என் வானவில்-27

என் வானவில்-27

தன்னைப் பார்த்துக்கொண்டு விளக்கத்திற்காகக் காத்திருக்கும் மித்ரவிடம் அவள் வாழ்க்கையில் நடந்தவைகளை  சொல்ல தொடங்கினான் பிரகாஷ்.

மித்ரா இதெல்லாம் உன்னிடம் மறைத்தது தவறு தான் ஆனால் அதற்காக வலுவான காரணங்கள் எங்களிடம் இருக்கிறது.

என்ன நடந்தது என்று நான் சொல்லி முடித்த பிறகு அது தவறா? இல்லையா? என்று  நீயே முடிவு செய்துகொள் என்றான் பிரகாஷ். அதன்பிறகும் நாங்கள் செய்தது தவறு என்று நீ நினைத்தால், நீ என்ன தண்டனை கொடுத்தாலும் அதை நான் ஏற்றுக்கொள்கிறேன் என்றான்.

நான் முதன் முதலில் திருச்சியில் பார்த்தபோது உன்னை எங்கேயோ பார்த்த மாதிரி ஒரு உறுத்தல் என்னிடம் இருந்தது. எங்கே என்று என்னால் தெளிவாக கணிக்க முடியவில்லை. ஆனால் உன்னை இரண்டு மூன்று முறை திரும்ப திரும்ப  பார்த்த பிறகு நிச்சயம் உன்னை எங்கோ பார்த்திருக்கிறேன் என்று தோன்றியது.

அப்படி ஒரு நாள் நான் படுத்துக்கொண்டு யோசித்துக்கொண்டு  இருந்தபொழுதுதான் பாட்டி வீட்டில் பார்த்த ஒரு போட்டோவின் ரிசம்புலன்ஸ் உன்னிடம் இருந்தது. பத்து நாட்கள் கழித்து பாட்டி வீட்டிற்கு போகலாம் என்று நினைத்த நான் அந்த போட்டோ ரிசம்புலன்ஸ் எப்படி உனக்கு ஒத்து வருகிறது என்ற குழப்பத்திற்கு விடை கண்டுபிடிக்க தான் வந்தவுடன் பாட்டி வீட்டிற்கு விரைவாக கிளம்பினேன். பாட்டி வீட்டிற்கு வந்து நான் போட்டோவை பார்த்தபொழுது என்னால் நம்பவே முடியவில்லை.

அந்த போட்டோவில் இருந்தவர்களுக்கும் உனக்கும் பெரிதாக வித்தியாசமே எதுவும் இல்லை, இன்னும் சொல்லப்போனால் அவர்களது சின்னவயது போட்டோவையும் உன்னையும் பார்க்கும்பொழுது யாரவது சொல்லவில்லை என்றால் உங்கள் இருவருக்கும் வித்தியாசமே தெரியாது. அந்த போட்டோவில் இருந்தது பாட்டியின் ஒரே மகள் காயத்ரி, பாட்டியின் மகள் இறந்து பல வருடங்கள் ஆகின்றது.

அவரும் நீயும் எப்படி ஒரே மாதிரியாக இருக்கிறீர்கள் என்று எனக்கு புரியவே இல்லை.

பாட்டியிடம் தேவை இல்லாமல் எந்த பால்ஸ் ஹோப்பையும் கொடுக்க வேண்டாம் என்று நினைத்து, அவரிடம் சதாரணமாக, பாட்டி உங்கள் மகள் எப்படி இறந்தார்? என்று அவரது மகள் இறந்தத கதையைக் கேட்டேன்.

பாட்டியின் மகள் காயத்ரி அதாவது உன் அம்மா இங்கிருக்கும் மொத்த எஸ்டேட்டிற்கும் சொத்துக்களுக்கும் ஒரே வாரிசு. உங்கள் தாத்தா உன் அம்மாவை ரொம்ப செல்லம் கொடுத்து பாசமாக வளர்த்தார். உன் அம்மாவிற்கும் பாட்டியை விட தாத்தாவை தான் ரொம்போ பிடிக்கும். தன் பொண்ணு தான் தனக்கு பிறகு அத்தனை சொத்துக்களையும் பார்த்துக்கொள்ள போகிறாள் என்பதால், அப்போதே உன் அம்மாவை சென்னைக்கு அனுப்பி படிக்கவைத்திருக்கிறார்கள். அப்படி படிக்க சென்ற இடத்தில் தான் உன் அம்மா உன் அப்பாவை சந்தித்திருக்கிறார்.

இருவரும் காதலித்து திருமணம் செய்து கொள்ளலாம் என்று நினைத்தபொழுது இரண்டு வீட்டிலிருந்தும் கண்மூடித்தனமான எதிர்ப்பு.

இருவருமே பணக்காரர்கள் தான் இருந்தாலும் சாதி வேறு என்பதற்காக இவர்களின் ஆசையை கேட்காமல், இருவரின் அப்பாக்களும் உன் பெற்றோரின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துவிட்டனர். கூடவே உன் தாத்தா உன் அம்மாவிற்கு வேறு மாப்பிள்ளை பார்க்க தொடங்கினார். தன்னால் வேறு யாரையும் திருமணம் செய்து கொள்ள முடியாது என்று உன் அம்மா லெட்டர் எழுதி வைத்துவிட்டு உன் அப்பாவுடன் வீட்டை விட்டு சென்றுவிட்டார்.

யாரும் அவளை தேடிப்போக கூடாது, இந்த வீட்டிற்கும் அவளுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று உங்கள் தாத்தா சொல்லிவிட்டார். அதன் பிறகு ஒரு வருடம் உன் அம்மா எங்கு இருக்கின்றார்? என்ன செய்கிறார்? என்ற எந்த தகவலும் இல்லை. என்ன தான் யாரும் அவளை தேடிப்போக கூடாது, இந்த வீட்டிற்கும் அவளுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று உங்கள் தாத்தா சொல்லி இருந்தாலும் ரொம்போ பாசமாக வளர்த்திய  பொண்ணு இப்படி செய்துவிட்டாளே என்னும் வருத்தம் அவருக்குள் இருந்துகொண்டே இருந்தது. ஒரு நாள் காலையில் மாரடைப்பு வந்து தாத்தா இறந்துவிட்டார்.

அதன் பிறகு தனக்கு யாரும் இல்லை இருக்கு ஒரு மகளையும் எப்படி அப்படியே விட்டுவிடுவது என்று பாட்டி  உன் அம்மாவைத் தேடி ஆள் அனுப்பினார்கள், எங்கு தேடியும் உன் அம்மாவை பற்றி எந்த தகவலும் பாட்டிக்கு கிடைக்கவில்லை. ஆறு மாதம் பாட்டியின் விடாத தேடலுக்கு பிறகு உன் அம்மாவும் அப்பாவும் இறந்து போய்விட்டனர் என்னும் செய்தி மட்டும் தான் பாட்டிக்கு கிடைத்தது கூடவே  எப்படி இவர்கள் வீட்டில் தாத்தா ஏற்றுக்கொள்ளவில்லையோ அதேபோல உன் அப்பா வீட்டிலும் தாத்தா ஏற்றுக்கொள்ளவில்லை.உன் அம்மாவும் அப்பாவும் தனியாக தான் இருந்தார்கள், என்னும் விஷயமும் பாட்டிக்கு தெரிந்தது.

அவர்கள் இருவரும் இறந்தபொழுது அவர்களுக்கு ஒரு குழந்தை இருந்ததா எந்த தகவலும் இல்லை. அப்படி இருக்கும்பொழுது நீ எப்படி பாட்டியின் மகள் காயத்ரி போலவே இருக்கிறாய் என்று எனக்கு புரியவில்லை. அதற்கான விடையை உன் அப்பா சண்முகம் மட்டும் தான் சொல்ல முடியும் என்று எனக்கு தோன்றியது.

அதனால் பாட்டியை கூட்டிக்கொண்டு என் வீட்டிற்கு கூட சொல்லாமல் திருச்சி வந்து உன் அப்பாவை மீட் பண்ணினேன். அப்போது தான் உன் அப்பா நீ எப்படி அவரிடம் வந்து சேர்ந்தாய் என்று கூறினார்.

உன் அப்பா சண்முகத்திற்கும் அவரது மனைவிக்கும் திருமணம் ஆகி பல ஆண்டுகளாக குழந்தையே இல்லை என்று கோவில் கோவிலாக அவர்கள் அலைந்து கொண்டிருந்த சமயம் ஒரு கோவிலில் தான் உன் அம்மாவை பார்த்திருக்கிறார்கள், நிறை மாதமாக மயங்கிக்கிடந்த அவரை பார்த்து அப்படியே விட்டு விட்டு வர மனதின்றி உன் அப்பா சண்முகமும் அவரது மனைவியும் உன் அம்மா காயத்ரியை வீட்டிற்கு அழைத்துவந்து பார்த்துக்கொண்டனர். அவர்கள் வீட்டிற்கு அழைத்து வந்த ஒரே வாரத்தில் உன் அம்மா பிரசவத்தில் இறந்து போய்விட்டார்.

அவர் இறப்பதற்கு முன் அவர் சொன்ன தகவல் என் பொண்ணுக்கு ‘சங்கமித்ரா’ என்று பெயர் வையுங்கள்  எந்த காரணத்தைக் கொண்டும் இவளது அப்பா குடும்பத்தை சேர்ந்தவர்கள் அவளை தேடி வந்தால் அவர்களிடம் இவள் யார் என்ன என்ற உண்மையை மட்டும் சொல்லிவிடாதீர்கள் என்று சொல்லிவிட்டு இறந்து போய்விட்டார்கள். குழந்தை இல்லாத சண்முகமும் யாரிடமும் உண்மையை சொல்லாமல் உன்னை அவர்களது குழந்தையாகவே வளர்க்க வேண்டும் என்று தஞ்சாவூரில் இருந்து திருச்சிக்கு மாற்றிக்கொண்டு வந்துவிட்டனர்.

சோ, திருச்சியில் அனைவருக்கும் நீ இவர்களது பொண்ணு என்று தான் தெரியும். இதை சண்முகம் சொன்னதும் பாட்டிக்கு நீ இவரது பேத்தி  என்று புரிந்தது ஆனால் எதோ ஒரு காரணத்திற்காக உன் அம்மாவே, உன் அப்பாவின் குடும்பத்திற்கு நீ உயிருடன் இருப்பது தெரியக்கூடாது என்று நினைத்திருக்கிறார் அதற்காக தான் நாங்களும் நீ யார் என்று யாருக்கும் தெரியக்கூடாது என்று நினைத்தோம்.

ஏன் உன் அம்மா அப்படி சொன்னாங்க என்று எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் உனக்கு ஆபத்து இருக்குமோ என்னும் பயத்தில் உன்னிடம் இருந்து உண்மையை மறைத்தோம். இப்போ எப்படி உன் அப்பா வீட்டிற்கு நீ யார் என்று தெரிந்தது என்று தான் தெரியவில்லை. என்ன தான் உன் அம்மா அப்படி சொல்லிவிட்டு இறந்திருந்தாலும், நாங்கள் உன்னை பாதுகாக்க வேண்டும் என்று நினைத்தாலும் உன்னிடமாவது இந்த உண்மையை சொல்லி இருக்க வேண்டும் தப்பு தான் “சாரி “…. என்ற வார்த்தையுடன் மித்ரா யார் என்பதை பிரகாஷ் சொல்லி முடித்தான்.

மித்ரா, மீளா அதிர்ச்சியில் அமர்ந்திருந்தாள். தான் இதுவரை வாழ்ந்த வாழ்க்கை மொத்தமும் பொய் என்று அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதுவரை தனக்கு சொந்தமாக இருந்தவர்கள் அந்நியமாகவும் தனக்கு அந்நியர்கள் என்று நினைத்தவர்கள் சொந்தமாகவும் மாறிப்போனதை அவளால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. வெகு நேரம் அவள் அமைதியாக அமர்ந்திருக்க, யாருமே அந்த அமைதியை கலைக்க விரும்பவில்லை, வெகு நேரத்திற்கு பின் பிரகாஷை பார்த்தவள் அப்போ நான் இங்கிருக்கும் விஷயம் என் அப்பாவிற்கு தெரியுமா? என்று கேட்டாள் .

அவன் ஆமாம் என்று தலை அசைக்க, அது ஒரு பெரிய கதை நான் உன்னை அங்கிருந்து இங்கு யாருக்கும் சந்தேகம் வராமல் கூட்டிக்கொண்டு வருவதற்குள்……,எல்லாம் நாங்கள் செய்த டிராமா என்று கூற,

இன்னும் எதைத் தான் என் வாழ்க்கையில் என்னிடம் இருந்து மறைத்திருக்கிறீர்கள்? என்று சற்று வெறுமையோடு கேட்டாள் மித்ரா.

மித்ரா தெய்வநாயகியிடம் வந்து சேர்ந்தது எப்படி என்று அறிய தொடர்ந்து வாசியுங்கள் என் வானவில்

நறுமுகை

4

No Responses

Write a response