கணேஷ் டெல்லியிலிருந்து ஏற்பாடு செய்திருந்த கிரிமினல் லாயர் செல்வகுமாரின் இல்லத்தில் அவரது மகளும் மனைவியும் மிகுந்த கோவத்தோடு அமர்ந்திருந்தனர். என்னப்பா நீங்க!! இந்த மாதிரி ஒரு கேஸ்ல போயியும் போயும் இந்த மாதிரி ஒரு கிரிமினல்ஸ்காக வாதாடுறிங்களே?
என் ஃபிரண்ட்ஸ் எல்லாம் காலேஜ்ல எவ்வளோ மோசமா கேள்வி கேக்கறாங்க தெரியுமா? இந்த மாதிரி ஒரு கேஸ்ஸை உங்க அப்பா வாதாடறாரே? உனக்கா இருந்திருந்தாலும் இப்படித்தா பண்ணிருப்பாரான்னு கேக்கறாங்க. எனக்கு ரொம்ப சங்கடமா இருக்கு. நீங்க போய் எதுக்கு இந்த மாதிரி கேஸ் எல்லாம் எடுக்குறீங்க? நல்ல சொல்லு..உங்க அப்பாக்கு எவ்ளோ சொல்லியும் புரிய மாட்டிங்குது. வெளியில தல காட்டமுடியல. இந்த மாதிரி ஒரு கேஸ்ல ஒரு சின்ன பொண்ணுக்கு எதிரா ஒரு லாயர் வாதாடலாமா? உங்களுக்கும் வீட்ல ஒரு பொண்ணு இருக்கு, அந்த எண்ணம் இருக்கா? என்று மாற்றி மாற்றி இருவரும் பொரிய,
அமைதியாக இருவரையும் பார்த்து கொண்டிருந்த செல்வகுமார் பின் பேச தொடங்கினார். சரிதான் இந்த மாதிரி ஒரு கேஸ்ல இவர்கள் தான் குற்றவாளின்னு தெரிஞ்சும் நான் வாதாட கூடாதுதான், ஆனா என்ன செய்யறது? எதையும் இப்ப மறுக்குற நிலையில் நாம இல்ல. இன்னிக்கு நான் ஒரு பொண்ணு இருக்கேன் என்ன வெச்சுட்டு நீங்க இந்த மாதிரி பண்ணலாமானு கேக்கற நீ, அன்னிக்கு உன்னோட அப்பாவோட வருமானத்துக்கு மீறி ஆடம்பரமான காரும் வேர்ல்ட் டூரும் கேக்கறப்ப அதையெல்லாம் அப்பா எப்படி ஏற்பாடு பண்ணிருப்பாருனு கொஞ்சம் யோசிச்சுருக்கனும்.
நமக்கு ஒரு பொண்ணு இருக்கு அதை யோசிங்கனு சொல்ற நீ அன்னிக்கு வைர நகையும், பட்டு புடவையும் கேக்கறப்ப அதுக்கு அந்த மனுச எங்க போய் காசு சாம்பாரிச்சுட்டு வருவானு கொஞ்சம் யோசிச்சுருக்கனும்.
நீங்க ரெண்டு பேரும் எதையும் யோசிக்கல? அன்னிக்கு உங்க ரெண்டு பேரோட தேவையை பூர்த்தி செய்ய எத்தனையோ குற்றவாளிகளுக்கு வாதாடி வெளிய கொண்டு வந்திருக்கேன், அப்ப அது உங்களுக்கு பெருசா தெரியல. ஏன்னா அதெல்லாம் டிவில பெரிய செய்திய வரல. இன்னிக்கு ஒரு சின்ன பொண்ணோட வாழ்க்கை, அதுவும் டிவியில ரொம்ப பரபரப்பா பேச பட்டுட்டு இருக்கு. அதனால உங்களுக்கு நான் பண்றது தப்பா தெரியுதா? அப்படினா இதுக்கு முன்னாடி நான் செஞ்ச பாவத்தோட சம்பளத்தைதான் நீங்க இவ்வளோ ஆடம்பரமான வாழ்க்கையா வாழ்ந்துட்டு இருக்கீங்க. அதுக்கென்ன பதில் சொல்ல போறீங்க? இது என் தொழில் அவன் நல்லவனோ கெட்டவனோ, அதிகமா காசு கொடுக்கறவனுக்கு வாதாடறது தான் என் தொழில் அப்படிங்கற மாதிரி என்னோட மைன்டுசெட்டே மாறிபோச்சு. இப்போ புதுசா வந்து இது நல்ல இருக்கா? நியாயமா இருக்கா? அப்படினு பேசிட்டு இருக்காம போய் உங்க வேலைய பாருங்க. அவர் கூறியதை கேட்ட பின் அவமானத்தில் கருத்துப்போன முகத்தோடு அம்மாவும் பொணணும் அந்த இடத்தைவிட்டு நகர்ந்தனர். செல்வகுமாரும் ஒரு பெரும்முச்சோடு கேஸ்க்கான வேலையை பார்க்க தொடங்கினார்.
அதே நேரத்தில் சென்னையில் ஆதித்யனும், காளிதாசும் நேரில் சந்தித்து பேசிக்கொண்டிருந்தனர்.என்ன சார் சுப்ரீம் கோர்ட்ல கிரிமினல் லாயரா இருக்க செல்வகுமார் இந்த மாதிரி ஒரு கேஸ்ஸ எடுத்துருக்காரு. என்னால நம்பவே முடியல
அதுதான் எனக்கும் ஆச்சிரியமா இருக்கு. என் வைஃப் சொல்றப்ப ஆம்பள பையன் வெச்சுருக்குற எனக்கே மனசு பதறுச்சு. அவருக்கு இருக்கறது ஒரே ஒரு பொண்ணு அவரு எப்படி இந்த மாதிரி ஒரு கேஸ் எடுக்க ஒத்துக்கிட்டாருனு தான் எனக்கு தெரியல. சரி வாங்க கூடாதவங்க கிட்டலாம் பணம் வாங்கியிருந்தா அவர்கள் சொல்றத கேட்டுத்தான் ஆகனும். அவருக்கும் வேற வழி இல்லாம இருந்துருக்கலாம்.
சார், பாரதி கோர்ட்டுக்கு வர வேண்டான்னு அன்னிக்கே நீங்க சொல்லிட்டீங்க. ஆனா மாயா கண்டிப்பா கோர்ட்டுக்கு வரணும், அது எனக்கும் தெரியும். ஆனா அது மாயாவோட லைப்க்கு நல்லதல்ல. மாயா கோர்ட்டுக்கு வராம தடுக்க வழி இருக்கா?
ஆதி அந்த மாதிரி வழி இருந்த நான் முன்னாடியே சொல்லிருப்பேன். எனக்கு நல்லா தெரியும் நீங்க மாயாவையும் உங்க பொண்ணு மாதிரி தான் பாக்குறீங்க. ஆனா இப்ப வேற வழி இல்ல. இந்த கேஸ் ஸ்ட்ரங்கா நிக்கனுனா அதுக்கு மாயா தான் நமக்கு இருக்க ஐவிட்னஸ். பாரதியோட ஐவிட்னஸ்ஸ நம்ம ஸ்ட்ரங்கா சொல்லலாம், இருந்தாலும் பாரதிக்கு உடம்பு சரி இல்லாம இருந்துச்சு, டிரீட்மெண்ட்ல இருந்தா, மெடிசன்ஸ், சர்ஜெரி இந்த மாதிரி எந்த காரணத்தையும் அவர்கள் கொண்டு வருவாங்க. செல்வகுமார் மாதிரியான ஒரு லாயர் இந்த மாதிரியானா பாயின்டெல்லாம் ஈஸியா ஒடச்சுட முடியும்.
அவரால காசு கொடுத்து வாங்கவும் முடியாத பொய் சொல்ல வைக்கவும் முடியாத ஒரே விட்னஸ் மாயா மட்டும் தான். அதனால மாயா கோர்ட்டுக்கு வரது ரொம்ப அவசியம். அளவு மீறி செல்வகுமார் மாயாகிட்ட கேள்வி கேட்காத மாதிரி நான் பார்த்துக்குறேன். நீங்க கவலைபடாதீங்க.
அதை கேட்டதும் முகத்தில் சிறு புன்முறுவலோடு அதெல்லாம் மாயா அவளை பார்த்துக்குவ சார், அவ ரொம்ப ஸ்டார்ங். அப்படியெல்லாம் அந்த ஆளு அவகிட்ட கேள்வி கேட்க முடியாது. ஏன்டா இந்த கேஸ்ஸ எடுத்தோன்னு நொந்துக்குற அளவுக்கு வெச்சுருவா என்று கூறியதும் காளிதாசுக்கும் அந்த புன்னகை தொற்றிக்கொண்டது.
காளிதாசிடம் பேசிவிட்டு வீட்டுக்கு வந்த ஆதி ஹாலில் அமர்ந்திருந்த சஞ்சனாவின் அன்னையை பார்த்து அவரிடம் சென்றார். என்ன அத்தை சஞ்சனா, மாயா யாரையும் காணோம். சஞ்சனாவும், மாயாவும் கடைக்கு போயிருக்காங்க, பாரதி தூங்கிட்டு இருக்கா. அதான் இங்க உட்கார்ந்துட்டு இருக்கேன் மாப்பிள்ளை. சரிங்க அத்தை, நான் போய் பாரதிய பார்த்துட்டு வரேன்.
ஆரம்பத்தில் இருந்த அளவுக்கு இல்லையென்றாலும் பாரதி இன்னும் ஆதியிடம் சிறு ஒதுக்கத்தோடுதான் இருந்தாள். அது ஆதிக்கு மிகுந்த வலியை கொடுத்தாலும், தன் மகள் அனுபவித்த வலிகளுக்கு முன்னால் இது ஒன்றுமில்லை என்று நினைத்து எதுவும் நடக்காதது போல எப்பவும் போல் தன் மகளுடன் பேசிவந்தான். அதுவே அவளிடம் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றத்தை ஏற்படுத்த தொடங்கியது. அந்தளவில் அவனுக்கு அதுவே நிம்மதியாக இருந்தது. தூங்கும் மகளை சென்று பார்த்தவன் அமைதியாக நிர்வலமாக தூங்கி கொண்டிருக்கும் அவளது முகத்தையே பார்த்த வண்ணம் அமர்ந்திருந்தான். எப்படி இருந்த பொண்ணு, சிரிப்பை தவிர வேற எதுவுமே தெரியாம பட்டாம்ப்பூச்சியா சுத்தி வந்தா. எனக்கும் அவங்க அம்மாக்கும் வந்த பிரச்சனைனால தனி தனியா இருக்க நேர்தப்ப கூட ரொம்ப மெர்ச்சூடா அவ ஹேண்டில் பண்ணா. ஒரு நாளும் அவளோட ஆசைக்காக எங்களை அவ கட்டாய படுத்துனதே கிடையாது. இங்க வரப்ப இங்க முழுமையா அப்பா பொண்ணாகவும், அவ அம்மாகூட முழுமையா அம்மா பொண்ணாகவும் வளர்ந்தா. எங்களோட நிலைமைய புரிஞ்சு அதுகேற்ப எங்கள அவ அரவணைச்சு போனா.
இவ இதுல இருந்து சரி ஆகி வரனும், பழைய மாதிரி வரனும். இதோட வாழ்க்கை முடிஞ்சு போச்சுனு உடைஞ்சு போற நிறைய பெண்களுக்கு வாழ்க்கை இதோட முடியறது இல்லனு அதுக்கு உதாரணமா இவ வரனும். கண்டிப்பா வருவ, என் பொண்ண நான் இப்படியே விட மாட்டேன். செல்வகுமார் இல்ல,வேற எவ்ளோ பெரிய லாயர் வந்தாலும் சரி, அவனுகளுக்கு தண்டனை வாங்கி கொடுக்காம விடமாட்டேன் என்று மனதோடு உறுதி எடுத்தவன் தூங்கும் அவளின் தலை கோதி விட்டு, அங்கிருந்து வெளியேறினான்.
கடைக்கு சென்றிருந்த மாயாவும், சஞ்சனாவும் அதேயேதான் பேசி கொண்டிருந்தனர். அந்த ஆளுங்களை சும்மா விட கூடாது மேடம்.
சரி தான் மாயா, ஆனா இந்த மாதிரி ஒரு கிரிமினல் லாயர் அவ்வளோ பெரிய இடத்துல இருந்து வந்து எதுக்காக இந்த கேஸ்ஸ வாதாடனும்.
மேடம் இதெல்லாம் இந்த பணம் பண்ற வேலை. பணம் பத்தும் செய்யும். அவர்கள் வீட்டுல இருக்க பொம்பளைங்க சேஃப்டியா இருக்கற வரைக்கும் இவங்க ஏன் கவலை பட போறாங்க? நம்ம கவலை அது கிடையாது.
காளிதாஸ் சார் பாரதிக்கான நியாயத்தை வாங்கி கொடுப்பாரு. ஏன்னா அவரு இதை பணத்துக்காக செய்யல, எனக்கென்னன்னு இருந்த அவருக்கு இது உங்களோட கடமை அப்படினு அவங்க வைஃப் எடுத்து சொல்லி அதை உணர்வு பூர்வமா உணர்ந்து இந்த கேஸ்ஸ அவரு நடத்துறாரு. கண்டிப்பா அவரு ஜெயிப்பாரு. நீங்க அதைபத்தி கவலை படாதீங்க.
இப்ப நம்மளோட எல்லா கவலையும் பாரதி பத்தினதுதான். அவ பழைய மாதிரி மாறனும் மேடம். எந்த இடத்துல அடிபட்டாளோ அதே இடத்துல அதே ஸ்டேட் மேட்ச்க்கு அவள திருப்பி கூட்டிட்டு போகணும். பாரதி திரும்ப அதே ஸ்டேட் மேட்ச்ல போய் விளையாடனுங்கறது நம்ம கனவு மட்டும் கிடையாது, பல பெண்களோட இருண்ட வாழ்க்கைக்கு அது புது அர்த்ததை கொடுக்கும்.
கண்டிப்பா மாயா, அது தான் என்னுடைய எண்ணமும். என் பொண்ணு இந்த மாதிரி ஒரு அறைக்குள்ள முடங்கி போக விடமாட்டேன். எங்க விழுந்தாளோ அங்கையே என் பொண்ண ஜெயிக்கவெச்சு காட்டுவேன் என்று உறுதியோடு சொன்னாள் சஞ்சனா.
அதே சமயம் காளிதாஸின் மனைவி அவரின் பெரியமகன் வருணை அழைத்துக்கொண்டு சஞ்சனாவின் வீட்டிற்கு வந்திருந்தார். அப்போது தான் சஞ்சனாவும்,மாயாவும் கடையிலிருந்து வந்தனர்.
பரஸ்பரம் நலம் விசாரித்த பிறகு அனைவரும் பேசி கொண்டிருந்தனர். அப்போது வருண், ஆன்ட்டி நான் பாரதிய பார்த்து பேசலாமா? என்று கேட்க அங்கிருந்த அனைவரும் அவனை ஒரு வித அதிர்ச்சியோடு பார்த்தனர்.
வீட்டு ஆட்களை தவிர வேறு யாரையும் பாரதி சந்திக்க தயாராக இல்லை. இவ்வளவு நாள் வந்து செல்லும் காளிதாஸின் மனைவியை கூட பார்த்தால் ஒரு புன்னகை.அதோடு விலகி சென்று விடுவாள். அப்படி இருக்க, ஏற்கனவே இவனால் சிறு காயம் ஏற்பட்டிருக்கும் பாரதி, இவனை சந்திப்பதை எப்படி எடுத்து கொள்வாள் என்று அவர்கள் யாராலும் அனுமானிக்க முடியவில்லை.
அவர்கள் அனைவரும் என்ன சொல்வதென்று தெரியாமல் தயங்கிபோய் இருக்க ஆதியோ கண்டிப்பா நீ பார்க்கலாம். மாயா நீ போய் பாரதிய கூட்டிட்டுவானு சொல்ல, சஞ்சனா ஆதியை கேள்வியோடு பார்த்தாள். ஆதி அமைதி என்பது போல் கையமர்த்த, அதன் பின் சஞ்சனா எதுவும் யோசிக்கவில்லை. ஆதி அதுவும் இந்த மாதிரி சூழ்நிலையில் எதையும் யோசிக்காமல் பட்டென்று முடிவெடுக்க மாட்டான் என்று அவளுக்கு தெரியும். பாரதி காளிதாஸின் மகனை காண ஒப்புக்கொள்வாளா? அவர்களின் சந்திப்பு பாரதியின் வாழ்வில் எத்தகைய மாற்றத்தை கொண்டு வர போகிறது? அறிய தொடர்ந்து வாசியுங்கள் மீண்டும் மலர்வாய்…
-நறுமுகை