நிதானம்

நிதானம்

“Today a reader, tomorrow a leader.” – Margaret Fuller

என் அன்பு சகாக்களுக்கு,

இது ஸ்மார்ட் போன் உலகம், நம்ம  கையில் இருக்கும் ஸ்மார்ட் போன் விட நம்ம குழந்தைங்க ஸ்மார்ட்டா இருக்காங்க. பாட்டி தாத்தாக்கு பேரன் பேத்தி போன் பயன்படுத்துறதை பார்த்து ஒரே பெருமையா இருக்கு . இந்த வளர்ச்சிக்கு இடையில் நம்ம கவனிக்க தவறிய விஷயம் தான் நிதானம்.இன்றைக்கு வாழ்க்கை ஓட்டப்பந்தயம் போல் ஆகிவிட்டது,அதிவேக இரயில், துரித உணவகம்,என்று வாழ்க்கை நிமிடங்களில் ஓடிக்கொண்டு இருக்கிறது. ஆனால் நம் குழந்தை பருவம் இதுபோன்றது இல்லை. நாம் நம் வாழ்வை நம்மை சுற்றி இருந்தவற்றை நிறுத்தி நிதானமாக ரசித்து வளர்ந்தோம்.அந்த நிதானம் இன்று நம்ம குழந்தைகளிடம் இல்லை. ஸ்மார்ட் போனில் விளையாடும் அதிவேக விளையாட்டுகள்,பார்க்கும் குழந்தைகள் படங்கள், தினசரி வாழ்க்கையில் வெளியில் பார்க்கும் பரபரப்பு என்று அனைத்தும் அவர்களுக்கு வேகத்தை கற்றுக்கொடுக்கிறது. இந்த வேகம் நாளடைவில் அவர்களிடம் இருக்கும் பொறுமையை அழித்துவிடும். நாளை நீங்கள் எதை கூறினாலும் நின்று கேட்கும் பொறுமை அவர்களிடம் இல்லாமல் போய்விடும்.எனவே காலம்கடக்கும் முன் நம் குழந்தைகளுக்கு சிறுது நிதானத்தையும் கற்றுக்கொடுக்க வேண்டியது பெற்றோரின் கடமை. எவ்வளவு பரபரப்பான காலை வேலையிலும் சில வீடுகளில் அப்பா நிதானமாக செய்தித்தாள் படித்துக்கொண்டு இருப்பார். அது அவருக்கு அவருடைய அப்பாவிடம் இருந்த வந்த பழக்கமாக இருக்கும். இந்த அதிவேக உலகத்தில் உங்கள் குழந்தைகளுக்கு நிறுத்தி நிதானமாக புத்தகம் படிக்க சொல்லிக்கொடுங்கள். யாரோ கற்பனையில் உருவாகும் படங்களை காட்டுவதை விட ஒரு புத்தகத்தை கொடுத்து அவர்களின் கற்பனை உலகத்தை திறந்து விடுங்கள். நாம் படித்த மாயாவி கதைகளும்,என்றும் முடியாத சிந்துபாத் கதைகளும் நம்மை அழைத்து சென்ற கற்பனை உலகத்தில் நம் பிள்ளைகளும் பயணப்படட்டும். புத்தகம் படிக்கும் பழக்கம் நம் பிள்ளைகளுக்கு சிந்திக்க கற்றுக்கொடுக்கும்,கற்பனை திறனை வளர்க்கும், எப்பொழுதும் பரபரவென இருக்கும் அவர்களின் மூளையை நிறுத்தி நிதானமாக செயல் பட வைக்கும். இந்த பழக்கம் குழந்தைகளுக்கு ஏற்படும் கவனசிதறல்களை சரிசெய்ய உதவும். முதலில் அவர்களுக்கு படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துங்கள், பின் அந்த புத்தகங்களின் மூலம் பெருந்தலைவர்களையும்,சாதனையாளர்களையும், உலகின் பல்வேறுபட்டமாறுபட்டு மக்களையும் உங்கள் குழந்தைகள் தெரிந்துகொள்ளுவார்கள். பாட புத்தகம் உங்கள் குழந்தையின் அறிவை வளர்க்கும் , மற்ற புத்தகங்கள் அவர்களின் சிந்திக்கும் திறனை, முடிவெடுக்கும் ஆற்றலை, மற்றவர்களிடம் இருந்து மாறுபட்டு யோசிக்கும் திறமையை கொடுக்கும். உங்கள் குழந்தைகள் 1000 பேர் இருக்கும் இடத்தில் அவர்களின் சிந்தனையால் தனித்து தெரியவேண்டும் என்று நீங்கள் ஆசை பட்டால் இன்று அவர்கள் கையில் ஸ்மார்ட் போனிற்கு பதிலாக புத்தகத்தை கொடுங்கள். தொடர்ந்து பேசலாம்……

என்றும் அன்புடன்
சக தோழி

1

No Responses

Write a response