“If we are to fight discrimination and injustice against women we must start from the home for if a woman cannot be safe in her own house then she cannot be expected to feel safe anywhere.”
என் அன்பு சகாக்களுக்கு ,
கடந்த ரெண்டு வாரமா நம் வீட்டு பெண்களை எப்படி பாதுகாப்பது, அவர்களுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போன்றவற்றை பற்றி பேசி கொண்டிருந்தோம் . எப்படி நாணயத்திற்கு இரண்டு பக்கமோ அதே போல எல்லா சம்பவத்திற்கும் இரண்டு தரப்பு உண்டு, பாதிக்கப்பட்டவர்கள் , பாதிப்பை ஏற்படுத்தியவர்கள். பாதிக்கப்பட்டவர்கள் எப்படி முன்னெச்சரிக்கையோடு இருப்பது என்று பேசினோம். இப்பொழுது பாதிப்பை ஏற்படுத்தும் தரப்பை பற்றி சிறிது பேசலாம். நம்மில் பெரும்பாலான வீடுகளில் பெண் பிள்ளைகளுக்கு கேட்கப்படும் கேள்விகள், விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் அதே வீட்டில் வளரும் ஆண் பிள்ளைகளை பாதிப்பதில்லை. உங்கள் பெண் பிள்ளைகள் வெளியில் சென்று பத்திரமாக திரும்பி வரவேண்டும் என்றால் உங்கள் வீட்டு ஆண் பிள்ளைகளை கேள்வி கேட்க தொடங்குங்கள். ஆண் பிள்ளைகள் மட்டும் உள்ள வீடுகளில் இன்னும் அதிக கவனத்தோடு இருப்பது இன்றைய காலகட்டத்தில் அவசியம் ஆகிறது. நீங்கள் செய்திகளில் பார்க்கும் பெண்களுக்கு மீதான வன்கொடுமைகள் ஒரு ஆண் ஆல் ஏற்படுபவை, அந்த ஆண் யாரோ ஒருவரின் மகன், யாரோ ஒருவருக்கு சகோதரன், நீங்கள் அன்றாட வாழ்வில் கடந்து போகும் யாரோ ஒரு ஆண். எனவே உங்கள் பெண் பிள்ளைகளை எவ்வளவு பயத்தோடு நீங்கள் பாதுகாக்கிறீர்களோ அதே பயத்தோடு உங்கள் ஆண் பிள்ளைகளை நல்வழி படுத்துங்கள்.
சில மாற்றங்களை வீட்டில் இருந்து தொடங்குங்கள், ஆண் பிள்ளைகளின் நண்பர்கள் யாரென்று தெரிந்துவைத்து கொள்ளுங்கள் நல்லவைகளுக்கும், கெட்டவைகளுக்கும் தொடக்கம் அந்த நட்பு தான். ஆண் பிள்ளைகள் வெளியில் சென்றால் எங்கு யாருடன் செல்கிறார்கள் என்று கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். அடிக்கடி மிகவும் காலதாமதமாக வீட்டிற்கு வந்தால் அதன் காரணத்தை அறிவது மிகவும் அவசியம். என் செயல்களுக்கு என் வீட்டில் நான் பதில் சொல்லவேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு இருக்க வேண்டும். நான் என்ன செய்தாலும் என்னை யாரும் எதுவும் கேட்க மாட்டார்கள் என்ற அதிகப்படி சுதந்திரம் அவர்களை தவறான பாதைக்கு இட்டு செல்லும். பெண் பிள்ளைகள் இருக்கும் வீட்டில் வளரும் ஆண் பிள்ளைகளுக்கு தங்கள் சகோதரியின் பாதுகாப்பு அவர்கள் பொறுப்பு என்பதை புரியவையுங்கள். அவன் ஆம்பள பையன் அவன் எப்படிவேணுனாலும் இருப்பான் அதுக்குன்னு நீயும் அவன மாதிரி செய்வையா போன்ற கேள்விகளை தவிர்ப்பது நல்லது. இது நான் ஆண் நான் எதுவும் செய்யலாம் என்ற எண்ணத்தை ஏற்படுத்தும். பெண்கள் வன்கொடுமைகள் பற்றி செய்திகள் வரும்போது எப்படி உங்க பெண் பிள்ளைகளை பத்திரமாக இருக்க சொல்லி சொல்கிறீர்களோ, அதே போல உங்கள் ஆண் பிள்ளைகளிடம் இதுபோன்ற தவறுகள் நடக்க என்றும் நீ காரணமாக இருந்து விட கூடாது, உன்னோடு படிக்கும் பெண்கள், வேலை செய்யும் பெண்களுக்கு என்றும் நீ பாதுகாப்பாக இருக்க வேண்டும். அவர்களுக்கு இதுபோன்ற பிரச்சனைகள் வரும்போது அவர்களுக்கு உதவியாக, உறுதுணையாக இருக்க வேண்டும் என்று சொல்லிக்கொடுங்கள்.
ஒரு பெண்ணை அவமதித்ததற்காக, ஒரு பெண்ணை கடத்தி சென்றதற்காக யுத்தம் செய்த மண்ணின் பாரம்பரியத்தை அவர்களுக்கு எடுத்து சொல்லுங்கள். நிமிர்ந்து நில் படத்தில் ஒரு வசனம் வரும் பெண்ணை விட ஆணை பலசாலியாக படைத்தது பெண்ணை பாதுகாக்கவே தவிர அதை கொண்டு அவர்களை காயப்படுத்த அல்ல. இதனை உங்கள் வீட்டு பிள்ளைகளுக்கு புரியாவையுங்கள். பெண்களை எதிர் பாலினமாக பார்க்காமல் சக மனுஷியாக, ஒரு தோழியாக பார்க்க உங்கள் பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுங்கள். நான் மேல் சொன்ன அனைத்தையும் அம்மா தான் சொல்ல வேண்டும். ஆண் பிள்ளைகள் அப்பா சொல்வதை கேட்பதைவிட அம்மா சொன்னால் சற்று நின்று கேட்பார்கள் , எனவே இந்த விஷயங்களை அம்மா சொல்வது அவர்களை சற்று சிந்திக்க வைக்கும். உங்கள் ஆண் பிள்ளை எந்த வயதில் இருந்தாலும் சரி மேற்கூறியவற்றை அவர்களின் வயதுக்கு ஏற்ப சொல்லி கொடுங்கள். வீட்டில் தொடங்கும் இந்த மாற்றங்கள் நாளை சமூகத்தையும் மாற்றும். தொடர்ந்து பேசலாம்…………..
என்றும் அன்புடன்
சக தோழி