நம்பிக்கை

நம்பிக்கை

என் அன்பு சகாக்களுக்கு

ஒரு வாரமா கொஞ்சம் வேலை அதான் உங்ககூட பேச முடியலை. ஆனா ரொம்போ முக்கியமான விஷயத்தை உங்ககூட பேசனுன்னு காத்திருந்தேன். இந்த கொஞ்ச வாரமா தமிழ்நாட்டுல எல்லாரும் அதிகம் கேள்விபட்ட ஊர் பொள்ளாச்சி. பெண் இருக்கும் பெற்றோர் எல்லாருக்கும் பயத்தை கொடுத்த சம்பவம். கைபேசியோடு இருக்கும்  பெண் குழந்தைகளை கண்டு பதறி போக வைத்தது. இந்த சம்பவம் பற்றி பலரும் பலவிதமான கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.நான் இங்கு அந்த சம்பவத்தை ஒரு பெண் அவளுடைய பெற்றோரிடத்தில் என்ன  எதிர்பார்க்கிறாள் என்ற கோணத்திலிருந்து சில விஷயங்கள் சொல்ல ஆசைப்படுகிறேன். இந்த விஷயம் கேள்விப்பட்ட பிறகு எத்தனை பேர் உங்கள் வீட்டு பெண் கைபேசி பயன்படுத்தும்போது அவர்களிடம் காரணம் இன்றி கோவம் கொண்டீர்கள் பலர் செய்து இருப்பீர்கள். இன்னும் சிலர் அவர்கள் கைபேசியை சோதனை செய்து இருப்பீர்கள். விடுதியில் தங்கி படிக்கும் பெண்களுக்கு பல அறிவுரைகள் சொல்லப்பட்டிருக்கும். எத்தனை  பேர் தங்கள்  வீட்டில் இருக்கும் ஆண் பிள்ளையிடம் இந்த சம்பவம் பல பெண்களின் வாழ்க்கையில் எத்தனை மோசமான விளைவை ஏற்படுத்தி இருக்கிறது என்றும் , ஆண் பிள்ளைகளின் பலம் பெண்ணிற்கு காவலாக இருக்கவேண்டுமே தவிர அவர்களுக்கு எதிராகவே அதை பயன்படுத்த கூடாது என்றும் எத்தனை பேர் அறிவுரை சொன்னீர்கள். 100 க்கு 80 பேர் இதைப்பற்றி யோசித்துக்கூட இருக்கமாட்டார்கள். பெண் தன்னை பாதுகாத்துக்கொள்வது எவ்வளவு முக்கியமோ அதைவிட முக்கியம் ஒரு ஆண் அவளின் பாதுகாப்புக்கு  இடையூறு செய்யாமல் இருப்பது. உங்கள் வீட்டு பெண்ணுக்கு பாதுகாப்பு பற்றி அறிவுரை கூறுவதற்கு முன் உங்கள் வீட்டு ஆண் பிள்ளைகளிடம் பெண்களை காயப்படுத்தாமல் இருக்க சொல்லி கொடுங்கள்.

பெண் வைத்து இருக்கும் பெற்றோருக்கு இந்த சம்பவம் எவ்வளவு அதிர்ச்சியை கொடுத்துஇருக்கும் என்று புரிகிறது.அந்த அதிர்ச்சியை அப்படியே  உங்கள் பிள்ளைகளிடம் காட்டாதீர்கள், அது அவர்களை உங்களிடம் இருந்து தூரம் கொண்டுசெல்லும். பெண்களை குறிவைக்கும் வேடர்களுக்கு அதுதான் முதல் பலம். எப்படி இருக்க வேண்டும் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்றெல்லாம் அறிவுரை கூறுவதற்கு முன்பு எது நடந்தாலும் என்ன தவறு செய்திருந்தாலும் உன்னை அரவணைக்க உன் குடும்பம் என்றும் உன்னோடு உண்டு என்ற நம்பிக்கையை அவர்களுக்கு கொடுங்கள்.இந்த நம்பிக்கை பாதிக்கப்பட்ட முதல் பெண்ணிற்கு இருந்து இருந்தால் அடுத்தடுத்து பாதிக்கப்பட்ட பலரை காப்பாற்றி இருக்கலாம். உங்கள் பிள்ளை தவறு செய்யும்போது கண்டிக்கும் உரிமை உங்களுக்கு உண்டு, அதே நேரம் அவர்களை ஒரு பிரச்னையில் இருந்து காக்கும் பொறுப்பும் உங்களுக்கு உண்டு. இன்றைய அவசர உலகில் அனைவரும் வேறு வேறு நோக்கத்துக்காக ஓடிக்கொண்டு இருக்கிறோம் அந்த ஓட்டத்தில் உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் கொடுக்கவேண்டிய நேரத்தை கொடுக்க மறந்துபோறீர்கள். உங்களிடம் கிடைக்காத அந்த நேரத்தைத்தான் நம் பிள்ளைகள் வெளியில் தேடுகிறார்கள்.அதுதான் ஆண் பிள்ளைகளுக்கு தவறானவற்றை கற்றுத்தருகிறது, அந்த இடைவெளி தான் பெண் பிள்ளைகளுக்கு கூடா நட்பை ஏற்படுத்துகிறது. நம் பிள்ளைகளின் செயல்களை நாம் பாராட்ட மறந்தால் அல்லது நமக்கு அதற்கு நேரம் இல்லாமல் போனால் அதனை அவர்கள் வேறு இடத்தில் தேடி செல்வார்கள். பறவைகளை,குறிவைக்கும் வேடனுக்கு எதை செய்தால் பறவை வலையில் சிக்கும் என்று  நன்றாக தெரியும். அந்த வாய்ப்பை நாமே உருவாக்கி கொடுக்கக்கூடாது.உங்களின் அவசர உலகின் ஓட்டத்திற்கு இடையில் உங்கள் பிள்ளைகளுக்கான நேரத்தை ஒதுக்குங்கள்.அவர்களின் நடவடிக்கைகளை, அவர்களின் நட்பு  வட்டத்தை, அவர்களின் விருப்பு  வெறுப்புகளை தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள். அவர்களின் அன்றாட செயல்பாடுகளை கேட்டு தெரிந்துகொள்ளுங்கள். தவறே செய்தாலும் உங்களிடம் வந்து சொல்லும் நம்பிக்கையை ஏற்படுத்துங்கள்.நம் பிள்ளைகளின் பாதுகாப்பு நமது பொறுப்பு. தொடர்ந்து  பேசலாம் ……….

என்றும் அன்புடன்
சக தோழி

1

No Responses

Write a response