அந்திமாலை நேரம் கடல் மிக அழகாக இருந்தது, அங்கு விளையாடும் சிறுவர்களின் சிரிப்பொலி அந்த காட்சியை மேலும் ரம்மியமாக்கியது. தன்னை மறந்து கடலைப் பார்த்துக்கொண்டிருந்த சஞ்சனா முகத்தில் அந்த சிறுவர்களைப் பார்த்து புன்முறுவல் தோன்றியது. அவர்களைப் போல மீண்டும் பிள்ளை பருவத்திற்கு போக முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று எண்ணியவள் ஒரு பெரும் மூச்சுடன் கடிகாரத்தை பார்த்தாள் அது 5.10 என்று காட்டியது, ஹ்ம்ம் எங்க இந்த மாயாவைக் காணோம் என்று நினைத்து அவளுக்கு கால் செய்தாள்.
“சஞ்சனா ஆதித்தியன்” பிரபல கல்லூரியில் உளவியல் (psychology) விரிவுரையாளராக இருக்கிறாள். உளவியல் பற்றிய அவளது கட்டுரைகள் அந்த துறையில் மிக பிரபலம், அவளது சமீபத்திய உளவியல் கட்டுரை அவளுக்கு விருதுகளை வாங்கி தந்தது.
கையில் இருந்த தனது கல்லூரி அடையாள அட்டையில் சஞ்சனா ஆதித்தியன் என்ற தன் பெயரை பார்த்த போது அவளுக்கு வியப்பாக இருந்தது, அவன் வேண்டாம் என்று வந்தாகிவிட்டது இருந்தும் இந்த பெயரை மாற்ற மனம் வரவில்லை. அவனைப் பற்றிய நினைவுகள் என்றும் தன்னை விட்டு நீங்கப்போவதில்லை என்று எண்ணியவள், அந்த நினைவுகள் தான் தன்னை உயிர்ப்போடு வைத்திருக்கிறது என்று நினைத்தாள்.
அவளது எண்ணப்போக்கை கலைத்தது மாயாவின் வருகை.
சாரி மேடம் வந்து ரொம்ப நேரம் ஆச்சா? நல்லா டிராஃபிக்ல மாட்டிகிட்டேன் அதான் லேட் சாரி என்று கூறிக்கொண்டே அவள் முன் அமர்ந்தாள் மாயா.
பரவாயில்ல மாயா, எப்படி இருக்க? வொர்க்கெல்லாம் எப்படி போகுது?
வொர்க் எப்பவும் போல தான் சிங்கத்தோட குகையில வேலை செய்றப்போ டெய்லி பரபரப்புதான் என்று மாயா கூறியதை கேட்டு புன்னகைத்தாள் சஞ்சனா.
மாயா ஆதித்தியனின் காரியதரிசி (secretary) மாயாவின் அப்பா தவறிய பிறகு சஞ்சனா சொல்லிதான் மாயாவிற்கு இந்த வேலை கிடைத்தது. அதனால் மாயாவிற்கு சஞ்சனா மீது எப்போதும் தனி அன்பு உண்டு.
இன்று மாயா சஞ்சனாவை அழைத்து முக்கியமாக பேச வேண்டும் என்று சொல்லவும் சஞ்சனாவுக்கு என்னவாக இருக்கும் என்று குறுகுறுப்பாக இருந்தது, அதனாலேயே சற்று நேரமாக வந்து காத்திருந்தாள்.
சஞ்சனாவை மேலும் காக்க வைக்காமல் மாயா நேராக விஷயத்திற்கு வந்தாள்.
மேடம் இந்த விஷயத்தை எப்படி சொல்றதுன்னு எனக்கு தெரியல இப்படி ஒரு விஷயம் பற்றி உங்ககிட்ட சொல்ல வேண்டிய சூழ்நிலை வரும்னு நான் நினைக்கவே இல்ல,
என்ன மாயா பில்டப்பெல்லாம் பலமா இருக்கு, நீ எப்பவும் எதையும் நேரடியா சொல்லித்தானே பழக்கம், அப்படியே சொல்லு என்றாள் சஞ்சனா.
அவளை அமைதியாக பார்த்த மாயா அந்த டாக்குமெண்டை சஞ்சனாவிடம் கொடுத்தாள்.
அதை வாங்கி பார்த்த சஞ்சனா முகத்தில் எந்த சலனமும் இல்லாமல் சரி விஷயத்தை சொல்லு என்றாள்.
அவளை அதிர்ந்து போய் பார்த்த மாயா, மேடம் அது டிவோர்ஸ் நோட்டீஸ் என்றாள்.
எனக்கு படிக்க தெரியும் மாயா, நீ வந்த விஷயத்தை சொல்லு என்றாள் சஞ்சனா.
அவளை தயக்கமாக பார்த்த மாயா, சார் டிவோர்ஸ் கேக்குறாரு, அவர் வேற மேரேஜ் பண்ணிக்க பிளான் பன்றாரு, அதான் உங்ககிட்ட விஷயத்தை சொல்லி பேப்பேர்ஸ்ல சைன் வாங்கிட்டு வர சொன்னாரு.
மாயா கூறியதைக் கேட்ட சஞ்சனா, ஒரு புன்னகையோடு உன்னோட பிளான் என்ன மாயா என்று கேட்டாள்.
என்ன கேக்குறீங்க மேடம் புரியல,
மாயா நாங்க பிரிஞ்சப்போவே டிவோர்ஸ் கேட்டது நான், ஆனால் முடியாதுன்னு சொன்னது உங்க சார், அவர்கூட ஆறு வருஷம் வாழ்ந்திருக்கேன் எனக்கு அவரைத் தெரியும் வேற ஒரு பொண்ணை அவர் நினைக்க கூட மாட்டார். இது உன்னோட பிளான்…. எதுக்கு இந்த டிராமா? என்று கேட்டாள் சஞ்சனா.
நீங்க அவரைப் பிரிஞ்சும் ஆறு வருஷம் ஆகுது இன்னும் அவரு மாறாம இருப்பார்னு எப்படி நினைக்குறீங்க?
அது எனக்கு அவர்மேல இருக்குற நம்பிக்கை, சில விஷயங்கள் எப்பவும் மாறாது, மாற்றவும் முடியாது. நீ எதையோ சொல்ல இந்த டிராமாவை பண்ற, என்னன்னு சொல்லு? என்று சஞ்சனா கேட்க
“பாரதி” என்றாள் மாயா.
பாரதிக்கும் இந்த விஷயத்துக்கும் என்ன சம்பந்தம்? என்றாள் சஞ்சனா.
என்ன மேடம் அப்படி கேட்டுட்டீங்க? பாரதி உங்க பொண்ணு, அவளுக்கு தான் இதுல அதிக சம்பந்தம் இருக்கு,
டிவோர்ஸ் பேப்பர்ஸ் பார்த்தபோது இல்லாத பதட்டம் தற்போது சஞ்சனா முகத்தில் தெரிந்தது. நீ என்ன சொல்ற மாயா? என்று இறங்கிய குரலில் கேட்டாள்.
உளவியல் பாடம் எடுக்குற உங்களுக்கு உங்க பொண்ணு மனசு புரியாம இருக்குறது ஆச்சர்யமா இருக்கு,
நாங்க பிரிஞ்சு இருக்கிறது ஒன்னும் புதுசு இல்ல. அவளுக்கு எல்லாமே சொல்லி புரிய வச்சிருக்கேன், இப்போ நீ என்ன புதுசா சொல்ற,
மேடம் புரியுற எல்லாத்தையும் ஏத்துக்கணும்னு இல்ல, அவ இப்போ டீன் ஏஜை நெருங்கிட்ட. இப்போ அப்பா அம்மான்னு ஃபேமிலியா இருக்கணும்னு ஆசைப்படுறா, அதனால அவளுக்கு கேம்ல கவனம் சிதறுது. யார்கிட்ட பேசுறதுன்னு தெரியாம இருந்தவகிட்ட உன் பிராப்ளம் என்னனு கேட்டதும் மனசுல இருக்கிறத சொல்லிட்டா.
வைப் கூட இருக்குறப்போவே வேற செட்டப் வச்சுக்குற காலத்துல நீங்க பிரிஞ்சு ஆறு வருஷம் ஆகியும் டிவோர்ஸ் கூட வாங்காம இருக்காரு. நீங்களும் எனக்கு அவரைப் பத்தி தெரியும், நம்பிக்கை இருக்குன்னு சொல்றீங்க, அப்படி இருக்க நீங்க ஏன் திரும்ப சேர்ந்து வாழறதை பத்தி…. என்று மாயா சொல்லிக் கொண்டிருக்கும்போதே கையைக் காட்டி அவளைத் தடுத்தவள்,
பாரதி உன்கிட்ட சொன்ன விஷயத்தை உடனடியா வந்து என்கிட்டே சொன்னதுக்கு தேங்க்ஸ். அவ கேம்ல கான்சன்ட்ரேசன் மிஸ் ஆகாம நான் பார்த்துக்குறேன் என்று கூறிய சஞ்சனா வேகமாக அங்கிருந்து வெளியேறினாள்.
காரில் வரும்போது சஞ்சனாவிற்கு மனம் வேதனையாக இருந்தது. இப்படி ஒரு பிரச்சனை வரக்கூடும் என்று அவள் எதிர்பார்க்கவில்லை. பாரதி சந்தோசமாக இருக்கிறாள் என்று அவள் நம்பிக்கொண்டிருக்க, இப்படி ஒரு அடி விழும் என்று அவள் யோசிக்கவில்லை.
ஆதித்தியன் சஞ்சனாவிற்க்கு இடையில் இருக்கும் பிரச்சனை என்ன? மாயா சொன்ன விஷயத்தில் சஞ்சனாவின் முடிவென்ன அறிய தொடர்ந்து வாசியுங்கள் “மீண்டும் மலர்வாய்”……
–நறுமுகை