New Tamil Novel | Meendum Malarvai

மீண்டும் மலர்வாய்-27

அனைத்தும் நடந்து கிட்டதட்ட ஒரு மாதமாகி இருந்தது, பாரதி உடல் அளவில் நன்கு தேறி இருந்ததால்,அவளை வீட்டிற்கு அழைத்து செல்லலாம் என்று மருத்துவமனையில் கூறினார். இது நாள் வரை ஒரே அறைக்குள் தன் அன்னை,தந்தை,பாட்டியை தவிர வேறு யாரும் இல்லாத சூழ்நிலையிலே இருந்துவிட்ட பாரதிக்கு வீட்டிற்கு செல்ல வேண்டும், அனைவரையும் பார்க்கவேண்டும் என்பது ஏனோ ஒரு விதமான அச்சத்தை கொடுத்தது. அவள் அதை யாரிடமும் சொல்லாமல் தனக்குளேயே வைத்து யோசித்துக்கொண்டிருந்தாள். வீட்டிற்கு போகாமல் இந்த அறையை விட்டு போகாமல் இருப்பதற்கு வழி என்ன என்று யோசிக்க தொடங்கினாள்.

என்னதான் பாரதி வெளியில் சொல்லாமல் இருந்தாலும்,வெளியில் வந்து மற்றவர்களை பார்ப்பது அவளுக்கு நிச்சயமாக எளிதான ஒன்றாக இருக்காது என்று உணர்ந்திருந்த சஞ்சனாவும், ஆதித்யனும் என்ன செய்வது என்று யோசித்தனர்.

முதலில் தங்கள் வீட்டில் பாரதிக்கு எந்த வித்தியாசமும் தெரிய கூடாது என்று நினைத்த சஞ்சனா, அதை அங்கு வேலை செய்பவர்க்கு புரியும்படி சொல்வதற்காக வீட்டிற்கு சென்றாள்.

வீட்டிற்கு சென்ற சஞ்சனா, சமையல் வேலை செய்யும் அன்னம், மற்ற வேலைகளை பார்த்துக்கொள்ளும் பொன்னி மற்றும் தோட்டக்காரன்,வாட்ச்மன் அனைவரையும் கூப்பிட்டாள். கூப்பிட்டவள் பாரதி இன்னும் இரு தினங்களில் வீட்டிற்கு வர போகும் விசயத்தை கூறினாள். கூடவே, அவர்கள் பாரதியிடம் வித்தியாசமாக நடந்து கொள்ளாமல் இருக்கவேண்டும். அவளை பாவமாக பார்ப்பதோ, அவளிடம் இப்படி ஆகிவிட்டதே என்று பேசவேண்டாம் என்று தயங்கி கூறினாள். அவள் அதை சொல்லிக்கொண்டிருக்கும் போதே சஞ்சனாவை தடுத்த அன்னம், அம்மா அவங்ககிட்ட அத நான் பேசிக்குறேன். பாரதி பாப்பாவை வீட்டுக்கு கூட்டிட்டு வரப்ப எல்லாமே எப்பவும் போல இருக்கும். இதை இவ்ளோ தூரம் எங்ககிட்ட பேசணுன்னு அவசியம் இல்லம்மா. அவர்கள் எல்லார்கிட்டயும் எப்படி சொல்லணுமோ அப்படி சொல்லி நான் புரிய வெச்சுக்குறேன் என்று சொன்ன அன்னம் மற்ற அனைவரையும் அங்கிருந்து போக சொல்லி விட்டார்.

அன்னத்தை பார்த்து கொண்டிருந்த சஞ்சனாவிற்கு ஆச்சர்யமாக இருந்தது.அவள் அறிந்த அன்னம் இவ்வளவு படபடப்பாக பேசும் ரகம் கிடையாது. அவர்கள் அனைவரையும் அனுப்பி விட்டு சஞ்சனாவிடம் திரும்பிய அன்னம், அம்மா இதை பத்தி எல்லாம் நீங்க யோசிச்சுட்டு இருக்காதிங்க, நீங்க வந்து பாரதி பாப்பாவை எப்படி பழைய நிலைக்கு கொண்டுவரதுங்கறத பத்தி மட்டும் கவலைபடுங்க. இங்க பாரதி பாப்பாக்கு எந்த கஷ்டமும் இருக்காது என்று கூறி விட்டு அங்கிருந்து செல்ல திரும்பினாள்.

அவரை தடுத்த சஞ்சனா, அன்னம் ஒரு நிமிஷம் நில்லு, நீயா இப்படி பேசறது? எனக்கு உன்ன பார்க்க ஆச்சர்யமா இருக்கு. இப்படியெல்லாம் பொதுவா நீ பேச மாட்டியே?

கலங்கிய கண்களோடு சஞ்சனாவை பார்த்த அன்னம், ஆமாம்மா நான் இப்படி பேச மாட்டேன் தான், வேற எந்த பிரச்னையா இருந்தாலும் நான் பேசியிருக்க மாட்டேன்தான், ஆனா இந்த பிரச்சனைக்கு நான் கண்டிப்பா பேசணும். ஏன்னா ஏற்கெனவே இந்த மாதிரி ஒரு பிரச்சனையில என் அக்கா குடும்பம் மொத்ததையும் நான் இழந்திருக்கேன்.

ஒரு ஒன்டறை வருடம் இருக்கும், என்னோட அக்கா பொண்ணு அப்பத்தான் காலெஜ் சேர்த்திருந்தாள். பணம் இல்லைனாலும் சந்தோஷமான வாழ்க்கை, யார் கண்ணு பட்டுச்சுனு தெரியல? என்னோட அக்கா பொண்ண பக்கத்துல இருக்க குவட்டர்ஸ்ல இருக்க பசங்க நாலு பேர் சேர்ந்து குடி போதைல சீர்ரழிச்சுட்டாங்க.

வீட்டுக்கு வந்து என் அக்கா பொண்ணு விசயத்த சொன்னதும், அன்றைக்கு ஐயாவோட பெரியம்மா பேசினாங்களே அந்த மாதிரி என்னோட அக்காவும் குடும்பத்தோட மானம் போச்சு, கெளரவம் போச்சு, இதுக்கு உயிர் போயிருக்கலாமுன்னு அழுது ஆர்ப்பாட்டம் பண்ணிட்டா.

தான் தான் தப்பு பண்ணிட்டோம் அப்படினு நினைச்சா என்னோட அக்கா பொண்ணு தற்கொலை பண்ணிகிட்டு செத்து போயிருச்சு. அந்த துக்கம் தீர்றதுக்குள்ளயே அக்கம்பக்கதுல எல்லாரும் ஆளுக்கு ஒரு மாதிரி பேசவும் அதை தாங்க முடியாம என்னோட அக்காவும், அக்கா வீட்டுக்காரரும் தற்கொலை பண்ணிகிட்டாங்க. ஒரே மாசத்துல ஒரு குடும்பமே காணாம போயிருச்சு. யாரோ நாலு பேரோட குடி வெறிக்கும், ஆசைக்கும் ஒரு சின்ன பொண்ணோட வாழ்க்கையை மொத்தமா அழிச்சுட்டாங்க.

அன்னைக்கு இதைப்போய் தட்டி கேட்க தைரியமோ, இதை பத்தி வெளிய பேசி நியாயம் கேட்க துணிச்சலோ எனக்கு இல்லம்மா. நம்ம பாரதி பாப்பாக்கு இப்படி ஒரு நிலைமை ஆயிருச்சுனு கேள்வி பட்டு மனசு தாங்காம அன்னைக்கு ஹாஸ்பிடலுக்கு ஓடி வந்தேன். அப்பத்தான் ஐயாவோட பெரியப்பாவும்,பெரியம்மாவும் எங்க அக்கா மாதிரி பேசிட்டு இருந்தத கேட்ட. எனக்கு குலைநடுங்கி போச்சு. பாரதி பாப்பாவோட வாழ்க்கையும் இனிமேல் அவ்ளோதானான்னு நான் கலங்கிபோன, அப்பதான் உங்க அம்மா பேசினத கேட்டேன். அன்னிக்கு உங்க அம்மா மாதிரி என்னோட அக்காக்கு யாராச்சு எடுத்து சொல்லியிருந்தா ஒரு வேலை இன்னிக்கு அவள் குடும்பமும் நல்ல இருந்துருக்குமோ என்னவோ.

உங்க அம்மா சொன்னது சரி. யாரோ பண்ண தப்புக்கு நம்ம பொண்ணு ஏம்மா தண்டனை அனுபவிக்கனும்? என்னால என்னோட அக்கா பொண்ணுக்கு எந்த உதவியும் செய்யவும் முடியல, அவளுக்கான நியாயத்தை கேட்கவும் முடியல. நான் பார்த்து வளர்ந்த பொண்ணு பாரதி என் அக்கா பொண்ணுக்கு செய்யமுடியாததை நான் பாரதி பாப்பாக்கு செய்யணுன்னு நினைக்குறேன். இங்க இருக்க எல்லாருக்கும் எப்படி சொன்ன புரியுமோ அப்படி சொல்லி நான் புரியவைக்குறேன். இதை பற்றி கவலைபடாதீங்க. நீங்க பாரதி பாப்பாவை நல்லபடியா கூட்டிட்டு வாங்க என்று அழுகையோடு கூறினாள் அன்னம்.

அதை கேட்ட சஞ்சனாவிற்கு இன்னும் பாரமாக இருந்தது. இதுப்போல் எத்தனை பெண்களின் வாழ்க்கை சீரழிந்து மொத்த குடும்பமும் அதன் முடிவை தேடி கொண்டிருக்கிறது. இதற்கு என்ன தான் முடிவு என்று யோசித்தவள், அந்த யோசனையிலிருந்து வெளிவந்து அன்னத்திற்கு நன்றி கூறிவிட்டு அங்கிருந்து மருத்துவமைக்கு சென்றாள். அன்றிலிருந்து இரண்டு தினங்கள் கழித்து பாரதியை அழைத்துக்கொண்டு அவர்கள் வீட்டிற்கு வந்தனர். 

அன்னம் கூறியது போல அங்கிருந்த யாரும் பாரதிடம் வித்தியாசமாகவோ, பரிதாகமாகவோ நடந்து கொள்ளவில்லை.எல்லோரும் எப்போது போல இருந்தனர். அதுவே பாரதிக்கு இருந்த பயத்தை ஓரளவு போக்கியது.

எப்போதும் பாரதிக்கு என்ன பிடிக்கும் இன்று என்ன சாப்பிட வேண்டும்போல இருக்கிறது என்று கேட்டு செய்து கொடுக்கும் அன்னம், அன்றும் அதேபோல் இயல்பாக வந்து பாரதியிடம் பேசவும், பாரதியாலும் அவரிடம் சற்று இயல்பாக பேச முடிந்தது. என்னதான் அனைத்தும் அவளை பாதிக்காதவண்ணம் இருந்தாலும் அவள் பெரும்பாலும் தன் அறைக்குள்ளையே அடைந்து இருந்தாள். சஞ்சனா,மாயா,சஞ்சனாவின் அன்னை கிருஷ்ணவேணி என ஆள் மாற்றி ஆள் அனைவரும் முடிந்தவரை அவளுடன் பேசி அவளை அந்த சிந்தனைக்குள்ளே சிக்கி கொள்ளாமல் பார்த்துக்கொண்டனர்.

அந்த சமயத்தில் கோர்ட்டில் கேஸ் ஹியரிங் வந்தது. கணேஷ் டெல்லியிலிருந்து கிரிமினல் லாயர் ஒருவரை புக் செய்திருந்தார். இது போன்ற ஒரு பெரிய லாயர் இந்த மாதிரி ஒரு கேஸ்ஸில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக வாதிடுவதை நிறைய செய்தித்தாள்களும், டிவி சேனல்களும் விமர்சனம் செய்தனர். அவருக்குமே இது போன்ற கேஸ்ஸில் இவர்கள் தான் குற்றவாளிகள் என்று அவர் மனசாட்சி அறிந்திருந்தும் பின் வாங்க முடியாத தன் நிலை எண்ணி நொந்து போனார். அவர் தனது ஆரம்ப காலகட்டத்தில் கணேஷ் மூலம் தனக்கென சில காரியங்களை செய்துகொண்டிருந்தார். எனவே தற்போது கணேஷ் தன்னிடம் கேட்கும் போது முடியாது என்று மறுப்பு கூற இயலவில்லை, வேறு வழியில்லாமல் இந்த கேஸ்ஸை எடுத்திருந்தார். அதுமட்டுமில்லாமல் அந்த மூன்று பேர் சிக்கினால், அவர்கள் பற்றிய மற்ற விவரங்களும் வெளிவந்தால் வேறு சில பெரிய மனிதர்களின் தலையும் உருளும் என்பதால் இவர்களை இந்த கேஸ்ஸில்
இருந்து விடுவிக்கவேண்டும் என்று அவருக்கு நெருக்கடி கொடுக்கபட்டது. அடுத்து நடக்கப்போவது என்ன?? அறிய தொடர்ந்து வாசியுங்கள் மீண்டும் மலர்வாய்…..

-நறுமுகை

16

No Responses

Write a response