சஞ்சனா கன்சீவ் ஆனதில் இருந்து மாலை நேரமாக வரும் ஆதி ஆபீஸ் வேலைகளை வீட்டில் வைத்து சஞ்சனாவுடன் பேசிக்கொண்டே செய்வான். அப்படி அவன் வேலை செய்வதை பார்த்த மாயா ஒருநாள் அவனிடம் வந்து, சார் அப்பா ஒர்க் பண்ணும்போது நான் ஹெல்ப் பண்ணியிருக்க எனக்கும் இந்த ஒர்க் எல்லாம் கொஞ்சம் தெரியும் உங்களுக்கு ஹெல்ப் பண்ணவா என்று கேட்டாள்.
சிறிது யோசித்த ஆதி, அப்படினா நீ ஒர்க் பண்ற டைம்க்கு பார்ட் டைம் மாதிரி நான் உனக்கு சம்பளம் கொடுத்துடுவேன் அதுக்கு உனக்கு சம்மதம்னா செய் என்றான்.
மாயாவும் அதற்கு சம்மதித்தாள். மாயா தங்கள் வீட்டை வாடகைக்கு விட்டிருந்தாள், அந்த பணத்தை தனது செலவுகளுக்கு வைத்துக்கொண்டாள். என்னதான் சஞ்சனா அவளை சொந்த தங்கைபோல் பார்த்துக்கொண்டாலும் மாயா தனது எல்லை உணர்ந்து நடந்துகொண்டாள். ஆதிக்கு அவளது அந்த தன்மை பிடித்திருந்தது. அவளுக்கு பணமாக கொடுத்து உதவுவதை விட இது உனது திறமைக்கான ஊதியம் என்று கொடுப்பது அவளுக்கு தன்னம்பிக்கையை அதிகப்படுத்தும் என்று நினைத்தான். அவன் நினைத்ததுபோல மாயாவிற்கு அது தனி பலத்தை கொடுத்தது. கல்லூரி படிப்பு மாலையில் கம்பெனி வேலைகள் என்று தன்னை பிஸியாக வைத்துக்கொண்டாள். கூடவே மேனேஜ்மென்ட் சம்மந்தப்பட்ட கோர்ஸஸ் படித்தாள். அவளது முடிவுகளில் சஞ்சனாவும் ஆதியும் தலையிடாமல் இருந்தனர், அதுவே அவளுக்கு அவர்கள் மீது மரியாதையை கொடுத்தது.
பாரதி பிறந்து ஒரு வருடத்திற்குள் பாலகுமார் ரேணுகா திருமணம் நடந்தது. சஞ்சனா அப்பா வழி சொந்தம் மூலம் வந்த சம்மந்தம் என்று கிருஷ்ணவேணி பெரிதாக விசாரிக்காமல் திருமணத்தை முடிவுசெய்துவிட்டார், அது எவ்வளவு தவறு என்று திருமணம் முடிந்து ஒரே மாதத்திற்குள் புரிந்துகொண்டார். ரேணுகா அனைத்திற்கும் சண்டைக்கு நின்றாள், அதுனாலயே சஞ்சனா தாய் வீடு செல்வது குறைந்துபோனது. டெலிவரியின் போது ஒருமாதம் சஞ்சனா அம்மா வீட்டில் இருந்தாள் அதன்பிறகு பெரும்பாலும் ஆதி சஞ்சனாவையும் பாரதியையும் ஒரு நாள் விட்டுவிட்டு இருப்பதே பெரிதாக இருந்தது. ரேணுகா வரவிற்கு பிறகு சஞ்சனாவே தாய் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று கேட்பதை நிறுத்திவிட்டாள்.
கிருஷ்ணவேணி தான் பாலகுமாரோடு அவ்வப்போது வந்து மகளையும் பேத்தியையும் பார்த்து செல்வார். சஞ்சனா ஆதியிடம் சொன்னதுபோல பாரதி வந்தபிறகு அவர்கள் வாழ்க்கையில் சந்தோசம் கூடியது. மாயா படிப்பு வேலை போக மீதி நேரம் முழுவதும் பாரதியோடே இருந்தாள், அது ஒரு முக்கிய காரணம் பாரதிக்கு பேட்மிட்டன் மீது ஆர்வம் வந்ததற்கு. படித்து முடித்தபின் மாயா ஆதி கம்பெனியிலேயே வேலைக்கு சேர்ந்தாள். சன்ஜனாவின் உந்துதலில் பகுதிநேரமாக மேற்படிப்பை தொடர்ந்தாள்.
அனைத்தும் நன்றாக சென்றுகொண்டிருந்தது. பாரதிக்கு 5 வயது இருக்கும்போது சஞ்சனா தனது phd யை முடித்துவிட்டு அதே கல்லூரியில் வேலைக்கு சேர்ந்தாள். ஆதியின் பெரியப்பாவும், பெரியம்மாவும் வெளிநாட்டில் இருக்கும் தனது பெரிய மகளுடன் இருந்துவிட்டு வரலாம் என்று கிளம்பினர். இது போன்ற ஒரு சந்தர்பத்துக்காக காத்திருந்த மரகதம் இந்த சூழ்நிலையை பயன்படுத்திக்க நினைத்தார். மேனகாவும் சில பணக்கார பசங்களோடு சுத்திவிட்டு ஒன்றும் சரிவராமல் எப்படியாவது ஒரு பணக்காரனை கல்யாணம் செய்து செட்டிலாகனும் என்று நினைத்துக்கொண்டிருந்தாள்.
எனவே தாயும் மகளும் சேர்ந்து முதலில் ஆதியையும் சஞ்சனாவையும் பிரிக்க எண்ணினர். அவர்கள் வீட்டிற்குள் சென்றால் மட்டுமே அது சாத்தியம் என்று நினைத்த மரகதம் ஒரு திட்டம் போட்டார். அதன்படி தனக்கு இருதய கோளாறு எந்த நிமிடமும் எதுவும் ஆகலாம் என்றும், மேனகா வேலை விஷயமாக வெளியூர் சென்றாக வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் மரகதத்தை பார்த்துக்கொள்ள ஆள் இல்லை என்று மேனகா ஆதியிடம் புலம்ப வேண்டும். இரக்க மனம் கொண்ட ஆதி கண்டிப்பாக மரகதத்தை தன் வீட்டில் வைத்து பார்த்துக்கொள்வான் என்று மரகதம் நினைத்தார். மரகதம் நினைத்தது போல மேனகா வரும் வரை ஆதி மரகதத்தை பார்த்துக்கொள்ள ஒற்றுக்கொண்டான்.
மரகதத்தின் கணவர் மகள் மனைவியின் போக்கு பிடிக்காமல் வேலையில் மாற்றல் வாங்கிக்கொண்டு கல்கத்தா சென்றுவிட்டார். அது அவர்கள் திட்டத்திற்கு வசதியாக இருந்தது. சஞ்சனா, ஆதி இருவருக்கும் அவர்கள் கல்யாணத்தை நிறுத்த எண்ணியது மரகதம் என்று தெரியாது என்பதை மரகதம் தெரிந்து வைத்திருந்தார். அது தெரிந்த ஆதியின் பெரியம்மாவும், பெரியப்பாவும் ஊரில் இல்லாதது மரகதத்திற்கு வசதியாக இருந்தது. அப்படியே இருந்தால் கூட 5 வருடங்கள் கழித்து அவர் இப்படி ஒரு திட்டத்தோடு ஆதியின் வாழ்க்கையில் நுழைவார் என்று யாரும் எண்ணுவதற்கு வாய்ப்பில்லை.
ஆதியின் வீட்டிற்குள் வந்த ஒரே வாரத்தில் மரகதத்திற்கு ஒரு விஷயம் நன்றாக புரிந்தது, அது ஆதி சஞ்சனாவின் மீது அளவுகடந்த காதல் வைத்திருக்கிறான், சஞ்சனா தான் அவனது உலகம். அவர்களை பிரிப்பதற்கு ஆதியின் காதலை பகடைக்காயாய் பயன்படுத்த எண்ணினார். ஒருவர் மீது கொள்ளும் அதீத அன்பு அவர்களை பிரிக்கும் ஆயுதமாக மாறும் என்று சொன்னால் யாராவது நம்புவார்களா??
மரகதத்தின் திட்டம் என்ன? அறிய தொடர்ந்து வாசியுங்கள் மீண்டும் மலர்வாய்.
-நறுமுகை