ஒரு கட்டத்திற்கு மேல் விஸ்வநாதனால் மித்ரா கேட்கும் கேள்விகளை சமாளிக்க முடியவில்லை, இதை இப்படியே விடுவது தனக்கு ஆபத்து என்று உணர்ந்த விஸ்வநாதன் எப்படியாவது நிலைமை கை மீறுவதற்கு முன்னால் மித்ராவிற்கும் ரோஹித்திற்கும் திருமணத்தை முடித்துவிட வேண்டும் என்று எண்ணினார்.
தான் பல ஆண்டுகளாக மாமனார் வீட்டிலேயே இருந்து தனக்கென தனியாக சேர்த்துக்கொண்டிருந்த சொத்து விவரங்கள் மித்ராவிற்கு தெரிந்துவிட்டால் தனது மாமனாருக்கு தன் மீது இருக்கும் நம்பிக்கை போய்விடும் என்று உணர்ந்த விஸ்வநாதன், மித்ரா ரோஹித்தின் திருமணத்தை விரைவில் நடத்துவதற்கு என்று ஒரு ஜோசியரை அழைத்துவந்தார்.
விஸ்வநாதனுக்கு சிலகாலமாக மனது சரியில்லை என்றும் அதற்காக ஜோசியரைப் பார்க்க சென்றதாகவும், வீட்டில் ஒரு நல்ல காரியம் நடப்பது நல்லது என்றும், இல்லை என்றால் உயிர் பலி ஏற்படும் என்றும் ஜோசியர் கூறியதால் கையோடு அழைத்து வந்திருப்பதாக கூறினார்,
ஏற்கனவே எங்கே தான் தன் பேத்தியின் திருமணத்தை காணாமலே இறந்துவிடுவோமோ என்று பயந்து கொண்டிருந்த மித்ராவின் தாத்தாவிற்கு அது மேலும் அச்சத்தைக் கொடுக்க,
மீண்டும் இதை பற்றி தெய்வநாயகியிடம் பேச வால்பாறை சென்றனர், இந்தமுறை தெய்வநாயகி எவ்வளவோ மறுத்து கூறியும் அவர்கள் பிடிவாதமாக இருக்க, மித்ராவும் இந்த திருமணத்தில் தனக்கு சம்மதம் மேற்கொண்டு தள்ளி போட வேண்டாம் என்று கூறிவிட, அதற்கு மேல் என்ன சொல்வது என்று தெரியாமல் தெய்வநாயகி திருமணத்திற்கு ஒப்புக்கொண்டார்.
திருமணம் நிச்சயம் ஆன செய்தியை தெய்வநாயகி பிரகாஷிற்கு போன் செய்து சொல்ல,
சரி என்று அமைதியாகக் கேட்டுக்கொண்டவன் போனை வைத்ததும் தான் இந்தியா செல்லும் நேரம் வந்துவிட்டது என்று நினைத்துக்கொண்டான்.
இங்கோ அலுவலகம் சென்ற ரோஹித்தை அவனது காதலி ஜெனிஃபர் பிடி பிடி என்று பிடித்துகொண்டாள்.
ஜெனிஃபரும் ரோஹித்தும் சில வருடங்களாக காதலித்துக் கொண்டிருக்கின்றனர். காதல் என்று கூறுவதைவிட திருமணம் ஆகாமல் ஒன்றாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் என்று கூறலாம். அப்படிப்பட்ட நிலையில் தான் மித்ரா ரோஹித்தின் வாழ்க்கையில் வந்து சேர்ந்தாள்.
தன் அப்பாவின் திட்டப்படி இருபக்க சொத்தையும் அடைவதற்கு வழி மித்ராவை திருமணம் செய்வது தான் என்று மித்ராவை திருமணம் செய்துகொள்ள ரோஹித் ஒத்துக்கொண்டான்.
ஆனால் ஜெனிஃபரிடம் திருமணம் முடிந்து சொத்துக்களை தங்கள் பெயருக்கு மாற்றியவுடன் மித்ராவை விவாகரத்து செய்துவிட்டு அவளை திருமணம் செய்துகொள்வதாக சத்தியம் செய்துகொடுத்தான்.
மித்ரா படித்து முடித்த பின்பு தான் திருமணம் என்று சொல்லியிருந்த நிலையில் இப்போது திடீரென திருமணம் நிச்சயம் ஆனதை கேள்விப்பட்டு ஜெனிஃபர் கேள்வி மேல் கேள்விக் கேட்க,
ரோஹித்தோ திருமணம் முன்னரே நடப்பது ஒரு பாதுகாப்பிற்கு தான் அதனால் தங்கள் திட்டத்தில் எவ்வித மாற்றமும் இல்லை என்று புரியவைக்க முயற்சி செய்தான்.
ஆனால் சிறிது காலமாகவே ரோஹித்தின் மீது நம்பிக்கை இழந்துவந்த ஜெனிஃபர் இதை நம்ப மறுத்தாள், ஆனால் அதை அவனிடம் காட்டாமல் தன் மனதோடு வைத்துக்கொண்டாள்.
மித்ராவை சேர்ந்த அனைவருக்கும் அவளது சம்மதம் அதிர்ச்சியாகவே இருந்தது. தெய்வனாயகியின் மூலமாக அபி, சுஜி, ராம், பிரகாஷ் என அனைவருக்கும் மித்ராவின் திருமண செய்தி தெரிவிக்கப்பட்டது.
இது பற்றி கேள்விப்பட்ட அபிராமி உடனடியாக சுஜிக்கு போன் செய்தாள். அக்கா, நிஜமாலும் மித்ரா ரோஹித்தை கல்யாணம் பண்ணிக்க போறாளா? நான் கூட எதோ அவ சும்மா சொல்லிட்டிருக்கா அப்படியெல்லாம் அவ செய்ய மாட்டான்னு நினச்சேன்க்கா இப்போ என்னனா மூணு வருஷம் கழிச்சு கல்யாணம்னு சொல்லிட்டு ரெண்டு வருஷத்திலேயே கல்யாணம் பண்ண பாக்குறாங்க அதுவும் இவ தான் பாட்டிக்கிட்ட சொல்லி பாட்டியை ஒத்துக்கவச்சதா சொல்றாங்க எனக்கென்னவோ இதெல்லாம் சரியாய் படலை என்று கூற,
சுஜியோ விடு அபி எது எப்படி நடக்கணும்னு இருக்கோ அப்படி தான் நடக்கும்,
பிரகாஷ் நம்ம எல்லோரையும் கல்யாணத்துக்கு போயிட்டு வர சொன்னான், பாட்டி நம்ம எல்லோரையும் ஒரு வாரத்துக்கு முன்னாடியே வால்பாறை வரசொன்னாங்க. போவோம் என்ன நடக்குதுன்னு பார்ப்போம் என்று சுஜி சொல்ல, அபியோ என்ன அக்கா இது நீங்களே இப்படி சொன்னா எப்படி என்று கேட்க. ஆமா அபி ஒரு வாரத்துக்கு முன்னாடி கண்டிப்பா கல்யாணத்துக்கு வந்திடு என்று கூறிவிட்டு போனை வைத்தாள் சுஜி.
திருமணம் நிச்சயம் ஆன பிறகு திருமணம் வரை பேத்தி தன்னுடன் இருக்க வேண்டும் என்று தெய்வநாயகி கேட்டுக்கொண்டதால் அனைத்து வார இறுதியிலும் வால்பாறை சென்றாள் மித்ரா. திருமணத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பே விடுமுறை எடுத்துக்கொண்டு மித்ரா வால்பாறையிலேயே தங்கிவிட்டாள்.
மித்ரா கல்லூரியில் படிக்கும்போதே தெய்வநாயகி சென்னை சென்று கல்யாணத்துக்கு தேவையான அனைத்து ஷாப்பிங்கையும் பேத்தியுடன் சேர்ந்து முடித்துக்கொண்டார்.
எனவே திருமணத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பே வால்பாறை வந்த மித்ரா பாட்டியுடன் வழக்கம் போல பேசிக்கொண்டு செல்லம் கொஞ்சிக்கொண்டு இருந்தாள்.
தெய்வநாயகி அழைத்ததற்கு இணங்க பிரகாஷின் தாய் தந்தை மற்ற அனைவரும் ஒரு வாரத்திற்கு முன்னரே வால்பாறை வந்து சேர்ந்தனர்.
அபியைத் தவிர மற்ற அனைவரும் மித்ராவிடம் நன்றாகவே பேசினர்.
மித்ரா அபியிடம் ஏண்டி முகத்தை இப்படி வச்சிருக்க என்கிட்டே நல்லா பேச மாட்டியா? என்று கேட்க,
அபியோ இங்க பாரு மித்ரா நீ கஷ்டப்படுவன்னு எல்லாரும் உன் முன்னாடி நடிக்கிறாங்க என்னால அப்படி எல்லாம் நடிக்க முடியாது. எனக்கு இதுல கொஞ்சம் கூட இஷ்டம் இல்லை என்னால நீ அந்த ரோஹித்தை கல்யாணம் பண்ணுறத ஒத்துக்கவே முடியல. எதோ நீ கூப்பிட்ட பாட்டி கூப்பிட்டாங்கனு மட்டும் தான் நான் இங்க வந்துருக்கேன். நான் இந்த கல்யாணத்துல கலகலப்பா கலந்துப்பேனு நீ நினைக்காத என்று கூற,
மித்ராவோ, பேச்சு மாற மாட்டியே என்று கேட்க,
அபியோ என்னடி சொல்ற? என்று குழப்பத்துடன் கேட்டாள்.
இல்ல கலகலப்பாக இந்த கல்யாணத்துல கலந்துக்க மாட்டேன்ன்னு சொன்னியே, அதான் பேச்சு மாறமாட்டியேனு கேட்டேன்,
அதெல்லாம் ஒன்னும் மாறமாட்டேன் என்று அபி வெடுக்கென கூறிவிட்டு கிளம்ப, அவளையே கூர்ந்து நோக்கினாள் மித்ரா.
அனைத்தும் விஸ்வநாதன் இஷ்டப்படி நடக்க திருமணம் வால்பாறையில் தான் நடக்க வேண்டும் என்று தெய்வநாயகி உறுதியாக கூறிவிட அவர் இந்த அளவுக்கு இறங்கி வந்ததே பெரிது என்று எண்ணி, இனி அவர் எதை கேட்டாலும் செய்யலாம் என்ற முடிவில் இருந்த விஸ்வநாதன், நீங்க எப்படி சொல்றிங்களோ அப்படியே செய்திடலாம் என்று கூறினார்.
எனவே திருமணத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்னரே மித்ராவின் தாத்தா குடும்பம் வால்பாறை வந்து சேர்ந்தது.
மித்ராவின் விருப்பத்தின் பெயரில் தெய்வனாயகி திருமணத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு மாலை வேளையில் நெருங்கிய உறவினர்களை மட்டும் அழைத்து விருந்து ஏற்பாடு செய்தார். வீட்டின் தோட்டத்தில் அனைத்து எற்பாடுகளும் செய்திருந்தனர். அனைவரும் வந்து மித்ராவையும் ரோஹித்தையும் வாழ்த்திவிட்டு அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.
அப்போது மேடை ஏறிய மித்ரா பேச தொடங்க அங்கிருந்த அனைவரின் கவனமும் மித்ரா பக்கம் திரும்பியது.
உங்க அனைவருக்கும் வணக்கம், உங்கல்ல நிறைய பேரை நான் பார்த்ததில்லை நிறைய பேரை பத்தி பாட்டி தாத்தா சொல்லி கேள்வி பட்டிருக்கேன், ஏனா கொஞ்சம் வருசத்துக்கு முன்னாடி தான் நான் இந்த குடும்பத்துக்குள் வந்து சேர்ந்தேன். இந்த குடும்பத்துக்குள்ள வந்ததில் இருந்து அடுத்தடுத்து நிறைய அதிர்ச்சியான விஷயங்களை தெரிஞ்சுகிட்டேன்.
முதலில் நான் என் அப்பா அம்மா யாருன்னு தெரிஞ்சிகிட்டேன், என் சொந்த பந்தம் யார்னு தெரிஞ்சுகிட்டேன், யாரை நம்பனும் நம்ப கூடாதுன்னு தெரிஞ்சுகிட்டேன், இந்த கொஞ்சம் வருஷத்தில் வாழ்க்கை எனக்கு நிறைய கத்துகொடுத்திருக்கு, இன்னும் ஒரு நாள் தான் இருக்கு என் கல்யாணத்துக்கு அதுவும் என் ஆசை அத்தான் கூட எனக்கு கல்யாணம் அப்படின்னு நினச்சு தான நீங்க எல்லாரும் வந்துருக்கீங்க. ஆனால் அதுக்கு முன்னாடி அவர்கிட்ட பேசி செட்டில் பண்ண வேண்டிய பெரிய கணக்கு இருக்கு, அதை நாங்க எங்களுக்குளேயே பேசி சரி பண்ணிக்கிட்டா உங்களுக்கெல்லாம் தெரியாம போய்டும் இல்ல உங்க எல்லார் முன்னாடியும் வச்சு சரி பண்ணனும்னு தான் நான் இத்தனை வருஷம் காத்துட்டு இருந்தேன். இப்போ அதுக்கு சரியான நேரம் அமைஞ்சு இருக்கு என்று மித்ரா கூற,
ரோஹித்தும் விஸ்வநாதனும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு திகைத்து நின்றனர்,
ரோஹித் மேடை அருகில் சென்று என்ன மித்ரா என்கிட்டே உனக்கு என்ன கணக்கு இருக்கு என்று கேட்க,
உங்ககிட்ட எனக்கு என்ன அத்தான் கணக்கு இருக்கு நான் பேச வேண்டியது உங்க அப்பாகிட்ட என்று கூற,
அங்கிருந்த அனைவரும் விஸ்வநாதனை திரும்பி பார்க்க,
அவரோ என்னமா உனக்கும் எனக்கு என்ன கணக்கு இருக்கு என்று கேட்க,
என்ன மாமா இப்படி சொல்லிட்டீங்க?
ரொம்போ அன்பான அப்பா அம்மாக்கு, பொறந்த நான், சித்தி கொடுமையில கஷ்டப்பட்டு வளர்ந்ததுக்கு காரணமே நீங்க தான. அப்போ அந்த கணக்கை நான் உங்க கிட்ட பேசி சரிகட்டணுமில்ல, என்று கேட்க,
அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
மித்ரா சித்தி கொடுமையில் வாழ்ந்ததற்கும் விஸ்வநாதனுக்கு என்ன சம்மந்தம்? என்று அறிய தொடர்ந்து வாசியுங்கள் என் வானவில்………….
-நறுமுகை