சாமி கும்பிட்டு முடித்த ஜெயலட்சுமியும் பிரகாஷும் கோயில் மண்டபத்தில் அமர்ந்திருந்த மித்ராவை தேடி அவளுடன் சென்று அமர்ந்தனர். ஜெயலட்சுமியை பார்த்ததும் பெரிதாக முறுவலித்த மித்ரா வாங்க ஆன்ட்டி, சாமி தரிசனம் எல்லாம் முடிந்ததா என்று கேட்டாள்.
ஆச்சு மித்ரா நீ கோயிலுக்கு வருவாய்னு தெரிந்திருந்தால் உன்னுடனே வந்திருப்போம். இங்க கோயிலுக்கு பக்கமாக வந்து தான் உன்னை நான் பார்த்தேன். சரி சாமி கும்பிட்டுவிட்டு உன்னிடம் பேசிக்கொள்ளலாம் என்று தான் கூப்பிடவில்லை என்றார் ஜெயலட்சுமி.
ஓஹ் ஓகே ஓகே ஆன்ட்டி, இன்னும் கொஞ்ச நாளில் ரிசல்ட் வரப்போகுது இல்லையா அதனால் தான் ஒவ்வொரு வாரமும் கோயிலுக்கு வருகிறேன், என்று வெள்ளை சிரிப்புடன் கூறினாள் மித்ரா. அவர்கள் இருவரும் பேசுவதையே அமைதியாக பார்த்துக்கொண்டிருந்தான் பிரகாஷ்.
ரிசல்ட் வந்த பிறகு என்ன படிக்கப்போற மித்ரா? என்று கேட்டார் ஜெயலட்சுமி.
அவள் பதில் கூறுவதற்கு முன் பி. காம் என்றான் பிரகாஷ்.
இரு பெண்களும் அவனை சந்தேகமாக பார்க்க,
இப்படி வாயை கொடுத்து மாட்டிகிட்டயே பிரகாஷ் என்று தன் மனதுள் நினைத்தவன், அவங்க அப்பா தான் காலையில் நம்ம அப்பாகிட்ட பி. காம் சேர்த்துவதை பற்றி பேசிக்கொண்டிருந்தார், அதனால் தான் சொன்னேன் அப்போ இல்லையா? என்று ஒன்றும் தெரியாதாது போல கேட்டான்.
ஓஹ் அப்பா சொன்னாரா? நேற்று தான் அப்பாவிடம் பேசிக்கொண்டிருந்தேன் என்று அவனை பார்த்து மெலிதாக முறுவலித்தாள் .
அப்பாடா கிரேட் எஸ்கேப்…. பிரகாஷ் இப்படி தேவை இல்லாமல் வாயை கொடுத்து மாட்டிக்கொள்ளாதே இந்த பொண்ணை பார்க்க தான் நீ உங்க அம்மாவை கோயிலுக்கு கூட்டிக்கொண்டு வந்திருக்கிறாய்னு உங்க அம்மாவிற்கு தெரிந்தால் உங்க அம்மாவே உன்னை போலீசில் பிடித்து கொடுத்துவிடுவார்கள் என்று தன் மனதோடு பேசிகொண்டவன் வெளியில் எதுவும் காட்டிக்கொள்ளாமல் அமைதியாக இருந்தான்.
காலையில் ஏதோ கார் வந்திருந்தது, வீட்டிற்கு யாரவது விருந்தாளிகள் வந்திருக்கிறார்களா மித்ரா ? என்று ஜெயலட்சுமி கேட்க,
இல்லை இல்லை, ஆன்ட்டி காலேஜ்ல இருந்து ஹேமா அக்கா வந்திருக்காங்க இப்போ லீவ் இல்லையா என்று கூறினாள் மித்ரா.
அவளை பார்த்த ஜெயலட்சுமியோ மனதிற்குள் அந்த ஆட்டக்காரியும் வந்தாச்சா இனி உன் நிலை அவ்வளோதான். ஹ்ம்ம் சம்பாதிப்பது எல்லாம் உன் அப்பா அனுபவிப்பது எல்லாம் வேற யாரோ என்று மனதோடு நினைத்தவர், அதை மித்ராவிடம் கூறாமல், ஓஹ் அப்படியா என்று மட்டும் கேட்டுக்கொண்டார்.
பின் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு மூவரும் கோயிலில் இருந்து கிளம்பினர்.
கோயிலில் இருந்து வீட்டிற்கு வந்த பிரகாஷ் ஹாலில் அமர்ந்து தன் லேப்டாப்பில் ஏதோ நோன்டிக்கொண்டிருந்தான். திடீரென பக்கத்து வீட்டில் இருந்து பயங்கரமாக சத்தம் வர,
ஜெயலட்சுமி, பிரகாஷ், ராஜராஜன் மூவரும் வெளியில் வந்து எட்டி பார்த்தனர்.
அங்கு மித்ராவின் சித்தி புவனா, அவளை வீட்டிற்கு வெளியில் வைத்து அடித்துக்கொண்டிருந்தாள் என்னவோ ஏதோ என்று ஜெயலட்சுமி, ராஜராஜன் இருவரும் பதறிக்கொண்டு இப்போ எதற்கு அந்த பெண்ணை போட்டு இப்படி அடிக்கிறீங்க என்று கேட்க,
ஒரு வேலை ஒழுங்கா செய்ய தெரிவதில்லை இங்க பாருங்க என் பொண்ணுக்கு வாங்கின புது சுடிதார் அதை துவைக்கிறேன்னு சொல்லி கறை பண்ணி வைத்திருக்கிறாள்.
இவளுக்கு என் பொண்ணு போடுகின்ற டிரஸ் மீது எப்போதும் ஒரு கண்ணு,
பொறாமை பிடித்தவள் அதனால் தான் இப்படி பண்ணிவிட்டாள். இன்னைக்கு இந்த விஷயத்தை இப்படியே விட்டால் நாளைக்கு என் பொண்ணு விஷயத்தில் இதையே தான் செய்துகொண்டிருப்பாள் என்று கூறி ஒன்றுமே இல்லாத உப்பு சப்பு விசயத்திற்கு போய் மித்ராவை போட்டு வாட்டிக்கொண்டிருந்தார் புவனா.
அப்போது தான் வேலையில் இருந்து வந்த மித்ராவின் அப்பா சண்முகம் அங்கு கண்ட காட்சியை பார்த்து கோபம் கொண்டவராக இன்னும் ஒரு அடி என் பொண்ணு மீது விழுந்தால் நீயும் உன் பொண்ணும் இந்த வீட்டை விட்டு வெளியில் போக வேண்டியது தான் என்று கத்தினார்.
சாதாரணமாக மித்ராவின் அப்பா அப்படியெல்லாம் கோபம் கொண்டு கத்தமாட்டார்.
எப்படியோ இரண்டாவது திருமணம் என்று செய்தாயிற்று தேவையில்லாத பிரச்சனைகள் வேண்டாம் என்று பொறுத்து தான் போவார். ஆனால் இன்றோ காரணமே இல்லாமல் தன் பெண்ணை புவனா வெளியில் வைத்து அடிப்பதை பார்த்ததும் கோபம் கொண்டவராக இப்படி கூறிவிட,
புவனாவும் ஹேமாவும் ஒருநிமிடம் அதிர்ந்து போய் விட்டனர். அந்த வீட்டை விட்டு போய்விட்டால் தற்போது அவர்கள் வாழ்ந்துகொண்டிருக்கும் வளமான வாழ்க்கை அடியோடு பறிபோய்விடும். எனவே சுதாரித்த புவனா நீங்களாயிற்று உங்கள் பெண்ணாயிற்று நாங்கள் ஏன் உங்கள் பொண்ணு விஷயத்தில் தலை இட போகிறோம். இனி அவளுக்கும் எங்களுக்கும் எந்த சம்மந்தமுமில்லை என்று கூறிவிட்டு வேகமாக வீட்டிற்குள் சென்றுவிட்டாள்.
அங்கு அழுதுகொண்டிருந்த மித்ராவை தோளோடு அணைத்து சமாதானம் செய்துகொண்டிருந்தார் சண்முகம்,
அதை பார்த்துக்கொண்டிருந்த பிரகாஷிற்கு மிகவும் வருத்தமாக இருந்தது. அதையும் தாண்டி மித்ராவின் சித்தியை ஏதாவது செய்துவிட வேண்டும் என்று ஆத்திரமாக இருந்தது. அன்று வெகு நேரம் உறக்கம் வராமல் மாடியில் நடந்து கொண்டிருந்தான். இன்றும் நள்ளிரவு மித்ரா, பூனையிடம் வந்து பேசுவாளோ என்று நினைத்தவன் அவளுக்காக காத்துக்கொண்டிருக்க…. ஆனால் மித்ரா வரவில்லை.
அவளுக்கு அடிபட்டிருந்ததால் மித்ராவின் தந்தை அவளுக்கு மாத்திரை கொடுத்து தூங்க வைத்திருந்தார். எனவே மித்ரா நல்ல உறக்கத்தில் இருந்தாள்.
இங்கோ பிரகாஷ் அவள் வருவாள் என்று காத்துக்கொண்டிருந்துவிட்டு நள்ளிரவு தாண்டி வெகு நேரம் கழித்து உறங்க சென்றான். அப்போதும் உறக்கத்திலும் அவனுக்கு மித்ராவின் கலங்கிய முகம்தான் கண்களில் வந்து வந்து போனது. ஏனோ அவனுக்கு மித்ராவின் முகம் எங்கேயோ பார்த்து பழக்கப்பட்ட முகமாக தோன்றிக் கொண்டே இருந்தது. எங்கு என்று அவனுக்கு பிடிபடவில்லை.
அதே சமயம் மித்ராவின் அப்பா சொன்னதை கேட்டு கொதித்து போயிருந்த புவனா என்னைக்கு இந்த மனிதன் இந்த மாதிரி ஒரு வார்த்தையை சொல்லிவிட்டாரோ இனிமேல் மித்ராவை இப்படியே விட்டு வைப்பது நல்லது கிடையாது. எந்த நிலையிலும் நானும் என் பெண்ணும், மகனும் இந்த வீட்டை விட்டு வெளியில் போக வேண்டிய சூழ்நிலை வந்துவிடலாம். அதற்கு முன் இந்த மித்ராவை இந்த வீட்டை விட்டு வெளியில் அனுப்ப வேண்டும். என்னை எதிர்த்து பேச முடியாதபடி இந்த மனிதனை நான் கட்டிப்போடவேண்டும். அதற்கு என்ன செய்வது என்று யோசித்து கொண்டிருந்தவருக்கு பளிச்சென ஒரு யோசனை தோன்ற, மித்ரா உனக்காக தானே உங்க அப்பா என்னையும் என் பொண்ணையும் வெளியில் போக சொன்னார், உன்னை நான் இந்த வீட்டை விட்டு வெளியில் அனுப்புகிறேன். இன்று நான் அடித்துவிட்டேனு இவ்வளவு கோபம் கொள்கிறார், நாளைக்கு அடிக்க வேண்டியவர்கள் அடித்தால் உன் அப்பா என்ன செய்ய போகிறார்னு நான் பார்க்கிறேன்,என்று ஒரு முடிவெடுத்தவளாக மகிழ்ச்சியுடன் உறங்க சென்றார்.
மித்ரா சித்தியின் நோக்கமென்ன? பிரகாஷ் இதற்கு முன் மித்ராவை சந்தித்திருக்கிறானா? இவையெல்லாம் அறிய தொடர்ந்து வாசியுங்கள் “என் வானவில்”.
-நறுமுகை