வழக்கு முடிந்தபின் அனைவர் மனதிலும் ஒரு அமைதி பரவியிருந்தது. அடுத்த நாள் காலை சஞ்சனா அவர்கள் வீட்டு தோட்டத்தில் அமர்ந்து அந்த காலை வேளை அமைதியை அனுபவித்து கொண்டிருந்தாள்.
எத்தனை நாட்களாகிவிட்டது இப்படி அமைதியாக இருந்து. சில மாதங்களாக வாழ்க்கையில் வீசிய புயல் சற்று அடங்கி இப்பொழுதுதான் ஓர் அமைதியை உணர முடிகிறது என்று எண்ணியவள் அருகில் யாரோ வந்து அமரும் அரவம் கேட்டு திரும்பினாள். கையில் காபி கோப்பையோடு கிருஷ்ணவேணி அமர்ந்திருந்தார்.
என்னம்மா? கூப்பிட்டிருந்தா நானே வந்திருப்பேனே நீங்க ஏன் சிரமப்படுறீங்க?
இதுல என்ன சிரமம், அதுபோக எனக்கும் உங்கிட்ட பேசவேண்டியது இருக்கு.
என்னம்மா பேசணும் சொல்லுங்க?
இன்னும் எவ்வளவு நாள் லீவ் போட்டுட்டு வீட்ல இருக்கப்போற?
ஹம்ம்ம்…,போகனும்மா ஆனா பாரதி…,
சும்மா பாரதினு இழுக்காத.. உனக்கு வெளியில போக தயக்கம் அதுனாலதான் பாரதிக்காகனு சொல்லிட்டு வீட்ல இருக்க.
என்னம்மா இப்படி சொல்றீங்! கேஸ் இப்பதான முடிந்தது. இனிதான் அடுத்தடுத்து யோசிக்கனும்.
இங்கபாரு சஞ்சனா வழக்கு மட்டும்தான் முடிஞ்சிருக்கு, அதனால இந்த சமூகம் பார்க்கும் பார்வை மாறிடாது. முதல்ல நீ தைரியமா வெளிய போகனும். என்னவெல்லாம் தாக்குதல்கள் வருனு நீ தெரிஞ்சுக்கணும், அப்பதான் நீ பாரதிய தயார் செய்ய முடியும். நீ வீட்ல இருந்துக்கிட்டு அவளுக்கு தைரியம் சொல்றதுல எந்த பயனுமில்லை.
உங்கப்பா தவறினதுக்கப்புறம் நான் புறக்கணிக்கப்படாத இடமேயில்லை. அபசகுனம்,முன்னாடி வரக்கூடாது என்று எவ்வளவு பேச்சுக்கள். அதெயெல்லாம் ஒதுக்கித்தள்ள காத்துக்கிட்டதனாலதான் உன்னையும், உங்க அண்ணனையும் நல்லபடியா கரைசேர்த்த முடிஞ்சுது. என்னை அந்த பேச்சுக்கள் பாதிக்க நான் விட்டதேயில்லை. அதுனாலதான் உங்களுக்கு அந்த பாதிப்பு வரலை.
அதைதான் நீ பாரதிக்கு செய்யணும். சமூகத்துல வர விமர்சனங்கள் உன்னையும், மாப்பிள்ளையையும் முதல்ல பாதிக்கக்கூடாது. அப்பதான் பாரதியும் அதை ஒதுக்க கத்துக்குவ.. நான் சொல்றது புரியுதா?
அதுவரை தன் அன்னையை இமைக்க மறந்து பார்த்திருந்த சஞ்சனா, அவரை கட்டி அணைத்து கொண்டாள்.
அம்மா நீங்க இல்லனா பாரதி விசயத்துல என்னைக்கோ தப்பான முடிவுக்கு போயிருப்போம். உங்க அனுபவமும், துணையும் தான் எங்க தைரியம். நான் நீங்க வளர்த்த பொண்ணு, உங்களை பார்த்து வளர்ந்தவ. என்னைக்கும் என்னோட பொண்ணுக்கு தப்பான உதாரணமாக இருக்கமாட்ட. எங்க விழுந்தாளோ அங்கையே அவளை ஜெயிக்க வைப்பேன் என்று அழுகையோடு கூறினாள் சஞ்சனா. இருவரும் சிறிது நேரம் அங்கேயே அமர்ந்து பேசிவிட்டு வந்தனர். உள்ளே வந்ததும் நேராக ஆதித்யன் அறைக்கு சென்றாள் சஞ்சனா.
அங்க அலுவலக விசயமாக போனில் பேசிகொண்டிருந்த ஆதி சஞ்சனாவை பார்த்ததும், போனை வைத்துவிட்டு அவள் அருகில் வந்தான்.
சிவந்த அவள் கண்களை கண்டு அவள் அழுத்திருப்பதை உணர்ந்தவன் என்னாச்சு சனா அழுதயா?
அவன் அப்படி கேட்டதும் உதட்டில் சிறு புன்னகையோடு எப்பவாது எனக்கு என்னனு என்னையே சொல்லவிடுங்களே…நீங்களே எல்லா கண்டுபிடிச்சுட்டா, நான் என்னதான் சொல்றது.
அவள் அப்படி கேட்கவும் பிரச்சனை எதுவுமில்லை என்று உணர்ந்து அவனும் உடன் இணைந்து புன்னகைத்தான். சரிங்க மேடம் நீங்களே சொல்லுங்க என் சனாவோட கண்ணு ஏன் சிவந்திருக்கு?
அவன் அப்படி கேட்டதும் தன் அன்னை கூறியதை அவனிடம் கூறினாள் சஞ்சனா.
அவள் கூறியதை முழுவதுமாக உள்வாங்கிக்கொண்டவன், அத்தை சொல்றது சரிதான் சஞ்சனா..நம்ம ரெண்டுபேரும் இப்படி வீட்டுக்குள்ளேயே இனிமேலும் இருக்கறது சரி கிடையாது. நான்னாவது ஆபீஸ் விசயமா மேனேஜர், ஜெனரல் மானேஜர்னு, வீட்டுக்கு வரவெச்சு பர்க்கிறேன். ஆனா பாரதியோட சேர்ந்து நீ கம்ப்ளீட்டா சோசியல் லைப்ல இருந்து டிட்டாச் ஆகியிருக்க. நீ முதல்ல உன்னோட லீவ்வை கேன்சல் பண்ணிட்டு,காலேஜ் போக தொடங்கு. நம்ம பாரதிய திரும்ப ஸ்கூலுக்கு அனுப்பனுனா கூட நம்ம ரெண்டு பேரும் வெளிய போனதான், அவகிட்டபோய் அதைபற்றி நம்ம பேச முடியும் என்றான்.
பின் அவனே தொடந்து, நானே உன்கிட்ட ஒரு விஷயம் பேசணுன்னு நினைச்சுட்டு இருந்தேன் என்று கூற,
என்ன தயா சொல்லுங்க என்றாள்.
மாயாவை பற்றிதான் கோர்ட், கேசுனு, ஆனதுனால ஆல்ரெடி ஹாஸ்டல்ல இருக்க முடியாதுனு சொல்லி, அவ வீட்டுக்கே போய் இருக்கா.
அதுதான் தெரியுமே..நீங்கதானே சிசிடிவி கேமரா, செக்யூரிட்டி எல்லா எற்பாடு செஞ்சீங்க.
ஆமா..ஆனா ரொம்ப நாளைக்கு மாயா இப்படி தனியா இருக்கறது சரி கிடையாது. நாம இவ்ளோ நாளா அவளோட விருப்பதுல தலையிடக்கூடாதுனு ஒதுங்கியே இருந்தோம். ஆனா இப்பவும் அப்படி இருக்கறது சரியா வராது. உண்மை இல்லனா கூட இவ்ளோ மோசமான பழி விழுந்துருச்சு. அதைசரி செய்ய வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கு.
நீங்க சொல்றது கரெக்ட் தான் தயா. நான் மாயாகிட்ட பேசறேன். நீங்க இதை பற்றி எதுவும் அவகிட்ட பேசிக்க வேண்டாம்
இல்லை இதைப் பேசறதுக்கு நீதான் சரியான ஆளு. நீயே பேசு என்றான் ஆதி.
அதன் பின் சஞ்சனா வரும் வாரம் கல்லூரிக்கு செல்வதாகவும், ஆதியும் மீண்டும் முழுநேரம் அலுவலகம் செல்வதென்றும் இருவரும் முடிவு செய்தனர்.
ஆனால் அதை பற்றி எவரிடமும் பெரிதாக எதுவும் சொல்லாமல் இயல்பாக எப்பொழுதும் வேலைக்கும், கல்லூரிக்கும் செல்வது போல் இருவரும் கிளம்பினர்.
பாரதி, சஞ்சனாவிடம் நீங்களும் அப்பாவும் இல்லனா எனக்கு போர் அடிக்குமேம்மா, தனியா என்ன செய்யறது என்று கேட்டாள். இப்போதைக்கு பாட்டி இருப்பாங்கடா. இன்னும் ஒரு ஒன் ஆர் டூ வீக்ஸ், அப்புறம் நீயும் ஸ்கூலுக்கு போக ஆரம்பிச்சிடலாம் என்று வெகு இயல்பாக கூறினாள் சஞ்சனா.
பாரதியோ அதை கேட்டு மிரண்டு போனாள். ஆனால் அன்னையிடம் அதை அவள் கூறவில்லை.
பாரதி வெளியில் செல்வதை பற்றியும், மீண்டும் பள்ளிக்கு செல்வத்தையும் நினைத்து பயந்து போயிருக்கிறாள் என்று அறிந்திருந்த சஞ்சனாவோ, தனக்கு தெரியும் என்பதை காட்டி கொள்ளவில்லை.
அன்று வெகு நாட்களுக்கு பிறகு கல்லூரிக்கு சென்ற சஞ்சனாவை முகத்திற்கு முன் அனைவரும் நலம் விசாரித்தனர்ஆனால் சிறிது நேரத்திற்கு பிறகு அவளுக்கு பின்னாடி அங்கும் இங்குமாக கிசுகிசுக்க தொடங்கினர்.
கேஸ் முடிஞ்சுருச்சுல அதனாலதான் வந்துருக்காங்க. அப்பா… ஆனா, இவ்ளோ பெரிய விஷயம் நடத்ததுக்கு அப்புறமும் இப்படி திரும்பி வெளிய வரதுக்கெல்லாம் தைரியம் வேணும்.
சரியா சொன்ன.. நம்மனால எல்லாம் முடியுமா? குடும்பத்தோட பூச்சி மருந்து குடிச்சுட்டு இந்நேரம் போய் சேர்ந்திருக்கமாட்டோம்.
அதுசரி தான், பணம் இருக்கு…ஒரே நாள்ல தீர்ப்பு வாங்கிட்டாங்களே..கரெக்ட் தான், ஆனா அந்த மாயா பொண்ணையும், இவங்க ஹஸ்பண்டையும் பத்தி ஏதேதோ சொன்னாங்க. அதையெல்லாம் ஒன்னுமில்லங்கற மாதிரி மறைச்சுட்டாங்களே. எனக்கு தெரிஞ்ச வரைக்கும் எந்த ஜட்ஜும் நியூஸ்ல சோசியல் மீடியால்ல பேச கூடாது, விவாதிக்க கூடாதுனு,சொல்லிருப்பாங்களா? காசு இருந்த சொல்லுவாங்க போல..
நடந்தது ஒரு பெண்ணுக்கான அநீதி என்பதை மறந்து, ஏதோ பாரதி தப்பு செய்துவிட்டது போலவும், அதை மறைத்து நீதியை விலைக்கு வாங்கியது போலவும் இவர்களின் பேச்சுக்கள் சஞ்சனாவை அதிர்ச்சியடைய வைத்தது. தன்னோடு பேசி பழகிய அதுவும் படித்து ஆசிரியராக இருக்கும் அவர்களுக்குள் இருக்கும் இன்னொரு முகம் அவளை அச்சம் கொள்ள வைத்தது. அதே சமயம் தன் அன்னை கூறிய அறிவுரை காதுகளில் ஒலித்துக்கொண்டே இருந்தது.
இந்தப்பேச்சுகளால் நீ பாதிக்கப்படாம இருந்ததான் பாரதி அதை கடந்து செல்ல கற்று கொள்வாள் என்ற வார்த்தைகள் அவள் காதுகளில் ஒலித்துக்கொண்டிருந்ததால்அவர்கள் பேசியதை கண்டும் காணாதது போல் இருக்க முயற்சித்தாள் சஞ்சனா.
அன்று முழுவதும் தொடர்ந்து இது போன்ற பேச்சுக்கள் காதுகளில் விழுந்தது. அனைவரும் அவ்வளவு மோசமும் இல்லை. சிலர் இவர்களுக்காக பரிதாப்பட்டும் பேசினார்கள். அதையும் மறுத்துவிட முடியாது. இப்படியாக பல சொல் அம்புகளுக்கிடையில் அவளின் முதல் நாள் கல்லுரி முடிந்தது.
ஒரு நாள் முடித்து வீட்டிற்கு வருவதற்கு முன்னரே பல நாள் வேலை செய்தது போல சோர்வு ஏற்பட்டது.
ஆதியும் அது நாள் வரை முழு நேரமாக அலுவலகத்திற்கு செல்லவில்லை. வேலைகள் அனைத்தையும் வீட்டிலேயே பார்த்தான். அவன் கூறியது போல மேனேஜர், ஜெனரல் மேனேஜர் என்று வேண்டியவர்கள் வந்து கையெழுத்து வாங்கி சென்றனர்.
பெரும்பாலும் மாயா இவர்களுக்கிடையில் பெரும் பாலமாக இருந்ததினால் பெரிய சிரமம் ஒன்றுமில்லை. இந்த சூழ்நிலையில் அவனும் அன்று முழு நேரமாக அலுவலகத்திற்கு சென்றிருந்தான்.அவனுக்கும் சஞ்சனாவிற்கு ஏற்பட்டது போன்ற அனுபவங்கள் ஏற்பட்டது.
மாயாவையும் அவனையும் பற்றிய பேச்சுக்கள் ஆங்காகே கேட்க நேர்ந்தது. என்னதான் இங்கும் சிலர் பேசினார்கள் என்றாலும் சஞ்சனாவின் கல்லுரியியல் பேசிய அளவிற்கு யாரும் மோசமாக பேச துணியவில்லை. ஆதி அவர்களின் முதலாளி என்பது ஒரு முக்கிய காரணமாக இருந்தது.
அடிப்படையில் பார்க்கும்பொழுது பரிதாபப்பட்டவர்களை விட காசு கொடுத்து நீதியை விலைக்கு வாங்கிவிட்டார்கள், மாயாவிற்கும் இவருக்கும் இடையில் ஏதாவது இருந்திருக்குமோ என்ற பேச்சுக்கள் தான் அதிகமாக இருந்தது.
அந்த நொடியில் அவனுக்கு செல்வகுமார் மீது தீராத கோவம் வந்தது. என்னதான் காசு வாங்கிக்கொண்டு வாதாடும் வக்கீல் என்றாலும் இப்படியா ஒரு பெண்ணின் வாழ்க்கையில் சேற்றை வாரி இறைப்பது என்று ஆற்றாமையாக இருந்தது.
அன்று வீட்டிற்கு வந்த பின் ஆதியும் சஞ்சனாவும் தோட்டத்தில் அமர்ந்து இதை பற்றி பேசினர்.
சஞ்சனா எதுவும் கூறுவதற்கு முன் ஆதியே இந்த மக்கள் ஏன் இவ்வளவு மோசமா இருக்காங்க, அத்தை சொன்னப்ப இந்த பேச்சுக்களை கண்டும்காணாம போறது ஈஸியா இருக்குனு நினைச்சேன். நம்மளோட சேர்ந்து மாயாவோட வாழ்க்கையும் வீணா போயிடுமோனு எனக்கு பயமா இருக்கு.
ஒண்ணுமே இல்லாத விஷயம், இருக்குமோ இருக்குமோனு எல்லாரும் இப்ப பேச ஆரம்பிக்கறாங்க. கூடவே நம்ம என்னவோ தப்பு பண்ணிட்டு அதை விலைகொடுத்து மறைச்ச மாதிரி பேசுறாங்க. எப்படி இந்த மாதிரியான எண்ணங்களெல்லாம் வருதுன்னு எனக்கு புரியவேமாட்டைங்குது? என்று தனது ஆதங்கத்தை கூறினான்.
சஞ்சனா அவன் கூறியதை அமைதியாக கேட்டு கொண்டு அமர்ந்திருந்தாள்.
என்ன சஞ்சு எதாவது சொல்லு? அமைதியவே இருக்க! உங்க காலேஜ்ல யாரும் எதுவும் சொல்லலையா?
நீங்க கேட்ட எல்லாத்தையும் விட அதிகமாவே நான் கேட்டுட்டுதான் வந்திருக்கேன். படிச்சு நல்ல வேலைல இருக்கறவங்க தான் இப்படி பேசுறாங்க. படிக்கற ஸ்டுடென்ஸ் எல்லாரும் ரொம்ப சப்போர்ட்டிவா தான் பேசுனாங்க. அங்க கிளீனிங் பண்ற ஆயா,வாட்ச்மன், கூட ரொம்ப சப்போர்டிவாதான் பேசுனாங்க.
நீ ஒன்னு கவலைப்படாத கண்ணு எல்லாம் அந்த கடவுள் பாத்துப்பாரு. அதுனாலதான் அவனுங்களுக்கு உடனே தீர்ப்பு கிடைச்சுருச்சு. இவனுங்க மாதிரி ஆளுங்களுக்கு இதுதான் சரி. பாரதி கண்ணு வாழ்க்கை நல்லா இருக்கும்னு சொன்னாங்க.
எனக்கென்னவோ இந்த படிப்பு நம்ம சுயமா சிந்திக்குற தன்மையும், கொஞ்சநஞ்ச மனிதாபிமானத்தையும் மறக்கடிச்சிடுச்சோனு தோணுது. ஏன்னா படிச்சவங்க தான் இப்படி இருக்குமோ அப்படி இருக்குமோனு யோசிக்கறாங்க. படிக்காதவங்களுக்கு அதெல்லாம் இல்ல. அவர்களுக்கு நியாயம் மட்டும்தான் கண்ணுக்கு தெரியுது. அதுல அவங்க தெளிவா இருக்காங்க.
அவள் கூறியதை ஆதியும் ஆமோதித்தான். சிறிது நேரம் இருவரும் அமைதியாக இருந்தனர்.
சஞ்சனா நமக்கே எப்படி இருக்கே, பாரதி ஸ்கூலுக்கு போய் எப்படி எல்லாரையும் ஃபேஸ் பண்ணுவா?
எனக்கு தெரியல தயா? நம்ம நினைக்கிற அளவுக்கு இது ஈஸியா இருக்க போறதில்லை. இதை கண்டும்காணாதது மாதிரி நம்ம விடவும் முடியாது. இதுக்கு நம்ம ஏதாவது செய்யணும்.
என்ன செய்ய முடியுன்னு நீ நினைக்குற? ஒன்வொருத்தரிடமும் போய் விளக்கம் சொல்ல போறியா? அப்படியே சொன்னாலும் அதை ஏத்துக்க கூடிய நிலையில அவங்க இருக்கணுமே என்றான் ஆதி.
தனித்தனியா போய் விளக்கம் சொல்ல முடியாது, அதே மாதிரி ஊருலே இருக்குற எல்லாருக்குமே சொல்லனுனு கிடையாது. உங்க ஆபீஸ்ல வேலை செய்றவங்க, என் கூட வேலை செய்றவங்க, பாரதியோட டீச்சர்ஸ் இந்த மாதிரி நம்ம வாழ்க்கையில அன்றாட சந்திக்கிற சிலருக்கு சிலது புரியற மாதிரி எடுத்து சொல்லித்தான் ஆகணும் தயா..
அப்படி இல்லாம, நம்மனாலயும் பீஸ்புல்லா இருக்க முடியாது. பாரதியாலும் நிம்மதிய வெளிய போக முடியாது.
பாரதி ஸ்கூலுக்கு போகாம இப்படியே முடங்கி போறதுல எனக்கு கொஞ்சம்கூட இஷ்டமில்லை. அவ கண்டிப்பா ஸ்கூலுக்கு போகணும். அப்படி அங்க போறப்ப டீச்சர்ஸ் அவளுக்கு சப்போர்ட்டிவா இருக்கணும். டீச்சர்ஸே அவளை குற்றவாளி மாதிரி பார்க்க கூடாது.
ஆனா இவங்க எல்லாருக்கும் எப்படி விளக்கம் சொல்ல முடியுனு நினைக்குற.
சொல்லணும் கண்டிப்பா சொல்லணும். யோசிக்கலாம் ஆனா அதுவரைக்கும் என்ன நடந்தாலும் நீங்களும் நானும் ஆபீஸ் போறதையோ, காலேஜ்க்கு போறதையோ நிறுத்தவே கூடாது.
ஒருநாள் பேசுனாங்கனு நம்ம போகலைனா, அவங்க பேசுனதுல உண்மை இருக்குனு நினைக்கதோனும்.
அதே மாதிரி இப்ப மாயா கல்யாணத்துக்கு நான் அவசரப்படுத்த போறதும் கிடையாது. மாயாகிட்ட கண்டிப்பா அதைபத்தி நான் பேசுறேன். அதுக்காக நம்ம அவளை அவசரபடுத்தி கல்யாணத்துக்கு சம்மதிக்க வெச்சாலும், உண்மை வெளில வந்துருச்சு அதுனாலதான் அவளுக்கு அவசர அவசரமா கல்யாணம் பண்ணி வெக்கறாங்கற பேச்சுதான் வரும். அதுக்கு நம்மளே இடம் கொடுத்துற கூடாது.
நீ சொல்றதும் கரெக்ட் தான் சனா,நீ முதல்ல மாயாகிட்ட பேசு. மற்றதை அப்புறம் யோசிக்கலாம். நமக்கொரு நம்பிக்கை வர வரைக்கும் என்னால பாரதிய ஸ்கூலுக்கு கண்டிப்பா அனுப்ப முடியாது. மாயா வழக்கம் போல வரட்டும். வருண் வாரத்துல ரெண்டு நாள் விளையாட வரேன்னு சொல்லியிருக்கான்.
இப்போதைக்கு பாரதிக்கு பெருசா போர் அடிக்கவோ, இல்ல வெளியில போகனுன்னு அவளுக்கு தோன்றதுக்கு வாய்ப்பில்லை. ஆனா, ரொம்ப நாளைக்கு அவளை இப்படியே வீட்லயிருக்க விடக்கூடாது. சீக்கிரமா இதுக்கு ஒரு வழி கண்டுபிடிக்கணும் என்று ஆதி கூற, சஞ்சனா அதை ஆமோதித்தாள்.
அதன்பின் வந்த நாட்கள் சற்று சவாலாக இருந்தாலும் பெரியதாக பின்னால் பேசுபவர்களின் கீச்சு குரல் அடங்கி போகத்தான் செய்தது. அதற்கொரு காரணம் யார் என்ன பேசினாலும் எல்லோரிடமும் எப்பொழுதும் போல் பேசிவந்தாள் சஞ்சனா. எப்பொழுதும் போல் அவளது வகுப்பு மாணவர்களுக்கு ஆர்வமுடையதாக இருந்தது. அவளாக ஒதுங்கி இருக்கவில்லை. அதுவே மற்றவர்களுக்கு பேசுவதற்கான சந்தர்ப்பங்களை கொடுக்காமல் இருந்தது.
அதேபோல் ஏற்கனவே ஆதி தங்களது முதலாளி என்ற நிலையில் சற்று பேச தயகியவர்கள் அவன் தொடர்ந்து அலுவலகத்துக்கு வந்து பணிகளில் மும்மரமாக ஈடுபடவும், அவர்களுக்கும் உட்கார்ந்து பேசுவதற்கு நேரமில்லாமல் போனது.
அந்தவார இறுதியில் மாயாவை அவள் வீட்டில் சென்று சந்தித்தால் சஞ்சனா.
சஞ்சனாவை பார்த்ததும் ஆர்வமாக வரவேற்ற மாயா, என்ன மேடம் வரேன்னு ஒரு வார்த்தை கூட சொல்லலை? நான் ஏதாவது செஞ்சு வெச்சிருப்பேன், இப்படி திடீருனு வந்து சர்ப்ரைஸ் குடுக்குறீங்க?
அய்யொ…அப்படி ஒரு அசம்பாவிதம் நடக்க கூடாதுன்னுதான் நான் முன்னாடியே சொல்லளை என்று சஞ்சனா அவளை கேலி செய்ய, மாயா கடகடவென சிரித்தாள்.
இப்படி பேசி எவ்வளோ நாள் ஆச்சு மேடம் என்று மாயா சொல்ல, தலையசைத்து அதை ஆமோதித்தாள் சஞ்சனா.
பின் மாயா இருவருக்கும் தேநீர் தயாரித்து கொண்டுவர அதை அருந்திக்கொண்டே வீட்டை சுற்றி பார்த்தாள் சஞ்சனா.
என்ன மேடம் ஓரளவுக்கு சுமாரா வெச்சிருக்கேனா என்று கேட்க,
ரொம்போ நல்லாவே வெச்சிருக்க மாயா, ஆமா இங்க தனியா இருக்க உனக்கு போர் அடிக்கலையா? முன்னாடி மாதிரி நீ நம்ம வீட்லையே வந்து தங்கியிருக்கலாமே , ஏற்கனவே இந்த மாதிரியெல்லாம் பேச்சுக்கள் இருக்க இன்னும் மோசமா போகனுமானு நினைச்சு வரலையா? என்று கேட்டாள் சஞ்சனா.
அட நீங்க வேற மேம். இவங்க பேசுறதுக்கெல்லாம் பயப்படற ஆளா நான். இந்த சமயத்துல எல்லாரும் வந்து இருந்தா அது ஏதோ பாரதிக்கு வித்தியாசம இருக்கும். நானும் கொஞ்சநாளா ஹாஸ்டெல்ல தனியா இருந்து பழகிட்டேன் அதுனாலதான்.
இப்பவும் அடிக்கடி அங்க வந்து போயிட்டு தானே இருக்கேன். நான் எப்பவும் வருவேன், என்ன எவன் என்ன சொல்றது? என்று மாயா கேட்க சஞ்சனா புன்னகைத்தாள்.
உன்ன மாதிரி, எங்க அம்மா மாதிரி இருக்கறது ரொம்ப கஷ்டம். ஆனா அப்படி இருந்தாதான் இந்த சொசைட்டியில்ல இருக்க முடியும் என்று சஞ்சனா கூற,
சரியா சொன்னீங்க இவங்க தொரத்துறதுக்கெல்லாம் பயந்து நம்ம ஓடுனா நம்மள உக்காரவேவிட மாட்டானுங்க என்றாள் மாயா.
மாயா உன்னோட மனநிலை எனக்கு தெரியும். நீ ரொம்ப ஸ்போட்டிவான பெர்ஷன். சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம் பயந்து அழகூடிய ஆளும் கிடையாது. இவ்வளோ பெரிய விஷயத்தையே நீ ரொம்போ சாதாரணமாதான் ஹாண்டில் பண்ண. உன்னோட எந்த விருப்பத்திற்கு நாங்க குறுக்க வந்ததேயில்லை, ஆனா இப்ப எங்களுக்கு உன்ன நினைச்சு கவலையயிருக்கு. இதுக்கு முன்னாடி உன்னோட கல்யாணத்த பத்தி பேசுறப்ப கொஞ்ச நாள் போகட்டுனு சொன், இப்ப நீ என்ன ஐடியா வெச்சுருக்க என்று சஞ்சனா கேட்க,
மாயாவோ நீங்க எப்போ கேட்பீங்கனு இருந்த மேடம் என்றாள். அவளே தொடர்ந்து நான் ஒருத்தரை விரும்புறேன். சில காரணங்களால இப்ப கல்யாணத்தை பற்றி யோசிக்கமுடியாத நிலையில் இருக்கோம். நீங்களும், சாரும் பிரிஞ்சுயிருந்த டைம்ல உங்ககிட்ட இதை சொல்ல எனக்கு கஷ்டமாயிருந்துச்சு. நீங்க மறுபடி வீட்டுக்கு வந்தப்புறம் சொல்லனு சொல்லனு நினைப்ப தயக்கமயிருக்கும் அதான் சொல்லலை. பட் மேம் உங்களையும் சாரையும் பார்த்துதான் காதல் கல்யாணம் பண்ணிக்கனுனு ஆசை வந்துச்சு என்று மாயா கூற, அளவுகடந்த ஆச்சரியத்தில் இருந்தாள் சஞ்சனா.
மாயாவின் காதலன் யார்? கோர்ட் சம்பவம் மாயாவின் காதலை பாதிக்குமா? அறிய தொடர்ந்து வாசியுங்கள் மீண்டும் மலர்வாய்…
-நறுமுகை