என் வானவில்-42

என் வானவில்-42

அன்பு வாசகர்களுக்கு,
மன்னிக்கவும், கடந்த இரண்டு மாதமாக சில சொந்த வேலைகளின் காரணமாக தொடர்ந்து என் வானவில் பதிவிட இயலவில்லை. இன்று முதல் எப்பொழுதும் போல தொடர்ந்து என் வானவில் உங்கள் மனங்களை வண்ணமயமாக்க வருகிறது. தொடர்ந்து வாசியுங்கள்…..

 பிரகாஷ் வெளிநாடு செல்வதற்கு ஒரு மாதமே இருந்தது.அந்த சமயம் அவன் ஊருக்கு சென்று தன் பெற்றோருடன் இருக்கலாம் என நினைத்திருந்தான்.  ஆனால் முடித்துக் கொடுக்க வேண்டிய கணக்கு வழக்குகள், எஸ்டேட் பற்றிய சில தகவல்கள் இருந்ததால் அவன் ஊருக்கு செல்லாமல் வால்பாறையிலேயே தங்கி இருந்தான். முடிந்தவரை அவன் அலுவலகத்திலோ அல்லது எஸ்டேட்டிலோ தன் நேரத்தை செலவழித்தான்.

வீட்டிற்கு சென்றால் மித்ரா அவனிடம் பேசுவாள் தான் ஆனால்  அவள் எப்பொழுதும் போல இல்லாமல் தள்ளி நின்று பேசுவது அது ஒன்றுமே இல்லை என்பது போல் நடந்துகொள்வதும் பிரகாஷிற்கு வருத்தம் அளித்தது. எனவே அவன் முடிந்தவரை மித்ராவின் முன் செல்வதைத் தவிர்த்தான்.

ஜெயலட்சுமிக்கும், ராஜராஜனுக்கும் மகன் வெளிநாடு செல்வது மகிழ்ச்சியாக இருந்தாலும் ஒருபுறம் அவனைப் பிரிந்திருக்க வேண்டும் என்ற வருத்தம் இருந்தது. செல்வதற்கு முன் சில நாட்கள் தங்களோடு இருப்பான் என எதிர்பார்க்க, அவனோ அதற்கு மாறாக வேலை இருக்கிறது என்று வால்பாறையில் தங்கிவிட, அவர்களோ  அவனைப் பார்த்து அவனுடன் இருப்பதற்காக வால்பாறை வந்தனர்.

மித்ரா, ஜெயலட்சுமியோடும் , ராஜராஜனோடும், எப்போதும் போல் பேசிப்பழகினாள், இருந்தாலும் ஒரு சிறு ஒதுக்கம்  இருந்தது.

அவளை  நன்கு அறிந்த பிரகாஷிற்கும், தெய்வநாயகிக்கும் அந்த ஒதுக்கம் புரிந்தது. ஆனால் ஜெயலட்சுமிக்கோ  அது அந்த அளவிற்கு தெரியவில்லை.

மித்ரா எம்.பி.ஏ. படிப்பதற்காக சென்னை செல்கிறாள் என்பதை அறிந்து ஜெயலட்சுமி மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.

எல்லோரிடமும் எப்போதும் போல பேசி வளம் வந்து கொண்டிருந்தாள் மித்ரா. அந்த வார இறுதியில் பிரகாஷைக்  காண ராமும் சுஜியும் வந்தனர்.

ராம் பிரகாஷிடம், கண்டிப்பா வெளிநாடு போறதுன்னு முடிவே பண்ணிட்டியா? என்று கேட்க,

இது என்னடா எல்லா ஏற்படும் பண்ணினபிறகு இப்போ வந்து இந்த கேள்வியை கேக்குற? என்றான் பிரகாஷ்.

பிரகாஷ் நீ எதுக்கோ பயந்து எதையோ செய்கிற மாதிரி இருக்கு. மித்ரா உங்கிட்ட சரியா பேசல என்கிறதுக்காக நீ எங்களை எல்லாம் விட்டுட்டு போகனும்னு  என்னடா  அவசியம் இருக்கு என்று கேட்டான்.

அது அப்படி இல்ல ராம், எப்படியும் இங்க நான் எந்த கம்பெனிக்கு வேலைக்கு போறதுன்னாலும் வேலை கிடைக்குறது கொஞ்சம் கஷ்டம் தான், இதுன்னா பிரச்சனை இல்லை எனக்கும் ஒரு சேஞ் வேணும். அதுவும் இல்லாமல் எனக்கு அடுத்தடுத்து நடந்த விஷயங்கள் ரொம்போ பாதிச்சிருக்கு, இங்கயே இருந்தா திரும்ப திரும்ப அந்த விஷயங்களே எனக்குள் ஓட்டிட்டு இருக்கும், என்றுகூற,

தோழனை கவலையாக பார்த்தாள் சுஜி.

அவளைப்  பார்த்தவன், ஏய் என்ன எப்போ பாரு எதாவது சொல்லி ஓட்டிட்டே இருப்ப இப்போ என்ன உம்முன்னு இருக்க என்று கேட்க,

இல்ல பிரகாஷ் நான் எப்போதும்  உன்னை,”நீ என்ன ஜடமா? உனக்கெல்லாம் ஃபீலிங்ஸ்ஸே இல்லையா? அப்டின்னு கிண்டல் பண்ணுவேன் இப்போ எனக்கு அதை நினச்சா கஷ்டமா இருக்கு என்று சொல்ல,

பிரகாஷோ  சுஜி, நீ அவ்வளவு எல்லாம் ஃபீல் பண்ணாத,பண்ற அளவுக்கு இங்க ஒன்னும் இல்லை. 

மித்ரா சொன்ன மாதிரி அவ எல்லாத்தையும் அவளா செஞ்சுக்கணும் அவளா பண்ணனும், இந்த லைஃப அவ தனியா ஃபேஸ்  பண்ணனும்னு தான் நானும் ஆசை பட்டேன். இப்போ அவ அதை செய்யும்போது அதைப் பார்த்து வருத்தப்படறதுல நியாயமே இல்ல, அவளை  அவளுக்கு பார்த்துக்க தெரியும் இப்போ வரை அவள் அவ முடிவுகளை தானா தானே எடுக்குறா? அதைத் தவிர்த்து கவலைப் படும் அளவுக்கு ஒன்னும் நடக்கலையே, அவளே சொன்ன மாதிரி, ஒருவேளை ரோஹித், பாட்டி, மித்ரா கிடைச்ச விஷயத்தை சொல்லாமல் விட்டதால் கோபமா இருந்திருக்கலாம்

அங்கிருந்தப்போ அவக்கிட்ட நல்லவிதமா நடந்திருக்கலாம், அவள் அவன்கூட சண்டை தான் போடணும்னு இல்லை, அவனை அவள் எதிரியாக தான் பார்க்கணும்னு நாம சொல்லமுடியாது இல்லையா? என்று கூற,

சுஜியோ அதெல்லாம் சரி தான், அவன் கூட அவ நல்லா பழகுறது சரி தான் ஆனால் உன்கிட்ட இருந்து அவ ஏன் விலகி நிக்கணும்? அது தான் எனக்கு கஷ்டமா இருக்கு என்று கூறினாள்.

அவள் விலகியிருக்கான்னு சொல்லிடமுடியாது, ஆனால் முன்னாடி மாதிரி அவ எல்லா விஷயத்துக்கும் என்னை டிபெண்ட பண்ணி இல்ல அவ்வளவு தான் என்று கூறியவன், இதை பத்தி நீ பெருசா அலட்டிக்காத நீ மித்ரா கிட்ட எப்போதும் போல பேசிக்கிட்டிரு. ஆல்ரெடி பாட்டி அபி, எல்லோரும் அவ கிட்ட மாத்தி மாத்தி இதையே பேசுறதால அவளுக்கு அதுவே ஒருமாதிரி அப்செட்டிங்கா இருக்கும் நீயும் அதையே திரும்ப திரும்ப கேட்காத,

இந்த நிலைமையிலும் உன்னால எப்படி அவளுக்காக பேச முடியுது என்றான் ராம்.

உடனே பிரகாஷிற்கு பதிலாக சுஜியோ அதனால் தானே அவன் இப்படி கஷ்டப்பட்டுட்டு இருக்கான். இவன் எல்லாம் மாறவே மாட்டான். நீ வா நாம போகலாம் என்று கூறிவிட்டு அவ்விடம் விட்டு நகர்ந்தனர்.

அங்கேயே நின்று கொண்டிருந்த பிரகாஷிற்கோ தான் இங்கிருந்து வேதனையோடு கிளம்பினால் தன் தோழர்களுக்கும் பெற்றோருக்கும் வருத்தமாக இருக்கும் என்று எண்ணி முடிந்தவரை அவர்கள் முன் மகிழ்ச்சியாக நடமாட வேண்டும் என்று முடிவெடுத்துக்கொண்டான்.

ஆனால் அவன் எண்ணத்திற்கோ ஆயுள் ரொம்போ குறைவு,

மறுநாள் மித்ராவை பார்ப்பதற்கென மித்ராவின் தாத்தா, ரோஹித், ரோஹித்தின் அம்மா, அப்பா அனைவரும் வால்பாறைக்கு வந்திருந்தனர்,

அவர்களை வரவேற்ற தெய்வநாயகி இன்னைக்கு இவர்கள் என்ன பிரச்சனையோடு வந்திருக்காங்கன்னு தெரியலையே என்று யோசித்துக்கொண்டிருக்க,

மித்ராவின் தாத்தாவே பேச்சைத் தொடங்கினார்.

இங்க பாருங்க அம்மா நாங்க மித்ரா மேல உரிமை கொண்டாடுவதும் மித்ரா அங்க வந்திருந்ததிலும் உங்களுக்கு பெருசா விருப்பம் இல்லைன்னு எங்களுக்கு தெரியும்,  இருந்தாலும் நீங்க நாங்கள் கேட்டதற்கு ஒத்துக்கொண்டு மித்ராவை அங்கு அனுப்பி வச்சிருந்திங்க எனக்கு அதில் ரொம்போ சந்தோசம்

மித்ரா இந்த ரெண்டு வீட்டுக்கும் சொந்தம் தான். மித்ரா மேல உங்களுக்கு என்ன உரிமை இருக்கோ அதே உரிமை எங்களுக்கும் இருக்கு. அதனால் தான்  நாங்களா ஒரு முடிவு எடுக்காம உங்ககிட்டையும் கலந்து ஆலோசித்து ஒரு முடிவெடுக்கலாம்னு வந்திருக்கோம்.

 நான் ஏற்கனவே ரொம்போ உடம்பு முடியாம இருந்து இப்போ தான் கொஞ்சம் நாளா  ஓரளவுக்கு நடமாடிட்டு இருக்கேன், எனக்கு எப்போ என்ன ஆகும்னு தெரியாது. மித்ராவோ மேல படிக்கணும்னு ஆசைப்படுறா, இந்த நிலைமையில் அவளுக்கு கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணுவதில் எனக்கு விருப்பம் இல்லை. ஆனால் குறைஞ்சபட்சமா மித்ராவுக்கும் என் பேரன் ரோஹித்துக்கும் நாம நிச்சயமாவது பண்ணிடலாம், அதுக்கு பிறகு அவ படிச்சு முடிச்சபிறகு கல்யாணம் பண்ணிடலாம் என்று கூற அங்கிருந்த அனைவருமே அதிர்ந்து போயினர்.

இப்படி ஒரு பிரச்னை வருமென்று பிரகாஷ் எதிர்பார்க்கவே இல்லை,

தெய்வநாயகியோ அந்த ரோஹித்திற்கு மித்ராவைக் கட்டிக்கொடுப்பதா? என்று எண்ணினார். அவரை பொருத்தவரைக்கும் என்ன தான் மித்ரா பிரகாஷை விட்டு ஒதுங்கி இருந்தாலும் அவனிடம் சரியாக பேசவில்லை என்றாலும், என்றைக்கு இருந்தாலும் மித்ரா பிரகாஷிற்கு மட்டும் தான் என்று உறுதியாக நினைத்துக்கொண்டிருந்தார்.

சுஜியும் ராமும் இது என்ன புது பூதமா இருக்கு இது ஏற்கனவே மித்ராவிற்கு தெரியுமோ,  இல்ல… அவ சொல்லி தான் இவங்க இதை பத்தி பேசவே வந்திருக்காங்களா? என்று எண்ணிக்கொண்டிருந்தனர்.

இந்த பிரச்சனையில் பரவாயில்லை, மித்ராக்கு இந்த இடம் அமைஞ்சா நல்லா தான் இருக்கும் என்று எண்ணியது பிரகாஷின் அப்பா அம்மா மட்டும் தான். 

 தெய்வநாயகியோ இல்லைங்க அது இப்போ சரியா வராது, நான் மித்ராவோட கல்யாண விஷயமா எந்த முடிவும் எடுக்கிறதா இல்லை. மித்ரா இப்போ தான் காலேஜ் முடிச்சிருக்கா. அவ எம்.பி.ஏ முடிக்கட்டும் அதன்பிறகு நாம அவ கல்யாண விஷயத்தைப் பத்தி பேசலாம் என்று கூற,

நாங்களும் இப்போ கல்யாணம்னு சொல்லலையே நிச்சயம் மட்டும் பண்ணிக்கலாம்னு தானே சொல்றோம் என்று கூறினார் மித்ராவின் தாத்தா.

 அது சரி தாங்க நிச்சயம்னு பண்ணிட்டாலே அது பாதி கல்யாணம் மாதிரி தானே மூணு வருஷத்துக்குள்ள என்ன வேணும்னாலும் நடக்கலாம் அதனால் இப்போ இது சரியா வராது, அதனால் இந்த எண்ணத்தை விட்டுடுங்க என்று கூற,

ரோஹித்தின் அப்பாவோ ஏன் என் பையனுக்கு மித்ராவை கல்யாணம் பண்ணிகொடுத்திட்டா மொத்தமா மித்ரா எங்க வீட்டுக்கே வந்திடுவா அப்டிங்கறதுனால வேண்டாம்னு சொல்றிங்களா? என்று கேட்க,

உங்க வீட்டுக்கு மட்டுமல்ல வேற யார் வீட்டுக்கு கல்யாணம் பண்ணிகொடுத்தாலும் மித்ரா அங்க போய் தான் ஆகணும். அதைப்பத்தி எனக்கு எந்த பிரச்னையும் இல்ல, ஆனால் அவ கல்யாண விஷயத்தை இவ்வளவு அவசரமா முடிவு எடுக்குறதுல எனக்கு விருப்பம் இல்லை என்று கூறினார்.

மித்ராவின் தாத்தா ஏதோ கூற வருவதற்குள் பிரகாஷோ அது தான் பாட்டி இவ்வளவு தூரம் சொல்றாங்க இல்ல, மித்ரா படிச்சு முடிச்ச பிறகு இதை பத்தி பேசலாமே என்று கூறினான்.

அதை சொல்றதுக்கு நீ யார் என்று ரோஹித்  பிரகாஷ் மீது பாய

எப்போதும் இது போல் ரோஹித் பேசும்பொழுது ரோஹித்தை கடிந்துகொள்ளும் மித்ராவோ எதுவும் கூறாமல் அமைதியாக இருந்தது அங்கிருந்த அனைவருக்கும் ஆச்சர்யமாக இருந்தது.

ரோஹித் இப்படி கூறவும், தெய்வநாயகியோ, பிரகாஷ் அவனோட விருப்பனு சொல்லலையே நான் இப்படி நினைக்கிறேன்னு தானே சொன்னான் என்று கூற,

மித்ராவின் தாத்தாவோ மித்ராக்கு இதுல சம்மதம்னா உங்களுக்கு ஒன்னும் அதுல மாற்றுகருத்து இருக்காது இல்ல, அப்போ ஒத்துப்பீங்களா? என்று கேட்டார்.

தெய்வநாயகியோ அந்த  முடிவு எடுக்குற வயசு கூட மித்ராவுக்கு இல்ல, அந்த அனுபவம் மித்ராக்கு இல்லை என்பதால் தான் நான் இவ்வளவு சொல்றேன் என்று கூறினார்.

அதற்குள் மித்ராவோ இல்ல பாட்டி எனக்கு அனுபவம் இல்லாமல் இருக்கலாம் ஆனால் எனக்கென்னவோ தாத்தா சொல்றது தான் சரின்னு படுது எனக்கு இதுல விருப்பம் தான் என்று கூற, கிட்டத்தட்ட அனைவரும் உறைந்து போயினர்.

ரோஹித்திற்கும் ரோஹித்தின் அப்பாவிற்கும் உள்ளுக்குள் ஆனந்தமாக இருந்தது.

என்ன சொல்வது என்று தெய்வநாயகி குழம்பி போக,

பிரகாஷ்  மித்ராவிடம், மித்ரா படிச்சு முடிச்சபிறகும் உன் கல்யாணத்தை நீயே முடிவு பண்ணு யாரும் இங்க உன் கருத்துக்கு மாறா எதுவும் சொல்ல போறது இல்ல. ஆனால்  பாட்டி அதை இப்போவே முடிவு பண்ண வேண்டாம்னு மட்டும் தான சொல்றாங்க, நீ அதை கேட்கலாமே என்று கூற,

இதுவரை ரோஹித்தைப் பார்த்து சொல்லிக்கொண்டிருந்த வார்த்தைகளை பிரகாஷைப் பார்த்து கூறினாள்,

பிரகாஷ் இது எங்க குடும்ப விஷயம் நீங்க விடுங்க நாங்க பேசிக்கிறோம் என்று கூற,

பிரகாஷால் தன் காதுகளில் விழுந்த வார்த்தைகளை நம்ப முடியவில்லை. அவன் முகம் சுருங்கி அமைதியாகிவிட்டதைப் பார்த்த ரோஹித்திற்கு திருப்தியாக இருந்தது.

இதை எல்லாம் பார்த்துக்கொண்டிருந்த ரோஹித்தின் அம்மா, அப்பா நமக்கு மித்ரா மேல  உரிமை இருக்குன்னு ஒரு விஷயத்தை வந்து சொன்னோம். எனக்கு மித்ரா விருப்பப்படி நடக்குறதுல எந்த பிரச்னையும் இல்ல, ஆனால் அதை இப்போவே முடிவு பண்ணிக்க வேண்டாம்னு மட்டும் தான அவங்க சொல்றாங்க. அதுக்கு மேற்கொண்டு அவர்களை எல்லாம் வற்புறுத்தி இந்த விஷயத்தை அவர்கள் மேல திணிக்கறதுல்ல எனக்கு விருப்பம் இல்லை. நீங்களே சொன்ன மாதிரி மித்ரா மேல அவங்களுக்கும் உரிமை இருக்கு, அவங்க ஒன்னும் இந்த மூணு வருசத்துல நமக்கு தெரியாம மித்ராவை யாருக்கும் கல்யாணம் செய்து கொடுக்க போறதில்லையே அவங்க விருப்பப்படியே மூணு வருஷம் கழிச்சே மித்ராவுக்கும் ரோஹித்துக்கும் நிச்சயம் பண்ணி கல்யாணம் பண்ணி வச்சுடலாம்ப்பா, அதுக்குள்ள உங்களுக்கு ஒன்னும் ஆகாதுப்பா, இப்போ நீங்க நல்லாவே இருக்கீங்க, மித்ரா உங்க கூட இருக்கும்வரை உங்களுக்கு ஒரு பிரச்சனையும் வராது என்று ரோஹித்தின் அம்மா கூற.

ரோஹித்தும் ரோஹித்தின் அப்பாவும் இதை எதிர் பார்க்கவே இல்லை. என்ன தான் மித்ராவின் தாத்தா, மாப்பிள்ளை பேரன் என்று அளவு கடந்த பாசம் வைத்திருந்தாலும் மகள் பேச்சை மீறவே மாட்டார். தன் மகன்  தன்னை விட்டுவிட்டு சென்று விட்ட பிறகும் தன்னோடே இருந்து தன்னை  பார்த்துக்கொண்டது தன் மகள் தான் என்பதனால் அவருக்கு எப்போதும் மகள் மீது தனி பாசம் உண்டு.

தங்கள் திட்டம் எல்லாம் கை கூடி வரப்போகிறது என்று அவர்கள் எண்ணிக்கொண்டிருக்க, இப்படி தன் சக பத்தினி ஒரு டுவிஸ்ட் கொடுப்பாள் என்று விஸ்வநாதன் எதிர்பார்க்கவில்லை,

ஆனால் அந்த சபையில் மேற்கொண்டு தாங்கள் என்ன பேசினாலும் நாம் வற்புறுத்துவது தெரிந்துவிடும் என்பதனால் அவர் அமைதியாகிவிட நீ சொல்றதே சரி தான்மா அப்படியே செய்துவிடுவோம், அவங்களும் வேற யாருக்கும் கல்யாணம் பண்ணி வைப்பதாக சொல்லவில்லையே

நீங்க சொல்ற மாதிரியே பண்ணிக்கலாம்மா என்று கூறியவர்கள் தாங்கள் கிளம்புவதாக கூறி கிளம்ப,

மித்ராவோ இங்கையே இருந்துட்டு போகலாம் இல்ல தாத்தா என்று கேட்டாள்.

இல்லம்மா நேரமாச்சு நாங்க கிளம்புறோம், நீ காலேஜ்க்கு போறதுக்கு  முன்னாடி நான் ரோஹித்தை அனுப்புறேன் உனக்கு வேணுங்கறது எல்லாம் போய் வாங்கிக்கோ என்று கூறினார்,

சரி என்று கூறியவர் அவர்களுடன் வாசல் வரை சென்று வழியனுப்பினார். இதெல்லாம் நடந்து முடிக்கும் வரை தெய்வநாயகியோ பிரகாஷோ சுஜி ராம் என யாரும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை.

ஜெயலட்சுமிக்கும் ராஜராஜனுக்கும்  மட்டும் எதுக்கு தேவை இல்லாம பிரகாஷ்  இந்த விசயத்துல தலையிடுறான், பேசாம இருந்திருக்கலாம் என்று எண்ணினார்களேத் தவிர அவர்களுக்கு மித்ரா சொன்னது வித்தியாசமாகப்படவில்லை, இன்னும் சொல்லப்போனால் மித்ரா மிகவும் அமைதியான குரலில் பொறுமையாக சொன்னதனால் அவர்களுக்கு பிரகாஷ்  எதுக்கு இந்த விசயத்துல தலையிடுறான் என்று தோன்றியதே  தவிர அவர்களுக்கு மித்ரா சொன்னது பெரிதாகப்படவில்லை.

மித்ரா அவர்களை வழியனுப்ப செல்ல, பிரகாஷ் அவனது ரூமுக்கு சென்றான், தெய்வநாயகி அங்கேயே அமர்ந்துவிட, சுஜி அவளை மறந்து அவரது அருகில் அமர்ந்தாள், ராமோ ஜெயலட்சுமியையும் ராஜராஜனையும் அவர்களது அறைக்கு அழைத்துச்சென்றான்.

இனி பிரகாஷின் அடுத்தகட்ட முடிவு என்ன? தெய்வநாயகி மித்ராவை ரோஹித்துக்கு திருமணம் செய்து வைக்க சம்மதிப்பாரா? இந்த திருமணத்தின் மூலம் ரோஹித்தும் விஸ்வநாதனும் சாதிக்க நினைக்கும் விஷயம் என்ன? என்று அறிய தொடர்ந்து வாசியுங்கள் என் வானவில்…….

                 -நறுமுகை

6

No Responses

Write a response