சூழ்ச்சி வலைகள்-2

சூழ்ச்சி வலைகள்-2

என் அன்பு சகாக்களுக்கு,
நாம் நம் வீட்டு இளவரசிகளின் பாதுகாப்பை பற்றி பேசிக்கொண்டு இருந்தோம். முகம் தெரியாதவர்கள் நம் பெண்களுக்கு ஏற்படுத்தும் பாதிப்புகளை பற்றி பேசினோம், முகம் தெரியாதவர்களை தவிர்ப்பது எளிது. நம் பெண்கள் வெளியாட்களை அவர்கள் வாழ்க்கையில் அனுமதிக்காத வரை,அவர்களால் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்பு மிகவும் குறைவு. ஆனால் அன்றாட வாழ்வில் நம் பெண்கள் பலரை சந்திக்கின்றனர், குடியிருப்பு காவலாளி தொடங்கி, நடத்துனர்,ஆட்டோக்காரர், வாடகை கார் ஓட்டுநர்,உடன் பணிபுரிபவர்கள் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். இவர்கள் அனைவரும் ஆபத்தானவர்கள் என்று நான் சொல்லவில்லை. இவர்களில் நல்லவர்கள், கெட்டவர்கள், சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொள்பவர்கள் என அனைவரும் அடக்கம். இவர்களில் யார் எப்படி என்று ஆராய்ச்சி செய்வதற்கு பதில் நாம் நம் பெண்களுக்கு சில தற்காப்பு நடவடிக்கைகளை சொல்லிக்கொடுப்பது அவசியம். “வருமுன் காப்போம் ” வந்தபின் வருத்தப்பட்டு பயன் இல்லை.
1) எப்பொழுதும் பொது இடங்களில் விழிப்புடன் இருக்க சொல்லுங்கள் . பேருந்திற்கு நிற்கும் பொழுது, சுரங்கவழி பாதைகளில் நடக்கும் பொழுது, சுற்றி இருப்பவர்கள் பற்றி கவனம் இருப்பது மிகவும் அவசியம். ஆட்டோ, வாடகை கார் போன்றவற்றில் பயணம் செய்யும் போது போகும் வழி பற்றி அறிந்து இருப்பது முக்கியமானது.
2)தனியாக பயணம் செய்யும்பொழுது தங்களை மறந்து கைபேசியில் உரையாடுவது, குறுஞ்செய்திகள் அனுப்புவதை தவிர்க்க சொல்லுங்கள்.
3)பொது இடங்களில் சத்தமாக தொலைபேசி எண்ணை பகிர்வது, வீட்டு முகவரியை சொல்வது, அடுத்து செல்லப்போகும் இடத்தை பற்றி திட்டமிடுவது போன்றவற்றை முற்றிலுமாக தவிர்க்க சொல்லுங்கள். இது அவர்கள் அறியாமல் அவர்களை நெருங்கும் ஆபத்திற்கு வழிவகுக்கும்.
4)இரவுகளில் வீடு திரும்பும்போது கூடுதல் எச்சரிக்கையோடு இருப்பது அவசியம், எங்கு இருக்கிறார்கள்,எப்படி வீட்டிற்கு வரப்போகிறார்கள், புறப்படும் நேரம் போன்றவற்றை பெற்றோர் அறிந்திருப்பது நல்லது.
5)வெளியூரில் விடுதியில் தங்கி இருக்கும் பெண்கள், இரவு அறைக்கு வந்து விட்டார்களா என்று பெற்றோர் கேட்டு தெரிந்துகொள்வது அவசியம்.
6) கைபேசி மூலம் எவ்வளவு தீமைகள் உள்ளதோ அதே அளவு நன்மைகளும் உண்டு. எங்கு செல்கிறோம் என்று வழியை சரி பார்த்து கொள்ள, எங்கு இருக்கிறோம்,பயணிக்கும் ஆட்டோ, கார் எண்ணை பகிர்ந்துகொள்வது என்று அதனை அவர்களின் பாதுகாப்பிற்கு பயன்படுத்த சொல்லி கொடுங்கள்.

நான் முன்பு சொன்னது போல சொல்லும்விதம் என்று ஒன்று உண்டு. அவர்களிடம் இவை பற்றி பேசும் போது இது அவர்களுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் அல்ல , அவர்களின் தற்காப்புக்கான முன்னெச்சரிக்கைகள் என்று சொல்லுங்கள். நீ இதை செய்ய வேண்டும், இப்படித்தான் இருக்கவேண்டும் என்றெல்லாம் சொல்லாமல், அவர்களுக்கு வெளியில் காத்திருக்கும் ஆபத்துகள் பற்றி எடுத்து சொல்லி , இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவர்களின் பாதுகாப்பிற்கே தவிர அவர்களை கட்டுப்படுத்த அல்ல என்று விளக்கி கூறுங்கள். நாங்கள் எப்பொழுதும் உன் மீது நம்பிக்கை வைத்துள்ளோம், நீ இன்னும் பல உயரங்கள் அடையவேண்டும் என்று விரும்புகிறோம், எது நடந்தாலும் உன் குடும்பம் உன்னோடு இருக்கும் என்ற நம்பிக்கையை அவர்களுக்கு கொடுங்கள். பெற்றோரின் அன்பு,அரவணைப்பு,நம்பிக்கை, நீங்கள் அவர்களுக்காக செலவிடும் உங்கள் நேரம் இவையே உங்கள் பெண்களை காக்கும் அரணாக இருக்கும். தொடர்ந்து பேசலாம் ……..

என்றும் அன்புடன்
சக தோழி

5

No Responses

Write a response