என் நினைவில் பொங்கல்….

என் நினைவில் பொங்கல்….

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்….. எல்லாரும்  டிசம்பர் வந்த புது வருஷம் பிறக்கப்போகுதுனு ஆவலா இருப்பாங்க ஆனா எனக்கு இன்னும் பொங்கலுக்கு ஒரு மாசம்தான் இருக்குனு தோணும். அதுக்கு காரணம் என்னோட குழந்தைப்பருவ பொங்கல்கள் எனக்கு அவ்வளவு இனிய நினைவுகளை கொடுத்திருக்கு. பொங்கலுக்கு ஒருவாரத்துக்கு முன்னாடியே எங்க பாட்டி வீட்டை சுத்தம் செய்ய ஆரம்பிச்சிடுவாங்க. வெளி சுவருக்கெல்லாம் சுண்ணாம்பு அடிச்சு, வாசலுக்கு சாணி போட்டு மெழுகி வீடே புதுசா மாறிடும்.

போகி பண்டிகை அன்னைக்கு வீட்டுக்கு பெரியம்மா, அக்கா,எல்லாரும் வந்துடுவாங்க, எங்க வீட்டுக்கு மட்டுமில்லை எங்க வீட்டை சுத்தி இருக்க எல்லார் வீட்டுக்கு விருந்தாளிங்க வந்திருப்பாங்க. ஊரே ஜேஜேன்னுதான் இருக்கும், வீட்டுக்கு பக்கத்துல இருக்க மாரியம்மன் கோவிலில் மைக் செட் வெச்சு பாட்டு போட்டிருப்பாங்க.  போகி அன்னைக்கு எங்க பாட்டி பூசணிக்காய், அவரைக்காய் செஞ்சு பாசிப்பயறு குழம்பு வைப்பாங்க. எனக்கு பூசணிக்காயும் பிடிக்காது, அவரைகாயும் பிடிக்காது, என்னமா வருஷம் வருஷம் இதையே செய்ரீங்கன்னு குறைபட்டுக்கிட்டே சாப்பிடுவ இப்ப எனக்கு அவரைக்காய் ரொம்போ பிடிச்சமான காய்ய மாறிடிச்சுங்குறது தனிக்கதை.

அன்னைக்கு நைட் பக்கத்து வீட்டு அக்கா எங்க ரெண்டு வீட்டு வாசலையும் அடைச்சு கோலம் போடுவாங்க, எனக்கு கோலம் போட தெரியாது ஆனா அவங்க போடுறதை பார்க்க பிடிக்கும் கூடவே போட்ட கோலத்துல கலர் போடுவ. எல்லாரும் வெளிய நின்னுகிட்டு பேசிகிட்டே கோலம் போடுவாங்க. சில நேரம் 10 மணிக்குமேல் ஆகிடும் போட்டு முடிக்க. போட்டு முடிச்சதுக்கப்புறம் கொஞ்ச நேரம் நின்னு அரட்டை அடிச்சுட்டுதான் தூங்க போவோம்.

பொங்கல் அன்னைக்கு எழுந்த உடனே வெளில ஓடிவந்து போட்ட கோலத்தை பார்ப்பேன்,எங்க அப்பா சிலசமயம் அப்பதான் வேலைல இருந்து வருவாரு எங்க கோலம் கலைஞ்சிடுமோனு வண்டிய வெளியிலையே நிறுத்திட்டு வந்திடுவாரு. அப்புறம் எல்லாரும் சேர்ந்து பொங்கல் செஞ்சு சாப்பிட்டுட்டு கோவில்ல கடை சுத்த போவோம். எந்த பொருள் எடுத்தாலும் 10 ரூபானு கத்தி கத்தி கடைக்காரங்க கூப்பிடுவாங்க. ஒரு பொருளை வாங்க அங்ககிட்ட பத்துநிமிசம் பேரம் பேசி எனக்கு வேண்டாம் நான் அடுத்த கடையில வாங்கிக்குறனு சொல்லிட்டு போன சரி சரி நீங்க கேக்குற விலைக்கு குடுக்குறனு கடைக்காரங்க சொல்லி ரெண்டுபேருக்கு பொதுவா ஒரு விலையில் வாங்கிட்டு வருவோம். அன்னைக்கு நைட் எல்லாரும் வீட்டிற்கு முன்னாடி இருக்குற வாசலில் அமர்ந்து கரும்பு சாப்பிட்டுக்கிட்டே கதை பேசிட்டு இருப்போம். கரும்பு இல்லாம பொங்கல் எப்படி முழுமை அடையும். அந்த நாலு நாளுமே சாப்பாட்டுக்கு அப்புறம் எல்லாரும் கரும்பைத்தான் தேடுவோம். அப்படியே எங்க பாட்டியோட சின்ன வயசு கதைங்க, குடும்பத்துல நடந்த கலகலப்பான விஷயங்கள், முந்தைய வருஷ பொங்கலில் நடந்த சுவாரசியமான விஷயங்கள்னு பேசுறதுக்கு ஆயிரம் விஷயங்கள் இருக்கும்.

அடுத்த நாள் மாட்டு பொங்கல், அன்னைக்கு எங்க தோட்டத்துக்கு போயிடுவோம். அங்க மாட்டையெல்லாம் குளிப்பாட்டி, அது கொம்புக்கு கலர் அடிச்சு பூ வெச்சு, கலர் பேப்பர் கட்டி, பொட்டு வெச்சு மாடு பார்க்க செம அழகா இருக்கும். வெளில மாட்டையெல்லாம் கட்டிவெச்சு அதுக்கு பக்கத்துல பொங்கல் வைப்பாங்க, பொங்கல் பொங்குறப்ப நானு என்னோட தங்கச்சி ரெண்டு பெரும் பொங்கலோ பொங்கல் பொங்கலோ பொங்கல்னு கத்துவோம்.அதை சொல்றதுக்காகவே அரிசியை உலைல போட்டதுல இருந்து அங்க நின்னுட்டு இருப்போம்.முதலில் மாட்டுக்கு பொங்கல் பழம் எல்லா சாப்பிட குடுத்துட்டுதான் எங்களுக்கு குடுப்பாங்க. சுட சுட வாழைஇலைல வாங்கி அதுமேல நாட்டு சக்கரை போட்டு சாப்பிட்ட என்ன டேஸ்ட்டா இருக்கும்தெரியுமா…….இப்ப எவ்வளவோ மாற்றம் வந்திருச்சு நான் வேறு நாட்டு உணவுகள் எல்லாம் சாப்பிட்டிருக்க அதுஎதுவும் அந்த பொங்கலுக்கு பக்கத்துல கூட வர முடியாது.

அடுத்தநாள் காணும் பொங்கல் ஜல்லிக்கட்டு, உறியடி, கோவிலில்  தீமிதிக்கிறதுனு ஊரே ஒரு இடத்துல கூடி கோலாகலாமா கொண்டாடுவாங்க. எல்லார் வீட்டுலையும் கரி சோறு மணக்கும். அன்னைக்கு நைட் கோவில் பக்கத்துல ராட்டின தூறியெல்லாம் போட்டிருப்பாங்க. தெருவுல இருக்க எல்லாரும் சேந்து போவோம். ராட்டினத்துல சுத்தும்போது பூவு, துப்பட்டா, குச்சி இப்படி எதையாவது கீழ வெச்ச அடுத்த பெட்டியில இருக்கவங்க எடுத்துப்பாங்க திரும்ப அவங்க கீழ வெக்குறப்ப நம்ப எடுக்கணும் அதுக்கு ஒரு பெரிய போட்டியே நடக்கும். சிரிப்பும்,பேச்சுமா ஆசைதீர விளையாடுவோம்.

எவ்வளவு இனிமையான நாட்கள் அதெல்லாம், நாலு நாள் பத்தலைங்குற அளவுக்கு இனிமையாக கழிந்த நாட்கள். இன்னைக்கு இருக்குற இந்த அவசர உலகத்தில் இந்த இனிமைகளையெல்லாம் நாம் துளைச்சுக்கிட்டு இருக்கோம். இன்னைக்கு எனக்கு பசுமையான நினைவுகளா இருக்குறது என்னோட குழந்தைகளுக்கு வெறும் கதையாகதான் தெரியும், அவங்க குழந்தைகளுக்கு அதுவும் தெரியாமல் போய்டும்.நீங்க எங்க இருந்தாலும், எவ்வளவு அவசரமான வாழ்க்கை முறையில் இருந்தாலும் நம்ம பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் , நம்முடைய அடையாளத்தையும் நம்மளோட அடுத்த தலைமுறைக்கு கொண்டுசெல்ல மறந்துடாதீங்க.

நல்ல யோசிச்சு பாருங்க எனக்கு இருக்க மாதிரி உங்களோட நினைவு பெட்டகத்துலையும் பசுமை மாறாத உங்கள் சிறுவயது பொங்கல் நினைவுகள் இருக்கும், அந்த இனிய நினைவுகளோடு இந்த பொங்கலை உங்கள் உறவுகளோடு கோலாகலமாக கொண்டாடுங்கள். பொங்கலோ பொங்கல்………

விருப்பமுள்ளவர்கள் உங்கள் பொங்கல் நினைவுகளை கமெண்டில் என்னோடு பகிரலாம்.  உங்கள் மலரும் நினைவுகளை தெரிந்துகொள்ள ஆவலோடு இருக்கேன்.

-நறுமுகை

7

No Responses

Write a response