பிரகாஷ் கூறியதை போல தினமும் மித்ராவுடன் போனில் பேசினான், வாரம் ஒருமுறை வீடியோ கால் பேசினான்.
என்னதான் அவன் தினமும் போனில் பேசினாலும், வீடியோ காலில் பேசினாலும், மித்ராவிற்கு அவனைப் பார்க்காமல் என்னவோ போல் இருந்தது. ஆனால் அதை அவனிடம் அவள் சொல்லிக்கொள்ளவில்லை.
எப்போதும் போல அபிராமி அவளிடம் கலகலப்பாக பேசி வம்பிழுத்துக்கொண்டு பிரகாஷ் அருகில் இல்லாததை முடிந்த அளவிற்கு மித்ராவிற்கு தெரியாதது போல பார்த்துக்கொண்டாள்.
ஏற்கனவே பிரகாஷ் கூறி இருந்ததாலும், இத்தனை நாளில் கிஷோர் அவளிடம் தவறாக ஒரு சிறு பார்வை கூட செலுத்தியது இல்லை என்பதாலும் மித்ரா அவனுடன் இயல்பாக பேசிப் பழக தொடங்கியிருந்தாள்.
சந்தேகங்கள் கேட்பது பழைய நோட்ஸ் வாங்குவது என்று கிஷோரும் அவளுக்கு முடிந்த உதவிகளை செய்து கொண்டிருந்தான்.
ஆரம்பத்தில் பெரிதாக எதுவும் நினைக்காமல் பேசிக்கொண்டிருந்த கிஷோருக்கு நாட்கள் செல்ல செல்ல, மித்ராவின் பேச்சும் குழந்தைத் தனமும் அவள் மீது ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தியது.
கிஷோர் தன்னிடம் நல்ல விதமாக மட்டுமே பழகுகிறான் என்று நம்பத் தொடங்கிய பிறகு கிஷோரின் பார்வை பேச்சுக்களை ஆராய்ச்சி செய்வதை சுத்தமாக நிறுத்தியிருந்தாள். எனவே அவனுடைய பார்வையில் தெரிந்த அதிகப்படியான ஆர்வத்தையோ அவனது பேச்சில் தெரிந்த சிறிது நெருக்கத்தையோ மித்ரா உணரவேயில்லை.
மித்ராவிற்கு தன் பேச்சும் பார்வையும் புரிகிறது என்ற நம்பிக்கையில் கிஷோர் தனக்குள்ளாகவே ஆசையை வளர்த்துக்கொள்ள தொடங்கினான்.
மித்ரா வார இறுதியில் எஸ்டேட்டிற்கு செல்லும்பொழுதெல்லாம் அவனும் அங்கு வந்து பாட்டியுடன் பேசிக்கொண்டிருந்துவிட்டு மித்ராவுடனும் அரட்டை அடித்துவிட்டு நேரம் செலவு செய்ய தொடங்கினான்.
பிரகாஷிடம் பேசும்பொழுது தான் தினமும் செய்தவைகளையும் நடந்தவைகளையும் கூறும் மித்ராவின் பேச்சில் இப்போதெல்லாம் அடிக்கடி கிஷோரின் பெயர் அடிபடுவதை பிரகாஷும் கவனித்திருந்தான். ஆனால் அதைப் பற்றி கேட்க அவனுக்கு மனமில்லை.ஏனென்றால் மித்ரா கூறிய அனைத்தும் சகஜமான பேச்சுகளாகவும் உரையாடல்களாகவும் இருந்ததே அதற்கு காரணம். இருந்தாலும் பிரகாஷிற்கு எதுவோ உறுத்திக்கொண்டே இருக்க, அவன் அந்த வாரம் சுஜியிடம் போனில் பேசும்போது இந்த விஷயத்தைக் கூறினான்.
அன்னைக்கு என்னவோ நான் சேர்த்துவிட்டதால் நான் கூறுவதை எல்லாம் அவள் கேட்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்று யாரோ டயலாக் எல்லாம் பேசினாங்க. இப்போ வந்து கவலை படுவது போல தெரிகிறது, என்ன ஆச்சு தம்பி என்று சுஜி கிண்டல் செய்ய, உன்கிட்ட போய் சொன்னேன் பாரு என்று அவளிடம் பாய்ந்தான் பிரகாஷ்.
சரி, சரி,பஸ்! பஸ்!எதற்கு இவ்வளவு கோபம், நான் தான் அன்றைக்கே சொன்னேனே இந்த மாதிரி எதார்த்தமாக பழகு, கேசுவலாக இரு என்றெல்லாம் அவளுக்கு லெக்சர் அடிக்காதே என்று கேட்டியா? இப்போ வந்து புலம்புகிறாய். சரி மித்ரா சொன்னது எல்லாம் வைத்து உனக்கு என்ன தோன்றுகிறது? என்று கேட்டாள் சுஜி,
என்னால் எதுவும் புரிந்துகொள்ள முடியவில்லை சுஜி. அவள் சொல்வதை எல்லாம் வைத்து பார்த்தால் எல்லாம் பொதுவான விஷயமாக தான் இருக்கிறது. ஆனால் அடிக்கடி கிஷோர் பெயர் வருகிறது.
வீக்கெண்டில் அவள் எஸ்டேட்டிற்கு வரும்பொழுதும் அவன் அங்கு வருகிறான் போலிருக்கிறது, இதற்கு முன் பாட்டியை பார்ப்பதற்கு எப்போதாவது வருவான் என்று பாட்டி சொல்லி இருக்கிறார்கள். ஆனால் இப்போது அவன் வருவது கண்டிப்பாக மித்ராவை பார்க்கத்தான் என்று எனக்கே தோன்றுகிறது. ஆனால் மித்ரா அதை பற்றி எதுவும் என்னிடம் சொல்லவில்லை என்று யோசனையோடு கூறினான் பிரகாஷ்.
சுஜியோ சரி, நீ பார்க்கும் ஆங்கில் வேறு மாதிரி இருக்கிறது. நான் வேண்டுமென்றால் அவளிடம் பேசிப்பார்க்கின்றேன். நீ அதிகம் இதை தலையில் போட்டுகொண்டு யோசிக்காதே அமைதியாக இரு என்றாள் சுஜி.
அவளிடம் நீ என்ன கேட்க போகிறாய்? நான் இப்படி கம்பளைண்ட் செய்தேன் என்றா? என்று பிரகாஷ் கேட்க,
உன் பிரண்டா இருக்கேன் என்பதற்காக உன்னை போல நானும் முட்டாள் என்று நினைத்துவிட்டாயா பிரகாஷ், என்று அவனை வம்பிழுத்தாள்.
எல்லாம் என் நேரம், இந்த ராம் கூட சேர்ந்து நீ ரொம்போ கெட்டு போய்விட்டாய், என்று கிண்டல் செய்தவன் சிறிது நேரம் பொதுவாக பேசிவிட்டு போனை வைத்தான்.
அதன் பின் ஒரு வாரம் விட்டு சுஜி மித்ராவிற்கு போன் செய்தாள்.
சுஜியின் எண்ணை பார்த்ததும் மகிழ்ச்சியாக போனை எடுத்தவள்,
ஹாய் சுஜி அக்கா எப்படி இருக்கிறீர்கள்? எனக்கு போன் செய்ய வேண்டும் என்று உங்களுக்கு இப்போது தான் தோன்றியதா? என்று செல்லமாக கோபித்து கொண்டாள்.
அப்படி எல்லாம் இல்லை மித்ரா, அலுவலகத்தில் வேலை சரியாக இருக்கிறது. இந்த பிரகாஷ் பாட்டிற்கு ஜாலியாக சென்று யூ.கே வில் உட்கார்ந்து கொண்டான். எனக்கும் ராமிற்கும் தான் நெட்டி தள்ளுகிறது என்று கூறினாள்.
ஓ நீங்க ராம் அண்ணா எல்லாம் வெளிநாடு போக முயற்சிக்கவில்லையா? என்று கேட்டாள்.
என்னை என் வீட்டில் மேரேஜ் செய்யாமல் அனுப்ப முடியாது என்று சொல்லிவிட்டார்கள், ராமிற்கு ஆல்ரெடி இங்க ஒரு காதலி இருக்கிறாள் அவனுடைய மாமா பொண்ணு. மாமா குடும்பத்திற்கும் ராம் குடும்பத்திற்கும் பிரச்சனை, எங்கு இவன் ஊரை விட்டு வெளியில் சென்றால் வேறு யாருக்காவது திருமணம் செய்து வைத்துவிடுவார்களோ என்ற பயத்திலேயே அவன் எங்கும் போகாமல் இருக்கிறான். அது சரி உனக்கு எப்படி போகிறது கல்லூரி?எல்லாம் சமாளித்துக்கொள்கிறாயா? ஒன்றும் பிரச்சனை இல்லையே? என்று கேட்க,
மித்ரா இயல்பாக எல்லாம் நன்றாக போகிறது அக்கா, என் பிரண்ட் அபிராமி இருக்கிறாள், ஹாஸ்டலில் எப்போது பார்த்தாலும் அவளுடன் ஜாலியாக இருக்கும். நாங்கள் இருவரும் ஜாலியாக அரட்டை அடித்துக்கொண்டு இருப்போம். அவர்களது அம்மா அப்பா கூட என்னிடம் போனில் பேசுவார்கள். அவளை பார்க்க வரும்பொழுது எனக்கும் சேர்த்து சாப்பாடு எடுத்துக்கொண்டு வருவார்கள்.
பிறகு வீக்கெண்டில் பாட்டியை பார்க்க ஊருக்கு போய்விடுகிறேனே, அங்கு வள்ளியுடன் எனக்கு டைம் பாஸ் ஆவதே தெரியாது. அது போக, அப்பப்போ கிஷோர் சீனியர் வேறு வருவார், என்று மித்ராவே சுஜிக்கு பேசுவதற்கு வகையாக கிஷோர் பெயரை எடுத்துக்கொடுத்தாள்.
ஓ கிஷோரா அது யார் என்று சுஜி கேட்க,
உங்களுக்கு தெரியாதா? என்னுடைய சீனியர், அவரும் வால்பாறையில் இருந்து தான் வருகிறார். முதல் முறை பேசும்பொழுது ரொம்போ பயந்துவிட்டேன்.
நான் வால்பாறையில் இருந்து வருகிறேன் என்று அவருக்கு எப்படி தெரியும் என்று யோசித்து யோசித்து எனக்கு செம டென்ஷன் ஆகிவிட்டது.
அதன் பிறகு சத்யாவிடம் கூறியபோது நீ திருச்சியில் இருந்து வருகிறாயா? என்று கேட்டால் தான் நீ பயப்பட வேண்டும் வால்பாறை தானே உன்னுடைய அடையாளமென்று சொல்லி அவர் தான் சமாதானம் செய்தார்,
சுஜியோ, ஓ கிஷோர் ஆள் எப்படி? என்று கேட்டவள் இல்ல…. பிரகாஷும் ஊரில் இல்லையே நீ தனியாக இருக்கிறாய் இல்லையா அதான் கேட்டேன் என்றாள்.
அக்கா இல்லை என்றால் கூட நீங்கள் என்னை கேட்கலாம். கிஷோர் ரொம்போ நல்ல டைப். ஏதாவது ஹெல்ப் வேண்டுமென்றால் அவரை தான் கேட்பேன். அவர் நல்லா படிப்பார் சோ, லெசன்ஸ்ல் எல்லாம் எனக்கு ஹெல்ப் பண்ணுவார். பழைய நோட்ஸ் புக்ஸ் எல்லாம் கொடுப்பார். பிறகு வீக்கெண்டில் ஊருக்கு போகும்போது பாட்டியை பார்க்க வருவார், அப்படியே என்னுடன் கொஞ்சம் பேசிவிட்டுப்போவார் என்று கூறினாள்.
சுஜிக்கு ஏதோ தப்பாக இருக்கிறது என்று பொறி தட்டியது, பிரகாஷ் கூறியது போல் முன்னர் எல்லாம் எப்போதாவது பாட்டியை பார்க்க வந்து கொண்டிருந்த கிஷோர் இப்போது வருவது மித்ராவை பார்ப்பதற்காக தான் என்று சுஜியின் மனதிற்கு தெரிந்தது. ஆனால் அது மித்ராவிற்கு புரியவில்லையென்றும் அவள் இயல்பாக அவனுடன் பேசி கொண்டிருக்கிறாள் என்றும் சுஜிக்கு புரிந்தது.
சுஜி மித்ராவிடம், மித்ரா நீ அனைவரிடமும் பேசி பழக வேண்டும். யார் எப்படி என்று உனக்கு கணிக்க தெரிய வேண்டும். அது மிகவும் முக்கியம் அதனால் யாருடன் பழகும்போதும் அவரது பார்வை பேச்சு இதெல்லாம் எப்படி இருக்கிறது என்று ரீட் பண்ணதொடங்கு அது உனக்கு மக்களை எடை போட உதவும் என்று கூறினாள்.
சரி அக்கா நான் ட்ரை பண்ணுகிறேன், சத்யா கொடுத்த சி.டி. யில் கூட இந்த மாதிரி ஒரு விஷயம் இருப்பதை நான் பார்த்தேன். கண்டிப்பாக நான் அதை முயற்சி செய்கிறேன் அக்கா என்று கூறினாள்.
மித்ரா அதிகம் பேசுவது அபிராமியிடமும் கிஷோரிடமும் தான் இதை அவள் கண்டிப்பாக அவர்கள் இருவரிடமும் தான் பயன்படுத்துவாள் என்று சுஜி நினைத்தாள்.
சுஜி நினைத்தது போல கிஷோரின் நோக்கத்தை கண்டுப்பிடிப்பாளா ? என்று அறிய தொடர்ந்து வாசியுங்கள் என் வானவில்.
-நறுமுகை.