என் வானவில் – 39

என் வானவில் – 39

மித்ராவிற்கும் இந்த விஷயம் தெரிந்திருக்குமோ என்று யோசனையில் நின்றிருந்த பிரகாஷின் கவனத்தை தெய்வநாயகியின் குரல் கலைத்தது.

சொல்லு பிரகாஷ் நான் சொல்றது உண்மைதானே என்று அவர் மீண்டும் கேட்க,

பிரகாஷ் அமைதியாக தலையை குனிந்துகொண்டு நின்றிருந்தான்.

அவன் அருகில் வந்த சுவாதி, பிரகாஷ் பாட்டி சொல்றது உண்மையா, மறைக்காமல் என்கிட்டே சொல்லு  என்று கேட்க,

அனைவருக்கும் தெரிந்துவிட்டது இனி மறைத்து பயனில்லை என்று நினைத்தவன் ஆமாம் என்று மெதுவாக தலை அசைத்தான்.

இதை ஏன்டா இத்தனை நாளா எங்க யார்கிட்டையும் சொல்லல என்று சுவாதி கேட்க, 

தெய்வநாயகியோ நான் சொன்னது தான் சுவாதி காரணம், அவன் மித்ரா  என் பேத்தின்னு தெரியறதுக்கு முன்னாடியே காதலிக்க ஆரம்பிச்சுட்டான், ஆனால் என் பேத்தின்னு தெரிஞ்ச பிறகு அவள் மேல பரிதாபப்பட்டு உதவி  செய்வதுபோல வெளியில் காட்டிக்கிட்டான் என்று தெய்வநாயகி சொல்ல,

பாட்டி சொல்றது உண்மையாடா? என்று மீண்டும் சுவாதி கேட்டாள்.

ஆமாம் என்றவன், என்னதான் நான் மித்ராவை காதலிக்கிறேன்னு சொன்னாலும் பணத்துக்காக காதலிக்கிறேன்னு தான மத்தவங்க நினைப்பாங்க,

சங்கரோ பாட்டி சொன்ன மாதிரி எல்லா சமயமும் நாம மத்தவங்களுக்காக வாழ முடியாது பிரகாஷ். நீ எப்படின்னு மித்ராவுக்கும் பாட்டிக்கும் மட்டும் தெரிஞ்சா போதும் நீ ஏன் எல்லாரை பத்தியும் நினைச்சி கவலைப்படுற, உன்ன ரொம்போ ஃபார்வோர்ட் திங்க்கிங் பர்சன்னு நினச்சேன், உனக்குள்ள எப்படி அடுத்தவங்க என்ன நினைப்பாங்களோனு எண்ணம் வந்துச்சு?  மத்தவங்க என்ன நினைப்பாங்களோன்னு கவலைப்படணும் தான் ஆனால் அதற்கும் ஒரு அளவிருக்கு, அதுக்காக நம்ம வாழ்க்கையையே மத்தவங்க நினைப்பதுக்காக விட்டுக்கொடுக்க கூடாது,

சரி தான் மாமா, நான் இல்லைன்னு சொல்லல ஆனால் ஒருவேளை மித்ராவே அப்படி நினைச்சிட்டா என்று அவன் கேட்க,

சுவாதியோ போடா எனக்கென்னவோ மித்ரா அப்படி எல்லாம் நினைப்பான்னு தோணல, என்றாள்.

தெய்வநாயகியோ, பிரகாஷ் அது உன் பிரச்சனை, அதை நீயும் மித்ராவும் பேசி சரி பண்ணிக்கோங்க, நீயா சொல்லாமல் நான் எந்த நிலைமையிலும் மித்ராகிட்ட இந்த விஷயத்தை பத்தி சொல்ல போறதில்லை. நீ இப்போ கிளம்பி என்கூடவா, எஸ்டேட்டை பார்த்துக்கோ என்கூட தங்கியிரு நீ ஏன் வெளியில எங்கயோ தங்கியிருக்கணும்? என்று சொல்ல,

பிரகாஷ் அப்போதும் தயங்கினான்.

தெய்வநாயகியோ இதுக்கு மேல உன் இஷ்டம் என்னை நீ நிஜமாலும் உன் பாட்டின்னு நினச்சின்னா கிளம்பி என்கூட வா என்று சொல்ல, 

இதற்கு மேல் மறுப்பது பாட்டியைக் கஷ்டப்படுத்தும் என்று நினைத்தவன்,

நான் உங்க கூட வரேன் பாட்டி என்றான். அன்று மாலையே தெய்வநாயகியுடன் வால்பாறைக்கு கிளம்பினான். என்றைக்கு பிரகாஷ்  தெய்வநாயகியுடன் வால்பாறை வந்து சேர்ந்தானோ அன்றிலிருந்து மித்ரா தெய்வநாயகிக்கும் பிரகாஷிற்கும் போன் பேசுவது வெகுவாக குறைந்துபோனது.

பலமுறை அவளுடன் பேச முற்பட்டும் அவள் நான் அங்கிருக்கிறேன், இங்கிருக்கிறேன், எனக்கு வேலை இருக்கிறது என்று தட்டி கழித்தாள்.

பிரகாஷிற்கும் தெய்வநாயகிக்கும் அது கவலையாக இருந்தது, மறுபுறம்  வருத்தமாகவும் இருந்தது. எங்கே அங்கு மித்ராவிற்கு ஏதேனும் பிரச்சனையோ, அங்கிருப்பவர்கள் ஏதேனும் அவளை கட்டாயப்படுத்துகிறார்களோ, என்று கவலையாக இருந்தது.

ஒரு நாள் சாதாரணமாக பேசுவது போல பிரகாஷ் மித்ராவின் தாத்தாவிற்கு அழைத்து பேசினான். அப்போது அவன் மித்ரா எங்கே என்று கேட்க,

அவள் அத்தையுடன் கோயிலுக்கு சென்றிருப்பதாக கூறினார் மித்ராவின் தாத்தா. மேற்கொண்டு அவர் பெரிதாக அவனுக்கு எந்த தகவலும் கொடுக்கவில்லை.

பிரகாஷிற்கோ முதல் நாள் தான் கொண்டுசென்று விட்டபோது மித்ராவின் அத்தை நடந்துகொண்ட விதம் கண் முன் தோன்றியது. அப்படி இருப்பவர் எப்படி மித்ராவை ஏற்றுக்கொண்டார் என்று அவனுக்கு புரியவே இல்லை. சரி ஏதேனும் பிரச்சனையாக இருக்கும்பட்சத்தில் ராம் சுஜி சொன்னதுபோல மித்ராவிற்கு இன்னொரு போனைக் கொடுத்துவிடுவோம் என்று நினைத்து அபிராமியின் உதவியை நாடினான் பிரகாஷ்.

அபிராமியும் அவனுக்காக சரியென ஒத்துக்கொண்டு மித்ராவைப் பார்ப்பதற்காக தேனி சென்றாள்.

திடீரென வந்த தோழியைப் பார்த்து உற்சாகம் அடைந்த மித்ரா, அங்கிருந்த தன் அத்தை, மாமா, தாத்தா மற்றும் ரோஹித்திற்கு அபிராமியை அறிமுகம் செய்துவைத்தாள்.

மித்ரா அங்கு செல்வதற்கு முன் பேசியதற்கும் இப்போது அவள் அபிராமியுடன் பழகுவதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருந்தது. ரோஹித்தை எப்போதும் திட்டிக்கொண்டே இருக்கும் மித்ரா, ரோஹித்தை அத்தான் என்று கூறி அபிராமிக்கு அறிமுகம் செய்து வைக்க, அபிராமியோ இங்கு எதோ சரியில்லை என்று நினைத்துக்கொண்டாள்.

அதன் பின்  தோழிகள் இருவரும் தனியாக மித்ராவின் அறையில் பேசிக்கொண்டிருந்தபொழுது அபி, பிரகாஷ் கூறியதை கூறி, மித்ராவின் பாதுகாப்பிற்காக அந்த கைப்பேசியைக் கொடுக்க

மித்ராவோ எனக்கு இங்க எந்த பிரச்சனையும் இல்லை அபி நான் இங்கு நல்லாவே இருக்கேன். எனக்கு ஏதாவது வேணும்னா தாத்தா பார்த்துகிறார், ரோஹித் அத்தான் எங்க போனாலும் என்னை கூட்டிட்டு தான் போறாரு சோ, வீட்டிலேயே அடைஞ்சு கிடக்கிற ஃபீல் எல்லாம் எனக்கு கிடையாது இங்க யாரும் என்னை கட்டாயப்படுத்துறது இல்லை, எனக்கு இங்க போன் எல்லாம் வேணாம், பிரகாஷை நிம்மதியா இருக்க சொல்லு, எப்போ பார்த்தாலும் என்னை பற்றியே யோசிச்சிட்டு இருக்க வேண்டாம்னு சொல்லு, என்னை நான் பார்த்துப்பேன் என்று கூறி தோழியை மேலும் குழப்பத்தில் ஆழ்த்தினாள் மித்ரா.

மித்ராவை பார்த்துவிட்டு வந்த அபி சொன்ன செய்தியைக் கேட்டு பிரகாஷ், சுஜி, ராம் என மூவரும் அதிர்ச்சி அடைந்தனர். நீ என்ன சொல்ற, ரோஹித்தை அத்தான்னு கூப்பிடறாளா? என்று கேட்க,

உறவு முறைப்படி பார்த்தாள் அது தானே சரி என்று ராம் கேட்டான்.

உடனே சுஜி டேய், உறவு அது இதுன்னு சொல்லிட்டு………. மித்ரா அவனை பார்த்தாலே அவ்வளவு டென்ஷன் ஆவா, அவன் கூட சேர்ந்து ஊர் சுத்துறாளா? என்னால் இதை நம்பவே முடியல என்றாள்,

அபிராமியோ இல்லக்கா இதுக்கு முன்னாடி மித்ராவை  நான் இப்படி பார்த்ததே இல்லை. அவ பேசுற விதத்திலேயே ஒரு வித்தியாசம் தெரியுது. அதுலயும் அவ என்னை பத்தி யாரும் கவலைப்பட வேண்டாம் என்னை எனக்கு பார்த்துக்க தெரியும்னு சொல்றா, அந்த போனை வாங்கவே மாட்டேன்னுட்டா நான் தான் உனக்கு தேவைப்படுதோ இல்லையோ வச்சிக்கோன்னு சொல்லி அங்கையே போனை வச்சிட்டு வந்துட்டேன், அதை அவ என்ன பண்ண போறான்னு எனக்கு தெரியல என்று கூறினாள்.

அபிராமி கூறிய அனைத்தையும் அமைதியாக கேட்டுக்கொண்டிருந்த பிரகாஷ் எதுவுமே கூறாமல் இருக்க,

சுஜியோ டேய் இப்படி அமைதியாவே இருந்தால் என்ன பண்றது ஏதாவது சொல்லு என்று கேட்க,

பிரகாஷோ, சொல்றதுக்கு எதுவும் இல்லை சுஜி, அவ தான் அவளை பார்த்துகிறேன்னு சொல்லிட்டா இல்ல அவ பார்த்துப்பா, நாம பேசியபடி அவ இன்னும் ரெண்டு மாசம் அங்க இருக்கணும் என்ன தான் நடக்குதுன்னு பார்ப்போம் இந்த ரெண்டு மாசத்துக்கு நடுவுல நாம எப்போ அங்க போய் நின்னாலும் அது நமக்கு தான் பிரச்சனை. அதுக்குதான் அபி போனை விட்டுட்டு வந்திருக்கா இல்லை ஏதாவதுன்னா அவ கூப்பிடுவா என்று சொல்ல, சரி என்று அனைவரும் போனை வைத்தனர்.

மீண்டும் தன் தோழனை அழைத்த சுஜி, டேய் என்ன ஃபீலிங்ஸே இல்லாத ரோபோவாடா நீ இப்படி அமைதியா இருக்க? என்று கேட்க,

பிரகாஷோ, சுஜி நான் இப்போ என்ன பண்ணனும்னு நினைக்கிற அவகூட போய் சண்டை போடணுமா? இல்ல அந்த ரோஹித் கூட போய் சண்டை போடணுமா? அதெல்லாம் நான் எதுவும் பண்ணப்போறது இல்ல,

எனக்கென்னவோ இப்போ நடக்குறது எல்லாம் ஒரு பெரிய விஷயமே இல்ல இத விட பெரிய பூகம்பமே வரப்போகுதுன்னு தோணுது என்று பிரகாஷ் கூற,

சுஜியோ என்னடா சொல்ற

ஆமாம் சுஜி எனக்கென்னவோ அப்படி தான் தோணுது, நீ கவலைப்படாதே  என்று பிரகாஷ் கூற,

டேய் நீ தான் கவலைப்படணும் நான் உனக்கு எப்படி ஆறுதல் சொல்றதுன்னு யோசிகிறேன், நீ எனக்கு ஆறுதல் சொல்ற, என்று நண்பன் மீது பாய

சுஜி எனக்கு மித்ரா எங்க இருந்தாலும் சந்தோசமா இருக்கணும், அவ பாதுகாப்பும் சந்தோஷமும் எனக்கு ரொம்போ முக்கியம். நான் முன்னாடி சொன்ன மாதிரி தான் நான் அவளை கூட்டிட்டு வந்து சேர்த்தேன் என்பதற்காக அவளை  நான் எந்த விதத்திலும் டிஸ்டர்ப் பண்ணமாட்டேன். அவ சுயமா சிந்திச்சு முடிவு எடுக்கணுங்கறதுக்காக அவளுக்கு அவ்வளவு கிளாசஸ் அவ்வளவு ட்ரைனிங் எல்லாம் ஏர்பாடு பண்ணினேன் அப்புறம் நானே அவளுக்கு குறுக்க நின்னேன்னா நல்லா இருக்காது, அவ செய்றத செய்யட்டும் சுஜி நாம பார்த்துக்கலாம் என்று தனக்காக கவலைப்படும் தோழியை சமாதானம் செய்து போனை வைத்தவனின் மனம் நிம்மதியில்லாமல் அலைந்தது. இதை பாட்டியிடம் கூறாமல் ஏதேதோ சொல்லி சமாளித்தான்.

என்ன தான் பிரகாஷிடம் மித்ரா சரியாக பேசவில்லை என்றாலும் எப்படியும் ஒரு நாளைக்கு ஒருமுறை அவள் பாட்டியிடம் பேசிக்கொண்டு தான் இருந்தாள். எனவே தெய்வநாயகிக்கு அதில் பெரிய வித்தியாசமே தெரியவில்லை.

பிரகாஷ் கூறுவது போல அடுத்து ஏற்படும் அந்த பூகம்பம் என்ன என்பதை அறிய தொடர்ந்து வாசியுங்கள் என் வானவில்……                                  

   -நறுமுகை

7

No Responses

Write a response