என் வானவில்-35

என் வானவில்-35

 மித்ராவின் பார்வையும்,  அபிராமியின் பேச்சும்  ஏதோ  விஷயம் இருக்கிறது என்று பிரகாஷிற்கு தோன்ற, அவன் ஒரு நிமிடம் மித்ராவை ஆராய்ச்சியோடு பார்த்தான். பின் சட்டென என்னிடம் எதையாவது மறைக்கிறியா  மித்ரா என்று கேட்டான்?

அவன் அப்படி கேட்கவும் தூக்கி வாரி போட்டது போல அவனை  நிமிர்ந்து பார்த்தவள் ஒருநிமிடம் என்ன சொல்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தாள்.

பிரகாஷ் மீண்டும் சொல்லு  மித்ரா என்னிடம் எதையாவது மறைக்கிறியா என்று கேட்டான்?

ஒரு நிமிடம் தயங்கிய மித்ரா பின்னர், அப்படி எல்லாம் ஒன்னும் இல்லையே சத்யா  ஏன்  அப்படி கேட்குறீங்க? என்று தடுமாறி தடுமாறி பதில் கூறினாள். அவளையே பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு மித்ரா இதுவரை கிஷோர் பற்றிய விஷயத்தையே மறைத்து தான் வைத்திருக்கிறாள் என்று தெரிந்திருந்தாலும் இப்போது அதையும் தாண்டி வேறு எதோ இருக்கிறது என்பது போல தோன்றியது. எப்போதும் நேராக பார்த்து பயத்தோடு பேசினாலும் பதட்டமில்லாமல் பேசும் மித்ரா இன்று பதட்டப்படுவது பிரகாஷிற்கு வித்தியாசமாக இருந்தது. ஏற்கனவே அவளுக்கு ஏற்பட்டிருக்கும் அதிர்ச்சிகளில் இதைப் பற்றி மேலும் மேலும் கேட்டு அவளைக் கஷ்டப்படுத்த வேண்டாம் என்று நினைத்த பிரகாஷ் இல்லை இல்லை, உனக்கு ஏதாவது பயம் குழப்பம் இருந்து அதை என்கிட்ட கேட்க தயங்குறியோ என்று நினச்சேன் அப்படி எதாவது இருந்தா என்கிட்டே மறைக்காம சொல்லிடு என்றான்.

அதைக் கேட்ட மித்ரா அப்பாடி அவ்வளவு தானா என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டவள், வெறுமனே தலையை மட்டும் அசைத்து விட்டு நான் என் ரூமுக்கு போறேன் என்று கூறிவிட்டு வேகமாக சென்று விட்டாள்.

செல்லும் அவளையே யோசனையோடு பார்த்துக்கொண்டிருந்த பிரகாஷ், இந்த பிரச்சனைகளை எல்லாம் சீக்கிரம் முடித்து எல்லாத்தையும் பழயபடிக்கு கொண்டு வரணும் இப்படியே பிரச்சனைகளோடு இருக்கிறது இவளுக்கு நல்லதல்ல என்று தன் மனதோடு நினைத்துக்கொண்டு தன் அறைக்கு சென்றான். அதன் பின் விழாவிற்கு  வந்திருந்த அனைவரும் கிளம்பிவிட, பிரகாஷ், மித்ரா தெய்வநாயகி மட்டும் வால்பாறையில் இருந்தனர்.

பிரகாஷ், தெய்வநாயகியிடம் என் மேல கோபமா பாட்டி  நான் உங்களை கேட்காமல் அப்படி ஒரு விஷயம் செஞ்சிருக்கக் கூடாதோ? என்று கேட்க,

அப்படி எல்லாம் ஒன்னுமில்லை பிரகாஷ்.  நீ செஞ்சது தான் சரி, நாம் எவ்வளவு சொன்னாலும் அவங்க கேட்க போவது கிடையாது. இப்போ நாம மித்ராவை அனுப்பாமல் பிடிவாதம் பிடிச்சா திரும்ப திரும்ப அவங்க வந்துகிட்டே தான் இருப்பாங்க அது எல்லாரோட நிம்மதியையும் கெடுக்கும். அவ அங்கு போயிட்டு வரட்டும் பிறகு அவ எடுக்கும் முடிவுக்கு எல்லாரும் சம்மதிக்கிறதா தான சொல்லி இருக்காங்க. பார்ப்போம் இப்படி தான் இது நடக்கணும்னு இருந்தா அதை யாரால் மாற்ற முடியும்? என்று கூற,  அப்போது அங்கு வந்தாள்  மித்ரா.

இரண்டு நாட்களாகவே சோகமாக இருக்கும் தன் பாட்டியைப் பார்த்து அவளுக்கு வேதனையாக இருந்தது. அவரிடம் பேச வேண்டும் என்று நினைத்துக் கொண்டே இருந்தாள், இன்று பிரகாஷும் தெய்வநாயகியும் அவளது அப்பா வீட்டிற்கு போவதை பற்றி பேசுவதைக் கேட்டு அங்கு வந்தவள் பாட்டி நீங்க ஏன் ரெண்டு நாளா சோகமாக இருக்கீங்க? அங்கு போய்  நான் மாறிடுவேன்னு நினைக்கிறிங்களா? என்று கேட்க,

சே சே ! அப்படி எல்லாம்  இல்லடா, நீ ஏற்கனவே  இங்கு வரும்போதே நிறைய பிரச்சனைகளோடு தான் வந்த, இங்கு வந்த பிறகு நீ நிம்மதியா இருக்கணும்னு நினச்சேன், இப்போ திரும்ப பிரச்சனைகள் வருதேன்னு கவலையாக இருக்கு என்று சொல்ல,

விடுங்க பாட்டி நீங்களே சொன்ன மாதிரி இது இப்படி தான் நடக்கணும்னு இருக்கோ என்னவோ? அங்கு போயிட்டு வந்துட்டு எனக்கு அங்கு இருக்க இஷ்டம் இல்லைனு சொல்லிட்டா அவங்க நம்மை தொந்தரவு பண்ண மாட்டாங்க இல்லை, அதனால்  நீங்க ஒன்னும் கவலை படாதீங்க பாட்டி நான் அங்கு பத்திரமா இருந்துப்பேன், என்று கூற,

தெய்வநாயகி அது போதும் டா அங்கு என்ன பிரச்சனை இருந்தாலும் எனக்கு உடனே ஒரு போன் பண்ணு, நான் வந்து உன்னை கூட்டிட்டு வந்துடறேன் என்று சொல்ல

பிரகாஷோ நிலைமையை இலகுவாக்க எண்ணி, அங்கு பிரச்சனை வந்தால் அது அந்த ரோஹித்தால் மட்டும் தான், உங்க பேத்தி அவனை விட்டு விளாசிடுவா என்று கூற,

போடா அவளை எப்போ பாரு கிண்டல் பண்ணிக்கிட்டு என்று பேரன் தோளில் செல்லமாக தட்டினார் தெய்வநாயகி.

என்ன தான் அங்கு போய் தான் சமாளித்து கொள்வதாக பாட்டி முன்னாடி வீர வசனம் பேசினாலும் மித்ராவிற்கு உள்ளுக்குள் பயம் இருந்தது. அதை வெளியில் காட்டாமல் அனைவர் முன்னும் சாதாரணமாக இருப்பதாக காட்டி கொண்டாலும் மனதிற்குள் எதோ ஒரு படபடப்பு ஏதோ தப்பாக நடக்க போகிறது என்று அவளுக்கு தோன்றிக்கொண்டே இருந்தது ஆனால் அதை பற்றி கூறி தெய்வநாயகியையோ பிரகாஷையோ அவள் மேலும் கலவரப்படுத்த விரும்பவில்லை.

எவ்வளவு மெதுவாக நேரம் நகர்ந்தாலும் அந்த ஒரு வாரம் முடிந்து மித்ரா அவளது தாத்தா வீட்டிற்கு செல்லும் நாளும் வந்தது.

பிரகாஷுடன் கிளம்பிய மித்ரா, வழி முழுவதும் அமைதியாக இருக்க பிரகாஷே பேச்சை தொடங்கினான். மித்ரா நீ எப்போமே அதிகம் பேச மாட்ட ஆனா இப்படி ரொம்போ அமைதியா இருக்கிறது ஒரு மாதிரி வித்தியாசமா இருக்கு, உனக்கு அங்கு போக விருப்பம் இல்லைனு எனக்கு தெரியும், நீ ஏன் இப்படி யோசிக்க கூடாது முன்னாடி என்ன நடந்துச்சுனு நமக்கு தெரியாது ஒரு வேளை  உன் தாத்தா உண்மையிலும் உன் மீது அக்கரையாகவும் பாசமாகவும் இருப்பவரா இருந்தால்?  நீ போகும்போதே அவர்கள் தப்பானவர்கள் என்னும் மனநிலையில் போனா உனக்கு அது புரியாமலே போய்விடலாம் இல்லையா? என்று கேட்க,

சத்யா நீங்க சொல்வதெல்லாம் சரிதான்  பாட்டியாவது அம்மா இறந்த பிறகு என்ன ஆச்சு ஏதாச்சுன்னு ஆள் விட்டு தேடி இருக்காங்க விசாரிச்சு இருகாங்க, ஆனா இவங்க என்ன பண்ணினாங்கன்னே எனக்கு தெரியலையே? இவங்க என்ன பற்றியோ என் அப்பா அம்மாவை பற்றியோ கவலை பட்ட மாதிரி எதுவும் தெரியல. இன்னைக்கு பாட்டிகிட்ட நான் இருக்கேன் என்னும் ஒரே காரணத்துக்காக உரிமை போராட்டம் பண்ண மட்டும் தான் அவங்க நினைக்குறாங்களோன்னு எனக்கு தோணுது என்று சொல்ல,

அப்படி கூட இருக்கலாம் ஆனால் இதுவாக தான் இருக்கு என்று ஒரு முடிவோடு போகாத, அங்கு ஒரு ஓபன் மைண்டடா போ. என்ன தான் இருக்குன்னு தெரிஞ்சிக்கோ, ஓரு வேளை நீ நினைக்கிறது தப்பா கூட இருக்கலாம் இல்லையா?  என்று பிரகாஷ் சொல்ல,

 அப்படியும் இருக்குமோ என்று தனக்குள் நினைத்து கொண்டவள் சரி, சத்யா நான் முயற்சி செய்கிறேன் என்று கூறியதோடு அமைதியாகிவிட்டாள். அதன் பின் பிரகாஷ் பொதுவாக பேச தொடங்க சிறிது சிறிதாக அவளும் அவளது எண்ணங்களில் இருந்து வெளியில் வந்து அவனோடு பேச தொடங்கினாள், அப்படியே பேச்சு மெதுவாக அவளது கல்லூரி படிப்பு என்று வர,

பிரகாஷ் அவளிடம் ஆமாம் மித்ரா அடிக்கடி உன்னுடைய சீனியர் பற்றி பேசுவ இப்போ கொஞ்ச நாளா பேசுறது இல்லையே ஏதாவது பிரச்சனையா? என்று அவன் கேட்க,

மித்ராவோ, கொஞ்சம் நாளா இவர் கிட்ட எதுக்காவது மாட்டிகிட்டு முழிக்கறதே எனக்கு வேலையா போச்சு என்று மனதோடு புலம்பிக்கொண்டவள். அப்படி எல்லாம் இல்லை அவர் படிச்சு முடிச்சுட்டு காலேஜ் விட்டு போயிட்டார், அதுக்கு பிறகு அவரை பார்ப்பது இல்லை அதனால் தான் பேசுரது இல்லை என்று கூறி முடித்தாள்.

பிரகாஷிற்கு ஆச்சர்யமாக இருந்தது அவனுக்கு தெரிந்தவரை மித்ராவிற்கு இவ்வளவு சரளமாக பொய் சொல்ல வராது, எதை மறைக்க இவள் இவ்வளவு பொய்களை சொல்கிறாள் என்று பிரகாஷிற்கு தோன்றியது, ஆனால் இது அவளிடம் இதை பற்றி கேட்பதற்கான சரியான நேரம் அல்ல என்று நினைத்தவன், அவள் போக்குலையே அப்படின்னா சரி, கிஷோர் நம்ம பக்கத்து எஸ்டேட்ல தானே இருக்கான், வீட்டுக்கும் வருவது இல்லையா? இப்போ எங்கு இருக்கிறான்? என்று மேலும் கிஷோரை பற்றி கேள்வி கேட்க 

அவர் எம். பி. ஏ ஜாயின் பண்ணிட்டார்ன்னு நினைக்கிறன் என்று கூறினாள் மித்ரா.

ஓ எம்.பி.ஏ. வா நீ ஏன் கிஷோர் கிட்ட எம்.பி.ஏ. பற்றி விசாரிக்க கூடாது? உன்னையும் நான் அதே காலேஜ்ல சேர்த்து விட்டுருவேன் இல்ல, என்று கூற,

ஹ்ம்ம் நான் பார்த்தேன்னா விசாரிச்சு வைக்கிறேன் சத்யா என்று கூறிவிட்டு எனக்கு தூக்கம் வருது என்று கண்ணை மூடிக்கொண்டாள்.

பிரகாஷ் ஒரு புன்னகையோடு சரி தூங்கு என்று கூறிவிட்டு அமைதியாகிவிட்டான், ஆனால் அவன் மனதிற்குள் சிந்தனைகள் ஓடிக்கொண்டே இருந்தது.

கிஷோரை லவ் பண்ணலன்னு சொல்லிட்டா,  ஆனால் கிஷோர் விஷயத்தை என் கிட்ட இருந்து மறைக்கிறா, இதுக்கு இந்த மாதிரி நடந்துச்சுன்னு என்கிட்டே ஒரே வார்த்தையில் சொல்லி முடிச்சிருக்கலாமே அதை விட்டுட்டு எதுக்கு பொய்க்கு மேல பொய் சொல்லணும் என்று மனதிற்குள் எண்ணிக்கொண்டிருந்தவன், இதற்கான பதிலை கிஷோர் கிட்ட தான் கேட்கணும். இவளை விட்டுட்டு வால்பாறை போனதும் முதலில் கிஷோரை போய் பார்க்கணும் என்று நினைத்து கொண்டான்.

அதே சமயம் கண்ணை மூடி படுத்திருந்த மித்ராவோ, தனக்குள் எதனால் இந்த  படபடப்பு ஏற்படுகிறது? சத்யா கிஷோர் பற்றி கேட்பதாலா? தனக்கு முன் பின் தெரியாத மனிதர்கள் இருக்கும் வீட்டிற்கு செல்வதாலா? இல்லை அங்கு தனக்கு ஏதாவது அசம்பாவிதம் நடக்க இருக்கிறதா? என்று எண்ணி கலக்கம் கொண்டாள்.

கிஷோர் மூலம் உண்மையை அறிவானா பிரகாஷ்?, மித்ராவிற்கு அவளது தாத்தா வீட்டில் நடக்க இருப்பது என்ன? என்று அறிய தொடர்ந்து வாசியுங்கள் “என் வானவில்”.                   

நறுமுகை

5

No Responses

Write a response