சூழ்ச்சி வலைகள்

சூழ்ச்சி வலைகள்

“Be a strong woman. So your daughter will have a role model and your son will know what to look for in a woman when he’s a man. ”

என் அன்பு சகாக்களுக்கு
சில நாட்களுக்கு முன் ஒரு காணொளி பார்த்தேன். அதை பற்றி உங்களிடம் சொல்ல விரும்புகிறேன், இது பலருக்கு அச்சத்தையும், என்னதான் செய்வது போன்ற உணர்வையும் கொடுக்கும். அந்த காணொளியில் காவல் துறை உயரதிகாரி ஒருவர் சமீபத்தில் நடந்த ஒரு சம்பவத்தை பற்றி பேசுகிறார். அந்த சம்பவம் இதுதான், ஒரு கல்லூரி மாணவிக்கு தெரியாத எண்ணில் இருந்து ஒரு குறுஞ்செய்தி நீ அழகாக இருகிறாய் என்று வருகிறது. இது யாராக இருக்கும் என்று அந்த பெண் யோசிக்கிறாள், அன்று முழுவதும் அந்த சிந்தனை அவளுக்கு இருக்கிறது. இரு தினங்களுக்கு பிறகு மீண்டும் ஒரு குறுஞ்செய்தி வருகிறது இன்று உன் உடை நன்றாக இருக்கிறது என்று, தன்னை யாரோ அருகில் இருந்து கண்காணிக்கிறார்கள் என்று அந்த பெண்ணிற்கு புரிகிறது, கூடவே அது யாராக இருக்கும் என்ற ஆர்வமும் தோன்றுகிறது, குறுஞ்செய்திகள் தொடர்ந்து வருகிறது, அந்த பெண்ணின் ஆர்வம் அதிகமாகி யாரென்று அறியும் ஆவலில் குறுஞ்செய்திக்கு பதில் அனுப்புகிறாள், அந்த ஒற்றை குறுஞ்செய்தி அவளை இன்று சிறைக்கு கொண்டு சேர்த்திருக்கிறது. அந்த அறிமுகம் இல்லாத நபருடன் பேச தொடங்கி, அது காதலாகி, தன் காதலை நிரூபிக்கவேண்டி காதலன் சொன்ன நபரை எதற்கென்று யோசிக்காமல் பின் தொடர்ந்து அவரது அன்றாட நடைமுறைகளை காதலனுக்கு தெரியப்படுத்தி இருக்கிறாள். அதன் பின் அந்த நபர் கடத்த பட்டு கொல்லப்பட்டார். காவல்துறை விசாரணையை தொடங்கி கொலையாளியை கைது செய்து அவனது கைபேசியில் இருந்து அந்த பெண்ணின் எண்ணை எடுக்கிறது, அடுத்தகட்ட விசாரணையில் அந்த பெண் கொடுத்த தகவல்கள் மூலம்தான் கடத்தல் நடந்துள்ளது என்று காவல்துறை கண்டறிகிறது. அந்த பெண்ணை காவல் துறை விசாரிக்கிறது, அவள் நடந்ததை கூறி தான் செய்ததை அறியாமல் செய்து விட்டதாக கூறுகிறாள்,காவல் துறை அவளை சாட்சியாக மாறச்சொல்கிறது, ஆனால் அந்த பெண் தான் இனி யாருடனும் வாழ முடியாதகு என்றும்,காதலனுடன் ஒரு வாழ்க்கை வாழ்ந்து முடித்துவிட்டதாகவும் கூறி, செய்த தவறை ஒப்புக்கொண்டு சிறை தண்டனையை ஏற்றுக்கொண்டாள். நன்றாக படித்து கொண்டிருந்த ஒரு கல்லூரி மாணவியை திசை திருப்ப ஒற்றை புகழ்ச்சி போதுமா? பெண்களுக்கான ஆபத்துகள் அதிகரித்து வரும் இந்த நிலையில் நம்மால் எல்லா நேரங்களிலும் நம் பிள்ளைக்கோளோடு இருக்க முடியாது. அதனால் அவர்களுக்கு வாழ்கை பற்றிய புரிதலையும், தங்களுக்காக விரிக்கப்படும் வலைகளில் சிக்கிக்கொள்ளாமல் இருப்பதற்கான வழிகளையும் சொல்லிக்கொடுப்பது அவசியம். பெண் குழந்தைகள் இருக்கும் வீடுகளில் நாம் பெரும்பாலும் அவர்கள் அழகை வர்ணிப்பது வழக்கம்,நீ அழகா இருக்க, நீ மஹாலஷ்மி மாதிரி இருக்க இதுபோன்ற கொஞ்சல் மொழிகள் சாதாரணம். இதுவே இவர்கள் வளர்ந்து வரும்போது அவர்களுக்கு தங்களது அழகை பற்றிய கவனத்தை கொடுக்கிறது. இன்று வரும் விளம்பரங்களும்,படங்களும் அவர்களின் எண்ணத்திற்கு வலுசேர்க்கின்றனர். இந்த பலவீனம் தான் பெண்களை இதுபோன்ற ஆண்களின் வலையில் வீழ்த்துகிறது.
உங்கள் பெண் குழந்தைகளுக்கு அழகு என்பது உன் மனம் சம்பந்தப்பட்ட விஷயம், உடல் சம்பந்தப்பட்டது இல்லை என்று புரியவையுங்கள்.பெண்கள் அழகை நம்பியில்லை தங்களது தன்னம்பிக்கையை நம்பி இருக்க வேண்டும் என்று மீண்டும் மீண்டும் சொல்லுங்கள். அழகு நிரந்தரமானது இல்லை,அவர்களின் அறிவும், சிந்திக்கும் திறனும், பிறர்க்கு உதவும் குணமுமே என்றும் அவர்களின் அடையாளமாக இருக்கும் என்று கற்று கொடுங்கள். இவை இல்லாது எந்த அறிமுகமற்றவரிடமும் பேசும் முன் பலமுறை யோசித்து பேச சொல்லுங்கள். அதேபோல் யாரை சந்தித்தாலும்,அவர்கள் வாழ்வில் வரும் புது நபர்களை பற்றி உங்களிடம் அச்சமின்றி பகிர்ந்துகொள்ளும் நட்பை உங்கள் பெண்களிடம் ஏற்படுத்திக்கொள்ளுங்கள். வரலாற்றில் உள்ள பெண் தலைவர்களை அவர்களுக்கு அறிமுகம் படுத்துங்கள். அதோடு ஒவ்வொரு வீட்டிலும் பள்ளிக்கு செல்லாமல், வாழ்க்கையை படித்து குடும்பத்தை தூக்கிநிறுத்திய பாட்டிகள் இருப்பார்கள்,அவர்களை பற்றி அவர்களிடம் பேசுங்கள். எது நடந்தாலும் என் குடும்பம் எனக்கு துணை நிற்கும் என்ற நம்பிக்கையை அவர்களுக்கு கொடுங்கள். பருவ வயதில் இருக்கும் உங்கள் பெண்களுக்கு அம்மா, அப்பா இருவரின் நேரமும் மிக அவசியம், அந்த நேரத்தை நீங்கள் கொடுக்க மறந்தால், அது தவறான நட்பை அவர்களுக்கு ஏற்படுத்தி கொடுத்துவிடும். மேலும் வெளியில் இருக்கும் ஆபத்துகள் உங்கள் பெண்களின் பாதுகாப்பை பற்றி தொடர்ந்து பேசலாம்…….

என்றும் அன்புடன்
சக தோழி

7

No Responses

Write a response