New Tamil Novel | Meendum Malarvai

மீண்டும் மலர்வாய்-2

சிறு வயதில் பாரதிக்கு batmiton விளையாட விருப்பம் என்று தெரிந்ததும் ஸ்டேட் ப்ளேயரான மாயாவிடமே ட்ரைனிங் அனுப்பினர். இப்போது பாரதி ஸ்டேட் லெவெல்க்கு ரெடியாக, வேற கோச் ஏற்பாடு செய்தாலும் மாயா தான் அவளை க்ளாஸிற்கு அழைத்துச்செல்கிறாள். பாரதிக்கு நேஷனல் பிளேயர் ஆக வேண்டும் என்பது ஆசை. அந்த ஆசைக்கு தடையாக இருப்பது தான்தான் என்பது சஞ்சனாவிற்கு வருத்தமாக இருந்தது. பாரதியிடம் இதைப்பற்றி மெதுவாக தான் பேச வேண்டும் என்று நினைத்தாள்.

வீட்டிற்கு சென்ற சஞ்சனாவைப் பார்த்த அவளது தாய் கிருஷ்ணவேனி, என்னம்மா முகம் வாட்டமா இருக்கு, அதிக வேலையா? இரு காபி கொண்டுவரேன் என்று கிச்சனுக்குள் சென்றார்.

அதைக் கேட்டுக்கொண்டு அங்கு வந்த சஞ்சனாவின் அண்ணி ரேணுகா,

ஆமாமா, அப்படியே புருஷன், குடும்பம், வேலைனு மேடம் டயர்டு ஆயிட்டாங்க, காபி குடுத்து விசிறி விடுங்க என்று நக்கலாக கூறினாள்.

 ரேணுகா இதுபோல குத்தலாக பேசுவது இது முதல்முறையில்லை, எனவே சஞ்சனா அமைதியாக இருந்தாள். அதே சமையம் டியூசன் முடித்து வீட்டிற்கு வந்தாள் பாரதி.

தாயைப் பார்த்ததும் வேகமாக அருகில் வந்தவள், அம்மா வந்துட்டீங்களா? ஸ்கூல்ல இருந்து வந்ததும் காணோம்னு தேடினேன், பாட்டி தான் நீங்க வேலையா வெளியில போயிருக்கிங்கனு சொன்னாங்க, ஆல் ஓகே தானம்மா, என்று கேட்டாள்.

ஃப்ரண்ட பார்க்க போனேம்மா அதுதான் லேட் என்று சஞ்சனா பதில் சொல்லிக்கொண்டிருக்க,

ரேணுகாவோ, ஆமா கேள்விகேட்க யாரு இருக்கா? புருஷன் கேள்வி கேட்டான்னு வெளிய வந்தாச்சு இங்க யாரும் கேள்வி கேட்டுற கூடாதுன்னு மாசா மாசம் பணம் கொடுத்துடறது, அப்புறம் என்ன, இஷ்டம் போல இருக்க வேண்டியது தான் என்று கூற.

ஏற்கனவே தன்னால் மகள் கஷ்டப்படுகிறாள் என்று இருந்த சஞ்சனாவிற்கு ரேணுகாவின் பேச்சு கோவத்தை ஏற்படுத்தியது.

மகளை மாடியில் இருக்கும் தங்கள் அறைக்கு அனுப்பிவிட்டு, ரேணுகாவிடம் வந்தவள்,

உங்ககிட்ட பலமுறை சொல்லியிருக்கேன் பாரதி முன்னாடி அனாவசியமா பேசாதீங்கன்னு, இன்னைக்கு எல்லைமீறி பேசிட்டீங்க இனி ஒருதரம் இப்படி பேசுனா நடக்கிறதே வேற, என்னப்பத்தி பேச உங்களுக்கு எந்த உரிமையும் இல்ல, நாங்க இங்க தங்க மாசம் வாடகை தந்துதான் ஆகணும்னு சொல்லி மாசா மாசம் பணம் வாங்குறீங்கல்ல….. சோ நீங்க ஹவுஸ் ஓனர் அவ்வளவு தான் தேவையில்லாம என் சொந்த விஷயத்துல தலையிடாதீங்க, என் பொண்ணு முன்னாடி இந்த மாதிரி பேசுனீங்க அப்புறம் மரியாதை கெட்டுடும் என்று விரல் நீட்டி எச்சரித்துவிட்டு தன் அறைக்கு சென்றாள் சஞ்சனா.

அங்கு பாரதி உடை மாற்றி ஹோம் ஒர்க் செய்துகொண்டிருந்தாள், மும்முரமாக எழுதிக்கொண்டிருந்த மகளின் முகம் எப்பொழுதும்போல் அமைதியாக இருந்ததைப் பார்த்த சஞ்சனா, இந்த அமைதிக்கு பின்னால் சொல்லமுடியாத வலி இருக்கிறது, தான் அதை புரிந்துகொள்ளவில்லையே என்று நினைத்தாள்.

தாயைப் பார்த்ததும் அம்மா நான் கொஞ்சம் நேரம் காவ்யா (சஞ்சனாவின் அண்ணன் மகள்) கூட விளையாடிட்டு வந்து ஹாம் ஒர்க் பண்ணட்டுமா? என்று கேட்டாள்.

சரி என்று கூறி மகளை அனுப்பி வைத்தாள்.

பாரதி சென்றதும் அப்படியே சோர்ந்து அமர்ந்த சஞ்சனாவிற்கு தான் வாழ்க்கையில் முக்கியமான முடிவெடுக்கும்கட்டத்தில் இருக்கிறோம் என்று புரிந்தது.

சஞ்சனாவிற்கு தன் அண்ணி ரேணுகாவின் பேச்சு வேதனையாக இருந்தது. எவ்வளவு ஒதுங்கி போனாலும் தேடி வந்து வம்பு செய்பவர்களை என்ன செய்வது என்று அவளுக்கு புரியவில்லை.

 சஞ்சனாவின் தந்தை அவள் கல்லூரி இரண்டாமாண்டு படிக்கும்போதே மாரடைப்பால் காலமானார். சஞ்சனாவின் அண்ணன் பாலகுமார் அப்பொழுது கல்லூரி முடித்து வேளையில் சேர்ந்து இருந்ததனால் அவர்களுக்கு பணப்பிரச்சனை ஏற்படவில்லை. அவர்களுக்கென சொந்தமாக வீடு  இருந்தது. அதுபோக பேங்க்ல கையிருப்பு இருந்தது. சஞ்சனா தந்தையின் ஓய்வூதிய பணமும் இருந்ததனால்  சஞ்சனாவின் அன்னை கிருஷ்ணவேணியால் தொய்வின்றி குடும்பத்தை நடத்த முடிந்தது.

சஞ்சனா, ஆதித்தியன் திருமணம் முடிந்து இரண்டு வருடம் கழித்து தான் பாலகுமார் ரேணுகா திருமணம் நடந்தது.

இயல்பிலேயே ஆசை அதிகம் உள்ள ரேணுகாவிற்கு பணக்கார வீட்டில் திருமணம் செய்திருக்கும் தன் நாத்தனார் மீது பொறாமை உண்டானது. தனது மாமியாரும் கணவனும் நாத்தனார் மீது கொண்டிருக்கும் பாசம் அந்த பொறாமையை மேலும் அதிகமாக்கியது. நடுத்தர குடும்பத்தில் பிறந்த ரேணுகா தன் தாயின் ஆடம்பர செலவுக்கும் தாய்- தந்தையின் சண்டைகளுக்கு பழகியிருந்ததால், அதில் இருந்து மாறுபட்டு ஒருவர் மீது ஒருவர் அன்பு வைத்திருக்கும் இந்த குடும்ப சூழல் அவளுக்கு நடிப்பாக தெரிந்தது.

சஞ்சனா, அண்ணி என்று அன்பாக இருந்தாலும் அவள் நடிப்பதாகவும், தன்னை ஏளனமாக நினைப்பதாகவும் ரேணுகா எண்ணினாள்.

அந்த எண்ணத்தில் புகைந்து கொண்டிருந்த ரேணுகா, சஞ்சனா கணவனைப் பிரிந்து தாய் வீட்டிற்கு வந்தபோது இவள் இங்கு தங்கினால், தான் வீட்டைவிட்டு சென்றுவிடுவதாக மிரட்டி ஆர்ப்பாட்டம் செய்தாள்.

பெண்பிள்ளையை வைத்துக்கொண்டு வேறு எங்கும் தங்குவது பாதுகாப்பாக இருக்காது என்று உணர்ந்து சஞ்சனா, தான் தங்குவதற்கும் உணவுக்குமான பணத்தைத்  தருவதாக சொல்லவும்தான் ரேணுகா சஞ்சனாவை இங்கு தங்க அனுமதித்தாள். அதையும் அவளிடம் தான் கொடுக்க வேண்டும் என்று கூறிவிட்டாள். என்னதான் பணம் கொடுத்தாலும் ஒதுங்கிப்போனாலும் ரேணுகா குத்தலாக பேசுவதை நிறுத்தவில்லை. வெகு சிலசமயங்களில் பாரதி முன்னாடி ஏதாவது பேசினால் சஞ்சனா நன்றாக திருப்பி கொடுத்துவிடுவாள். ஆனால் அதற்கெல்லாம் ரேணுகா அடங்குவதில்லை. ஆரம்பத்தில் இதனால் பாலகுமார்க்கும் ரேணுகாவிற்கும் சண்டை வந்தது. சஞ்சனா தன் அண்ணனிடம் தனக்காக எதுவும் பேசக்கூடாது என்று உறுதியாக கூறிய பிறகு, ரேணுகாவை அடக்குவோர் யாருமில்லை.

இன்று ஏற்கனவே மாயா சொன்ன விஷயத்தால் வருத்தத்தில் இருந்த சஞ்சனாவிற்கு ரேணுகா பாரதி முன்னாடி தப்பாக பேசவும் பொங்கி விட்டாள்.

பொறுமையாக அமர்ந்து யோசிக்கும்போது இதுபோல எத்தனை சம்பவங்கள், பாரதி எந்த அளவிற்கு காயப்பட்டிருப்பாள், அதை உணராமல் இருந்துவிட்டோமே, என்று குற்ற உணர்வால் மனம் நொந்த சஞ்சனா விரைவாக இதற்கொரு முடிவு கட்ட வேண்டும் என்று நினைத்தாள்.

மறுநாள் கல்லூரி சென்ற சஞ்சனாவிற்கு மனது மிகவும் குழப்பமாக இருந்தது.

ஆதித்தியனிடம் பேசவேண்டும், நாமாக சென்றால் வேண்டுமென்றே முறுக்கிகொள்வானோ, இது தான் வாய்ப்பு என்று குத்திக்காட்டுவானோ?  என்று நினைத்தவள் என்ன செய்தாலும் பாரதிக்காக பொறுத்துதான் ஆக வேண்டும், என்று முடிவுசெய்தாள்.

ஆனால் அவள் சற்றும் எதிர்பார்க்காத வகையில் ஆதித்தியன் அவளைத் தேடி கல்லூரிக்கு வந்திருந்தான்.

ஆதித்தியன், “நிலா”  குரூப்ஸ் ஆப் கம்பெனியின் எம்.டி. சிறுவயதிலேயே தாய் தந்தையை இழந்து கார்டியன் பாதுகாப்பில் வளர்ந்த ஆதி, கல்லூரி முடித்தவுடன் கம்பெனி பொறுப்புகளை எடுத்த ஐந்து வருடத்தில் தன் மேல்படிப்பையும் முடித்து கம்பெனியையும் உலகளவில் விரிவுபடுத்தினான்.

பல ஆண்டுகளாக அவனது தந்தை தமிழ்நாட்டு அளவில் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழில் செய்துகொண்டிருந்தார். ஆதி அதை விரிவுப்படுத்தியதோடு ஹோட்டல் தொழிலிலும் கால்  பதித்து குறுகிய காலத்தில் பெரிய அளவில் சாதித்தான்.

வியாபாரத்தில் கொடிகட்டி பறந்தவர்களே அவனது வளர்ச்சியைப் பார்த்து அரண்டு போனார்கள். அதில் சிலர் அவர்களது மகளை அவனுக்கு மணம் முடிக்க எண்ணினர். ஆனால் சஞ்சனாவை முதல்முறை பார்த்ததும் காதலில் விழுந்து அவளையே மணமுடித்தான். அவர்களின் பிரிவுக்கு பிறகு பாரதி சம்மந்தமாக போன் உரையாடல்களைத் தவிர இருவரும் நேரில் சந்திப்பதை முழுவதுமாக தவிர்த்தனர். அப்படி இருக்க இன்று அவனே சஞ்சனாவைப் பார்க்க வந்தது அவளுக்கு ஆச்சர்யமாக இருந்தது.

கல்லூரி மரத்தடியில் காத்திருந்தவனை நெருங்கியவள் தயக்கத்தோடு என்ன இவ்வளவு தூரம்? என்று கேட்டாள்.

அவளை முழுவதுமாக பார்வையில் அளந்தவன், தான் முதன்முதலாய் பார்த்த துருதுருவென அந்த குழந்தைத்தனத்தோடு இருந்த சஞ்சனா எங்கே என்று ஒரு நிமிடம் நினைத்தவன், அவள் பதிலுக்காக காத்திருப்பது புரிந்து கொஞ்சம் பேசனும் என்றான்.

அவள் என்ன என்பது போல பார்க்க,

பாரதியைப் பற்றி மாயா என்கிட்ட சொன்னா… சஞ்சனா நீங்க திரும்ப நம்ம வீட்டுக்கே வந்துடுங்க, உன்னோட ப்ரைவஸிக்கு எந்த தொந்தரவும் இருக்காது. நான் எந்த விதத்திலும் உன்னைத் தொந்தரவு செய்ய மாட்டேன், பாரதிக்கு அம்மா, அப்பாவா ஒரே வீட்டில் இருப்போம், என்று ஒரே வேகத்தில் கூறி முடித்தான்.

அவனை நிதானமாக பார்த்தாள் சஞ்சனா, ஏதோ பாரம் இறங்கியது போல இருந்தது. அவளை சந்தித்த சமயத்தில் ஆதித்தியன் கண்களில் எப்போதும் ஒரு நிமிர்வு, ஒளி இருக்கும். இப்போதும் அந்த நிமிர்வு இருக்கு ஆனால் ஒளி இல்லை. பாரதி விஷயமா பேசப்போனால் எங்கு தன்னைக் குத்திக்காட்டுவானோ என்று அவள் நினைத்ததுக்கு மாறாக அவனே நேரில் வந்து அழைக்கவும் சஞ்சனா சில நிபந்தனைகளுடன் ஆதித்தியனுடன் செல்வதற்கு ஒப்புக்கொண்டாள்.

சஞ்சனாவின்  நிபந்தனை என்ன? இந்த முடிவு என்னென்ன மாற்றங்களைக் கொண்டுவரப்போகிறது? என்று அறிய தொடர்ந்து வாசியுங்கள் மீண்டும் மலர்வாய்.

-நறுமுகை

3

No Responses

Write a response