என் வானவில் – 38

என் வானவில் – 38

ராம் கூறியது, சுஜி கூறியது என அனைத்தையும் யோசித்துக்கொண்டே சென்னையில் இருந்து கோயம்பத்தூர் நோக்கி பயணமானான் பிரகாஷ். ராம் சொன்னது போல இது எல்லாம் மித்ராவின் அப்பா வீட்டு ஆட்களின் மூலமாகதான் நடக்கிறது என்றால், மித்ராவை அங்கு விட்டு வைப்பது சரியா? அல்லது தான் நினைப்பது போல மித்ராவை அங்கிருந்து அதற்கான காரணங்களை கண்டு பிடிக்க சொல்வது சரியா? என்று யோசித்துக்கொண்டே இருந்தவனுக்கு இது மித்ராவின் பொருட்டு நடக்கிறது என்றால் அங்கு மித்ராவை விட்டு வைப்பது நல்லதல்ல, அதே சமயம் மித்ராவின் தாத்தா இருக்கும் வரை அவளுக்கு எந்த தீங்கும் நேராது என பிரகாஷ் உறுதியாக நம்பினான். தற்போதைக்கு மித்ரா அங்கேயே இருக்கட்டும், என்று எண்ணியவன் அதே போல இந்த விஷயங்களை அவளிடம் சொல்லி அவளை குழப்ப வேண்டாம், என்று முடிவெடுத்தான்.

மித்ராவே ஏதேனும் ஒரு நாள் ஏதாவது பிரச்சனையைப் பற்றி பேசும்பொழுது அவர்களை சற்று கூர்ந்து கவனிக்குமாறு மட்டும் அவளிடம் சொன்னால்  போதும் என்று தன் மனதோடு முடிவு எடுத்துக்கொண்டான்.

மறுநாள் காலை எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் வந்து நிற்கும் தன் தம்பியைப் பார்த்து ஆச்சர்யம் அடைந்தாள் பிரகாஷின் அக்கா சுவாதி.

என்னடா பிரகாஷ் இப்படி காலங்காத்தால வந்திருக்க, வரேன்னு முன்னாடி ஒரு போன் கூட பண்ணலையே என்று கேட்க,

அதெல்லாம் ஒன்னும் இல்லக்கா உங்களையெல்லாம் பார்க்கணும் போல இருந்துச்சு அதான் வந்தேன் என்று கூற,

அவன் தன் முகத்தை பார்க்காமல் எங்கேயோ பார்த்துக்கொண்டு கூறுவதிலேயே அவன் கூறுவது பொய் என புரிந்துகொண்ட சுவாதி மேற்கொண்டு எதுவும் கேட்காமல் அவனை உள்ளே அழைத்துக்கொண்டு சென்றாள்.

சுவதியுடன் பிரகாஷை பார்த்து ஆச்சர்யம் அடைந்த சங்கர் என்ன பிரகாஷ் ஒரு போன் கூட பண்ணல, என்று தன் மனைவி கேட்ட அதே கேள்வியை கேட்டவன், மனைவி காட்டிய கண் ஜாடையைப் பார்த்து அப்படியே தன் கேள்வியை நிறுத்திக்கொண்டான்.

பிரகாஷோ ஒன்னும் இல்லை மாமா ஒரு சின்ன பிரச்சனை எனக்கு யார்கிட்ட சொல்றதுன்னு தெரியல அதான் உங்க கிட்டயும் அக்காகிட்டயும் என்ன பண்ணலாம்னு கேட்கலாம்னு வந்தேன் என்று கூற,

சுவதியோ டேய் நான் வெளியில கேட்டப்போ ஒன்னும் இல்லனு சொல்லிட்டு உங்க மாமாவைப் பார்த்ததும் உண்மையை சொல்ற, என்று  அவன் மீது பாய்ந்தாள்.

சங்கரோ இப்போ சண்ட போடுற நேரமா? அவனே எதோ பிரச்சனையோடு வந்திருக்கான்,  அவன் வாசலில் நின்னு பிரச்சனையை பத்தி பேச வேண்டாம்னு நினைச்சிருப்பான், பிரகாஷ் நீ முதல்ல குளிச்சிட்டு காஃபி குடி அதன் பிறகு நிதானமாக பேசலாம், என்று கூறினான் சங்கர்.

பிரகாஷிற்கு சங்கரின் இந்த தன்மை மிகவும் பிடிக்கும். எப்பொழுதும் சங்கர் அடுத்தவர்களின் மனநிலையில் இருந்து யோசிப்பான், தனது அக்காவை சங்கருக்கு கல்யாணம் செய்து வைக்க பிரகாஷ்  சம்மதித்ததற்கு சங்கரின் இந்த குணம் ஒரு முக்கிய காரணம்.

சங்கர் சொன்னது போல குளித்து, காஃபி குடித்துவிட்டு வந்த பிரகாஷ், சங்கரிடம் பேச்சைத் தொடங்கினான்,

சரியான எக்காரணமும் இல்லாமல், தன் வேலை போனதைப் பற்றி கூற, சுவாதியும் சங்கரும் ஒரு நிமிடம் அவனை கவலையுடன் பார்த்தனர். பின்னர் அவனிடமே இப்போ நீ என்ன பண்ணலாம்னு முடிவு எடுத்திருக்க என்று கேட்க,

தெரியலக்கா, அப்பா அம்மாக்கு இப்போதைக்கு இந்த விஷயம் தெரிய வேண்டாம்னு பார்க்கிறேன். அதனால் தான் அங்கு போகாமல் இங்கு வந்தேன், இங்கிருந்து வேற ஏதாவது ஜாப் ட்ரை பண்ணலாம்னு நினைக்கிறன், என்றான்

அதுக்கு என்னடா இங்க நீ எவ்வளவு நாள் வேணும்னாலும் இரு, ஆனால் திடுதிப்புனு உன்னை வேலையை விட்டு நிறுத்துற அளவுக்கு என்ன நடந்துச்சு, யார் கூட என்ன பகையை சம்பாதிச்சுக்கிட்ட, என்று சுவாதி கேட்க, 

ஏனோ இந்த பிரச்சனைக்குள் மித்ராவை இழுக்க வேண்டாம் என்று தன் அக்காவிடமும் மாமாவிடமும் அந்த விஷயத்தை மறைத்து, தெரியலக்கா ஐடி பாலிடிக்ஸ்ல இதெல்லாம் சாதாரணம், எனக்கு அங்கேயே இருந்தா அதை பத்தின யோசனையாய் இருக்கும்னு தான் நான் இங்க வந்தேன் என்று சொன்னவன்,

சங்கரிடம், நான் இங்க கொஞ்சம் நாள் தங்கலாம் இல்லையா மாமா? என்று கேட்க,

பிரகாஷ் நீ என்ன இவ்ளோ ஃபார்மலா பேசுற? இது உன் வீடு நீ இங்க எவ்வளவு நாள் வேணும்னாலும் தங்கலாம் நானும் எனக்கு தெரிஞ்சவங்க கிட்ட உன் ஜப் சம்மந்தமா  சொல்லி வைக்கிறேன். நீ ரொம்போ அலட்டிக்காத ஒரு மூணு நாளைக்கு உங்க அக்காக்கூட சேர்ந்து ஷாப்பிங் போ உனக்கு எல்லா கவலையும் மறந்துடும் என்று சொல்ல,

என்னை ஓட்டலைன்னா உங்களுக்கு தூக்கமே வராதே என்று  தன் கணவனிடம் பொய்யாக கோபித்து கொண்டவள். ஆமாடா பிரகாஷ் நீ காலேஜ் டேஸ்ல இங்க வந்து எங்க கூட ஒண்ணா தங்கினது தான், இப்போ திரும்ப நமக்கு சான்ஸ் கிடைச்சிருக்கு ஏன் கவலை படுற, ஒரு நாலு நாள் என்கூட ஜாலியா இரு அதுக்கப்புறம் வேலை தேடுவோம் என்று கூற,

சரிதான் என்று சிரித்தான் பிரகாஷ்.

அதன் பின் சுவாதியும் சங்கரும் சொன்னதுபோல் நான்கு நாட்கள் சுவதியோடு ஊரைச் சுற்றி வந்தான், மாலை சங்கர் வந்தவுடன் மூவருமாக சேர்ந்து படம் பார்ப்பது ஏதேனும் விளையாடுவது என்று நேரம் கலகலப்பாக சென்றது.

ஐந்தாவது நாள் காலை பிரகாஷைத் தேடிக்கொண்டு தெய்வநாயகி வந்து இறங்கினார்.

அவரை அங்கு சற்றும் எதிர்பார்க்காத பிரகாஷ்

பாட்டி நீங்க எங்க இங்க? என்று  ஆச்சர்யமாக கேட்க,

நான் அதே கேள்வியை உன்கிட்ட கேக்கலாம் இல்லையா பிரகாஷ், நீ எங்க இங்க? என்று திருப்பி கேட்டார், தெய்வநாயகி அம்மா.

அது நான் அக்கா மாமாவை பார்க்க வந்தேன் என்று கூற,

நீ எப்போ இங்கு வந்தாலும் என்கிட்டே சொல்லிட்டு, அப்படியே நீ வால்பாறை வரது தானே வழக்கம் இந்தமுறை ஏன் எனக்கு தகவல் சொல்லல என்று கேட்க,

அவரிடம் என்ன சொல்லி சமாளிப்பது என்று தெரியாமல் தலை குனிந்தான் பிரகாஷ். ஏனோ தெய்வநாயகியின் முகம் பார்த்து பொய் கூற அவனுக்கு மனம் வரவில்லை,

உனக்கு ஒரு பிரச்னை, ஆனால் அது சம்மத்ந்தமாய் நீ எனக்கு ஒரு போன் கூட பண்ணல யாரோ சொல்லி எனக்கு தெரியவேண்டியது இருக்கு,என்று அவர் கேட்க,

இல்ல பாட்டி  அது வந்து……..

போதும் பிரகாஷ்,  உனக்கு வேலையில பிரச்சனை, அங்க அவ்வளவு பெரிய எஸ்டேட்டை  நான் ஒருத்தியா கஷ்டப்பட்டு பார்த்துகிட்டு இருக்கேன், நேரா  கிளம்பி வந்து நான் பார்த்துகிறேன் பாட்டி, நீங்க ரெஸ்ட் எடுங்கன்னு சொல்லிருந்துருக்கலாம், நான் எவ்வளவு சந்தோசம் பட்டிருப்பேன். நீ என்னை பாட்டின்னு கூப்பிடுறது வாய் வார்த்தைக்கு தான் மனதளவில் இல்லை, அப்படி நீ என்னை  உண்மையாவே பாட்டின்னு  நினைச்சிருந்தா உனக்கு ஒரு பிரச்சனை என்றவுடனே என்னைத் தேடி வந்திருப்ப இல்ல, என்று அவர் வருத்ததோடு கேட்க,

பாட்டி எதுக்கு இவ்வளவு பெரிய வார்த்தை எல்லாம் பேசுறீங்க, நான் உங்களை மனதார என் பாட்டியாக தான் நினைக்கிறேன். ஆனால் நான் இப்போ உங்களை தேடி வந்தா நீங்க இல்லைனாலும் உங்களை சுத்தி இருக்கிறவங்க இந்த மாதிரி ஒரு ஆதாயத்துக்காக தான் உங்க கிட்ட நான் பழகினேன்னு நினைச்சுப்பாங்க. அப்படி நினைக்குறதுல எனக்கு இஷ்டம் இல்லை அதனால் தான் நான் வரலை என்றான்,

பிரகாஷ் ஊர்ல இருக்கிறவங்க நினைக்கறதுக்காக எல்லாம் நாம வாழ முடியாது நீ எப்படின்னு  எனக்கு தெரியும்,

மித்ரா என்னோட பேத்தி இவ்வளவு சொத்துக்கும் அவ ஒரே வாரிசு என்னும்  ஒரே காரணத்துக்காக  அவ மேல காதல் இருந்தும் அதை நீ வெளியில சொல்லாமல் மறைச்சிகிட்டு இருக்க, அப்படி இருக்கிற உன்னை பத்தி எனக்கு தெரியாதா? மத்தவங்க என்ன நினச்சா என்ன? என்று தெய்வநாயகி கூற, “அங்கிருந்த மூவரும் அதிர்ந்து போயினர்”.

என்னது……. “பிரகாஷ் மித்ராவை காதலிக்குறானா? என்று சுவாதிக்கும் சங்கருக்கும் ஆச்சர்யமாக இருந்தது”.

“இந்த விஷயம் பாட்டிக்கு எப்படி தெரியும் என்று பிரகாஷிற்கு ஆச்சர்யமாக இருந்தது”.

அவன் பாட்டியைப் பார்த்து, நீங்க என்ன சொல்றிங்க பாட்டி? இந்த விஷயம் உங்களுக்கு எப்படி தெரியும்? என்று தன்னை மீறி கேட்டுவிட

பிரகாஷ்  நானும் உங்க வயசைத் தாண்டி வந்தவ தான் நீ மித்ராவை பார்க்கும் பார்வையில எனக்கு தெரியாதா உனக்கு அவ மேல  இருக்கிற காதல். உன்னை சுத்தி யாருமே இல்லை, அல்லது யாருமே உன்னை கவனிக்கலன்னு நீ நினைக்கிறியா என்ன? என்று கேட்டவர் தொடர்ந்து,  என்கிட்டே அவளை கூட்டிட்டு வந்து விடும்போது நீ என்ன சொன்ன? உங்க பேத்தி தான் நான் கூட்டிட்டு வந்து விடுறேன், ஒருவேளை அவ உங்க பேத்தியா இலலாமல் யாரோ ஒரு பொண்ணா இருந்தாலும் அவளை நான் உங்ககிட்ட தான் கொண்டுவந்து சேர்த்தியிருப்பேன் அப்படி  உங்ககிட்ட கூட்டிட்டு வந்து விடும்பட்சத்தில் அவ படிப்பு செலவை முழுசா நான் தான் பார்த்துக்கனும்னு நினைச்சேன் ஆனால் லக்கிலி அவ உங்க சொந்த பேத்தியா போய்ட்டா. அப்படி இருந்தாலும் இப்போதும் அவளது படிப்பு செலவு முழுக்க நான் தான் பார்க்கணும்னு நினைக்கிறனு அன்னைக்கு நீ என்கிட்டே பேசுனியே அப்போவே எனக்கு புரிஞ்சது உனக்கு மித்ரா மேல இருக்கிறது பரிதாபத்தையும் தாண்டி ஆழமான அன்புன்னு.

ஆனால் அவ என் பேத்தி அப்படிங்குற ஒரே காரணத்துக்காக தான பிரகாஷ் காதலை நீ மறைச்சு வச்சிருக்க, என்று கேட்க,

தன் மனதில் இருப்பது யாருக்குமே தெரியாது என்று அவன் நினைத்திருக்க, அது  பாட்டிக்கு தெரிந்திருக்கிறது, அதுவும் முதல் நாளில் இருந்து தெரிந்திருக்கிறது என்பது அவனுக்கு மிகவும்  அதிர்ச்சியாக இருந்தது. கூடவே பாட்டியே தன்னை இந்த அளவிற்கு கண்டுபிடித்து வைத்திருக்கும்போது  மித்ராவிற்கு இது இன்னமுமா தெரியாமல் இருக்கும்? என்று யோசித்தவன் ஒருவேளை மித்ராவிற்கு இந்த விஷயம் தெரியுமோ என்று தன் மனதிற்குள் குழம்பினான்.

மித்ராவிற்கு பிரகாஷின் காதல் தெரியுமா? பிரகாஷ் மித்ராவின் மனதில் புதிதாக தோன்றியிருக்கும் காதலை அறிவானா? என்று அறிய தொடர்ந்து வாசியுங்கள் என் வானவில்…………

நறுமுகை

3

No Responses

Write a response