என் வானவில்-3

என் வானவில்-3

அன்று கோயிலில் இருந்து வீட்டிற்கு வந்த பின் சாப்பிட்டுவிட்டு மாடிக்குச்  சென்ற பிரகாஷ் சிறிது நேரம் தனது பாட்டியிடம் பேசிவிட்டு, அதன் பின் தன் தோழர்களிடம் பேசிக்கொண்டிருந்தான். பகலில் தூங்கியதால் அவனுக்கு தூக்கம் வரவில்லை.

தோழர்களோடு பேசிக்கொண்டிருந்துவிட்டு தூங்கலாம் என்று நினைக்கும்பொழுது மணி நள்ளிரவைத் தொட்டிருந்தது. ஊரே அமைதியாக இருந்த சூழல் அவனுக்கு பிடித்திருக்க, ஒருநிமிடம் கண்மூடி அந்த அமைதியை ரசித்துக்கொண்டிருந்தான்.

அப்போது ஒரு மெல்லிய கொலுசின் ஓசை அவனுக்கு கேட்டது. திடுக்கிட்டு முழித்தவன், யாராக இருக்கும் இந்த நேரத்தில் என்று சுற்றி முற்றி பார்த்தான். அப்போது பக்கத்து வீட்டு கிணற்றின் அடியில் ஒரு உருவம் நகர்வது தெரிந்தது.

இந்த நேரத்தில் கிணற்றின் அடியில் யார் என்ன செய்கிறார்கள் என்று நினைத்து உற்று பார்த்தவனுக்கு நிலா வெளிச்சத்தில் அது மித்ரா என்று புரிந்தது. இந்த பொண்ணு இப்போ என்ன செய்கிறாள்  கிணற்றின் அடியில்? என்று பிரகாஷ் யோசிக்க,

மித்ராவோ மெதுவாக யாருக்கோ ஓசை எழுப்பி சைகை கொடுத்தாள்.

பாரேன் ஒன்னும் தெரியாத மாதிரி இருந்துட்டு இந்தப் பொண்ணு யாருக்கோ சிக்னல் கொடுக்குது என்று பிரகாஷ் நினைக்க, அந்த நேரம் மறைவில் இருந்து ஒரு அழகிய வெள்ளைப்  பூனைக்குட்டி ஓடி வந்தது.

அதைப் பார்த்ததும் மித்ரா ஹே பட்டு, ரொம்ப நேரமா எனக்காக காத்துக்கொண்டு இருந்தாயா, சித்தி தூங்குவதற்கு லேட் ஆயிடுச்சி அதனால் தான் என்னால் சீக்கிரம் வர முடியலை, ரொம்ப பசியில் இருந்தாயா… இந்தா இந்த பால் குடி என்று பூனைக்குப் பால் வைத்தாள். அதைப் பார்த்துக்கொண்டிருந்த பிரகாஷின் முகத்தில் முறுவல் தோன்றியது. பாலைக் குடித்து முடித்த பூனை மிக உரிமையாக அவளது மடியில் வந்து அமர்ந்துகொண்டு அவள் முகம் பார்த்தது.

அதைத் தடவிக்கொடுத்துக்கொண்டே பேசத் தொடங்கினாள் மித்ரா. பட்டு உனக்குத் தெரியுமா அப்பா என்னை காலேஜ்ல சேர்த்திவிடறேன்னு சொல்லிவிட்டார். நல்ல மார்க்ஸ் எடுத்தா நான் கேட்பது போல என்னை “பி.காம் ” படிக்க வைக்கிறேன்னு சொல்லி இருக்கிறார் சூப்பர்ல்ல. ஆனா நான் ஹாஸ்டல் போய்விட்டால் நீ என்ன செய்வ? அது ஒன்னும் பிரச்சனை இல்லை நான் காலேஜ் போவதற்கு முன் பக்கத்துக்கு வீட்டு ஜெயா ஆண்ட்டிகிட்ட சொல்லிட்டு போறேன் அவர்கள் உனக்கு தினம் பால் வைப்பாங்க சரியா, அவர்களிடம் சமத்தா இருக்கனும் பட்டு ரோட்டிற்கெல்லாம் ஓடக்கூடாது. நான் இன்னைக்கு நியூஸ் பேப்பர்ல படித்தேன் ஒரு நாய்க்குட்டி ரோட்ல அடி பட்டுடுச்சாம் இந்த வண்டிக்காரர்கள் எல்லாம் பார்த்தே ஓட்டுவது இல்லை. நீ ரோட்டுக்கெல்லாம் போனால் எதாவது அடி பட்டுவிட போகிறது, என்று தான் பேசுவது பூனைக்கு புரிகிறது என்ற நம்பிக்கையில் பேசிக்கொண்டிருந்தாள்.

பூனையும் அவள் பேசுவது புரிகிறது என்பதுபோல அவள் முகத்தைப் பார்த்து தலையைத் தலையை அசைத்துக்கொண்டிருந்தது.

பிரகாஷ் தன்னை மறந்து அந்த காட்சியை பார்துகொண்டிருந்தான்.

அதன் பின் மித்ரா, நாளைக்கு வெள்ளிக்கிழமை நான் மாலையில் உச்சி பிள்ளையார் கோயிலுக்கு போக போறேன். கண்டிப்பா தேங்காய் கொடுப்பாங்க அதை நான் உனக்கு நாளைக்கு எடுத்துக்கொண்டு வருகிறேன் என்று கூறியவள், சரி பட்டு எனக்கு தூக்கம் வருகிறது காலையில் லேட்டா எழுந்தா சித்தி திட்டுவாங்க. நாளைக்கு ஹேமா அக்கா வேற காலேஜ்ல இருந்து வீட்டிற்கு வருகிறார்கள், வேலை அதிகம் இருக்கும் நான் உன்னை நாளைக்கு நைட்டு பார்க்கிறேன் என்று கூறியவள் பூனையை தூக்கி ஒரு முத்தமிட்டு இறக்கிவிட்டாள். அவள் உள்ளே சென்று மறையும் வரை நின்று பார்த்துக்கொண்டிருந்துவிட்டு பின் இருட்டில் சென்று மறைந்தது பூனை.

அதைப் பார்த்துக்கொண்டிருந்த பிரகாஷிற்கு ஏனோ இதமாக இருந்தது. ஒரு பூனையிடம் அமர்ந்து இவ்வளவு நேரம் கதை பேசுகிறாள் என்று நினைத்தவன் மறுநிமிடமே  உட்கார்ந்து பேசுவதற்கு கூட அந்த வீட்டில் ஆள் இல்லையோ, அதனால் தான் பூனையுடனெல்லாம் பேசிக்கொண்டிருக்கிறாளோ? என்று தோன்றியது. அவள் அடுத்தநாள் உச்சி பிள்ளையார் கோயிலுக்கு போவதாக கூறியதை நினைவுகூர்ந்தவன் நாளைக்கு எப்படியாவது அம்மாவைக் கூட்டிக்கொண்டு அந்த நேரத்திற்கு உச்சிப்பிள்ளையார் கோயிலுக்குப் போகவேண்டும் என்று நினைத்தான். தான் ஏன் அப்படி நினைக்கின்றோம் என்று அவனுக்கே புரியவில்லை. அதைப் பற்றி அவன் பெரியதாக ஆராய்ச்சி செய்யவும் இல்லை.

பிரகாஷ் நினைத்தது போல அடுத்த நாள் மாலை மித்ரா கிளம்பும் சமயம், அவனும் ஜெயலட்சுமியுடன் உச்சிப்பிள்ளையார் கோயிலுக்கு கிளம்பினான்.

கோயிலைச் சென்றடைந்ததும்  தங்களுக்குச் சற்று முன் சென்றுகொண்டிருந்த மித்ராவை பிரகாஷ் பார்த்தான்.

தன் அன்னை பார்த்தால் தானே மித்ராவை அழைப்பார் என்று நினைத்தவன், ஊர் ரொம்ப மாறிடுச்சு இல்லைமா என்று பேச்சு கொடுக்க,

ஆமாடா  நீ சின்ன வயதில் பார்த்தது அப்படியே இருக்குமா என்று பேசிக்கொண்டே வந்தாரே தவிர அவர் மித்ராவை கவனிக்கவே இல்லை.

என்னடா இது? அம்மாவை எப்படி கவனிக்க வைப்பது என்று யோசித்துக்கொண்டே வந்தான் பிரகாஷ்.

அதற்குள் ஜெயலட்சுமியே மித்ராவைப் பார்த்துவிட அங்கு முன்னாடி போவது நம்ம மித்ரா மாதிரி இருக்கே என்று கூறினார்.

அப்பொழுது தான் பார்ப்பதைப் போல் பார்த்தவன் யார்மா? அன்றைக்கு நான் வந்தபோது கோலம் போட்டுக்கொண்டிருந்த பொண்ணா? என்று எதுவும் தெரியாதது போல கேட்டான்.

ஆமாடா என்று கூறியவர் அவனோடு அமைதியாக நடந்தார்.

என்னமா பக்கத்து வீட்டு பொண்ணு, உங்களுக்காக கோலம் எல்லாம் போடுகிறாள் முன்னாடி போய்க்கொண்டிருக்கிறாள் கூப்பிட்டு அவளோடு  போக வேண்டியது தானே என்று கூற,

 அது அப்படி இல்லை பிரகாஷ் அவள் நம்மை விட்டு கொஞ்சம் தூரமாக போய்க்கொண்டிருக்கிறாள் அவளை கூப்பிட வேண்டுமானால் பெயர் சொல்லி தான் கூப்பிட முடியும். சுற்றி எத்தனை பேர் இருகாங்கனு பார், வயசு பொண்ணு பெயரை இப்படி நடு ரோட்டில் சொல்லி கூப்பிடக்கூடாது என்று கூறிவிட்டு , அவள் கோயிலுக்கு தானே போகிறாள் அங்க போய் அவளிடம் பேசிக்கொள்ளலாம் என்றார் ஜெயலட்சுமி.

தன் தாயை பெருமிதத்தோடு பார்த்தான் பிரகாஷ். இப்பொழுது என்று இல்லை எப்பொழுதுமே பெண்களை எப்படி மதித்து நடப்பது, அவர்களின் உணர்வுகளை எப்படி புரிந்து நடப்பது என்று மனம் கோணாத வகையில் பிரகாஷிற்கு எடுத்து கூறுவார் ஜெயலட்சுமி. அக்கா தங்கை இல்லாமல் தனியாக வளர்ந்த பிரகாஷிற்கு அன்னை மூலமாக தான் பெண்களிடம் இப்படி தான் நடந்துகொள்ள வேண்டும் அவர்களுக்கு இவ்வளவு பிரச்சனைகள் இருக்கின்றது. மேலும் பிரச்சனைகளை ஏற்படுத்த கூடாது போன்ற, எண்ணங்கள் வளர்ந்தது.

பெரிதாக படிக்காமல் வீட்டிலேயே இருக்கும் அன்னை தான், என்றாலும் அவரது அனுபவம் அவனுக்கு நிறையவே சொல்லிக்கொடுத்திருக்கிறது.

பிரகாஷ் மித்ராவை பார்க்கத்தான் தன்னை அழைத்துவந்தான் என்று அறிந்தால் ஜெயலட்சுமியின் நிலை என்ன ? பிரகாஷால் மித்ரா வாழ்க்கையில் ஏற்படப்போகும் மாற்றங்கள் என்ன? அறிய தொடர்ந்து வாசியுங்கள் என் வானவில்…….

நறுமுகை

4

No Responses

Write a response