மாவீரன் அலெக்ஸாண்டர்

மாவீரன் அலெக்ஸாண்டர்

என் அன்பு சகாக்களுக்கு,

எனக்கு புத்தகம் படிக்கும் பழக்கம் உண்டு, அப்படி நான் படிக்கும் புத்தகங்களில் வரும் சில விஷயங்கள், சம்பவங்கள் மனதில் ஆழ பதிந்துவிடும். அப்படி என் மனதில் பதிந்து போன ஒரு சம்பவத்தை இங்கு உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன், சம்பவத்தை முழுவதும் படித்த பின் அதை நான் ஏன் உங்களுடன் பகிர்ந்தேன் என்பதை கூறுகிறேன். 

(புத்தகம் பெயர்:  மகா அலெக்சாண்டர்; ஆசிரியர்: ஆர். முத்துக்குமார்)

அவசர அவசரமாக கிளம்பிக் கொண்டிருந்தார் மாசிடோனிய மன்னர் பிலிப். அறைக்கு வெளியே யாரோ நடந்து வரும் சத்தம் கேட்டது. அறையின் வாசலைப் பார்த்தார். வெளியே அவரது மகன் நின்று கொண்டிருந்தான். ‘வா அலெக்சாண்டர், என்ன விஷயம்? அதிகாலையில் வந்திருக்கிறாய்?’ ‘இல்லை. உங்களைப் பார்த்துப் பேச வேண்டும்போல இருந்தது.’அப்படியா, நான் ஒரு குதிரைப் போட்டியைக் காண்பதற்காகச் சென்று கொண்டிருக்கிறேன். என்னுடன் வந்தால் வழியில் பேசலாம். தாராளமாக, ஐந்தே நிமிடங்களில் தயாராகி வந்துவிடுகிறேன். இதற்காகவே காத்துக்கொண்டிருந்தவன் போலத் துள்ளிக் குதித்து ஓடினான் அலெக்சாண்டர். சில நிமிடங்களில் தயாராக வந்து மன்னர் பிலிப்பின் முன் நின்றான். இருவரும் புறப்பட்டனர். போட்டி நடக்கும் மைதானம் ஜனத்திரளால் நிரம்பியிருந்தது. சுட்டெரிக்கும் வெயில் வேறு. ‘

உங்களில் யாருக்காவது தைரியம் இருந்தால் இந்தக் குதிரையை அடக்கிக் காட்டுங்கள்.’ திமிறிக்கொண்டிருந்த அந்தக் குதிரைக்குப் பக்கத்தில் நின்றபடி அலட்சியமாகச் சவால் விட்டுக்கொண்டிருந்தார் அந்தக் குதிரைக்குச் சொந்தக்காரர். தெஸ்ஸாலி நாட்டைச் சேர்ந்த அந்தக் குதிரையின் பெயர் பியூசிபேலஸ் (Bucephalas). மிகப்பெரிய மைதானம் அது. நட்ட நடுவே கம்பீரமாக நின்றுகொண்டிருந்தது அந்தக் குதிரை. தொடையைத் தட்டிக்கொண்டு ஆர்வத்துடன் குதித்த பத்து பேரை சற்று முன்னால்தான் அடித்து வீழ்த்தியிருந்தது. மன்னர் பிலிப், மகன் அலெக்சாண்டருடன் சென்று சிம்மாசனத்தில் அமர்ந்தார். ‘வீரத்தின் விளைநிலமான மாசிடோனியாவில் ஒரே ஒரு மெய்யான வீரன்கூட இல்லையா?’ கூட்டத்தைப் பார்த்து உறுமினார் குதிரையின் உரிமையாளர். கூச்சல் முற்றிலுமாக அடங்கியிருந்தது. மன்னர் பிலிப்பின் முகத்தில் கவலை ரேகைகள். தந்தையை ஒருமுறை நிமிர்ந்து பார்த்தான் அலெக்சாண்டர். ‘தந்தையே, நான் குதிரையை அடக்கட்டுமா?’ பிலிப் தன் மகனைப் பார்த்து சிரித்தார். அவன் திரும்பவும் கேட்டான்: ‘நான் விளையாட்டுக்காகச் சொல்லவில்லை. அனுமதி கொடுங்கள்.’ ‘குதிரையின் கால்கள் எப்படி இருக்கும்? தன்னுடைய சக்தியைத் திரட்டிக்கொண்டு ஒரு உதை உதைத்தால் உடலில் எத்தனை மோசமாக காயம்படும் என்பதெல்லாம் அவனுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. தன்னுடைய கால்களால் மண்ணைத் தூற்றிவிட்டால் அதன்பிறகு உயிருக்கு உத்தரவாதமே இல்லை என்கிற விஷயம் அவனுக்கு எப்படித் தெரிந்திருக்கும்? வெறுமனே குதிரையேற்றம் பழகிவிட்டால் போதுமா என்ன? அதுவும் பழகிய குதிரையில் ஏறி சவாரி செய்தவன்தானே? ஆர்வக்கோளாறில் கேட்கிறான்’ என்று உள்ளுக்குள்சிரித்துக்கொண்டார் மன்னர் பிலிப். ஆனாலும் தன்னுடைய வற்புறுத்தலைக் கொஞ்சமும் குறைத்துக்கொள்ளவில்லை அலெக்சாண்டர். மீண்டும் கேட்டான். மீண்டும். மீண்டும். தந்தையின் மனம் கசியும்வரை. மன்னரின் தலை சம்மதம் என்று சொல்லி அசையும்வரை.

‘சரி, நீ மட்டும் அந்தக் குதிரையை அடக்கிவிட்டால் அந்தக் குதிரையை வாங்கி உனக்கே பரிசாகத் தருகிறேன்.’ அனுப்பிவிட்டார். ஆனால் உள்ளுக்குள் உதறல். மன்னருக்குத்தான். ‘அவன் குதிரையை அடக்கத் தேவையில்லை. அடிபடாமல் திரும்பி வந்தாலே போதும்.’ கடவுளைப் பிரார்த்தனை செய்தபடியே மைதானத்துக்குள் அனுப்பிவைத்தார் மன்னர் பிலிப். சுற்றிலும் இருந்த வீரர்களை ஒருமுறை பார்த்தார். அவர்கள் நிமிர்ந்து நின்றுகொண்டனர். ‘ஏதாவது பிரச்னை என்றால் உத்தரவுக்காகக் காத்திராமல் களத்தில் குதித்து அலெக்சாண்டரைக் காப்பாற்றவேண்டும்’ என்பதுதான் மன்னருடைய பார்வைக்கு அர்த்தம். அதை ஆமோதிப்பது போலவே நிமிர்ந்து நின்று தாங்கள் தயாராக இருப்பதாக மன்னருக்கு உணர்த்தினார்கள். இதுபோன்ற குறிப்பால் உணரும் சங்கதிகள் மாசிடோனியாவில் அதிகம் அமலில் இருந்தன. அரண்மனையிலும் சரி, யுத்தக்களத்திலும் சரி, சமிக்ஞைகள் பிரதான இடம் வகித்தன. இப்போது மைதானத்தில் இறங்கியிருந்தான்.

அலெக்சாண்டர். குதிரையை நெருங்கினான். வானத்தை அண்ணாந்து பார்த்தான். குதிரையின் பளபளக்கும் சருமத்தில் தன் விரல்களை ஓடவிட்டான். முரட்டுத்தனமாக அதைப் பிடித்து இழுக்கவில்லை. தாவி அதன் முதுகில் ஏறவில்லை. ஒரு முறை அந்தக் குதிரையைச் சுற்றிவந்தான். பிறகு, அந்தக் குதிரையைத் தொட்டுத் தொட்டு மெல்ல எதிர் திசையில் திருப்ப முயற்சி செய்தான். கூடியிருந்த அத்தனைபேருக்கும் ஆச்சரியம். என்ன செய்கிறான் இவன்? அப்படியே நகர்த்தி நகர்த்தி வெளியில் கொண்டு வந்துவிடப் போகிறானா? அரண்மனைத் தோட்டத்தில் கட்டி வைத்து விளையாடப் போகிறானா? சிறுவர்கள் பங்கேற்கும் விளையாட்டா இது? மாபெரும் வீரர்கள், வீர பத்திரன் பேரன்கள் எல்லாம் சரிந்து விழுந்திருக்கிறார்கள். ஒரு சிறுவனா அடக்கப்போகிறான் அந்தச் சண்டிக்குதிரையை? ஹும், என்ன செய்வது? மன்னருடைய வாரிசு. வாய் விட்டுச் சிரித்தால் தலையே போனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஆரவாரம். கூச்சல். ஆர்ப்பாட்டம். அலெக்சாண்டரின் கவனம் குதிரை மீது மட்டுமே இருந்தது. சுற்றிலும் உள்ள கூட்டம், மன்னரான தந்தை, இதற்கு முன்னால் தோற்று அடிவாங்கி நிற்கும் வீரர்கள்.எதைப் பற்றியும் சிந்திக்கவில்லை அவன். சில நொடிகளில் அந்தக் குதிரையை எதிர்த்திசையில் திருப்பி நிறுத்தினான். பிறகு, ஒரே தாவு. மின்னல் வேகத்தில் குதிரை மீது ஏறிவிட்டான்.

 ‘ஆ, என் மகனே!’ வாய் விட்டுக் கூச்சல் போட்டுவிட்டார் மன்னர் பிலிப். அரங்கத்தில் இருந்த அத்தனை பேரும் துள்ளி எழுந்தார்கள். அந்தக் குதிரையின் மீது அமர்ந்தபடியே மைதானம் முழுவதையும் ஒருமுறை சுற்றிவந்த பிறகு சர்வ சாதாரணமாக தாவிக் குதித்து இறங்கினான் அலெக்சாண்டர். ‘பிலிப் ஓடோடி வந்தார். மகனே என் சமர்த்து. என்ன செய்தாய்? எப்படிச் செய்தாய்? சொல், சொல்.’ தோள்களைக் குலுக்கிக்கொண்டே பதிலளித்தான் அலெக்சாண்டர். ‘அப்பா, அந்தக் குதிரை வேண்டுமென்றே சண்டி செய்யவில்லை. சூரிய ஒளி அதன் கண்களில் விழுந்து அதை வெறி கொள்ளச் செய்திருக்கிறது. குதிரையை எதிர்த் திசையில் செலுத்தினேன். ஒத்துழைத்தது. அவ்வளவுதான்.’

குதிரை அடக்குவதை வெறுமனே வேடிக்கை பார்க்க வந்த அந்த அலெக்சாண்டர், மாவீரன் அலெக்சாண்டராக உருமாறத் தொடங்கியது அந்தப் புள்ளியில் இருந்துதான்.

அலெக்ஸாண்டரின் குதிரை பெயர் என்ன என்று கேட்டு ஒரு திரைப்பட நகைச்சுவை உண்டு, ஆனால் அந்த குதிரை ஒரு வரலாற்று நாயகனின் முதல் வெற்றி சின்னம். உங்களுக்கு மனதில் பயம், தயக்கம் இருந்தாலும் உங்கள் குழந்தைகள் புதிதாக ஒன்றை முயற்சிக்கும் போது அவர்களை தடுக்காதீர்கள், அவர்களுக்கு தேவைப்படும் போது உதவுவதற்கு தயாராக இருங்கள். உங்களால் ஒன்று முடியவில்லை என்பதனாலேயே உங்கள் குழந்தைகளால் அது முடியாது என்று நீங்களே முடிவு செய்யாதீர்கள். பெரியவர்கள் அறிவுக்கு எட்டாத சிறு விஷயங்கள் உங்கள் சிறு குழந்தைகள் அறிவுக்கு புலப்படலாம். அத்தனை வீரர்கள், மன்னர், மக்களுக்கு புரியாத குதிரையின் நிலை, அங்கிருந்த சிறுவன் அலெக்ஸாண்டர்க்கு புரிந்தது. எந்த திருப்பத்தில் வாழ்க்கை மாறும், எந்த சம்பவம் உங்கள் குழந்தையின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் என்று உங்களால் சொல்லிவிட முடியாது, எனவே அவர்களின் ஆர்வத்திற்கு என்றும் தடை விதிக்காதீர்கள். இவை அனைத்தை விட முக்கியம் அவர்கள் மேல் நீங்கள் கொள்ளும் நம்பிக்கை. அன்று மாசிடோனிய மன்னர் தன் மகனை தடுத்திருந்தால் ஒரு வேலை இன்று வரலாற்றில் அலெக்ஸாண்டர் என்று ஒருவர் இல்லாமலே போய் இருக்கலாம். முயற்சி செய்து பார்க்கும் சுதந்திரமும் , உன்னால் முடியும் என்ற உந்துதலும், துணிந்து செய் நங்கள் இருக்கிறோம் என்ற நம்பிக்கையும் பெற்றோர்கள் மூலம் எந்த குழந்தைகளுக்கு கிடைக்கிறதோ அவர்கள் நிச்சயம் வாழ்க்கையின் உயர்ந்த நிலையை அடைவார்கள். எந்த மரத்தின் வேரும், மரம் தன்னை விட்டு பிரிய கூடாது என்று எண்ணி அதனை மண்ணிலே பிடித்து வைப்பது இல்லை.பெற்றோர்கள் மரத்தின் வேர் போன்றவர்கள், வேரின் நம்பிக்கையில் தான் மரங்கள் செழித்து வளர்கின்றனர். உங்கள் பிள்ளைகள் ஓங்கி வளர அவர்களுக்கு நம்பிக்கை வேர்களை குடுத்து உதவுங்கள். தொடர்ந்து பேசலாம்……..

என்றும் அன்புடன்
சக தோழி

8

No Responses

Write a response