என் வானவில் நிறைவுபகுதி

என் வானவில் நிறைவுபகுதி

எனக்கு அன்னைக்கு நைட்டே இந்த எல்லா விஷயமும் தெரியும் பாட்டி, மித்ரா என்கிட்டே சொல்லிட்டா என்று சொல்ல,

நைட்டேவா?

அம்மா பாட்டி, ரோஹித்தும் விஸ்வநாதனும் என்ன நம்பி , நான் பிரகாஷை அவமானப்படுத்தினத நம்பி இங்கிருந்து சந்தோசமா கிளம்பி போய்ட்டாங்க ஆனால் என்ன தான் சின்ன சின்னதா பிரகாஷ் கூட பேசாம இருந்தாலும்என் முடிவுகளை நானே எடுத்தாலும் இப்படி எல்லார் முன்னாடியும் இது எங்க குடும்ப விஷயம்னு சொன்னது சத்யாவை எவ்வளவு காயப்படுத்திருக்கும்னு எனக்கு புரிஞ்சுது, இதுக்கு பிறகும் சத்யாகிட்ட விஷயத்தை சொல்லாமல் இருக்கிறது சரியில்லைன்னு எனக்கு தோணுச்சு, ஏன்னா அதுக்கப்புறம் நான் செய்யப்போற காரியங்களுக்கு எனக்கு சத்யாவோட உதவி தேவைப்பட்டுச்சு, அதனால் அன்னைக்கு நைட்டே சத்யாகிட்ட நான் எல்லா விஷயத்தையும் சொல்லிட்டேன் என்று செல்ல,

ஆனால் வெளிநாட்டிலிருந்து சத்யா உனக்கு எப்படி ஹெல்ப் பண்ணினான் இதை எப்படி நீங்க செஞ்சீங்க என்று கார்மேகம் கேட்க?

சத்யாவோ அதை நான் சொல்றேன் என்று சொல்லி, அன்று இரவு நடந்தவைகளை சொல்ல தொடங்கினான். 

மித்ரா அப்படி சொன்னது எனக்கு ரொம்போ கஷ்டமா இருந்தது. அடுத்தநாளே இங்க இருந்து கிளம்பிடணும்னு எல்லா ஏற்பாட்டையும் பண்ணிட்டு தூக்கம் வராம என் ரூம்ல உக்காந்துட்டு இருந்தேன், அப்போ யாரோ அறை கதவை தட்டும் சத்தம் கேட்டு, யாருனு பார்த்தா அங்க மித்ரா நின்னுட்டு இருந்தா என்னனு கேட்குறதுக்கு முன்னாடியே ரூமுக்குள்ள வந்த மித்ரா கதவை சாத்திக்கிட்டா.

மித்ரா இந்த நேரத்துக்கு இங்க என்ன செய்ற?

இல்ல சத்யா எனக்கு உங்ககிட்ட முக்கியமான ஒரு விஷயம் பேசணும்

எதுவா இருந்தாலும் நாளைக்கு காலைல பேசிக்கலாம் இப்படி நீ இந்த நேரத்துல என் ரூம்ல இருக்கறத யாராவது பார்த்தா என்ன நினைப்பாங்க?,

எல்லாரும் நல்லா தூங்கிட்டு இருக்காங்க இந்த டைம்ல யாரும் வரப்போறது இல்ல, அதுபோக நாளைக்கு காலைல இந்த விஷயத்தை பேச நீங்க இங்க இருக்க மாட்டிங்கன்னு எனக்கு நல்லா தெரியும்,

மித்ரா கூறியதைக் கேட்டு பிரகாஷ் அமைதியாக இருக்க, 

சத்யா நீங்க என்மேல கோபமா இருக்கீங்கன்னு எனக்கு நல்லாவே தெரியும், என்ன நடந்துச்சுன்னு நான் சொல்றேன் அதை முதல்ல முழுசா கேளுங்க என்று கூறி மித்ரா ஆரம்பத்தில் இருந்து நடந்தவைகளை  கூறினாள்.

அனைத்தையும் அமைதியாக கேட்டுக்கொண்டிருந்த பிரகாஷ் அவள் கூறி முடித்ததும்,

மித்ரா உனக்கென்ன பைத்தியமா புடிச்சிருக்கு? இவ்வளவு பெரிய விஷயம் நடந்திருக்கு, இந்த உண்மை உனக்கு தெரிஞ்ச பிறகும் நீ இன்னும் அவங்க கூட இருக்க, நீ உண்மை தெரிஞ்சு அவங்களை மாட்டி விட்றதுக்காக தான் இப்படி எல்லாம் செய்றன்னு அவங்களுக்கு தெரிஞ்சா உன்ன அவங்க சும்மா விடமாட்டாங்க என்று பிரகாஷ் கூற,

சத்யா எனக்கு தெரியும், உங்ககிட்ட சொன்னா நீங்க இப்படி தான் சொல்லுவீங்கன்னு தெரியும், அதனால் தான் இவ்வளவு நாளா நான் உங்ககிட்ட இந்த விஷயத்தை பத்தி சொல்லாம இருந்தேன், இப்போகூட இவ்வளவு பேருக்கு முன்னாடி உங்களை காயப்படுத்திட்டேன்னு தான் இந்த விஷயத்தை உங்ககிட்ட சொல்ல வந்தேன், இந்த மாதிரி ஒரு நிலைமை வரும்னு நான் எதிர்பார்க்கல, எதோ சின்ன சின்ன அளவுல உங்க கூட பேசாம இருந்தாலோ இல்ல உங்ககிட்ட கேட்டு ஒவ்வொரு விஷயத்தையும் செய்யாமலிருந்தாலோ போதும் அப்படினு நினச்சேன், இப்படி திடுதிப்புனு இவங்க கல்யாணம்னு வந்து நிப்பாங்கன்னு நான் எதிர்பார்க்கவே இல்லை,

இந்த சமயத்துல நான் கல்யாணத்துக்கு முடியாதுன்னு சொன்னேன்னா அவங்களுக்கு என்மேல சந்தேகம் வர ஆரம்பிச்சிடும்,

இப்போ உன்மேல அவங்களுக்கு நம்பிக்கை வந்து நீ என்ன பண்ணப்போற?

என்ன சத்யா இப்படி கேட்குறீங்க? என் அம்மா அப்பாவை கொன்னுருக்காங்க ஏன் எதுக்குன்னு? எனக்கு ஒரு அளவுக்கு ஐடியா இருக்கு எங்க மாமா இந்த மொத்த சொத்தையும் தனியா அனுபவிக்கனுனு பார்த்துருக்காரு இப்போ அவங்க என்னை டார்கெட் பண்றதும் அந்த சொத்து மட்டும் இல்லாமல் பாட்டியோட சொத்தையும் சேர்த்து அவங்க அனுபவிக்கணும்னு நினைக்குறதுனால தான், வெறும் சொத்துக்காக என் அப்பா அம்மாவை கொன்னு என்னை யாருன்னே தெரியாம வேற யாரோ ஒருத்தரை அம்மா அப்பாவா நினச்சு சித்தி கொடுமையை அனுபவிக்கவச்சு எவ்வளவு கஷ்டப்படுத்திருப்பாங்க, அவங்களை எப்படி என்னால சும்மா விடமுடியும்? என்று மித்ரா கேட்க,

நீ சொல்றதெல்லாம் சரி தான், ஆனால்  என்ன செய்யப்போற? இப்போ கல்யாணத்துக்கு சரின்னு சொல்ற, கல்யாணம் பண்ணிக்க போறியா? என்று கேட்க,

ஒரு நிமிடம் பிரகாஷையே ஆழமாக பார்த்த மித்ரா, வேற ஒருத்தரை மனசுல நினைச்சுட்டு அந்த ரோஹித்தை எப்படி நான் கல்யாணம் பண்ணிக்க முடியும்? என்று கேட்டாள்

பிரகாஷ் அதிர்ச்சியோடு அவளை நிமிர்ந்து பார்க்க, 

மித்ரா நிதானமாக அவனை பார்த்துக்கொண்டே நின்றாள்.

நீ என்ன சொல்ற? நீ லவ் பண்றியா? யாரை? உன் சீனியர் அந்த கிஷோரையா? என்று பதறும் இதயத்துடன் கேட்டான் பிரகாஷ்,

சிறிது நேரம் அமைதியாக நின்றவள் ஏன் சத்யா நான் யாரையாவது நேசிக்கிறேன்னு சொன்னா உங்களுக்கு இந்த சீனியர், ரோஹித் இந்த மாதிரி ஆளுங்களை தான் தோணுமா? என் டேஸ்ட் என்ன அவ்வளவு மட்டமாவா இருக்கு? என்று கேட்க,

அந்த நிலையிலும் பிரகாஷிற்கு சிரிப்பு வந்தது, ரோஹித்தை மட்டமான சாய்ஸ்னு சொல்லு ஒத்துகிறேன் அதுக்கு ஏன் பாவம் கிஷோரை மட்டமான சாய்ஸ்னு சொல்ற? என்று கேட்க,

உடன் இணைந்து சிரித்தவள் அது சரி தான் கிஷோர் மட்டமான சாய்ஸ் கிடையாது என்று கூறியவள், ஆனால் இவங்க ரெண்டு பேருமே என் சாய்ஸ் கிடையாது என்றாள்,

பிரகாஷிற்கு இப்போது ஏனோ அவள் தன்னை தான் கூறுகிறாளோ என்ற எண்ணம் தோன்ற தொடங்கியது. எனவே மேற்கொண்டு அவளை எதுவும் கேட்காமல் அமைதியாக இருக்க,

மித்ராவே என்ன சத்யா என்னை பிடிக்கும்னு பாட்டிகிட்ட, உங்க அக்காகிட்ட, சுஜி அக்காகிட்ட, ராமண்ணாகிட்ட இப்படி எல்லார்கிட்டயும் சொல்லிட்டு இருக்கீங்க என்கிட்டே மட்டும் சொன்னதே இல்ல என்று கேட்க,

பிரகாஷிற்கு ஏனோ மனதில் இருந்த பெரிய பாரம் விலகியது போல இருக்க ஒரு நிமிடம் கண்களை மூடி அந்த இதத்தை அனுபவித்தவன்.

அப்படி இல்ல மித்து உன்னை நான் பார்க்கிறப்போ நீ ரொம்போ சின்ன பொண்ணு எனக்கு ஏன் உன்னை பார்த்தவுடனே அப்படி தோணுச்சுன்னு தெரியல, எதோ ஒரு க்யூரியாசிட்டில தான் உன்ன பார்த்தேன். உன்ன பார்குறதுக்காக தான் அடுத்தநாள் நீ கோயிலுக்கு போறத தெரிஞ்சுக்கிட்டு அம்மாவ கூட்டிகிட்டு நானும் கோயிலுக்கு வந்தேன்.

நீ உன் வீட்டுல அப்படி இப்படின்னு வேலை செஞ்சுகிட்டு இருக்கிறப்போ, பின்னாடி தோட்டத்துல நைட் டைம்ல உன் பூனைக்குட்டிக்கிட்ட பேசுறப்போன்னு உனக்கே தெரியாம உன்ன நான் நிறைய தடவை பார்த்துட்டு தான் இருந்தேன், அன்னைக்கு உங்க வீட்டுல அவ்வளவு பெரிய பிரச்சனை நடந்ததும், எனக்கென்னவோ மனசுக்கு நீ எதாவது தப்பான முடிவு எடுத்துடுவியோங்குற பயத்துல தான் உங்க வீட்டு கிணத்தடியவே பார்த்துகிட்டு இருந்தேன்,

அதுக்கப்புறம் நான் உன்னை இங்க கூட்டிட்டு வந்து விட்டேன், அந்த நிலைமையில உனக்கு என்மேல இருந்தது எல்லாம் நான் என்னவோ உனக்கு பெரிய உதவி செஞ்சிட்டதாகவும், நான் எதோ ஒரு பெரிய மனுஷன் மாதிரியும் எனக்கு நீ ரொம்போ நன்றிக்கடன் பட்டிருக்க மாதிரியுமான எண்ணங்கள் தான். அந்த எண்ணத்தில நீ இருக்கிறப்போ என் காதலை சொல்ல எனக்கு இஷ்டமில்லை, அதுக்கப்புறம் நான் அதை சொல்றதுக்கான சந்தர்ப்பம் வரவே இல்ல என்று சொல்ல,

நீங்க சொல்லணும் நினைக்கலன்னு சொல்லுங்க என்றாள் மித்ரா.

அப்படியும் சொல்லலாம் நான் உன்னை இங்க கொண்டு வந்து சேர்த்தேன் அப்டிங்கறதுக்காக உன்மேல நான் எந்த விருப்பத்தையும் திணிக்க விரும்பல,

ஹ்ம்ம் இதே மாதிரிதான் சுஜி அக்காகிட்டையும் புலம்பியிருக்கிங்க என்று கூற,

இந்த கொஞ்ச நாளில் உனக்கென்ன ஆச்சு, மர்டெரை கண்டுபிடிக்கிறன்னு ஸ்பை வேலை பார்த்துருக்க, நான் உன்னை லவ் பண்ற விஷயத்தை சுத்தி இருக்கிற எல்லார்கிட்டயும் கேட்டு தெரிஞ்சிட்டு இருக்க, இந்த வேலை எல்லாம் நீ எப்போ பண்ற? ஏன் என்கிட்டே யாரும் எதும் சொல்றது இல்ல, என்று கேட்க,

மித்ராவோ இதை எல்லாம் நான் யார்கிட்டையும் கேட்டு தெரிஞ்சுக்கல, சுஜி அக்காவும், ராமண்ணாவும் பேசுறப்போ நான் அந்த பக்கம் இருந்ததை கவனிக்காம பேசிட்டாங்க அதனால தான் தெரியும். எங்க மாமாவையும், ரோஹித்தையும் பத்தி எல்லாருக்கும் தெரியவைக்க வேண்டியது எங்க அம்மா அப்பாக்கு நான் செய்ய வேண்டிய கடமைனு நினைக்கிறன் சத்யா, உங்களோட ஹெல்ப் வேணும், நீங்க கோவமா இங்கிருந்து கிளம்பினா என்னால நிம்மதியா இங்க எதுவும் நான் செய்யமுடியாது என்று கூற,

பிரகாஷோ மித்து எனக்கு வருத்தம் இருந்தது உண்மை, நீ அப்படி சொன்னதை என்னால ஏத்துக்கவே முடியல, ஆனால் அதுக்கான காரணத்தை தான் நீ இப்போ எனக்கு சொல்லிட்டியே, சோ எனக்கு உன்மேல எந்த வருத்தமும் இல்ல கோபமும் இல்ல, ஆனால் எப்படி நான் உன்னை தனியா இவங்ககிட்ட விட்டுட்டு போவேன்னு நீ நினைக்கிற? என்று கேட்க,

கொஞ்சம் நேரத்துக்கு முன்னாடிவரைக்கும் என்னை இங்க விட்டுட்டு போற எண்ணத்துல தான இருந்திங்க,

அது வேற, அப்போ இவங்க யாரு? என்ன? என்ன பண்ணினாங்கனு எனக்கு தெரியாது, இப்போ அப்படியா? உங்க அப்பா அம்மாவையே சொத்துக்காக கொன்னுருக்காங்க உன்ன அவங்க சும்மா விடுவாங்கனு என்னை நம்ப சொல்றியா?

சத்யா கண்டிப்பா என்னை இவங்க சும்மா விடமாட்டாங்க, நான் இவங்க யாரு என்னனு கண்டுபிடிக்கணும், கண்டிப்பா எங்க மாமா தனியா அந்த கொலையை செஞ்சிருக்கமாட்டார், யாராவது ஆட்களை ஏற்பாடு பண்ணிருப்பார், அந்த ஆளுங்க யாருன்னு நாம கண்டுபிடிக்கணும், இவங்களுக்கு எதிரா ஒரு வாக்குமூலமோ இல்ல யாராவது ஒருத்தர் அப்ரூவரா மாறனும், இது எதுவும் இல்லாம எங்க அப்பா அம்மாவோட மரணத்துக்கு இவங்க தான் காரணம்னு என்னால நிரூபிக்க முடியாது. அப்படியே பார்த்தாலும் அந்த டைம்ல ரோஹித் ரொம்போ சின்ன பையனா இருந்திருப்பான். சோ ரோஹித்துக்கு இந்த கொலையில சம்பந்தம் இல்ல, ஆனால் அந்த கொலையை தன் அப்பா தான் செஞ்சார்னு தெரிஞ்சபிறகும் ரோஹித் தன் அப்பாவுக்கு சப்போர்ட் பண்றார் என்னும் விஷயமும் நமக்கு சேர்ந்து கிடைக்கணும்,

இல்லனா மாமா மட்டும் மாட்டி, ரோஹித் வெளியில இருந்தாலும் நமக்கு ரிஸ்க் தான், இதை எல்லாம் செய்றதுக்கு ஒரு பிளான் வேணும், இவ்வளவு நாள் ஏதோ அவங்க செஞ்சதை தெரிஞ்சிக்கிட்ட பெருசா அவங்க ரெண்டுபேரும் அந்த பழைய விஷயங்களை பத்தி பேசிக்கிறதே இல்ல, அதெல்லாம் தெரிஞ்சுக்கணும் அப்படின்னா இன்னும் கொஞ்சம் நாள் நான் அவங்கக்கூட இருக்க வேண்டியது நமக்கு அவசியம்.

ஆனால் அவங்களோட மட்டுமே இருக்கிறது இதுக்கெல்லாம் தீர்வாகாது, அவங்களை சுத்தி இருக்கிற ஆட்கள் அதாவது தாத்தா வீட்டில வேலை செய்ற நிறைய பேரு எங்க மாமாக்கு விசுவாசிங்க அவங்களை எல்லாம் நான் முதலில் மாத்தணும், அதே மாதிரி பாட்டி வீட்டிலும் எனக்கு சில பேர் மேல சந்தேகம் இருக்கு, அவங்களையும் நான் இடம் மாத்தணும்.

ஓகே இப்போ நான் உனக்கு என்ன செய்யணும்னு நினைக்குற? எந்த பாதுகாப்பும் இல்லாம உன்னை இங்க என்னால விட்டுட்டு போக முடியாது, முதல்ல அதுக்கென்ன வழின்னு சொல்லு, என்று கேட்க,

சத்யா கல்யாணம் ஆகி இந்த சொத்தெல்லாம் அவங்க கைக்கு வர வரைக்கும் அவங்க என்னை எதுவுமே பண்ணமாட்டாங்க. சோ என் பாதுகாப்பு பத்தி நீங்க கவலைப்படவே வேண்டாம்.

எப்படியும் இவங்களோடையே இருக்க போறதில்லையே, ஹாஸ்டலுக்கு போயிடுவேன் அங்க இவங்களால எனக்கு பெருசா தொந்தரவு எதுவும் வராது. ஆனால் அதே சமயம் என் போனிலிருந்து உங்களுக்கோ, சுஜி அக்காக்கோ, ராமண்ணாக்கோ, அபிக்கோ யாருக்கு நான் பேசினாலும் பிரச்சனை தான். உங்களில் யாரை நான் வெளியில சந்திச்சாலும் பிரச்சனை தான். ஏன்னா, என்னோட கணிப்பு சரின்னா என்னை பாலோ பண்ண இவங்க ஆள் போடுவாங்க, என்னை நம்பினாகூட எங்கையாவது ஒரு இடத்துல தவறி உங்க யார்கூடயாவது பார்த்துட்டா பிரச்சனை தான்.

நீங்க பிளான் பண்ணினபடி ஃபாரின் போங்க, இங்க சுஜி அக்காவும் ராமண்ணாவும் இருக்காங்க, நான் காலேஜ் போனபிறகு வேற ஒரு போன் ஏற்பாடு பண்ணிட்டு உங்களுக்கு கம்யூனிகேட் பண்றேன், நாம யாராவது ஒரு நம்பிக்கையான ஆளை வச்சு எங்க அப்பா அம்மாவை கொல்ல இவர் யாரை பயன்படுத்தினார்னு நாம தெரிஞ்சுக்கணும் என்று மித்ரா தன் மனதில் இருந்த கேள்விகள் திட்டங்கள் என்று அனைத்தையும் பிரகாஷிடம் கூறினாள்.

வெகு நேரம் யோசித்துக்கொண்டிருந்த பிரகாஷ்,

சரி மித்ரா நீ சொல்றது சரி தான், இங்க இருந்துகிட்டு உனக்கு என்ன ஏதுன்னு பயந்து எதோ ஒரு சமயத்துல நான் வந்துட்டேன்னா எல்லா திட்டமும் ஸ்பாயில் ஆயிடும்.  நான் பிளான் படி ஃபாரின் போறேன் ஆனால் என்னால உன்னை இங்க தனியா விட்டுட்டு போக முடியாது.

நீ என்ன பண்ற? ஏது பண்றன்னு தெரியாம என்னால உன்னை இங்க விட்டுட்டு போக முடியாது. ராமோட சித்தப்பா பையனும் எம்.பி.ஏ. ஜாயின் பண்ணப்போறதா ராம் சொல்லிட்டிருந்தா அவனுக்கு உன் காலேஜிலேயே உன்னோட டிப்பார்ட்மெண்ட்டிலையே  நான் சீட் கிடைக்க ஏற்பாடு பண்றேன் ராமோட சித்தப்பா பையன் எது செய்றதா இருந்தாலும் ராமைக் கேட்டு தான் செய்வான்.  ராமோட சித்தப்பாவுமே அப்படி தான். அதனால் இந்த விஷயம் ஈஸி. நீ அவன்கூட ரொம்போ க்ளோசா பழக வேண்டாம், பட் அவன்கூட நீ சாதாரணமா பேசினா யாருக்கும் தப்பா தெரியாத அளவுக்கு ஒரு ஃபிரண்ட்ஷிப் மெயிண்டைன் பண்ணிக்கோ, சப்போஸ் உன்னால எங்களுக்கு தகவல் கொடுக்க முடியலனாலும் நீ அவன்மூலமா எங்களுக்கு தகவல் கொடுக்கலாம் அதே மாதிரி நீ காலேஜ்க்கு வந்துருக்கியா இல்லையா? என்ன நடக்குதுன்னு எங்களுக்கு சொல்றதுக்கு நீ இல்லாட்டியும் இன்னொரு ஆள் இருப்பாங்க, எதோ ஒரு சந்தர்பத்தில் உன்னால எங்களுக்கு தகவல் கொடுக்க முடியலைன்னா அவன் எங்களுக்கு அந்த தகவலைக் கொடுப்பான்.  அதே மாதிரி சுஜி மூலமா நான் உங்க மாமா ஏற்பாடு பண்ணின ஆள் யார்ன்னு கண்டுபிடிக்க ஏற்பாடு பண்றேன்.

பிரகாஷ் கூறியவற்றிற்கு மித்ரா ஒப்புக்கொள்ள,

சத்யா எல்லாம் பிளான் பண்ணினபடி சரியா நடக்கணும், நான் காலேஜ் முடிக்கிற இந்த மூணு வருசத்துக்குள்ள, இவங்களைப் பத்தின ஆதாரங்களை நாம தயாரிச்சே ஆகணும். அதுக்குமேல நமக்கு டைம் இல்ல,

மூணு வருஷம் இருக்கு இவங்களை நாம என்ன வேணும்னாலும் பண்ணலாம், நீ கவலைப்படாம இரு, என்ன இதெல்லாம் நீ முன்னாடியே என்கிட்டே சொல்லியிருந்துருக்கலாம்,

நீங்க சொல்றது கரெக்ட் தான் ஆனா அப்போ நான் இருந்த சூழ்நிலையில யாரை நம்புறதுன்னே எனக்கு தெரியல, எது மூலமாவது நான் உங்களுக்கு தகவல் கொடுத்து அது இவங்களுக்கு தெரிஞ்சுடுச்சுன்னா அதுக்கப்புறம் இவங்களை மாட்டிவிடறதுக்கு என்னால் எதும் பண்ண முடியாதுன்னு தான்,  நான் இது சம்பந்தமா உங்ககிட்ட பேச நினைக்கவே இல்ல,

நீ சொல்றதும் சரி தான் உங்க அப்பா அம்மாவை கொன்னுருக்காங்க, நமக்கென்னன்னு இதை விட முடியாது. ஒரு கொலையை பண்ணிட்டு இவ்வளவு நாள் அதே வீட்டில எப்படி உங்க மாமாவால் இருக்க முடியுது என்று கேட்டவன், மித்ராவின் வாடிய முகத்தைப் பார்த்து, என்ன ஆச்சு மித்து ஏன் இவ்வளவு டல்லா இருக்க, இவ்வளவு தூரம் எல்லாத்தையும் தைரியமா பண்ணியிருக்க, எனக்கு எவ்வளவு பெருமையா இருக்கு தெரியுமா? நான் பார்த்த எல்லாத்துக்கும் பயந்த மித்ராவா இது? எனக்கு ஆச்சர்யமா இருக்கு என்று சொல்ல,

எல்லாம் சரி தான் ஆனா நீங்க தான் இப்போ ஃபாரின் போக போறீங்களே  திரும்ப என்னால எப்போ உங்களை பார்க்க முடியும்னு எனக்கு தெரியல, இப்படி ஒரு நிலைமை வரும்னு நான் எதிர்பார்க்கவே இல்ல சத்யா,

அருகில் சென்று அவளை மென்மையாக அணைத்துக்கொண்டவன், மித்து லைஃப்ல சில விஷயங்கள் நாம நினைக்குற மாதிரி நடக்காது உன்னை நான் பார்ப்பேன்னு கூட தான் நான் நினைக்கல, உன்னை காதலிப்பேன்னு நான் நினைக்கல, அதுக்கப்புறம் நானே உன்னை இங்க கூட்டிட்டு வந்து விடுவேன்னு நான் நினைக்கல, என் காதலை உன்கிட்ட சொல்ல முடியாம கஷ்டப்படுவேன்னு நான் நினைக்கல, நீயே தெரிஞ்சிக்கிட்டு வந்து ஏண்டா மாங்கா மடையா காதலிக்குறத ஊர் பூரா சொல்ற, என்கிட்டே சொல்லமாட்டியான்னு வந்து கேப்பன்னு நான் நினைக்கல, என்று கூற,

மித்ரா அவனை பார்த்து புன்னகைத்தாள்.

பாரேன் ஒரு பேச்சுக்காவது அப்படி எல்லாம் இல்லன்னு சொல்றியா? அப்படி தான் நினைச்சேங்குற மாதிரி சிரிக்கிற, என்று சத்யா கேட்க,

ஆமா அப்படி தான் நினைப்பாங்க ஒரு சின்ன பொண்ணு நானேவா எல்லாத்தையும் கண்டுபிடிச்சுட்டு வருவேன்,

சின்ன பொண்ணா நீ எவ்வளவு பெரிய வேலை எல்லாம் பார்த்துட்டு இருக்க, மித்து ரொம்போ ஜாக்கிரதையா இரு, அவங்களை நம்பாத அவங்க, தலைக்கு ஆபத்துன்னா அவங்க எதையும் செய்வாங்க எந்த நிலையிலும் அவங்களை நம்பாத ரொம்போ ரொம்போ ஜாக்கிரதையா இரு, என்று அவன் சொல்ல,

நான் என்னைப் பார்த்துப்பேன் சத்யா பயப்படாம நீங்க ஊருக்கு போய்ட்டுவாங்க, இந்த பிரச்சனையெல்லாம் சீக்கிரம் முடியனும் என்று சொல்ல,

நீ ஒன்னும் ஒரி பண்ணாத மித்து நீ இதுல தனியா இல்ல உன்கூட நாங்க இவ்வளோ பேர் இருக்கோம், பார்த்துக்கலாம் என்று கூறினான் பிரகாஷ்.

அதுக்கப்புறம் பிளான் பண்ணினபடி நான் ஃபாரின் கிளம்பிட்டேன். இங்க ராமோட சித்தப்பா பையன் மித்ராவோட க்ளாஸ்லயே ஜாயின் பண்ணினான், மித்ரா பிளான் பண்ணினபடி அவளுக்கு யார் மேலையெல்லாம் சந்தேகம் இருந்ததோ அவங்களை எல்லாம் வேலையிலிருந்து மாத்தினா, அதுக்கு நம்பிக்கையான ஆட்களை ராமும் சுஜியும் இன்டர்வியூ வச்சு அவங்க யார் என்னனு தகவலை மித்ராக்கு குடுத்தாங்க அதுமூலமா அவங்களை எல்லாம் அவ வேலைக்கு வச்சா.

மித்ராவோட மாமாவும் ரோஹித்தும் என்னவெல்லாம் திட்டம் போடுறாங்கன்னு அவளுக்கு தெரியவந்துச்சு, அப்படி அவளுக்கு தெரிய வந்த விஷயம் தான் ரோஹித் ஜெனிஃபருடன் ரிலேஷன்ஷிப்ல இருந்தது. அதே சமயத்துல விசுவநாதன் இவங்க கல்யாணம் முடிஞ்சு சொத்தெல்லாம் கைக்கு வந்ததும் மித்ராவை டைவர்ஸ் பண்ணிட்டு வேற ஒரு மல்டி மில்லினியர் பொண்ணுக்கு ரோஹித்தை கல்யாணம் பண்ணிக்கொடுக்க ஏற்பாடு செஞ்சிட்டு இருந்தது,

அதை யூஸ் பண்ணி மித்ரா, ஜெனிஃபர்ர பார்த்து உண்மை எல்லாம் சொல்லவும், அவங்க எங்க திட்டத்துக்கு ஒத்துக்கிட்டாங்க. இதுக்கு நடுவுல சுஜியோட அப்பா மூலமா நாங்க ஏற்பாடு பண்ணின டிடெக்டிவ் ஏஜென்சியில இருந்து மித்ரா மாமாக்கு அப்போ ஹெல்ப் பண்ணின கொலைக்கு உதவின ஆட்களை பத்தின இன்பர்மேசனும் எங்களுக்கு கிடைச்சுது, போலீஸ் உதவியோட அவங்களை எங்களுக்கு அப்ரூவரா மாத்த முடிஞ்சுது. அதே சமயத்துல ஜெனிஃபர் மூலமா எங்களுக்கு இந்த விடியோவும் கிடைச்சுது. இதை எல்லாம் போலீஸ்ல கொடுத்து இவங்களை எல்லாம் மாட்டிவிடலாம்ணு நான் சொன்னப்போ மித்ரா தான் எல்லா சொந்தக்காரங்க முன்னாடியும் இந்த விஷயத்தை சொல்லணும்னு நினைச்ச அதனால தான் இந்த கல்யாண ஏற்பாட்டுக்கு அவ ஒத்துக்கிட்டா.

அனைத்தையும் கேட்ட தெய்வநாயகியும் மித்ராவின் தாத்தாவும் மிகவும் வேதனையோடு அமர்ந்திருந்தனர்.

அவர்கள் அருகில் சென்று அமர்ந்த மித்ரா, பாட்டி நீங்க வருத்தபடாதீங்க காலம் கடந்துனாலும் அவங்களுக்கு தண்டனை கிடைக்க போகுது. முன்னாடியே சொல்லியிருந்தா நீங்க இதை நம்புவீங்களோ மாட்டீங்களோனு  தான் சொல்லலை. கூடவே  இந்த விஷயம் உங்களுக்கு தெரியறது உங்களுக்கும் ஆபத்துனு  தான் நாங்க இதை மறைச்சோம். இப்பதான் எல்லாம் முடிஞ்சு அவங்களையும் போலீஸ் அரெஸ்ட் பண்ணிட்டாங்க இனியும் நீங்க ஏன் வருத்தபடுறீங்க?

தெய்வநாயகியோ, அப்படி இல்ல மித்ரா நாங்க இவ்வளோ பேர் இருந்தும் அவங்க ரெண்டு பெரும் யாரு இல்லாத மாதிரி உயிரை விட்டிருக்காங்க. வெறும்  இந்த சொத்துக்காக அவங்கள கொன்னதும் இல்லாம உன் வாழ்க்கையையும் கெடுக்க பார்த்திருக்காங்க எனக்கு மனசே ஆறமட்டைங்குது.

விடுங்க பாட்டி நடந்தது நடந்துடுச்சு, மித்ராவை தான் அவங்கனால எதும் செய்ய முடியலையே அதை பத்தி ஏன் கவலைப்படணும். ரெண்டு நாள்ல இவங்க கல்யாணம் இருக்கு அதுக்கு ரெடி ஆகுங்க என்று சுஜி சொல்ல,

சரிதான் ஆனா பிரகாஷ் அப்பா, அம்மா கிட்ட முறைப்படி சொல்லணும் அவங்க சொந்தக்காரங்கள கூப்பிடனும் என்று மித்ரா தாத்தா கூற,

சார், நான் அவங்க கிட்ட ஏற்கனவே சொல்லிட்ட அவங்க நாளைக்கு காலைல வந்துடுவாங்க அதுக்கு முன்னாடி உங்க கிட்டயும், பாட்டிகிட்டயும் கொஞ்சம் பேசணும்.

என்ன பிரகாஷ் என்ன விஷயம் என்று தெய்வநாயகி கேட்க,

பாட்டி, மித்ரா உங்க பேத்தின்னு தெரியறதுக்கு முன்னாடியே எனக்கு அவளை பிடிக்கும். அவளை நான் அவ மேல இருக்க காதலுக்காக தான் கல்யாணம் பண்ணிக்குற உங்க சொத்துக்காக இல்லை. கல்யாணத்துக்கப்புறம் மித்ராவை நான் என்கூட கூட்டிட்டு போகனுன்னு நினைக்குற,

மித்ராவின் தாத்தாவோ, பிரகாஷ் நீ சொத்துக்கு ஆசைப்படுறவன் இல்லைனு எங்களுக்கு தெரியும் ஆனா எங்களுக்கு இப்ப இருக்குறது மித்ரா மட்டுந்தான் அவளையும் நீ கூட்டிட்டு போய்ட்டா எங்களுக்கு கஷ்டமா இருக்கும் என்றார்.

ஆமா பிரகாஷ், உனக்கு என்ன நீ சம்பாதிச்சு மித்ராவை பாத்துக்கணும், முன்னாடி மாதிரி எஸ்டேட், பேக்டரி எல்லாம் நீ பார்த்துக்கோ, அதுக்கான சம்பளத்தை வாங்கிக்கோ,நமக்கு எஸ்டேட் பேக்டரி பக்கத்துல ஒரு கெஸ்ட் ஹவுஸ் இருக்கு அங்க தங்கிக்கோங்க என்று தெய்வநாயகி கூற

மித்ராவின் தாத்தா எனக்கு இது சம்மதம் நாங்க எப்ப வேணுனாலும் மித்ராவை வந்து பாத்துக்கலாம், நீங்களும் முன்னாடி மித்ரா வந்துட்டு இருந்த மாதிரி ரெண்டு வாரத்துக்கு ஒரு தரவ வந்து என்னையும், ராஜியையும் பாத்துட்டு போகலாம் என்றார்.

பிரகாஷ் யோசிக்க அவன் அருகில் வந்த மித்ரா ஒத்துக்கோங்க சத்யா, இவங்கள தனியா விட்டுட வந்து என்னாலையும் நிம்மதியா இருக்க முடியாது. மித்ரா அப்படிக்கூறவும் தெய்வநாயகி கூறியதற்கு ஒற்றுக்கொண்டான் பிரகாஷ்.

தங்களது மகனுக்கும், மகளுக்கும் நடந்த அநியாயம் வேதனை அளித்தாலும் தங்களது பேத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கிக்கொடுத்தது அவர்களுக்கு சற்று ஆறுதலாக இருந்தது.

மறுநாள் காலை பிரகாஷ் குடும்பம் வந்தவுடன் மித்ராவின் பாட்டியும், தாத்தாவும் முறைப்படி அவர்களிடம் பேசி நடந்த குழப்பத்திற்கும் மன்னிப்பு கேட்டனர்.

ஜெயலக்ஷ்மியோ என்னம்மா நீங்க என்கிட்ட போய் மன்னிப்பெல்லாம் சொல்லிகிட்டு, மித்ரா எங்க வீட்டு பொண்ணு எவ்வளோ பெரிய விஷயம் செஞ்சிருக்க, அதுதான்மா முக்கியம். நீங்க கவலைப்படாதீங்க இப்ப நம்ப எல்லாம் சந்தோசமா கல்யாண வேலைய பார்ப்போம் என்றார்.

வீடே கல்யாண களையோடு இருந்தது. தெய்வநாயகி, ஜெயலட்சுமி, ஸ்வாதி மற்றும் ராஜலக்ஷ்மி சமையல் விவகாரங்களை பேசிக்கொண்டிருந்தனர்.

மித்ராவின்  தாத்தா, பிரகாஷின் அப்பா, ராம்,  ஸ்வாதியின் கணவன் அனைவரும் மற்ற கல்யாண வேலைகளை பார்த்துக்கொண்டிருந்தனர்.

தனது அறையில் புடவைகளை எடுத்து வைத்து கொண்டிருந்த மித்ராவை தேடி வந்தான் பிரகாஷ். அவனை பார்த்ததும் இங்க என்ன பண்றீங்க சத்யா,

உன்ன பாக்கதான் வந்தேன். என்ன பாக்கவே என்ன விஷயம் சத்யா என்று கேட்ட மித்ராவின் அருகில் வந்து அவள் தோளில் கைபோட்டு அவள் கண்களுக்குள் பார்த்தவன் சந்தோசமா இருக்கிய மித்ரா?

ரொம்போ சந்தோசமா இருக்க சத்யா, ஏன் கேக்குறீங்க

மித்து உன்ன முதல் முதலா பார்த்தப்ப உன் கண்ணுல ஒரு சோகம் இருந்துச்சு, உன் மேல எனக்கு ஈர்ப்பை ஏற்படுத்துனதே அதுதான். ஏன் இந்த பொண்ணு கண்ணுல இவ்வளவு சோகம்னு தோனுச்சு, உன் முகத்துல சிரிப்ப பார்க்கனுனு தோனுச்சு. அந்த ஆர்வத்துல உன்ன பத்தி தெரிஞ்சுகிட்டேன், அதுக்கப்புறம் நிறைய நடந்துடுச்சு, அதான் கேக்குற ஹாப்பியா இருக்கியா?

சத்யா நீங்க என் லைப்ல வந்ததுல இருந்து நான் ஹாப்பியா தான் இருக்கேன். நடுவுல நடந்தது எல்லாம் கஷ்டமா இருந்தாலும் நீங்க கூட இருந்த நான் ஹாப்பி தான்.

அவளை தன் அருகில் இழுத்து முன் நெற்றியில் மெதுவாக முத்தமிட்டவன், மித்து நம்பள பாரேன் சொல்லாம கொஞ்சநாள் லவ் பண்ணோம், அப்புறம் பாக்காம கொஞ்சநாள் லவ் பண்ணோம், இப்படி  முழுசா லவ்  பண்ணாமயே கல்யாணம் பண்ணிக்க போறோம் என்று கூறி சிரித்தான் பிரகாஷ்,

அப்படியா சொல்றீங்க சத்யா, வேணுனா கொஞ்சநாள் லவ் பண்ணணுன்னு சொல்லி நம்ப கல்யாணத்தை தள்ளி போட சொல்லுவோமா என்று மித்ரா குறும்பு மின்னும் கண்களோடு கேட்க,

அது சரி நம்பனால முடியாதுமா, நான் கல்யாணத்துக்கப்புறம் லவ்வை கண்டினியு பண்ணிக்குற என்று சத்யா கூற

வாய்விட்டு சிரிக்க தொடங்கினாள் மித்ரா,

வர வர ரொம்போ வால்தனம் பண்ற உன்ன பேசிக்குற இரு என்று சத்யா மிரட்டிக்கொண்டிருக்க, அவர்களை கீழ் இருந்து ராம் அழைக்கும் குரல் கேட்டது,

சத்யா, ராமண்ணா கூப்பிடுறாங்க என்று கூறி கொண்டு மித்ரா வெளியில் செல்ல, கொஞ்ச நேரம் பேச விடுறான என்று திட்டிக்கொண்டே கீழே சென்றான் பிரகாஷ்,

அங்கு அதற்குள் மித்ரா எதோ சொல்லிக்கொண்டிருக்க, பிரகாஷ் சென்றதும் அனைவரும் அவனை ஒரு மாதிரி பார்த்தனர்.

இவ என்ன சொன்ன, எதுக்கு எல்லாரும் ஒரு மாதிரி பாக்குறாங்க என்று பிரகாஷ் நினைக்க,

தெய்வநாயகியோ, பிரகாஷ் எதோ நாங்க உனக்கு லவ் பண்ண டைம் குடுக்கலைனு பீல் பண்ணனு மித்ரா சொன்ன, அதுதான் ஏன் உனக்கு அந்த குறை நாங்க கல்யாணத்தை தள்ளி வெச்சுடுறோம், நீ பொறுமையா லவ் பண்ணு என்று சொல்ல,

பாட்டி நீங்களுமா,,,,,,, உங்க பேத்தி தான் என்ன வெச்சு காமெடி பண்றனா நீங்களுமா???? மம்மி ப்ளீஸ் ஹெல்ப் மீ என்று நாடக பாணியில் பிரகாஷ் சொல்ல,

ஜெயலக்ஷிமியோ, பாட்டி உன்னோட நல்லதுக்குதானடா சொல்றாங்க என்று நமட்டு சிரிப்போடு கூறினார்.

ஒன்னு கூடிட்டாங்கடா என்று பிரகாஷ் புலம்ப, அனைவரும் சிரிக்க தொடங்கினர்.

தங்கள் பேத்தியின் சிரிப்பும் வீட்டில் இருந்த கல்யாண களையும் தெய்வநாயகிக்கும், கார்மேகத்திற்கும் நிறைவாக இருந்தது.

இன்றுபோல் என்றும் அவர்கள் புன்னகை நிலைத்திருக்க வாழ்த்தி விடைபெறுவோம்.

–நறுமுகை

6

No Responses

Write a response