என் வானவில்-30

என் வானவில்-30

தெய்வநாயகி தன் பேத்தி கிடைத்த மகிழ்ச்சியை கொண்டாடுவதற்காக இதை அனைவருக்கும் தெரியப்படுத்த ஒரு பெரிய விழா ஏற்பாடு செய்ய முயற்சி செய்தார் .ஆனால் மித்ராவோ தன்னுடைய கல்லூரி படிப்பு முடிக்கும் வரை இது வேண்டாம் என்று கூற, பிரகாஷும் அதை ஆமோதித்தான். இப்பொழுது இது போன்று ஒரு விழா நடந்தால் கல்லூரியில் மித்ரா பல கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டி வரும். அவள் கல்லூரி முடித்து வெளியில் வரட்டும் இதை வைத்துக்கொள்ளலாம் என்று கூற, தெய்வநாயகியும் அதற்கு ஒப்புக்கொண்டார். அதன் பின் இருதினங்கள் அங்கு இருந்துவிட்டு பிரகாஷ் ஊருக்கு கிளம்பினான். திருச்சி சென்றவன் இரு தினங்கள் கழித்து சண்முகத்தை கோவிலில் சந்தித்தான்.

என்ன தம்பி சொல்கிறீர்கள் மித்ராவின் அப்பா குடும்பம் அவளை தேடி வந்திருக்கிறார்களா? அது எப்படி சாத்தியம் நாம் தான் யாருக்கும் தெரியாமல் பத்திரமாக வைதிருத்தோமே?

எனக்கும் தெரியவில்லை அது எப்படி நடந்தது என்று, ஆனால்  மித்ராவிற்கு இப்போது அனைத்து விஷயங்களும் தெரிந்துவிட்டது. அவள் கேர்புல்லாக இருப்பாள் என்று நினைக்கின்றேன். அந்த ரோஹித் பேசியதை அவள் காதுக்கொடுத்துக்கூட கேட்கவில்லை.

அதுபோக இந்த மூனு வருஷத்தில் அவள் தனியாக சென்று படித்தது அனைத்தும் சேர்த்து அவளுக்கு ஒரு தனி தைரியத்தை கொடுத்திருக்கிறது.கண்டிப்பாக அவள் எது வந்தாலும் சமாளித்துக்கொள்வாள். ஆனால் அதற்குள் ஏன் மித்ராவின் அம்மா அவளது அப்பா குடும்பத்தினரிடம் இருந்து அவளை தள்ளி வைக்க சொன்னார்கள் என்ற விஷத்தை நாம் கண்டுபிடித்ததாக வேண்டும். ஏனெனில் இந்த விஷயத்தைப்பற்றி தெரிந்ததில் இருந்து மித்ரா அந்த ஒரே கேள்வியை தான் திரும்ப திரும்ப கேட்டுக்கொண்டிருக்கிறாள் என்று கூறியவன், மித்ராவின் அம்மா காயத்ரி அவர்களோடு தங்கி இருந்தபொழுது விட்டு சென்ற பொருள் ஏதேனும் உங்களிடம் இருக்கிறதா? என்று சண்முகத்திடம்  கேட்டான்.

இல்லை தம்பி அதை எதாவது நான் வைத்திருந்து  அதன் மூலமாக மித்ரா எங்கள் மகள் இல்லை என்று வெளியில் தெரிந்துவிடுமோ என்று நான் அதை அனைத்தையும் அப்போதே ஆற்றோடு விட்டுவிட்டேன் என்று சொல்ல,

அவரது நியாயம் புரிந்து பிரகாஷால் மேற்கொண்டு எதுவும் சொல்லவில்லை. ஆனால் இதை எப்படியாவது தெரிந்துகொள்ள வேண்டும் என்று நினைத்தவன் இதை பற்றி தெய்வநாயகியிடம் பேச வேண்டும் என்று நினைத்தான்.

அதே சமயத்தில் விஸ்வநாதனும் ரோஹித்தும் திட்டமிட்டபடி மித்ராவை பற்றி ரோஹித்தின் தாத்தாவிடம் கூறினர்.  இனி அவர் பிழைக்கவே போவதில்லை என்று அனைவரும் நினைத்திருக்க, தனக்கு ஒரு பேத்தி இருக்கிறாள் என்ற விஷயம் கேள்விப்பட்டவுடன், அதுநாள் வரை இருந்த உடல் நிலை சிறிது சிறிதாக மாறி உடல்நலத்தில் முன்னேற்றம் காணப்பட்டது.

ரோஹித்தும் விஸ்வநாதனும் என்று டாக்டர் அவரை பயணம் செய்யலாம் என்று கூறுவார் என காத்திருந்தனர்.

இதற்கிடையில் மித்ரா தனது இறுதியாண்டு கல்லூரி படிப்பை முடித்தாள். லண்டனில் இருந்து திரும்பி வந்த பிரகாஷ், ஒரு மாதத்தில் திரும்பி சென்றுவிடலாம் என்று எண்ணி தான் வந்திருந்தான். ஆனால் இங்கிருக்கும் நிலை அவனை திரும்பி செல்வது சரி அல்ல என்று யோசிக்க வைத்தது.

தன்னால் இப்போது  திரும்ப லண்டன் செல்ல இயலாது என்று தன் சென்னை அலுவலகத்திலேயே பணியை தொடர்ந்தான்.

நடந்தவைகளை கேட்ட சுஜியும் ராமும் மிகவும் அதிர்ச்சி அடைந்தனர்.

எப்படி பிரகாஷ், அப்படினா  இவர்கள் பாட்டியின் வீட்டிற்கு யார் யார் வருகிறார்கள்  என்று பார்த்துக்கொண்டே இருந்தார்களா? இல்லை இவர்களுக்கு முன்னரே இப்படி ஒரு பேத்தி இருப்பாள் என்ற சந்தேகம் இருந்ததா?

என்னால் நம்பவே முடியவில்லை, யாருக்குமே இது இவர்களின் பெண்ணாக இருக்கும் என்ற சந்தேகம் கூட வந்திருக்காது, இவர்கள் எப்படி வந்தார்கள் என்று சுஜி கேட்க,

எனக்கும் அது தான் புரியவில்லை சுஜி, எங்கயோ தப்பா  இருக்கு, இவர்கள் எதற்காக பாட்டி வீட்டில் என்ன நடக்கிறது என்று ஆராய்ச்சி செய்ய வேண்டும்? மித்ராவின் அம்மா அவளது அப்பா குடும்பத்திடம் இருந்து மித்ராவை பிரித்து வைக்க சொன்னதற்கும் இப்பொழுது, இவர்கள்  திடீரென பாட்டி வீட்டில் நடக்கும் விஷயங்களை வைத்து மித்ராவை தேடி கண்டுபிடித்து வீட்டிற்கு வந்ததற்கும் என்னவோ தொடர்பு இருக்கிறது, மித்ராவின் தாத்தாவோ பாட்டியோ வரவில்லை……   ஏன் அத்தை பையன் வரவேண்டும்? அது தான் எனக்கு குழப்பமாக இருக்கிறது என்று கூற,

ராமோ…. அது உனக்கு குழப்பமாக இருக்கிறதா? இல்லை மித்ராவிற்கு மிக நெருங்கிய உறவு முறை என்று கோபமாக இருக்கிறாயா? என்று கேட்க,

டேய்  இங்கு எவ்வளவு பெரிய பிரச்சனை போயிட்டு இருக்கு இப்போ உனக்கு இந்த நக்கல் அவசியமா? என்று பிரகாஷ் கேட்டான்.

இது நக்கல் எல்லாம் இல்லை உண்மையை தான் சொல்றேன், நிஜமா சொல்லு அவன் அவளுக்கு சொந்தங்குறதுல உனக்கு கடுப்புதான, என்னதான் அவளை அவளது அப்பா குடும்பத்துடன் சேர கூடாது என்று அவளது அம்மா  சொல்லியிருந்தாலும் பாட்டி அவளை அங்கு அனுப்ப மாட்டேன் என்று சொன்னாலும் அவள் அவனுக்கு அத்தை பொண்ணு இல்லை என்பதில் எந்த மாற்றமும் இல்லையே என்று ராம் கேட்க,

ராம் எனக்கு அதை பற்றி எந்த கவலையும் கிடையாது, நீ மட்டும் அங்கிருந்து மித்ரா பேசியதை பார்த்திருக்க வேண்டும் என்ன வாங்கு வாங்கினால் தெரியுமா அவனை என்று கூற,

அடப்பாவி அதில் என்னடா உனக்கு இவ்வளவு சந்தோஷம் என்று ராம் சிரித்துக்கொண்டே கூறினான்.

நீ வேறு ஏண்டா அவன் யாருக்கும் மரியாதையை கொடுக்கமாட்டேன் என்கிறான் அந்த வீடே அவனுடையது என்பது போல பேசுகிறான். பாட்டியும் மித்ராவும் தனியாக இருக்கும் இடத்திற்கு டிரைவரும் வாட்சமேனும் சொல்ல சொல்ல கேட்காமல் உள்ளே நுழைந்திருக்கிறான்,

அப்போவே மித்ரா திட்டியிருக்கிறாள், என்னை பார்த்தவுடன் நீ தான் சத்யபிரகாஷா? உனக்கு இந்த விஷயத்தைப் பற்றி எல்லாம் தெரியும் இல்லையா?என்று மரியாதை இல்லாமல் கேட்டவுடன் மித்ரா அவனுக்கு கொடுத்தா பாரு ஒரு டோஸ் என்று கூற,

சுஜியோ, எனக்கு இப்பொழுது தான் இன்னும் சந்தேகமாக இருக்கிறது. அவர்கள் மித்ராவை ட்ராக் பண்ணியதுடன் உன்னை பற்றியும் ஏன் தெரிந்துகொள்ள வேண்டும்? நீ லண்டனில் இருந்து வருகிறாய் என்ற செய்தி யாருக்கும் தெரியாது…. சோ நீ  இல்லாத நேரத்தில் இந்த விஷத்தை பற்றி மித்ராவிடம் பேச வேண்டும் என்று தான் பிளான் பண்ணியிருக்காங்க, எதிர்பாராத விதமாக நீ சரியான நேரத்தில் வந்துவிட்டாய் என்று நினைக்கிறேன் என்று சுஜி கூற,

எனக்கும் அந்த சந்தேக இருக்கிறது சுஜி, அவன் என்னை புதிதாக பார்ப்பது போல பார்க்காமல் என்னை பற்றி ஏற்கனவே நன்றாக தெரிந்தவன் போல பேசினான், நான் கூறியது போல் மித்ரா இடையில் புகுந்து அவனை பேசவிடாமல் தடுத்ததால் அவனுக்கு என்னை பற்றி எந்த அளவிற்கு தெரியும் என்று எனக்கு தெரியவில்லை. நாம் என்னவோ மித்ராவை பற்றி  யாருக்கும் எதுவும் தெரியாது என்று நினைத்திருக்க மித்ராவை பற்றிய அனைத்து விஷயங்களையும் அவர்கள் கேதர் செய்திருக்கிறார்கள் அது பரவாயில்லை கல்லூரி முடித்து மித்ரா எஸ்டேட்டிற்குள் வந்துவிட்டால் அவ்வளவு சீக்கிரம் அவளை யாரும் நெருங்க முடியாது. ஆனால் இதை சாதாரணமாக விடவும் கூடாது என்று சொல்ல,

கண்டிப்பாக…… விசாரிப்போம், எப்படியும் இவ்வளவு விசாரிப்பவர்கள் எங்கேயாவது சின்ன தப்பு பண்ணாமலா இருக்க போகிறார்கள் அதை கண்டுபிடித்தால் இவர்களின் நோக்கம் என்ன என்று நமக்கு தெரிந்துவிடும் என்று ராம் சொல்ல,

ஹ்ம்ம்…. பார்க்கலாம் என்று கூறி பிரகாஷ் அந்த பேச்சிற்கு முற்றுப்புள்ளி வைத்தான்.

கல்லூரி முடித்து திரும்பி வந்திருந்த மித்ரா என்ன தான் இந்த வீட்டின் பெண் என்ற உரிமை இருந்தாலும் இன்னும் பல குழப்பங்கள் அவளுக்குள் ஓடிக்கொண்டே இருந்தது. அதை வெளியில் காட்டினாள் தெய்வநாயகி வருத்தப்படுவார் என்று அவர் முன் எதையும் காட்டிக்கொள்ளாமல் எப்போதும் போல் இயல்பாக இருக்க தொடங்கினாள்.

 அது தான் கல்லூரி முடித்து வந்துவிட்டாயே இனி உன்னை பற்றி இங்கு இருக்கும் அனைவருக்கும் சொல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது. என்று கூறி தெய்வநாயகி யார் சொல்லியும் கேட்காமல் மித்ராவை அனைவருக்கும் அறிமுகம் செய்துவைக்க ஏற்பாடு செய்தார், அந்த விஷத்தை கேள்விப்பட்ட விஸ்வநாதனும் ரோஹித்தும் இதைவிட சரியான சந்தர்ப்பம் கிடைக்காது அதே விழாவில் அவள் நம் வீட்டிற்கும் சொந்தம் தான் என்பதை கூறிவிட வேண்டும் என்று நினைத்து டாக்டரிடம் ஒப்புதல் பெற்றுவிட்டு ரோஹித்தின் தாத்தாவை அழைத்துக்கொண்டு வால்பாறை சென்றனர். அந்த விழாவில் நடக்கப்போவது என்ன என்று அறிய தொடர்ந்து வாசியுங்கள் “என் வானவில்”.

நறுமுகை

4

No Responses

Write a response