என் வானவில்-23

என் வானவில்-23

மித்ராவும் அபிராமியும் இரண்டாம் ஆண்டு தேர்வுகள்  முடிந்து அவரவர் வீடுகளுக்கு செல்ல தயாராகிக் கொண்டிருந்தனர்.

 அபியோ, வீட்டிற்கு  செல்லும் குஷியில் இருக்க, மித்ராவோ எதோ யோசனையில் பொருட்களை எடுத்தது வைத்துக்கொண்டிருந்தாள்.

தோழியின் கவனம் இங்கில்லை என்பதை உணர்ந்த அபிராமி  ஹே  மித்ரா , என்ன யோசனையில் இருக்கிறாய்? ஏதோ கனவு கண்டு கொண்டிருக்கிறாய்? சீக்கிரம் கிளம்பு உனக்கு ட்ரைவர் வந்திருவார் இல்லையா, என்று கேட்டாள்.

கிளம்பனும் அபி, இப்போதெல்லாம் ஊருக்கு போகனும் என்று நினைத்தாலே பயமாக இருக்கிறது என்று சொல்ல,

அடிப்பாவி… ஒரு நாள் என்றாலும் வால்பாறை போவதற்கு குதித்துக்கொண்டு செல்வாய் இப்பொது என்ன இப்படி சொல்கிறாய் என்று கேட்டாள் அபி.

இல்லை அபி முன்னர் எல்லாம் ஒரு நாள் இரண்டு நாள் விடுமுறை இருக்கும், அப்போது சீனியர் வந்தால் எப்படியாவது சமாளித்துக் கொண்டிருந்தேன்.இப்போது ஒன்றரை மாதம் விடுமுறை எப்படி சமாளிப்பது என்று தெரியவில்லை என்று சொல்ல,

நீ ஏனடி எப்போ பார்த்தாலும் அதையே நினைத்துக்கொண்டிருக்கிறாய்? ஏதாவது வந்து கேட்டால் கேட்கும்பொழுது பார்த்துக்கொள்ளலாம், நீ அதிகம் போட்டு மனதை குழப்பிக்கொள்ளாதே, எனக்கென்னவோ அவர் சட்டென வந்து கேட்டுவிடுவார் என்று தோன்றவில்லை. தேவை இல்லாமல் அதிகம் யோசிக்காமல் நிம்மதியாக ஊருக்கு கிளம்பு. அங்கு பாட்டி வள்ளி அனைவரும் உனக்காக காத்துக்கொண்டிருப்பார்கள் என்று என்று கூறி தோழியை கிளம்பினாள் அபிராமி.

அபி கூறியது சரி என்று மித்ராவிற்கு தோன்ற எப்போதாவது வந்து செல்பவருக்காக நான் ஏன் தேவை இல்லாமல் கவலைபட்டுக் கொண்டிருக்கிறேன் என்றவள், அதன் பின் கலகலப்பாகவே ஊருக்கு கிளம்பினாள்.

மித்ராவிற்கு  எதோ நடக்கப்போகிறது என்று உள்ளுக்குள் ஒரு உறுத்தல் இருந்துகொண்டே இருந்தது.

போன முறை விடுமுறைக்கு செய்தது போலவே பிரகாஷ் இந்த முறையும் வகுப்புகள் என்ரோல் செய்திருந்தான்.

அதுபோக நிறைய புத்தகங்களும் அவளுக்காக ஆர்டர் செய்திருந்தான்.

புத்தகங்கள் படிப்பது, கிளாசஸ் அட்டென்ட் செய்வது, வள்ளியுடன் வெளியில் செல்வது, என்று மித்ராவிற்கு நேரம் பரபரப்பாகவே சென்றது.

அந்த பரபரப்பில் அவள் கிஷோரை மறந்தும் போனாள்.

முன்னரெல்லாம் வீட்டிற்கு வரும் சமயத்தில் மட்டும் வீடியோ கால் பேசிக்கொண்டிருந்த பிரகாஷ் இப்பொழுது மித்ரா விடுமுறையில் இருப்பதால் தினமும் அவளிடம் வீடியோ கால் பேசினான்.

அதுவே மித்ராவிற்கு புது தெம்பையும் மகிழ்ச்சியையும் கொடுத்திருந்தது.

தெய்வநாயகியும் மித்ராவை  எஸ்டேட்டிற்கு அழைத்துச் செல்வது, ஆபிஸிற்கு அழைத்துச்  செல்வது என்று சிறிது சிறிதாக  மித்ரவிற்கு அலுவலக பொறுப்புகளை உணர்த்தினார்.   இப்படி தனக்கென்று ஒரு உலகத்தில் மித்ரா மகிழ்ச்சியாக இருக்க, அவளை தேடிக்கொண்டு ஒரு நாள் கிஷோர் வந்தான்.

மித்ரா சந்தேகப்பட்டதை போல சரியாக தெய்வநாயகி மதியம் உறங்கும் நேரத்திற்கு வந்தவன் மித்ராவிடம் பேச வேண்டும் என்று கூறினான்.

தெய்வநாயகியின் முன்போ, வள்ளியின் முன்போ அவள் மறுத்து பேசினாலோ அல்லது பொய்யான ஒரு காரணத்தை சொன்னாலோ அவர்களுக்கு சந்தேகம் வரும் அதைப் பற்றி அவர்கள் பிரகாஷிடம் சொல்ல வாய்ப்புகள் அதிகம் என்று நினைத்த மித்ரா, வேறு வழி இல்லாமல் கிஷோருடன் பேசுவதற்கு முன்புறம் இருந்த தோட்டத்திற்கு சென்றாள்.

தெய்வநாயகியோ வள்ளியிடம் அவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருக்கிறார்கள், எதற்கும் ஒரு கண் வைத்துக்கொள் என்று கூறிவிட்டு உறங்க சென்றுவிட்டார்.

எப்போதும் வரும் பையன் தான் பக்கத்தில் இருப்பவன், தெரிந்தவன் தான் என்பதால் ஏதோ தேவை என்றால் பார்த்துக்கொள்ளலாம் என்று நினைத்தாள் வள்ளி. மேற்கொண்டு அவர்களைப் பற்றி அவள் ஏதும் யோசிக்கவில்லை.

பேசவேண்டும் என்று அழைத்து சென்ற கிஷோர் கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தான்.

பொறுமை இழந்த மித்ரா, என்ன பேச வேண்டும் என்று சீக்கிரம் சொல்லுங்க சீனியர் எனக்கு கொஞ்சம் ஒர்க் இருக்கிறது. இன்னும் ஒரு மணி நேரத்தில் கிளாஸ் ஸ்டார்ட் ஆகிவிடும் என்று கூறினாள்.

மித்ரா உனக்கு என்னை ஒரு வருடமா தெரியும் இல்லையா? நீ என்னை பற்றி என்ன நினைக்கிறாய்? என்று கேட்டான்.

மித்ராவிற்கோ, போச்சு போ இப்போ என்ன செய்வது அதற்கு தான் முன்னரே நான் அபியிடம் கூறினேன் எனக்கு  பயமாக இருக்கிறது என்று, என நினைத்துக்கொண்டிருந்தவள் வெளியில் எதுவும் காட்டிக்கொள்ளாமல் உங்களை பற்றி நினைக்க என்ன இருக்கிறது?நீங்கள் என் சீனியர் அவ்வளவு தான் என்றாள்  மித்ரா.

அது சரி, அதைத் தாண்டி நீ என்ன நினைக்கிறாய்? என்று கேட்க,

அதைத் தாண்டி என்ன நினைப்பது? என்று அவனையே திருப்பி கேட்டாள் மித்ரா.

கிஷோருக்கு ஏமாற்றமாக இருந்தது. ஆனால் அதை வெளியில் காட்டி கொள்ளாமல் மித்ரா நீ வேண்டுமானால் அதை தாண்டி எதுவும் நினைக்காமல் இருக்கலாம், ஆனால் நான் அதை தாண்டி…… யோசிக்க தொடங்கி ரொம்ப நாள் ஆகுது.

 மித்ராவோ என்ன சொல்கிறீர்கள் எனக்கு புரியவில்லை என்று கேட்க,

மித்ரா நான் உன்னை லவ் பண்ணுகிறேன், நாம் கல்யாணம் செய்து கொள்ளலாமா? என்று கேட்க,

அவன் பிடித்திருக்கிறது என்று கூறுவான் என்று எதிர் பார்த்திருந்தாலும், அவன் இப்படி நேரடியாக கல்யாணம் செய்து கொள்ளலாமா என்று கேட்டவுடன்,

அவளுக்கு உதறல் எடுத்தது.

அதில் தன்னை மீறி என்ன செய்கிறோம், என்ன சொல்கிறோம் என்று தெரியாமல் மித்ரா அவனிடம், இங்க பாருங்க சீனியர் நீங்க என்னிடம் இப்படி எல்லாம் பேசுவது சரி இல்லை. எனக்கு உங்கள்  மீது அந்த மாதிரி ஒரு எண்ணமே கிடையாது. எனக்கு உங்கள் மீது மட்டுமல்ல வேறு யார் மீதும் அந்த மாதிரியான ஒரு எண்ணம் கிடையாது.

எனக்கு என் சத்யாவை மட்டும் தான் பிடிக்கும் என்று கூறிவிட்டு அப்படியே அமைதியானாள். அவள் கூறியதைக் கேட்டு கிஷோர் அடைந்த அதிர்ச்சியை விட மித்ரா அதிக அதிர்ச்சி அடைந்தாள். தன் மனதில் இப்படி ஒரு எண்ணம் இருக்கிறது என்று அவளே அறியாத விஷயம்,

கிஷோர் வந்து காதலை சொன்ன பதட்டத்தில் தன்னை மீறி கூறிவிட்டாள்.

கிஷோரோ, சத்யா என்றால் யாரை கூறுகிறாய்? என்று கேட்க,

அவன் கூறியது எதுவும் காதில் விழாதவளாய் அங்கிருந்து ஓடி வீட்டிற்கு சென்று மறைந்தாள்  மித்ரா.

மித்ராவால் தான் அவனிடம் அப்படி கூறியதையோ தனக்குள் அப்படி ஒரு எண்ணம் இருப்பதையோ ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சத்யா தனக்கு உதவியாக தான் இதை எல்லாம் செய்கிறார் அவரை எப்படி நான் இப்படி இந்த எண்ணத்தில் பார்க்க தொடங்கினேன்  என்று தனக்குள்ளாகவே நொந்து கொண்டவள் தன் அறையில் தனியாக அழுது கரைந்தாள்.

மித்ரா பேசிவிட்டு படிப்பதற்காக வீட்டிற்குள் சென்றுவிட்டாள் என்று நினைத்த வள்ளியோ அவள் அறைக்குள் சென்றதை பெரியதாக எடுத்துக்கொள்ளவில்லை.

இங்கு அழுது கொண்டிருந்த மித்ராவோ எந்த காரணத்தைக் கொண்டும் இந்த விசயம் சத்யாவிற்கோ இல்லை தன்னை சுற்றி இருப்பவர்களுக்கோ தெரியாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்தாள்.

அந்த நினைவு இன்னும் அதிக வேதனையைத் தர மேலும் அழுது கரைந்தாள்.

பிரகாஷும் மித்ராவும் ஆடும் கண்ணாமூச்சி ஆட்டம் எப்போது முடிவிற்கு வரும்?

உண்மை தெரிந்த கிஷோர் என்ன செய்ய போகிறான் என்று அறிய தொடர்ந்து வாசியுங்கள் “என் வானவில்”

நறுமுகை

3

No Responses

Write a response