என் வானவில்-7

என் வானவில்-7

புவனா அங்கிருந்து கிளம்பினால் மித்ராவிடம் ஆறுதலாக கொஞ்சம் நேரம் பேசிவிட்டு வரலாம் என்று ஜெயலட்சுமி காத்துக்கொண்டிருக்க,

புவனாவோ அங்கிருந்து செல்லாமல் வாயிற்படியிலேயே அமர்ந்து யாருக்கோ போன் செய்துகொண்டிருந்தாள். ஹேமாவோ தன் வீட்டில் எதுவும் நடக்காதது போல போனை  எடுத்துக்கொண்டு கிணற்றடிக்கு சென்று யாரிடமோ சிரித்து சிரித்து பேசிக்கொண்டிருந்தாள்.

அருண் மட்டும் மூடியிருந்த வீட்டின் கதவையே பார்த்துக்கொண்டு நின்றிருந்தான்.

உள்ளே சென்ற சண்முகம் மித்ராவிடம் எதுவும் பேசாமல் கலங்கி இருக்கும் தன் மகளை பார்த்துக்கொண்டிருந்தார்.

இதெல்லாம் நடந்த  ஒரு மணிநேரத்தில் புவனா தகவல் சொல்லியதின் பெயரில் அங்கு வந்து இறங்கினர் புவனாவின் குடும்பத்தினர்.

அங்கு வந்த புவனாவின் அம்மாவோ கதவை உடைத்துவிடுவது போல கதவை தட்ட, சண்முகம் கதவை திறந்தவுடன் அங்கு என்ன நடந்தது என்று கூட கேட்காமல் என்னமோ பெரிதாய் தியாகம் செய்வதுபோல ஊரெல்லாம் பாவ்லா காட்டி, என் பொண்ணை திருமணம் செய்துகொண்டு இப்படி வயசு பொண்ணையும் என் பொண்ணையும் வெளியில் நிற்க வைத்திருக்கிறாயே இது தான் நீ படித்த படிப்பா? என்று குதி குதி என்று குதிக்க தொடங்கினார் புவனாவின் தாயார் பங்கஜம்.

புவனாவின் வீட்டை சேர்ந்த ஆண்கள் எதுவும் பேசாமல் நிற்க புவனாவின் அம்மாவோ சண்முகத்தை வசை பாடி கொண்டிருந்தார்.

உன் பொண்ணு எக்கேடு கெட்டால் என்னவென்று விடாமல் என் பொண்ணு பத்திரமாக பார்த்து வளர்த்து வைத்திருக்கிறாள் நீ அவளையே குறை சொல்லி வீட்டை விட்டு வெளியில் தள்ளி வைத்திருக்கிறாய் என்று புவனாவின் அம்மா கேட்க,

இங்க பாருங்க உங்க பொண்ணு என் மகளின் வாழ்க்கையில் அளவிற்கு மீறி போய்விட்டாள் இதன்பிறகு உங்க பொண்ணு இங்க இருக்க முடியாது என்று சண்முகம் கூற,

நல்லா இருக்கே, வயதிற்கு வந்த பெண்ணிற்கு கல்யாணம் பேசுவது ஒரு குற்றமா? பெற்றவள் இருந்திருந்தால் அதை தானே செய்திருப்பாள் என்று சிறிதும் நாக்கூசாமல் கேட்டார் பங்கஜம்.

சண்முகமோ, என் பொண்ணுக்கு எப்போ கல்யாணம் பண்ணனும் என்று எனக்கு தெரியும். உங்கள் பொண்ணு ஒன்றும் கவலை பட வேண்டாம் என்று கூற,

அது சரி நாளைக்கே என் பொண்ணு எதையும் கண்டு கொள்ளாமல் இருந்திவிட்டால் சித்தி தானே, இதுவே… அம்மா இருந்திருந்தால் இப்படி விட்டுவிடுவாளா என்று நீங்க பேசி இருக்க மாட்டீர்கள் என்று ஆங்காரமாக கேட்க,

அங்கிருந்து பார்த்துக்கொண்டிருந்த அந்த தெரு வாசிகளில் ஒருவர் வந்து ஏன்மா அதுக்காக பதினெட்டு வயசு ஆகின்ற ஒரு பெண்ணிற்கு யாராவது கல்யாணம் பேசுவார்களா?அப்படி பார்த்தல் மித்ராவை விட உன் பேத்திக்கு தான அம்மா வயசு அதிகம் என்று கேட்க,

எங்க வீட்டு பொண்ணுக்கு எப்போ என்ன செய்ய வேண்டும் என்று எனக்கு தெரியும். எங்க வீட்டில் எந்தெந்த வயதில் பொண்ணு இருக்கு என்று நீ ஒன்றும் எங்களுக்கு சொல்ல வேண்டாம். நீ உன் சோளியை பார்த்துக்கொண்டு போ என்று பங்கஜம் கத்த,

தனக்கு இது தேவையா என்று நொந்துகொண்டே சென்றுவிட்டார் நியாயம் கேட்டவர். அதன் பின் அந்த தெருவில் இருந்த யாரும் அவரிடம் எதுவும் கேட்க முற்படவில்லை. நல்லா பிடி பிடியென பிடித்துவிட வேண்டும் என்று நினைத்த ஜெயலட்சுமியையோ பிரகாஷ் தடுத்து நிறுத்திவிட்டான்.

புவனாவின் அம்மாவோ என்ன நடந்தாலும் என் பொண்ணு இங்க தான் இருப்பாள், உனக்கு வேண்டுமென்றால் உன் பொண்ணை வெளியில் போக சொல்லு. கல்யாணம் பண்ணிக்கொண்டு என் மகளையும் பேரக்குழந்தைகளையும் பார்த்துக்கொள்வேன் என்று சொல்லிவிட்டு இப்போது வெளியில் அனுப்ப பார்க்கிறாயா? இப்படி செய்துகொண்டிருந்தால் வரதட்சணை கேட்டு என் பெண்ணையும் வயதிற்கு வந்த என் பேத்தியையும் கொடுமை படுத்துகிறாய் என்று போலீசில் கம்ப்ளைண்ட்  கொடுத்துவிடுவேன் என்று காச் மூச்சு என்று கத்த,

எதுவும் சொல்லாமல் சண்முகம் அமைதியாக உள்ளே சென்று விட்டார்.

உள்ளே சென்றவரோ, அங்கு தனது அறையில் சிறியதாக வைத்திருந்த முதல் மனைவி மலர்விழியின் புகைப்படத்தை எடுத்து பார்த்தார். மலர்விழி இருந்தவரை வீடு என்றால் இப்படி தான் இருக்கணும் என்று அனைவரும் பேசும் விதத்தில் சாந்தமாக, அமைதியாக எந்த நேரமும் ஒரு ஒளிர்வுடன் இருந்த வீடு, என்று மலர்விழி மறைந்து இந்த புவனா இந்த வீட்டிற்குள் காலடி எடுத்து வைத்தாலோ, அன்றிலிருந்து விடிந்தது முதல் இரவு வரை எதாவது ஒரு பிரச்சனை. இந்த தெருவே, சீரியலுக்கு பதிலாக இந்த வீட்டை வேடிக்கை பார்க்கும் நிலை வந்துவிட்டது. இந்த தவறை நான் செய்திருக்க கூடாது, மித்ராவிற்காக என்று நினைத்து நான் மித்ராவிற்கு பெரிய தவறு செய்துவிட்டேன் என்று வேதனையோடு கண் மூடிக்கொண்டார்.

இங்கு வெளியில் பங்கஜம், புவனாவிடம், புவனா உன்னை யாரும் இந்த வீட்டை விட்டு வெளியில் அனுப்ப முடியாது. நீ பாட்டிற்கு உள்ளே சென்று உன் வேலையை பாரு. பரிசம் போட்டவனுக்கு திறமை இருந்தால் அவன் வந்து இந்த பொண்ணை கல்யாணம் செய்துகொண்டு போகட்டும். இல்லை உன் வீட்டக்காரருக்கு துணிவு இருந்தால் அவர் பொண்ணை அவர் காப்பாற்றி கொள்ளட்டும், இதில் உனக்கென்ன நீ பாட்டிற்கு எப்போதும் போல இரு, அதையும் மீறி எதாவது பிரச்சனை செய்தால் யோசிக்காமல் போய் போலீசில் கம்ப்ளைன்ட் கொடுத்துவிடு என்று மகளுக்கு ரொம்போ நல்ல விதமாக புத்திமதி சொல்லிவிட்டு சென்றார் பங்கஜம்.

உள்ளே வந்த புவனாவோ ஏதாவது நடந்துவிடக்கூடாதே இது தான் சாக்கு என்று மூலையில் சென்று அமர்ந்துகொள்வாயே போய் சமையல் வேலையை பாரு என்று மித்ராவிடம் கத்த,

மித்ராவோ எதையும் உணரும் நிலையில் இல்லை, உட்கார்ந்தவள் உட்கார்ந்தபடி இருக்க,

அங்கு வந்த ஹேமா, அம்மா அவள் கல்யாண கனவில் இருக்கிறாள் அம்மா, அவளை போய் டிஸ்டர்ப் பண்ணிக்கொண்டு இன்று ஒரு நாள் ஹோட்டலில் ஆர்டர் பன்னு என்றாள்.

தாயும் மகளும் செய்யும் அநியாயத்தை தட்டி கேட்க முடியாமல் நின்றார் சண்முகம்.

அருணோ தன்  தாயையும் தமக்கையையும் வெறுப்புடன் பார்த்துவிட்டு மித்ராவின் அருகில் சென்று ஆறுதலாக அவள் கையை பற்றிக்கொண்டு அமர்ந்தான்.

அன்று முழுவதும் மித்ரா அந்த இடத்தை விட்டு நகரவில்லை.

சண்முகம் இரவு உணவிற்கு அழைத்தும் அவள் உண்ணவர மறுத்துவிட்டாள். அன்று இரவு அனைவரும் உறங்கிய பின்னர் பின்கட்டு கதவை திறந்து வெளியில் சென்றாள்  மித்ரா.

இடியுடன் பேய் மழை பொழிந்து கொண்டிருந்தது. மித்ராவிற்கு மழை என்றால் கொள்ளை இஷ்டம். அருணும் மித்ராவும் மழை வரும் சமயங்களில் கிணற்றடியில் ஆனந்தமாக மழையில் நனைவர். ஆரம்பத்தில் இடி மின்னலுக்கு பயந்துகொண்டிருந்த அருணிடம், அருண் இடி மின்னலிற்கெல்லாம் பயப்படக்கூடாது.  மழை வந்தால் நீ டான்ஸ் ஆடுகிறாய் இல்லையா? நீ டான்ஸ் ஆடுவதற்கு யாராவது தாளம் தட்டி போட்டோ எடுக்கணும் இல்லையா அதற்கு தான் இடியும் மின்னலும் வருகிறது என்று தன்  தம்பியை இடிக்கும் மின்னலுக்கும், பயப்படாமல் பழக்கினாள்.

இன்றோ மழை பெய்வதோ இடி இடிப்பதோ எதுவும் அவள் கவனத்தில் இல்லை. பின்கட்டு கதவை மூடிவிட்டு நேராக கிணற்றடிக்கு சென்றவள் இனி உயிரோடு இருக்கக்கூடாது, எந்த நிலையிலும் அந்த ரவுடியை கல்யாணம் செய்துகொள்ளும் நிலை தனக்கு வந்துவிடக்கூடாது என்று எண்ணி தற்கொலை செய்துகொள்ளலாம் என்று கிணற்றின் மேல் ஏறி நின்றாள். அப்போது ஒரு வலிமையான கரம் அவளை தடுத்து நிறுத்தி கிணற்றின் மீதிருந்து அவளை இறக்கி விட்டது.

அது பிரகாஷ் என்று சொல்லவும் வேண்டுமா? மித்ரா உனக்கென்ன பைத்தியமா பிடித்திருக்கிறது என்று பிரகாஷ் கத்த அந்த மழையின் இரைச்சலிலும், காலையிலிருந்து ஏற்பட்ட பாதிப்பிலும் மித்ராவிற்கு அது உரைக்கவே இல்லை. அவள் தன்னிலையிலேயே இல்லை என்று உணர்ந்த பிரகாஷ், அவளை பிடித்து உலுக்கினான். மித்ரா இங்க பாரு,இங்க பாரு மித்ரா என்று உலுக்க, தன் நிலைக்கு வந்தவள்

அவனை பார்த்ததும் நான் அவனை கல்யாணம் செய்துகொள்ளமாட்டேன். அந்த பன்னீர்செல்வத்தை நான் கல்யாணம் பண்ணிக்கொள்ள மாட்டேன் நான் உயிரோடு இருந்தால் சித்தி அவனுக்கு என்னை கல்யாணம் செய்து கொடுத்துவிடுவார்கள். நான் செய்ய மாட்டேன், நான் சாக வேண்டும் என்று சொன்னதையே திரும்ப திரும்ப சொல்ல,

பிரகாஷ் இல்லை மித்ரா இங்க பாரு என்று எவ்வளோவோ சொல்லியும் அவள் கூறியதையே கூறிக்கொண்டிருந்தாள்.

ஒரு நிலையில் என்ன செய்வது என்று தெரியாமல் பிரகாஷ் மித்ராவின் கன்னத்தில் ஓங்கி அறைந்தான்.

அவன் அடித்ததில் ஒரு நிமிடம் அதிர்ந்து போய் நின்றவள் பின் சுய உணர்வு வந்து அழ தொடங்கினாள்.

அந்த கொட்டும்  மழையிலும் அவள் விசும்பி அழுவது பிரகாஷிற்கு நன்றாக தெரிந்தது. ஒரு நிமிடம் இப்படி அடித்துவிட்டோமே என்று கவலைப்பட்டவன், ஆனால் அதை தவிர தான் பேசுவதை அவள் கேட்க வைப்பதற்கு எந்த வழியும் இல்லையென்று உணர்ந்து பேச தொடங்கினான்.

மித்ரா நான் சொல்வதை கேளு இப்போ என்ன அந்த பன்னீர்செல்வத்தை நீ கல்யாணம் பண்ணிக்கொள்ள கூடாது அவ்வளவு தானே, அதற்கு எதற்கு நீ சாகனும் என்று கேட்க,

சித்தி தான் சொன்னார்களே நான் எங்கே இருந்தாலும் அவன் வந்துவிடுவான் என்று அழுகையோடு கூற,

அவன் வரமுடியாத ஒரு இடத்திற்கு உன்னை நான் அனுப்பி வைத்தால் நீ போவாயா? என்று கேட்க,

அவனை ஒளிரும் கண்களால் பார்த்தவள் நிஜமாக அப்படி ஒரு இடம் இருக்கிறதா என்று கேட்டாள்.

உனக்கு என் மீது நம்பிக்கை இருந்தால் நான் சொல்லும் இடத்திற்கு நீ உடனே போக வேண்டும் என்று கூறினான்.

மித்ரா பிரகாஷை வெகு சில முறை மட்டுமே பார்த்திருக்கிறாள்.  ஜெயலட்சுமி சொல்லி பிரகாஷை பற்றி மித்ராவிற்கு சில விஷயங்கள் தெரியும் என்றாலும் அவனிடம் அவள் ஓரிரு வார்தைகள் கூட பேசியது இல்லை.

இன்று அவள் முன்னால் நின்றுகொண்டு என் மீது நம்பிக்கை இருந்தால் நான் கூறுவதை செய் என்று கூற, அவளுடைய மனதோ அவளிடம் நீ, இங்கிருந்து வெளியேறியே ஆக வேண்டும் அதற்கு இவனால் மட்டும் தான் உனக்கு உதவி செய்ய முடியும், அதற்கு இவன் கூறுவதை நீ கேளு என்று அவளுக்கு அறைகூவியது.முன் பின் சரியாக பேசிக்கொள்ளாத  அந்த நபர் மீது அவளுக்கு எப்படி அந்த நம்பிக்கை வந்தது என்று அவளுக்கே தெரியவில்லை.

ஏனென்று தெரியாமல் அந்த கொட்டும் மழையில் இவனை நம்பலாமா என்ற ஆராய்ச்சியே இல்லாமல் அவன் சொல்வதை கேட்பது என்று முடிவெடுத்தாள் மித்ரா.

பிரகாஷ் அவளை எங்கு அனுப்ப போகிறான்? பன்னீர்செல்வம், புவனா இவர்கள் வலையில் இருந்து தப்புவாளா மித்ரா? என்று அறிய தொடர்ந்து வாசியுங்கள்  “என் வானவில் “.

                                                                                                                                                          -நறுமுகை

3

No Responses

Write a response