New Tamil Novel | Meendum Malarvai

மீண்டும் மலர்வாய்-12

கணவனுடன் காரில் ஏறி அமர்ந்ததும் சஞ்சனாவிற்கு படபடப்பாக இருந்தது. பல வருடங்களுக்கு பிறகு இதுபோல் அவனுடன் ஒன்றாக பயணிக்கிறாள். திருமணமான புதிதில், ஏன் அவர்கள் இருவரும் பிரியும் வரைக்கும் கூட சஞ்சனாவிற்கும், ஆதிக்கும் தனியாக காரில் பேசிக்கொண்டே வெகுதூரம் செல்வது மிகவும் பிடிக்கும். இரவில் வேலை முடித்து தாமதமாக வந்தாலும் சில நேரங்களில் காரணமின்றி கூட ஒரு மணிநேரம் காரில் சுற்றி வருவார்கள்.  

பாரதி பிறந்தபிறகும் பாரதியோடு சேர்ந்து  வார இறுதி நாட்களில் அதுப்போல செல்வதற்கு அவர்களுக்கு மிகவும் பிடிக்கும்.  ஏனோ சஞ்சனாவிற்கு இன்று அந்த நினைவுகள் எல்லாம் முட்டி மோதின, தலையை உலுக்கி அந்த நினைவுகளில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்டவள் ரோட்டை வெறித்த வண்ணம் அமைதியாக அமர்ந்திருந்தாள். பாரதி சலசலவென்று தன் தந்தையிடம் பேசிக்கொண்டே வந்தாள். பாரதியின் பேச்சு மட்டுமில்லாமல் இருந்திருந்தால் அந்த அமைதியை சஞ்சனாவால் தாங்கி இருக்க முடியாது. 

வீட்டிற்கு சென்று இறங்கியதும் பொன்னியும், அன்னமும் ஆரத்தி தட்டுடன் முகம் முழுக்க புன்னகையுடன் சஞ்சனாவை எதிர் கொண்டனர்.  சஞ்சனா ஆதியை திருமணம் செய்வதற்கு முன் ஆதி வீட்டில் வேலைக்கு என்று ஆண்கள் மட்டுமே இருந்தனர். திருமண சமயத்தில் தான் சஞ்சனாவிற்கு உதவியாக இருக்கும் என்று பொன்னியையும், அன்னத்தையும் ஆதி வேலைக்கு வைத்தான்.

அவள் அங்கிருந்து சென்ற பிறகும் கூட அவளுக்காக செய்த எந்த விஷயங்களையும் ஆதி அந்த வீட்டில் மாற்றவில்லை என்று மாயா மூலமும் பாரதி மூலமும் அறிந்து தான் இருந்தாள் சஞ்சனா. மிகவும் சந்தோஷத்துடன் சஞ்சனா, பாரதி, ஆதியை நிற்க வைத்து ஆரத்தி சுற்றிய பொன்னியும் அன்னமும், சஞ்சனாவிடம், எவ்வளவு நாள் ஆச்சுமா நீங்க இங்க வந்து, நீங்க இங்க வறீங்கன்னு சொன்னதும் எங்களுக்கு எவ்வளவு சந்தோஷம் தெரியுமா, இனிமேல் இங்கேயே இருங்கமா என்று உண்மையான பாசத்தோடு பேசினர். அவர்களை பார்த்து பொதுவாக புன்னகைத்தவள், 

நீ எப்படி இருக்க பொன்னி உங்க பசங்க நல்லா இருக்காங்களா? ஒழுங்கா படிக்கிறாங்களா? என்று கேட்டாள்.

எல்லாம் நல்லா இருக்காங்கமா உங்க புண்ணியத்துல எந்த குறையும் இல்லாம இருக்கோம். பொன்னி “உங்கள்” என்று சொன்னது ஆதி அவளது பிள்ளைகள் படிப்பிற்கு செய்யும் உதவியை வைத்து தான். தன்னை சுற்றி இருக்கும் அனைவரும் இன்னும் ஆதியைவிட்டு தன்னை பிரித்து பார்க்கவில்லை, ஏன் தன்னாலே அது முடியவில்லை என்று நினைத்தவளுக்கு தலையை வலித்தது. என்னதான் கோபம் இருந்தபோதும் இனி இவனோடு  வாழ்வதில்லை என்று முடிவு செய்து பிரிந்து வந்த பிறகும் கூட அவள்  தன்னிடமிருக்கும் அவன்  சம்மந்தப்பட்ட எந்த விஷயத்தையும் மாற்றிக்கொள்ளவில்லை. தானே இப்படி இருக்கும்பொழுது தன்னைச் சுற்றி இருப்பவர்கள் மட்டும் எப்படி தன்னையும் ஆதியையும் வேறாக பார்ப்பார்கள் என்று அவளுக்கு தோன்றியது.

இந்த குழப்ப நிலை என்று தான் தீரும்? என்றேனும் அந்த கோபம் குறையுமா? அந்த ஒரு நாளில் நடந்தவற்றை மாற்ற முடிந்தால், இல்லை அந்த ஒரு நாளை தன்  வாழ்வில் இருந்தே எடுக்க முடிந்தால் நன்றாக இருக்கும் என்று எப்போதும் போல் அன்றும் சஞ்சனாவிற்கு தோன்றியது.  அவளின் யோசனையை பாரதியின் குரல் கலைத்தது.  என்னம்மா இங்கேயே நின்னுட்டிங்க வாங்க உள்ள போகலாம் என்று கூற பாரதியுடன் இணைந்து அவள் வீட்டிற்குள் சென்றாள்.

உள்ளே சென்றவளுக்கு அங்கிருந்த ஒவ்வொரு பொருளும் பல நினைவுகளை ஏற்படுத்தியது. ஆதி சஞ்சனாவிற்கென்று இரண்டாவது படுக்கை அறையையும், பாரதிக்கு எப்போதும் போல அவள் வந்தால் தங்கும் அவளது அறையையும் ஏற்பாடு செய்திருந்தான். பாரதி படிப்பதற்கு மட்டும் தனது அறையை பயன்படுத்திக்கொள்வதாகவும் மற்றபடி அம்மாவுடனே இருந்துகொள்வதாக கூறிவிட்டாள். 

சஞ்சனாவிற்கு  அவன் கொடுத்த வாக்கிற்கேற்ப அனைத்தையும் செய்திருக்கிறான் என்பது புரிந்தது. அவன் அப்படி தான் செய்வான் என்பதில் அவளுக்கு எந்த சந்தேகமும் இல்லை.  அவன் கொடுத்த வாக்கில் நிற்பவன் என்பதால் தான் இன்று அவள் பி.எச்.டி முடித்து பெயருக்கு முன்னால் டாக்டர் போட்டுக்கொள்கிறாள். திருமணத்தின்போது அவள் படிப்பிற்கு எந்த இடையூறும் இருக்காது என்று அவன் கொடுத்த வாக்கை கடைசிவரை பின்பற்றினான். 

அவள் கன்ஸீவாக இருந்தபொழுதுகூட கிருஷ்ணவேணியே இப்போ கூட நீ காலேஜ் போகலைனா என்ன? கொஞ்சம் பிரேக் எடு அப்புறம் கன்டினியூ பண்ணிக்கலாம் என்று கூறியும், இல்ல அத்தை அவ போகட்டும் நான் பார்த்துக்குறேன் என்று சொல்லி முடிந்தவரை அவளுக்கு உறுதுணையாக நின்றான். பாரதி பிறந்தப்பிறகும் அவளுக்கென்று அனைத்து ஏற்பாடுகளையும் முறையாக அவன் செய்து கொடுத்ததனால் மட்டுமே சஞ்சனாவால் இடையூறு இன்றி அவளது கல்லூரி படிப்பை தொடர முடிந்தது.

அதிலெல்லாம் அவனை எந்த குறையும் சொல்ல முடியாது. ஏன்  அவனைப்போல் வேறு யாராலும் யோசித்து செய்ய முடியாது என்று கூட சொல்லலாம். மற்றபடி நடந்த தவறுக்கும் ஏற்பட்ட பிரிவுக்கும் விதியை தான் குறைகூற வேண்டும். இல்லையென்றால் இணைபிரியாமல் இருந்த அவர்களது வாழ்வில் இப்படி ஆறு வருடப் பிரிவு வருவதற்கான வாய்ப்பே இல்லை என்று நினைத்தாள். இனி இங்கு தான் இருக்க வேண்டும் என்று முடிவெடுத்து வந்த பிறகு இப்படி பழசை நினைத்து நினைத்து தன்னை குழப்பி வருத்திக்கொள்வதில் பயனில்லை என்று நினைத்து பாரதியை அழைத்து தாங்கள் கொண்டு வந்த பொருட்களை அடுக்கத் தொடங்கினாள். 

பாரதி உற்சாகமாக ஏதேதோ கேட்டுக்கொண்டே பேசிக்கொண்டு வேலை செய்ததில் சஞ்சனாவால் சிறிது பழைய நினைவுகளில் இருந்து வெளியே வர முடிந்தது. அன்று முழுவுதும் பொருட்களை அடுக்குவதிலும் பொன்னி, அன்னம் அவர்களிடம் பேசிக்கொண்டே பாரதிக்கு பிடித்தவற்றை சமைத்து கொடுப்பது என்று நேரம் போனது.

பாரதி சஞ்சனாவோடு இருக்கும்பொழுது ஆதி தள்ளியே இருந்தான். பாரதியாகவே ஆதியைத் தேடி சென்று அவனோடு அரட்டை அடித்துக்கொண்டிருந்தாள்.  ஆதிக்கு வெகு காலத்திற்கு பிறகு நிம்மதியாக இருந்தது. அவன் எது நடக்கவேண்டும் என்று காத்துக்கொண்டிருந்தானோ அது நடந்ததில் அவன் மிகவும் ஆனந்தத்தில் இருந்தான். இனி எந்த காரணத்துக்காகவும் சஞ்சனா இந்த வீட்டை விட்டு வெளியேறும் நிலை வந்துவிடக்கூடாது, முன்னிலும் பல மடங்கு கவனமாக இருக்கவேண்டும் என்று ஆதி நினைத்துக்கொண்டான். இப்படியாக அந்த ஞாயிறு முடிந்து.

 மறுநாள் ஆதி அலுவலகத்திற்கும், சஞ்சனா கல்லூரிக்கும், பாரதி பள்ளிக்கும் கிளம்பிக்கொண்டிருந்தனர்.  சஞ்சனா வழக்கம் போல் பாரதியுடன் யோகா செய்துவிட்டு, இருவரும் ஒன்றாக அமர்ந்து அன்றைய செய்தித்தாளை படித்துக்கொண்டிருந்தார்.  அபோது அங்கு வந்த ஆதியைக் கண்டதும், “குட் மார்னிங் பா என்ன காலையிலேயே வெளியில போயிட்டீங்க”, என்று பாரதி கேட்க,

இல்லடா ஒரு கிளைன்ட் மீட் பண்ணவேண்டி இருந்துச்சி, அதுதான் நேரமாவே போயிட்டு வரேன்.

காலையில விடிஞ்சும் விடியாமையுமா கிளைன்ட்ட பார்ப்பாங்க,

சிலநேரத்துல அப்படிதான் பிஸினஸ்ல நேரம் காலம் எல்லாம் பார்க்க முடியாது என்றான்,

ஓகேபா நியூஸ் பேப்பர் எல்லாம் படிச்சிட்டீங்களா? காஃபி கொண்டுவரவா

இல்லடா நான் காலைல காஃபி குடிக்கிறதை நிறுத்திட்டேன். காலையிலே எழுந்திருச்சு பால் குடிச்சிட்டு தான் வெளியில போனேன், நீ படி நான் குளிச்சிட்டு ஆஃபீஸ்க்கு ரெடியாயிட்டு வரேன் என்று கூறி சென்றுவிட்டான். 

அதன் பின் சஞ்சனாவும், பாரதியும் கிளம்ப சென்றனர்.  சாப்பிட வந்து அமர்ந்து டைனிங் டேபிளில் மொபைல் போனை பார்த்துக்கொண்டே சாப்பிட்டுக்கொண்டிருந்த பாரதியிடம் வந்த ஆதி, சாப்பிடும்போது மொபைல் யூஸ் பண்ணக்கூடாது பாரதி, உனக்கு நான் ஏற்கனவே சொல்லிருக்கேன் என்று சொல்லி அவள் கையில் இருந்த போனை பறித்தான். 

உடனே கோபமாக எழுந்தவள், இப்போ எதுக்கு என் கையில இருந்து போனை புடுங்குனீங்க, எனக்கு போனை பார்த்துகிட்டு தான் சாப்பிட புடிக்கும் எனக்கு டிஃபனே வேண்டாம் என்று சொல்லி வேகவேகமாக கை கழுவிவிட்டு அறைக்குள் சென்றாள். ஆதி விக்கித்து போய் பார்த்தான் தன் மகளா தன்னிடம் இப்படி எடுத்தெறிந்து  பேசுவது, ஒருவேளை அவளுக்கு இங்கு வந்தது பிடிக்கவில்லையா சாதாரணமாகத்தானே கூறினோம் என்று யோசித்தவன் என்ன செய்வது என்று தெரியாமல் சமையல் அறையை திரும்பிப்பார்த்தான்.

அங்கிருந்து நடந்தவைகளை பார்த்துக்கொண்டிருந்த சஞ்சனா, ஐயாவுக்கு சாப்பாடு எடுத்துவை பொன்னி என்று கூறிவிட்டு பாரதி அறை நோக்கி சென்றாள். பொண்ணு இப்படி பேசிட்டு போறா இவ அவளை ஒண்ணுமே சொல்லப்போறதில்லையா? இவ என்ன இவ்ளோ அமைதியா போறா, பொண்ணாவது திட்டட்டும்னு விட்டுட்டாளா? என்று நினைத்தவன் சரி மாலை வந்து இதை பற்றி பேசிக்கொள்ளலாம் என்று நினைத்து உணவருந்த அமர்ந்தான். இத்தனை நாள் தனியாக தான் சாப்பிட்டான், முதல் நாளே சஞ்சனா தனக்கு பரிமாறுவாள் என்று அவன் எதிர்பார்க்கவில்லை குறைந்தபட்சம் ஒன்றாக அமர்ந்து சாப்பிடலாம் என்று எண்ணினான் அதற்கு மாறாக மகள் தன்னிடம் கோவித்துக்கொண்டு சென்றது அவனுக்கு வேதனையாக இருந்தது.

அங்கிருந்து நேராக பாரதி அறைக்கு சென்ற சஞ்சனா கோவமாக அமர்ந்திருந்த பாரதியிடம் என்ன மேடம் ரொம்போ கோவமா இருக்கீங்க போல, 

அம்மா, என்ன சும்மா கிண்டல் பண்ணாதீங்க 

உன்ன யாரும் கிண்டல் பண்ணல நீ வெளியில பேசிட்டு வந்தது சரியா?

நான் என்ன தப்பா சொல்லிட்டேன் என் கையில இருக்கிற பொருளை ஏன் அப்படி புடுங்கனும்?

அப்பா உன் நல்லதுக்கு தான் சொன்னாரு, போனை உன் கையிலயிருந்து வாங்கினாரு, நீ ஏன் அதை புடுங்கினதுனு நினைக்கிற? சாப்பிடறப்போ போன் பார்க்கக்கூடாதுனு நானும் தான் உனக்கு சொல்லியிருக்கேன்,

எதோ இன்ட்ரெஸ்டிங்கா போயிட்டு இருந்துச்சி அதான் பார்த்தேன் அதுக்காக அப்படி புடுங்கணுமா?

திரும்ப பாரு, அவர் உன் கையில இருந்து போனை புடுங்கல, உன் கையில இருந்து போனை வாங்கினாரு.

நீங்க என்ன புதுசா அவருக்கு சப்போர்ட் பண்றீங்க.

தங்களது பிரிவுதான் இந்த மாதிரி கேள்விக்கு காரணம் என்று நினைத்தவள், அமைதியான குரலில் உன் விஷயம்னு வரப்ப நானும் உன் அப்பாவும் எப்பவும் ஒற்றுமையா தான் முடிவு எடுத்திருக்கோம். என்னோட பாரதி எப்பவும் யார் மனசும் கஷ்டப்படுற மாதிரி பேச மாட்ட, யு நோவ் பெட்டர் மை டியர்.

சிறிது நேரம் அமைதியாக இருந்த பாரதி, எதோ கோவத்துல பேசிட்டேன், சாரிம்மா, அப்பா இன்னும் ஆபீஸ் கிளம்புல  இல்ல என்று கேட்டுகொண்டே டைனிங் ஹால்லுக்கு ஓடினாள்.

செல்லும் தன் மகளையே புன்னகையோடு பார்த்துக்கொண்டிருந்தவள் இதை பற்றி ஆதியிடமும் பேச வேண்டும் இல்லை என்றால் ஒவ்வொரு முறையும் அவன் காயப்படுவான், என நினைத்தவள் மாலை இதை பற்றி பேசிக்கொள்ளலாம் என்று நினைத்து கல்லூரிக்கு தயாராக சென்றாள்.

அங்கோ சற்று நேரத்திற்கு முன் அவ்வளவு கோவமாக பேசிவிட்டு சென்ற மகள் திடீரென வந்து கட்டியணைத்து சாரிப்பா எதோ கோவத்துல அப்படி பேசிட்டேன், வெரி சாரி என்று முத்தமிடுவதை ஒன்றும் புரியாமல் பார்த்தான் ஆதி. 

நான் தான் சாரி சொல்றேனே இன்னும் உங்களுக்கு என் மேல கோவம் போகலையா? பாரதி கேட்க

அப்படி எல்லாம் ஒன்னும் இல்லடா, உன் நல்லதுக்குதான் சொன்னேன், சடனா உனக்கு இவ்வளவு கோவம் வரும்னு எனக்கு தெரியாது.  சாரி எனக்கு சடனா நிறைய கோவம் வருது நான் இனிமேல் இப்படி பண்ணமாட்டேன் என்று சொன்னவள் அவனிடம் பேசிக்கொண்டே சாப்பிட்டு முடித்தாள். அதன் பின் மூவரும் ஆளுக்கொரு பக்கமாக அன்றைய பணியை பார்க்க சென்றனர்.  

அன்று மாலை ஸ்கூலில் இருந்து வந்த பாரதி அன்று நடந்தவைகளை தாயிடம் சொல்லிக்கொண்டே ஸ்நாக்ஸ் சாப்பிட்டுவிட்டு, படிப்பதற்கு தனது அறைக்கு சென்றாள். அதன்பின் அலுவலக அறையில் இருந்த ஆதியை தேடி சென்றாள் சஞ்சனா. தன் முன் வந்து நின்றவளை பார்த்ததும் என்னவென்று பார்வையால் கேட்டான்.

இன்னைக்கு காலையில நடந்ததை பற்றி பேசனும், பாரதி அப்படி பேசுனது தப்புதான். ஆனா அது அவளை மீறி சில சமயம் நடக்குது அவளோட ஏஜ் அப்படி, லாஸ்ட் டைம் டாக்டர் செக் அப் போனப்ப பாரதி பியூபெர்ட்டி நெருங்கிட்டானு சொன்னாங்க, இந்த டைம்ல இப்படி கோவம் வரது, சடனா எரிஞ்சுவிழறது எல்லாம் ரொம்போ நெச்சுரல், அது உங்கள பிடிக்காம பேசுறது இல்லை நீங்க அதை பெருசா எடுத்துக்காதீங்க என்றவள் வேலை முடிந்தது என்பதுபோல வெளியே செல்ல திரும்பினாள்.

இப்ப கூட நான் ஹர்ட் ஆனா உனக்கு கஷ்டமா இருக்கு, நீயா வந்து இவ்வளோ விளக்கம் சொல்ற. நீ என்கிட்ட முகம் குடுத்து பேசகூடவேண்டாம் இப்படியே இரு கண்ணு முன்னாடி நடமாடிகிட்டு, என்னோட மிச்ச வாழ்க்கைக்கு அதுபோதும் என்று ஆழ்ந்த குரலில் காதலோடு சொன்னான்.

சஞ்சனா பதில் ஏதும் சொல்லாமல் அவளது அறையில் வந்து முடங்கினாள். தான் மனதில் நினைப்பதை இவனால் மட்டும் எப்படித்தான் கண்டுபிடிக்க முடிகிறது என்று அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. அதுசரி அந்த மனதில் இருப்பது அவன்தானே அவனுக்கு தெரியாமல் இருந்தாதான் ஆச்சரியம் என்று எண்ணினாள்.

அதன்பின் சிலமாதங்கள் எந்த பிரச்சனையும் இல்லாமல் வாழ்க்கை தெளிந்த நீரோடை போலயிருந்தது. மூவரும் ஒரே வீட்டில் இருந்தனர், ஆதி சஞ்சனாவிற்கு கொடுத்த வாக்கை காப்பாற்றினான், அவளுடைய எந்த விஷயத்திலும் தலையிடவில்லை. சஞ்சனா மாதம் கொடுக்கும் பணத்தை பிடிக்கவில்லை என்றாலும் அமைதியாக வாங்கிக்கொண்டான். ஆனால் பாரதி விஷயத்தில் இருவரும் நல்ல பெற்றோராக இருந்தனர். அவளை பள்ளிக்கு கொண்டு விடுவது, டியூஷன் கூட்டி செல்வது, மூவரும் சேர்ந்து வெளியில் செல்வது எல்லாம் இயல்பாக நடந்தது. மாயா பேட்மிட்டன் கிளாஸ் கூட்டிப் போக வரும்போது சஞ்சனாவிடம் பேசிவிட்டு ஒரு காபி குடித்துவிட்டு செல்வது வழக்கமானது. பாரதி கேம் இம்ப்ரூவ் ஆகியிருக்கிறது என்று மாயா சொல்ல சஞ்சனாவிற்கு நிம்மதியாக இருந்தது.

அப்படியே இருந்துவிட்டால் வாழ்க்கையில் என்ன சுவாரசியம் இருக்கப்போகுது, பாரதிக்கு தேவையில்லாமல் ஒரு பிரச்சனை வந்தது, அது அவளது வாழ்வோடு விளையாட தொடங்கியது. பாரதிக்கு வந்த பிரச்சனை என்ன? அறிய தொடர்ந்து வாசியுங்கள் ” மீண்டும் மலர்வாய்”.

-நறுமுகை

6

No Responses

Write a response