New Tamil Novel | Meendum Malarvai

மீண்டும் மலர்வாய்-30

அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த கோர்ட் ஹியரிங் நாள் வந்தது. மாயாவுடன் ஆதித்தியனும், சஞ்சனாவும் கோர்ட்டிற்கு சென்றனர். காளிதாசுடன் அனுராதாவும் கோர்ட்டிற்கு வந்திருந்தார்.

செல்வகுமார் மற்ற வழக்குகளை போல பொய் சாட்சிகளை வைத்து குற்றவாளிகளை காப்பாற்றிவிட முடியாது என்று காளிதாசும், இர்ஃபானும் உறுதியாக நம்பினார்.

கோர்ட்டு சம்பிரதாயங்கள் முடிந்து காளிதாஸ் இதுவரை கண்டறிந்த உண்மைகள், சாட்சிகளை கோர்ட்டில் சமர்ப்பித்தார். மேலும் அவர் தரப்பில் மாயாவிடம் கேட்க வேண்டிய கேள்விகளை கேட்டு முடித்து விட்டு குறுக்குவிசாரணைக்கு வழிவிட்டு அமர்ந்தார்.

செல்வகுமார் ஜட்ஜ் அனுமதியோடு மாயாவை குறுக்கு விசாரணை செய்ய தொடங்கினார்.

யுவர் ஹானர் இந்த வழக்கு ஆரம்பத்தில் இருந்து ஒரு தவறான களத்தில் கையாளப்பட்டு வருகிறது. மாயாவின் பொருட்டு நடக்கப்பெற்ற இந்த குற்றம் சம்மந்தமேயில்லாமல் எனது கட்சிக்காரரின் மீது சுமத்தப்பட்டுள்ளது.

அவர்களின் ஏழ்மை, இந்த சூழ்ச்சியை எதிர்க்கமுடியாத நிலையை இவர்கள் பயன்படுத்தி கொண்டுள்ளனர்.

மிஸ்டர்.செல்வகுமார் நீங்கள் கூறும் இந்த குற்றச்சாட்டுக்கு உங்களிடம் சாட்சியங்கள் இருக்கா?

இருக்கு யுவர் ஹானர், நம்ப சாட்சியே அதை கூறுவார்கள்.

மிஸ்.மாயா உங்கள் பெற்றோர் என்ன செய்றாங்க?

அவர்கள் இருவரும் தற்போது உயிரோடு இல்லை.

அவர்கள் எப்பொழுது இறந்தார்கள்?

அம்மா நான் சிறுவயதாக இருக்கும் பொழுதே இறந்துட்டாங்க, அப்பா இறந்து கொஞ்சம் வருஷம் இருக்கும்.

கொஞ்சம் வருஷம்னா எவ்வளவு ஆண்டுகள்னு சரியாய் சொல்லுங்க.

யுவர் ஹானர் இது இந்த வழக்கிற்கு சம்மந்தம் இல்லாத விஷயம் என்று காளிதாஸ் இடைமறைக்க சம்மந்தம் இருக்கு யுவர் ஹானர் என் கேள்விகளை முடிக்கும் பொழுது அது புரியும் என்றார் செல்வகுமார். ஜட்ஜ் கேள்விகளை தொடர அனுமதியளித்தார்.

சொல்லுங்க மாயா எவ்வளவு வருஷம்?

13 வருஷம் ஆச்சு.

அதாவது நீங்க 20 வயது இருக்கும் பொழுது உங்கள் தந்தை தவறிட்டார். 33 வயதாகியும் நீங்க ஏன் இன்னும் திருமணம் செய்துக்கவேயில்லை?

அது என்னோட தனிப்பட்ட விஷயம்.

சரி, நீங்க படிப்ப கூட முடிக்காத நிலையில் எப்படி சமாளித்தீர்கள்.

நான் படிச்சு முடிக்கிற வரைக்கும் ஆதி சார் பாதுகாப்புல இருந்த, அதுக்கப்புறம் ஆதி சார் கம்பெனியில வேலைக்கு சேர்ந்துட்டேன். அப்பயிருந்து வுமென்ஸ் ஹாஸ்டெல்ல இருக்க.

ஏன் உங்களுக்கு சொந்தகாரங்க இல்லையா? ஏன் உங்க அப்பாவோட முதலாளி வீட்ல தங்கியிருந்தீங்க.

அதுவா!!!! எங்க அப்பா ரொம்ப நல்லவர். மனசாட்சிபடி நடக்குறவர் எனக்கு புண்ணியம் சேர்த்து வைத்த அளவுக்கு சொத்து சேர்த்து வைக்கல. அதனால எந்த சொந்தக்காரங்களும் எனக்கு உதவ முன்வரல.

பொய், வீட்டிற்கு அடங்காம, யார் பேச்சும் கேட்காம ஆம்பள மாதிரி சுற்றிவர உங்களை அவர்கள் வீட்டில் சேர்ந்துகொள்ள அவர்கள் விரும்பல.

அப்ஜெக்ஸன் யுவர் ஹானர், என்னோட சாட்சியை கீழ்மையாக பேசுவதை ஏற்க முடியாது.

காளிதாஸ் சார் இருங்க சார் எதுவோ சொல்ல நினைக்குறாரு சொல்லட்டும் என்று மாயா சொல்ல ஜட்ஜ் அவளை ஆச்சர்யமா பார்த்தார்.

கேஸை திசை திருப்ப வேண்டிய கட்டாயத்திலிருந்த செல்வகுமார் அவர் தயார் செய்து வந்த கதையை தொடர்ந்தார்.

மாயா தனது தந்தை பேச்சை கேட்காமல் ஆண் நண்பர்களோடு சுற்றி வந்தது தாங்க முடியாமல் தான் அவர் மாரடைப்பால் இறந்துபோனார். அதன் பின் ஆதியுடன் அவர் வீட்டில் தங்கியிருந்த மாயாவிற்கு அவருடன் தகாத உறவு இருந்ததாக ஒரு பேச்சு உண்டு. இது அறிந்த ஆதியின் மனைவி ஆறு ஆண்டுகள் அவரை பிரிந்திருந்தார்.

என்னவோ சொல்லப்போகிறார் என்று பார்த்திருக்க இப்படி ஒரு பழி விழும் என்று ஆதி, சஞ்சனா, மாயா உட்பட யாரும் எதிர்பார்க்கவில்லை. அனைவரும் அதிர்ச்சியில் இருக்க செல்வகுமார் தொடர்ந்தார்.

இன்னும் மாயா திருமணம் செய்யாததிற்கு இதுதான் காரணம்.பிரிந்திருந்த ஆதி மற்றும் அவரது மனைவி அவர்கள் மகளுக்காக[பாரதி] மீண்டும் சேர்ந்து வாழ்கின்றனர்.

அது பிடிக்காத மாயா பாரதியை தனது வழியில் இருந்து அப்புறப்படுத்த செய்ததுதான் இந்த கடத்தல் நாடகம். மாயா தனது ஆண் நண்பர்களோடு இந்த பாதக செயலை செய்துவிட்டு அங்கு கட்டட வேலை செய்யும் யாரோ நான்குபேரை குற்றவாளியாக கைகாட்டிவிட்டார், ஏற்பட்ட அதிர்ச்சியிலும், மருந்துகளின் விளைவிலும் பாரதி, மாயா சொல்வதையே உண்மை என்று நம்பி அதே நான்கு பேரை அடையாளம் காட்டிவிட்டார்., பாரதி நிலைகண்டு பரிதாபத்திலிருந்த இன்ஸ்பெக்ட்டர் இஃர்பான் எல்லா சாத்திய கூறுகளையும் அலசி ஆராயாமல் மாயா சொன்னது மட்டும் தான் உண்மை என்ற ரீதியில் தனது விசாரணையை நடத்தியுள்ளார். இது ஒரு தலைப்பட்சமாக நடத்தப்பட்ட விசாரணை. வேறு ஆபீசர் மூலம் மீண்டும் ஒரு முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும். நியாயம் எளிய மக்களுக்கும் சமமாக கிடைக்க வேண்டும் என்று தனது வாதத்தை முடித்தார் செல்வகுமார்.

அனைவரும் உறைந்த நிலையில் இருக்க மாயாவிற்க்காக பேச எழுந்த காளிதாஸை கையமர்த்திய மாயா, யுவர் ஹானர் லாயர் சார் இவ்வளவு நேரம் மூச்சுவிடாம பேசியிருக்காரு இப்ப நான் கொஞ்சம் பேசலாமா? என்று அனுமதி கேட்டாள். ஜட்ஜ் அனுமதி வழங்க மாயா செல்வகுமாரிடம் லாயர் சார் ராமாயணம் படிச்சிருக்கீங்கள்ளா?

ஆமாம் என்பதாக தலையசைத்தார் செல்வகுமார்.

அதுல ஹனுமனுக்கும் சீதாதேவிக்கும் என்ன உறவு?

அது……..என்று இழுத்தார் செல்வகுமார்.

அதுதான் சார் கணவர், அவரோட தம்பிகள், தந்தை எல்லாரும் இருந்தும் ஹனுமர் ஏன் போகனும்?

செல்வகுமார் என்ன சொல்வது என்று தெரியாமல் அமர்ந்திருக்க

சரி அதை விடுங்க ஐந்து கணவர்களை கொண்ட பாஞ்சாலிக்கும், பகவான் கிருஷ்ணருக்கும் என்ன சம்மந்தம்? ஏன் பாஞ்சாலி துயர் தீர்க்க பகவான் வரனும்.

யுவர் ஹானர் தேவையில்லாத கதை சொல்லி வழக்கை திசை திருப்ப பார்க்கிறார் மாயா என்று செல்வகுமார் முறையிட

என்ன சார் நான் இரண்டே கேள்விதான கேட்ட அதுக்குள்ள ஜட்ஜ் கிட்ட புகார் சொல்ரீங்க. சரி புராண கதை வேண்டாம் நீங்க சொன்ன கதைக்கு வருவோம்.

எனக்கு ஆண் நண்பர்கள் நிறைய உண்டுனு எப்படி சொல்ரீங்க?

உன்ன பார்த்த தெரியல, உன்னோட பேச்சும், போட்டிருக்கிற உடையும், நல்ல குடும்பத்து பொண்ணு இப்படியெல்லாம் டிரஸ் பண்ணிட்டு வருவாங்களா?

மிஸ்டர். செல்வகுமார் மைண்ட் யுவர் லாங்குவேஜ் என்று ஜட்ஜ் கண்டிக்க.

சாரி யுவர் ஹானர் என்று கடுப்போடு மொழிந்தார் செல்வகுமார்.

என்ன லாயர் சார் ஜீன்ஸ், டீசர்ட் அவ்வளவு மோசமான உடையா? அப்ப பேஸ்புக் முழுக்க இந்த மாதிரி விதவிதமான ட்ரஸ்லாம் போட்டு போட்டோ போட்டிருக்காங்களே உங்க பொண்ணு, அவங்க என்ன மாதிரி குடும்பத்து பொண்ணு? என்று கேலி குரலில் கேட்டாள் மாயா.

தனது மகளை சொன்னதும் தான் இருக்கும் இடம் மறந்து என்னடி சொன்ன நீயும், என் பொண்ணும் ஒண்ணா? அம்மா அப்பா இல்லாம வளர்ந்த அனாதை நீ என் பொண்ண பேசுறயா என்று அளவு மீறி கத்த

மிஸ்டர். செல்வகுமார் ஸ்டாப் இட் என்று கடுங்கோபத்தில் கத்தினார் ஜட்ஜ்.

மிஸ். மாயாகிட்ட மன்னிப்பு கேளுங்க,

யுவர் ஹானர்????? வேற எதுவும் பேச வேண்டாம் மன்னிப்பு கேளுங்க.

நிமிர்ந்து பார்க்காமல் சாரி என்றுவிட்டு தனது இடத்தில அமர்ந்தார்.

யுவர் ஹானர் இப்படி பேசற பொண்ணுங்க எல்லாம் தப்பானவர்கள். இப்படி உடையணிந்தா தப்பானவர்கள்னு எவ்வளவு நாளைக்கு முத்திரை குத்த போறோம். ஆதி சார் எனக்கு அப்பா மாதிரி, சகோதரன் மாதிரி, தோழன் மாதிரி, இப்படியெல்லாம் சொல்லமாட்ட

ஹனுமனுக்கும், சீதைக்கும் என்ன உறவு? பாஞ்சாலிக்கு கிருஷ்ணருக்கும் என்ன உறவு? தூய்மையான பக்தி. எனக்கும் ஆதி சார் மேல இருக்கறது அந்த பக்தி தான். இதை எல்லாரவிடவும் முழுசா புரிஞ்சவங்க சஞ்சனா மேடம். ஆறுமாச கருவாக இருக்கறப்ப இருந்து எனக்கு பாரதிய தெரியும்.

இவர் சொல்ற ஒரு பாதக செயலை கனவுல கூட என்னால அவளுக்கு செய்ய முடியாது. நீங்க அவகிட்ட வாக்குமூலம் வாங்குறவரைக்கும் நான் பாரதிய பார்க்கவேயில்லை.

அப்புறம் எப்படி நான் சொல்லி அவளுக்கு குற்றவாளிகளை தெரியும்? லாயர் சொன்னதுதான் நானும் சொல்ற நீதிங்குறது எல்லாரும் சமமான கிடைக்கணும் என்று கைகூப்பினாள் மாயா.

அதன்பின் எழுந்த காளிதாஸ் யுவர் ஹானர் ஒரு பொறுப்பான இடத்திலிருக்க செல்வகுமார் இப்படி நடந்துக்குவார்னு நான் எதிர்பார்க்கல. மாயா பாரதி கண்ட புதுமைப்பெண். பேட்மிட்டனில் ஸ்டேட் சாம்பியன்.தனது ஓய்வு நேரத்தில் வசதியில்லாத குழந்தைகளுக்கு பேட்மிட்டன் கற்று தருகிறார்.

ஆதரவற்ற பெண்கள் வசிக்கும் இல்லங்களில் அவர்களுக்காக கைத்தொழில் வகுப்புகள் நடத்தி அவர்கள் சொந்தக்காலில் நிற்க பாதை அமைத்துக்கொடுத்திருக்கிறார்.

தினம் மாற்றும் உடை உடன் பிறந்த குணத்தை என்றும் நிர்ணயிக்காது. டிபன்ஸ் சொன்ன அனைத்தும் கட்டுக்கதை, அதை எங்களால எளிதில் நிரூபிக்க முடியும்.

நீங்கள் சொல்லும் தீர்ப்பு பாரதிக்கு வாழ்க்கை மீது நம்பிக்கையை கொடுக்கவேண்டுமே தவிர அவள் குடும்பத்தை சிதைத்துவிட கூடாது தட்ஸ் ஆல் யுவர் ஹானர்.

மதிய உணவு இடைவேளைக்கு பிறகு மற்ற சாட்சியங்களை விசாரித்து தீர்ப்பு வழங்கப்டும் என்று கூறி சென்றுவிட்டார் ஜட்ஜ். என்னது ஒரே நாளில் தீர்ப்பா? என்று குழம்பி போனார் செல்வகுமார். தீர்ப்பு யாருக்கு சாதகமாக வரப்போகிறது? அறிய தொடர்ந்து வாசியுங்கள் மீண்டும் மலர்வாய்……

-நறுமுகை

99

No Responses

Write a response