என் வானவில்-15

என் வானவில்-15

இதற்கு முன்னர் திருச்சி சென்றிருந்தபொழுது அருணை இரண்டு முறை மித்ராவிடம் பேச வைத்திருந்தான் பிரகாஷ். அருணின் மூலமாக தன் தந்தை தனக்காக அடிக்கடி போலீஸ் ஸ்டேஷன் சென்று வருவதை அறிந்திருந்த மித்ரா,

பிரகாஷிடம், அப்பாவிடம் மட்டுமாவது சொல்லிவிடக்கூடாதா? அவர் எப்படியும் இதை சித்தியிடம் சொல்லமாட்டார், அவர் எனக்காக இப்படி அலைவது கஷ்டமாக இருக்கிறது என்று கூற,

அது அப்படி இல்லை மித்ரா, நீ எங்கிருக்கிறாய் என்று தெரிந்து உன் அப்பா கொஞ்சம் கேசுவலாக இருந்துவிட்டால்  உன் சித்திக்கு சந்தேகம் வந்துவிடும். அவர் இப்படி அலைவது தான் உனக்கு சேஃப். அவர் என்ன தான் அலைந்தாலும் நீ எங்கிருந்தாலும் பத்திரமாக இருக்க வேண்டும் என்று தான் நினைக்கிறார். அதனால் நீ அதிகம் மனதைப்போட்டு குழப்பிக்கொள்ளாதே என்று கூறினான்.

இருந்தாலும் தன் தந்தை தனக்காக அலைவது அவளுக்கு குற்ற உணர்வாக இருக்க, தெய்வநாயகியிடம் புலம்பினாள்.

தெய்வநாயகியும், பிரகாஷ் கூறியதையே தான் கூறினார், ஆனால் இன்னும் கொஞ்சம் நாட்கள் போகட்டும் உன் சித்தி உன்னை பற்றி நினைப்பதை மறக்கட்டும் , பின் கண்டிப்பாக உன் அப்பாவிடம் நீ இங்கு இருக்கும் செய்தியை சொல்லிவிடலாம் என்று கூற, அப்போதைக்கு சமாதானமானாள் மித்ரா,

அதே சமயத்தில் தேனி  அருகில் ஒரு அழகிய கிராமம், அந்த ஊரின் பெரிய வீட்டில்  ஏதோ பரபரப்பாக இருந்தது. டாக்டர் என்ன சொன்னார்மா என்று கேட்டுக்கொண்டே காரில் இருந்து இறங்கி அந்த வீட்டிற்குள் நுழைந்தான், அந்த முப்பது வயதை ஒத்த ஒரு இளைஞன்.

இன்னும் ஒன்றும் சொல்லவில்லை தம்பி, உள்ளே டாக்டர் செக்கப் பண்ணிக்கொண்டு இருக்கிறார். நீ போய் தாத்தாவைப் பார், நான் உனக்கும் டாக்டருக்கும் சாப்பிட ஏதாவது எடுத்துக்கொண்டு வருகிறேன், என்று கூறி அந்த வீட்டின் அடுக்களையில் சென்று மறைந்தார் ராஜேஸ்வரி.

அந்த வீட்டின் பெரிய மனிதர், ராஜேஸ்வரியின் தந்தை கார்மேகம் உடல் நிலை சரியில்லாமல் படுத்து பல வருடங்கள் ஆகின்றது. எழுந்து நடமாடும் அளவில் இருந்தவர் தற்போது சிறிது காலமாக படுத்த படுக்கையாக இருந்தார். அவரை பரிசோதிக்கவே டாக்டர் வந்திருந்தார்.

ராஜேஸ்வரியின் ஒரே மகன் ரோஹித், சென்னையில் தனியாக பிசினஸ் செய்து கொண்டிருந்தான். ராஜேஸ்வரியின் கணவர், கார்மேகத்தின் விவசாயம், மில், மற்றும் சொத்துக்களைப் பார்த்துக்கொண்டு வீட்டோடு மாப்பிள்ளையாக இருக்கிறார்.

கார்மேகத்தின் மனைவி பதினைந்து வருடங்களுக்கு முன் தவறிவிட்டார். அப்போதில் இருந்து கார்மேகத்திற்கு ஒரே ஆறுதல் அவரது மகள் ராஜேஸ்வரி மட்டும் தான்.  அவரது நிலை மோசமாக இருக்கவே ராஜேஸ்வரி மிகவும் வருத்தத்தில் இருந்தார்.

தன் தந்தையை பார்க்க சென்ற ரோஹித் என்னப்பா தாத்தாவிற்கு இப்போது எப்படி இருக்கிறது என்று கேட்க, இன்னும் தெரியவில்லை ரோஹித் டாக்டர் வந்து சொன்னால் தான் தெரியும் என்று கூறியவர், ஆமாம் நீ விசாரித்து போன விஷயம் என்ன ஆச்சு என்று கேட்க,

தெரியவில்லை அப்பா கடந்த நான்கு மாதங்களாக ஒரு பொண்ணு அந்த வீட்டில் வந்து தங்கியிருகின்றாள். அந்த பொண்ணு யார், என்னவென்று தெரியவில்லை, பெரிதாக அவள் வெளியில் வருவதும் இல்லை, வந்தாலும் ட்ரைவர், வீட்டின் சமையல்காரர் என்று யாரவது துணைக்கு வருகிறார்கள். அந்த பொண்ணை பற்றி யாரும் எந்த விஷயமும் வெளியில் பேசுவது இல்லை.

இத்தனை ஆண்டுகளாக தனியாக இருந்த அந்த அம்மாவின் வீட்டில் இப்போது அந்த பொண்ணு வந்திருப்பதும் அந்த அம்மா சோர்ந்து போய் இருந்ததற்கு மாறாக இப்போது கலகலவென்று இருப்பதைப் பார்த்தால் சந்தேகமாக இருக்கிறது என்று கூறினான்.

சரி ரோஹித் எதுவும் தெரியாமல் அவசரப்பட்டு எந்த முடிவையும் நாம் எடுக்க முடியாது. உன் அனைத்து பிஸினஸையும் உன் ஜெனெரல் மானேஜரை பார்த்துக்கொள்ள சொல்லிவிடு. இந்த விஷயம் என்னவென்று கவனி அந்த பொண்ணு யார்?, என்ன?அந்த பொண்ணுக்கும் தெய்வநாயகிக்கும் என்ன தொடர்பு?எந்த விதத்தில் சொந்தம்? எதற்காக அந்த பொண்ணு இங்கு வந்து தங்கியிருக்கிறது?எல்லா விஷயத்தையும் விசாரி. நாம் எதையாவது லேசில் விட்டு அது நமக்கே விபரீதமாக முடிந்துவிடபோகிறது என்று தன் மகனிடம் கூறிக்கொண்டிருந்தார், ராஜேஸ்வரியின் கணவர் ரோஹித்தின் தந்தை விஸ்வநாதன்.

அப்போது வெளியில் வந்த டாக்டர், இப்போதைக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை, ஆனால் அவருக்கு நாம் ஏன் உயிர் வாழ வேண்டும் என்னும் எண்ணம் இருக்கிறது. அது தான் அவரது உடலை மிகவும் வருத்துகிறது. முடிந்தவரை அவருடன் உங்கள் நேரத்தை செலவிடுங்கள் அவரை இப்படியே படுக்க வைத்திருக்க வேண்டியதில்லை, காற்றாட நடக்க வையுங்கள் வெளியில் உட்கார வையுங்கள், மக்களை வந்து பார்க்க சொல்லுங்கள்.

இப்போதைக்கு அது தான் இவருக்கான மருந்து, மற்றபடி நான் முன்னர் கொடுத்த அதே மருந்தை எப்போது போல் பாலோ பண்ணுங்க, எதாவது பிரச்சனை என்றால் எனக்கு கால் பண்ணுங்க என்று கூறிவிட்டு ராஜேஸ்வரி கொடுத்த காஃபியைக் குடித்துவிட்டு சென்றார் மருத்துவர்.

யார் இந்த கார்மேகம்?, ரோஹித்தும் விஸ்வநாதனும் எதற்கு தெய்வநாயகி அம்மா வீட்டைப் பற்றி தெரிந்துகொள்ள நினைக்கிறார்கள்? இவர்களால் மித்ராவிற்கு வரப்போகும் பிரச்சனைகள் என்ன? என்று அறிய தொடர்ந்து வாசியுங்கள் “என் வானவில்“.

நறுமுகை

6

No Responses

Write a response