளிச்சம் குறைவாகவே இருந்தது, எனவே தவறி தண்ணீர் தேங்கியிருந்த இடத்தில் கால் வைத்த சஞ்சனா கீழே விழப்போக அவளைத் தாங்கி பிடித்தான் ஆதி.

அந்த பொன்மாலை நேரத்தில் கண்களில் கலக்கத்தோடு தன் கைகளில் பூமாலையென விழுந்திருந்த பெண்ணின் முகம் சட்டென ஆதியின் மனதில் பதிந்து போனது. விழுந்துவிட கூடாது என பயத்தில் ஆதியின் சட்டையை இறுக்கி பிடித்திருந்தாள் சஞ்சனா.

விழப்போகும் அதிர்ச்சியில் சஞ்சனாவும், அவளை விலக்கிவிட மனமில்லாமல் ஆதியும் அதே நிலையில் இருக்க, கோயில் மணியோசையும் அதைத் தொடர்ந்து பறவைகளின் கீச்சுக்குரலும் அவர்கள் தங்களை மறந்து நின்ற நிலையை கலைத்தது.

சஞ்சனா பதறி ஆதியிடம் இருந்து விலகி படபடப்புடன் அங்கிருந்து ஓடிவிட்டாள்.

 செல்லும் அவளையே புன்னகையோடு பார்த்துக்கொண்டிருந்தான் ஆதி.

பின் சாமி கும்பிட்டுவிட்டு காருக்கு சென்றவனிடம்,

கார் டிரைவர், சார், ஷர்ட்ல என்ன ஆச்சு? என்று கேட்க,

அப்பொழுதுதான் சஞ்சனா பிடித்திருந்த இடம் முழுவதும் எண்ணெயாக இருந்ததை அவன் கவனித்தான். அதைப் பார்த்ததும் அவளது முகம் அவன் கண் முன்னர் வந்து சென்றது. முகத்தில் தோன்றிய புன்முறுவலோடு ஒன்றுமில்லை வீட்டுக்கு போகலாம் என்று சொல்லிவிட்டு கண்மூடி சீட்டில் சாய்ந்தவனால் சஞ்சனா முகம் கண்முன் வருவதை  தடுக்க முடியவில்லை. 

அப்போது மட்டும் இல்லை அதன் பின்னும் அந்த மலர்முகம் அவனது நினைவுகளில் எப்பொழுதும் பசுமையாகவே இருந்தது.

 சஞ்சனா ஆதியின் காதல் கதையை அறிய தொடர்ந்து வாசியுங்கள் “மீண்டும் மலர்வாய்”.

-நறுமுகை

5

No Responses

Write a response