என் வானவில்-1

என் வானவில்-1

அன்பு வாசகர்களுக்கு,
உங்கள் அனைவரையும் மீண்டும் ஒரு அழகான குடும்ப நாவல் மூலம் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. என்னுடை முந்தைய இரண்டு நாவலுக்கு நீங்கள் கொடுத்த ஆதரவிற்கு நன்றி. அதுபோலவே என்னுடைய மூன்றாவது நாவலுக்கும் உங்கள் ஆதரவு கிடைக்கும் என்று நம்புகிறேன். என் வானவில், நிச்சயமாக வானவில்லை போல வர்ணஜாலத்தோடு உங்கள் மனம்கவரும்……

திருச்சி மாநகரம் அதிகாலை வேளையில் மெல்ல  உறக்கத்தில் இருந்து விழித்துக்கொண்டிருந்தது. திருச்சி சென்ட்ரல் பஸ் ஸ்டாண்டிற்கு வந்து நின்ற அந்த சென்னை பேருந்தில் இருந்து இறங்கினான் சத்யபிரகாஷ்.

 இறங்கியவன் சுற்றி  பார்த்துவிட்டு ஆழமாக மூச்சை இழுத்து விட்டு, என்ன இருந்தாலும் சொந்த ஊருக்கு வருகின்ற சுகமே தனி என்று மனதில் நினைத்துக்கொண்டான்.

 பின் உச்சி பிள்ளையார் இருக்கும் திசையை பார்த்து கன்னத்தில் போட்டுக்கொண்டவன் மெதுவாக பஸ் ஸ்டாண்டில் இருந்து நடக்க தொடங்கினான். ஆட்டோ வேண்டுமா சார் என்று கேட்டு மொய்த்தவர்களை விலக்கி விட்டு தன் நடையை தொடர்ந்தான்.

சத்யபிரகாஷ் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் இறுதியாண்டு தேர்வை எழுதி முடித்துவிட்டு இப்போதுதான் ஊருக்கு வருகிறான். ராஜராஜன் ஜெயலட்சுமி தம்பதியின் ஒரே மகன். ராஜராஜன் அரசு மேல்நிலை பள்ளியில் தலைமை ஆசிரியராக இருக்கிறார். அவனது அம்மா ஜெயலட்சுமி குடும்ப தலைவி. இன்னும் சில வருடங்களில் ஓய்வு பெற இருக்கும் ராஜராஜன் தன் சொந்த ஊரில் இருக்கும் வீட்டை புதுப்பித்து கட்டும் எண்ணத்தோடு சில மேலிடத்து சிபாரிசுகளை வைத்து தன் சொந்த ஊருக்கே மாற்றல்  வாங்கிக்கொண்டு வந்து மூன்று மாதங்கள் ஆகிறது. சத்யபிரகாஷிற்கு இறுதியாண்டு தேர்வு நெருங்கிக் கொண்டிருந்ததால் அவன் தேர்வை முடித்துவிட்டு ஒன்றாக வந்துவிடுவதாக கூறினான். மெதுவாக திருச்சி வீதியில் நடந்து கொண்டிருந்தவனுக்கு பால்ய கால நினைவுகள் அவன் மனதில் பசுமையாக ஓடின.

அப்போதெல்லாம் ஒவ்வொரு ஆண்டு விடுமுறைக்கும் தாத்தா பாட்டி வீட்டிற்கு வந்துவிடும் சத்யபிரகாஷை அவர் தாத்தா சைக்கிளில் அமர வைத்துகொண்டு  திருச்சி நகரம் முழுவதும் சுற்றி திரிவார்.

பலமணிநேரம் கல்லணையில் விளையாடுவார்கள். வாரத்தில் இருமுறை  உச்சி பிள்ளையார் கோயிலுக்கு பாட்டியுடன் சென்றுவருவான்.

இன்று தாத்தாவும் பாட்டியும் இல்லை. ஆனால் அவர்களுடன் அவன் செலவு செய்த நாட்கள் இனிய நினைவுகளாக அவனது மனப்பெட்டகத்தில் இருந்தது. அவனது பால்ய காலநினைவுகளை அசைபோட்டபடியே நடந்துகொண்டிருந்தவன், தன்  வீடு இருக்கும் தெருவில் நுழைந்தான்.

ஆங்காங்கே சில பெண்கள் வெளியில் கோலம் போட்டுக்கொண்டிருந்தனர். சற்று தொலைவிலேயே தன் வீட்டின் முன் ஒரு பெண் கோலம் போட்டு கொண்டிருப்பதை பார்த்தான் பிரகாஷ், அதுவும் அதிகாலையிலேயே குளித்து முடித்து தலை முடியை  துண்டினால் சுற்றிக்கொண்டு பச்சை நிற தாவணி பாவாடையில் தெரிந்த அந்த பெண் யார் என்று பிரகாஷிற்கு தெரியவில்லை.

அந்த பெண்ணின் முகத்தில் இருந்த குழந்தை தனம் பிரகாஷை ஈர்த்தது. அவளையே பார்த்துக்கொண்டு வந்தவன் இந்த பொண்ணு யாராக இருக்கும் இதற்கு முன் நான் பார்த்தது இல்லையே?

எப்படியோ பிரகாஷ் ரெண்டு மாதம் லீவ் உனக்கு கலர்புல்லா இருக்கும் என்று தன்  மனதோடு பேசிக்கொண்டே அந்த பெண் போட்டுக்கொண்டிருந்த கோலத்தின் அருகில் சென்று நின்றான்.

யாரோ வந்து நிற்கும் அரவம் தெரிந்ததும் அவனை நிமிர்ந்து பார்த்தவள் வேகமாக எழுந்து நின்று நீங்க யார் என்று கேட்டாள்.

 ஒரு நிமிடம் அவளையே பார்த்து கொண்டிருந்தவன் அவள் கேள்வியில் சுய உணர்வு பெற்று ராஜராஜன் சார்……… என்று இழுத்தான்.

அவள் பதில் சொல்வதற்குள் உள்ளிருந்து வந்த ஜெயலட்சமி பிரகாஷ் வாடா…. நாளைக்கு தான் வருவதாக சொன்ன இன்றைக்கே வந்து நிற்கிற? என்று ஆர்ப்பாட்டமாக தன் மகனை வரவேற்றுகொண்டே வாசலுக்கு வந்தார்.

 தாயை பார்த்ததும் பெரியதாக புன்னகைத்தவன், நான் வரேன்னு சொல்லி இருந்தால் நைட்டெல்லாம் நீங்களும் தூங்காமல் விடிந்தும் விடியாததும் அப்பாவை எழுப்பி பஸ் ஸ்டாண்டிற்கு அனுப்பியிருப்பிங்க அதனால் தான் நாளைக்கு வருவதாக உங்களிடம் பொய் சொல்லிவிட்டு இன்றே வந்துவிட்டேன் என்று கூறினான் பிரகாஷ்.

போடா, உன்னை கூட்டிட்டு வருவதை விட உங்கள் அப்பாவிற்கு தூக்கம் தான் முக்கியமா என்று கேட்டவர் அங்கு நின்று கொண்டிருந்த சங்கமித்ராவை பார்த்து, மித்ரா இவன் என் மகன் பிரகாஷ். நான் கூட சொன்னேன் இல்லையா சென்னையில படிச்சிட்டு இருக்கானு, எக்ஸாம்ஸ் எல்லாம் முடிச்சிட்டு வந்துவிட்டான் என்று அந்த பெண்ணிடம் தன் மகனை அறிமுகம் செய்து வைத்தாள்.

கூடவே பிரகாஷிடம் இவள் மித்ராடா பக்கத்துக்கு வீட்டு பொண்ணு, டெய்லி அவர்கள் வீட்டில் கோலம் போடுவாள். எனக்கு இந்த மூட்டு வலியினால் கோலம் போட முடிவதில்லை. அதனால் நம் வீட்டிற்கும் சேர்த்து கோலம் போடுகிறாள் என்று அறிமுகப்படுத்தினார்.

பொதுவாக சிரித்தவள் எனக்கு லேட்டாயிடுச்சு ஆன்ட்டி நான் வீட்டுக்கு கிளம்புகிறேன் என்று சொல்லிவிட்டு தன்  வீட்டிற்குள் சென்று மறைந்தாள்.

பிரகாஷ் வீட்டிற்கும் மித்ரா வீட்டிற்கும் பெரிய தொலைவெல்லாம் இல்லை ஒரே ஒரு மதில் சுவர் மட்டும் தான் எனவே மித்ரா வீட்டிற்குள் செல்லும் வரை பார்த்துக்கொண்டு நின்றவன், தாய் தன்  தோளில் தட்டியதும் ஹ்ம்ம் என்னம்மா  என்றான்

வாசலிலேயே நிற்கிற வா உள்ளே போகலாம் என்று கூறி மகனை அழைத்து சென்றார்.

நாளை வருவதாக கூறிய மகன் இன்றே வந்ததும்  ராஜராஜன் மகனிடம், என்ன பிரகாஷ் என்கிட்ட சொல்லி இருந்தால் நான் பஸ் ஸ்டாண்டிற்கு வந்திருப்பேன் இல்லை என்றார்.

அதுக்கு தான் அப்பா சொல்லவில்லை இவ்வளவு காலையில் நீங்க எதற்கு பஸ் ஸ்டாண்டிற்கு,  எனக்கு என்ன இந்த ஊர் தெரியாதா நானே  வந்துவிட மாட்டேனா என்று சொல்லிக்கொண்டே தனது பையை ஓரமாக வைத்தான்

 ஆட்டோவில் வந்தாயா என்றுகேட்ட தந்தையிடம் , இல்லை அப்பா நடந்து தான் வந்தேன் என்று கூறினான்.

ஒரு ஆட்டோ பிடித்தாவது வந்திருக்கலாம் இல்லையா என்று அவர் கேட்க,

அது எதற்கு அப்பா, காலையில் இப்படி பொறுமையாக நடந்து வந்தது ரொம்போ நல்லாயிருந்தது என்று கூறிக்கொண்டே கொட்டாவி விட்டவன், அம்மா என்னை மதியம் வரை எழுப்பாதீங்க. பஸ்ல நைட்டெல்லாம் தூங்கவே இல்லை என்று கூறிக்கொண்டே சென்று தன் படுக்கையில் விழுந்தான்.

இரவெல்லாம் தூங்கவே இல்லை படுத்தவுடன் தூங்கிவிடுவோம் என்று எண்ணி படுக்கையில் விழுந்தவனின் மூடிய கண்களில் மித்ராவின் முகம் தோன்றியது. வெடுக்கென கண்ணை திறந்தவன் இது என்னடா இப்போ தான வெளியில் பார்த்துட்டு வந்தேன் அதற்குள் கனவில் எல்லாம் இந்த பொண்ணு வருது, சரி இல்லை பிரகாஷ் பேசாமல் கண்ணை மூடி தூங்கு, என்று தன்னோடு பேசிக்கொண்டே உறங்கி போனான்.

யார் இந்த மித்ரா…… பிரகாஷ் மற்றும் மித்ரா வாழ்க்கையில் நடக்க போகும் சுவாரஸ்யங்கள் என்ன என்று அறிய தொடர்ந்து வாசியுங்கள் ” என் வானவில் “……

-நறுமுகை

4

No Responses

Write a response