என் வானவில்-25

என் வானவில்-25

பிரகாஷ் எதிர்பார்த்தது போல மித்ரா அவனிடம் எதுவும் கூறவில்லை. சுஜியிடமும் அதைப் பற்றி எதுவும் பேசவில்லை. அபிராமியிடம் சுஜி, தான் அவளிடம் பேசியதையோ கிஷோர் விஷயத்தை பற்றி விசாரித்ததையோ மித்ராவிடம் கூற வேண்டாம் என்று சொல்லியிருந்தால் அபிராமியும் தன் தோழியிடம் எதுவும் கூறவில்லை.

ஆனால் கொஞ்ச நாட்களாக மித்ரா, பிரகாஷிடம் பேசுவது குறைந்திருந்தது, ஏதாவது ஒரு தவிர்க்க முடியாத காரணத்தை அவள் ஒவ்வொரு நாளும் கண்டுபிடித்து கூறினாள்.

பிரகாஷிற்கு அது வருத்தம் அளித்தாலும் அவன் அவளை என்ன? ஏது? என்று கேள்வி கேட்கவில்லை. அப்படி கேட்கும் பட்சத்தில் எங்கே வாய் தவறி நாம் கிஷோரைப் பற்றி சொல்லிவிடுவோமோ, தனக்கு பின்னால் இவன் தன்னை வேவு பார்க்கின்றான் என்று அவளுக்கு தோன்றிவிடுமோ என்று அவள் போக்கிலேயே விட்டுவிட்டான்.

பாட்டியிடம் கிஷோரின் எண்ணத்தை அவன் கூற,

பாட்டியோ அதற்கு பிறகு கிஷோர் இங்கு வரவே இல்லை வந்தாலும் தான் பார்த்துக்கொள்வதாக கூற,

பிரகாஷ் பாட்டியிடம், மித்ராவிடம் இதைப் பற்றி எதுவும் கேட்க வேண்டாம் என்று கூறினான்.

இப்படி யாருமே மித்ராவை எதுவும் கேட்காததால், மித்ரா யாருக்கும் இதைப் பற்றி தெரியாது என்று நினைத்து தன் போக்கில் அமைதியாக இருந்தாள்.

விடுமுறை முடிந்து கல்லூரிக்கு வந்த தோழி பழைய கலகலப்பில் இல்லை என்பதை  கவனித்தாள் அபிராமி.

எப்போதும் மித்ரா அதிகம் பேச மாட்டாள்.ஆனால் தற்பொழுது அவள் பேசுவது இன்னுமே குறைந்து இருந்தது.வெளியில் யாரிடமும் பேசவில்லை என்றாலும் அபிராமியிடம் கலகலப்பாக பேசுவாள்.இப்போது அதுவும் குறைந்து இருக்க, அபிராமி அதனை கவலையோடு சுஜியிடம் கூறினாள்.

சுஜியோ மித்ராவிடம் பேச்சுக்கொடுக்குமாறு அபியிடம் கூறினாள்.

அபியும் மித்ராவிடம் சென்று, கிஷோர் கேட்டதைப் பற்றி என்ன முடிவு எடுத்திருக்கிறாய் என்று கேட்க,

இதில் முடிவு எடுக்க என்ன இருக்கிறது? முடியாது என்று கட் அண்ட் ரைட்டா கூறிவிட்டேன் என்று கூறியவள் அதற்கு மேல் பேச்சை வளர்க்கவில்லை.

அதைக் கேட்டு சுஜிக்கும் பிரகாஷிற்கும் நிம்மதியாக இருந்தது.

ஆனால் அதை ஏன் அவள் தங்களிடம் கூறவில்லை, ஏன் அவள் அதன் பின் இவ்வளவு அமைதியாகி போனாள் என்று அவர்களுக்கு புரியவில்லை.

இப்படியே நாட்கள் ஓட ,                                                                                      

மித்ரா தனது இறுதி ஆண்டின் இறுதியில் இருக்கும் சமயம் பிரகாஷ் யாரிடமும் சொல்லாமல் விடுமுறைக்காக இந்தியா வந்தான். தன் தாய் தந்தையிடம் தான் வருவதற்கு இன்னும் ஒரு வாரம் ஆகும் என்று கூறிவிட்டு நேராக வால்பாறை சென்றான். அவன் அங்கு செல்லும்பொழுது, அங்கு அவன் எதிர்பார்க்காத வேறு பிரச்சனை காத்துக்கொண்டிருந்தது.

அது வார  இறுதி என்பதால் மித்ரா வழக்கம் போல கல்லூரியில் இருந்து வால்பாறை வந்திருந்தாள். வந்திருந்தவள் வள்ளியுடன் பேசிக்கொண்டே சமைத்துக்கொண்டிருக்க,தெய்வநாயகி அவர்கள் இருவரும் பேசுவதைக் கேட்டுக்கொண்டே டைனிங் ஹாலில் அமர்ந்திருந்தார்,

வள்ளியோ மித்ரா பாப்பா, நாம் போன வாரம் ஒரு படம் பார்த்தோம் இல்லையா, அந்த படத்தில் வரும் ஹீரோயின் மாதிரி ஒரு நாள் புடவை கட்டணும். உங்களுக்கு தான் நன்றாக புடவை கட்ட தெரியுமே எனக்கு ஒரு நாள் அந்த மாதிரி கட்டி விடுங்க என்று வள்ளி கேட்டுக்கொண்டிருக்க,

வள்ளி அந்த மாதிரி புடவை கட்டினால், அந்த ஹீரோயினை விட நீ தான் சூப்பரா இருப்பாய் என்று மித்ரா கூற,

போங்க பாப்பா எப்போ பாரு என்னை கிண்டல் செய்து கொண்டு……..என்று வள்ளியும் மித்ராவும் அரட்டை அடித்து கொண்டிருந்தனர்.

அதைக்கேட்டுக் கொண்டிருந்த தெய்வநாயகி, ஏன் வள்ளி உனக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்று ஆசை இருந்தது இல்லையா, மித்ரா கூறுவது போல அப்படி எல்லாம் புடவை கட்டி மேக்கப் போட்டால் நீ அழகா இருப்பாய் நான் வேண்டுமென்றால் ஏற்பாடு பண்ணவா என்று கேட்க,

அம்மா, வர, வர, இந்த மித்ரா பாப்பாவுடன் சேர்ந்து நீங்களும் என்னை ரொம்ப கேலி செய்கிறீர்கள், என்று வள்ளி போலி வருத்தத்துடன் கூற அங்கு சிரிப்பலை கிளம்பியது.

அப்போது காவலாளியும் முருகனும் தடுக்க, தடுக்க, ஒரு இளைஞன் வீட்டிற்குள் வந்து கொண்டிருந்தான்.

ஏன்பா…. நில்லுப்பா, உள்ளே அனுமதி இல்லை அம்மாவிடம் கேட்டு தான் உள்ளே விட முடியும், ஒரு முறை சொன்னால் புரியாதா? என்று முருகன் அவனை தடுக்க,

நான் வந்திருக்கும் விஷயமாக பேச வேண்டும் என்றால் உங்க அம்மா என்னை உள்ளேயே விட மாட்டார்கள், ஆனால் நான் பேசி தான் ஆக வேண்டும்  என்று சத்தமிட,

சத்தத்தைக் கேட்டு, தெய்வநாயகி, மித்ரா வள்ளி மூவரும் வெளியில் வந்தனர்.

அங்கு நின்றிருந்தவனைப் பார்த்ததும் யாருக்கும் யார் என்று புரியவில்லை.

தெய்வநாயகியைப் பார்த்து கை கூப்பியவன்,

என் பெயர் ரோஹித், நான் தேனியில் இருந்து வருகிறேன். அப்பா பெயர் விஸ்வநாதன் என்று கூறவும், தெய்வநாயகிக்கு அவன் யார் என்று புரிந்துவிட்டது.

இவன் இப்போது எதற்கு இங்கு வந்திருக்கிறான்? என்ன செய்ய காத்திருக்கிறானோ என்று தெரியவில்லையே என்று 

நினைத்தவர் வேகமாக மித்ராவிடம் திரும்பி மித்ரா நீயும் வள்ளியும் உள்ளே செல்லுங்கள் என்று கூற,

மித்ராவோ பாட்டி,அவர்  யார் என்னவென்றே தெரியவில்லையே ? என்று கேட்டாள்

அதெல்லாம் நான் பார்த்துக்கொள்கிறேன். அதற்கு தான் முருகனும், காவலாளியும் இங்கிருக்கிறார்கள் இல்லையா? நீங்கள் இருவரும் முதலில் உள்ளே செல்லுங்கள் என்று கூறினார்.

உள்ளே போக திரும்பியவர்களை நிறுத்தினான் ரோஹித்,

ஹாஹாஹா.. அப்படியெல்லாம் அவர்கள் உள்ளே சென்றுவிட்டால் எப்படி, நான் பேச வந்ததே மித்ராவிடம் தானே என்று சொல்ல,

மித்ரா என்று வெகு சிலரே அழைப்பர். அதாவது அவளுக்கு பழக்கமானவர்கள் மட்டுமே அப்படி அளிக்க அவள் அனுமதிப்பாள். இப்போது யார் என்றே தெரியாத புதியவன் அப்படி அழைக்கவும் சுருக்கென வந்த கோபத்தில்

மிஸ்டர் கால் மீ சங்கமித்ரா, இந்த மித்ரா என்று செல்ல பெயர் வைத்து அழைப்பதெல்லாம் இங்கு வேண்டாம், முதலில் நீங்கள் யார்? வாட்சமேனும் ட்ரைவரும் சொல்ல சொல்ல நீங்கள் கேட்காமல்வீட்டிற்குள் வந்து நின்றுகொண்டிருக்கிறீர்கள்? என்று அவள் வெடுக்கென கேட்க,

தெய்வநாயகியே அவளை ஆச்சர்யமாக பார்த்தார்.

வாவ் சும்மா சொல்ல கூடாது, நீ ரொம்ப பயந்த சுபாவம் வாயே பேசமாட்டாய் என்று சொன்னார்கள் இப்படி போட்டு வாங்குகிறாய்?…. அது சரி “ ராயல்” பிளட் இல்லையா? அதுக்கான கம்பீரமும் திமிரும் கொஞ்சமாவது இருக்கும் இல்லையா?என்று கூற,

இவன் என்ன உளருகிறான் என்பது போல அவனை பார்த்தாள் மித்ரா.

ஹ்ம்ம்ம் மித்ரா, சாரி சங்கமித்ரா உனக்கு நான் என்ன சொல்கிறேன் என்று புரியவில்லை இல்லையா? புரியாது, ஏனெனில் அது புரிந்து விடக்கூடாது என்று உங்களை சிலர் ஏமாற்றி வைத்திருக்கிறார்கள், அந்த உண்மையை கூற தான் நான் இப்போது வந்திருக்கிறேன் என்று கூற,

தெய்வநாயகியோ, இங்க பாருங்க தம்பி நீங்க யாரோ என்னவோ, ஏன் தேவை இல்லாமல் இங்கு வந்து பிரச்சனை செய்கிறீர்கள்?  முதலில் இங்கிருந்து வெளியில் போ….. முருகா முதலில் போலீஸ் ஸ்டேஷனிற்கு போன் பன்னு என்று கூற,

ஓ, தாராளமாக அவர்கள் வரட்டும் அவர்களிடமே நான் உண்மையை சொல்லிவிடுகிறேன் என்று கூற,

தெய்வநாயகியோ இவனை எப்படி வெளியில் அனுப்புவது என்று தெரியாமல் உறைந்துபோனார்.

உங்களுக்கு நான் யார் என்று ரொம்ப நல்லாவே தெரியும். என் அப்பாவின் பெயரை கேட்டவுடனேயே நீங்கள் என்னை யார் என்று கண்டுபிடித்திருப்பீர்களே, இது சங்கமித்ராவிற்கு தெரியக்கூடாது என்று தானே இத்தனை நாடகம், எத்தனை நாட்களுக்கு தான் தெரியாமல் வைத்திருக்கலாம் என்று நினைக்கிறீர்கள்? சங்கமித்ரா ஒன்றும் உங்களுக்கு மட்டும் சொந்தம் இல்லையே என்று கூற,

மித்ரா இப்பொழுது இவன் என்ன கூறுகிறான் என்று புரியாமல் தெய்வநாயகியை பார்த்தாள்.

என்ன சங்கமித்ரா அப்படி பார்க்கிறீர்கள்? நான் என்ன சொல்கிறேன் என்று புரியவில்லையா?

நீங்கள், உங்களுக்கு யாரும் இல்லை, பாட்டி தான் கார்டியனாக இருந்து உங்களை வளர்த்துவதாக நினைத்துக்கொண்டு இருக்குறீர்கள் ஆனால் அது அப்படி இல்லை அவர்கள் உன்னுடைய சொந்த பாட்டி அதாவது உன் அம்மாவின் அம்மா, நீங்கள் இந்த வீட்டின் சொந்த பேத்தி என்று கூற,

அங்கிருந்த அனைவரும் உறைந்து போய் நின்றனர்.

ரோஹித் கூறுவது உண்மையா? அப்படி என்றால் மித்ரா தாய் தந்தை என்று நினைத்துக் கொண்டிருந்தவர்கள் யார்? மித்ரா எப்படி அங்கு சென்று சேர்ந்தாள்? என்று அறிய தொடர்ந்து வாசியுங்கள் “என் வானவில்”.

                                     –நறுமுகை

3

No Responses

Write a response