காதல் கொண்டேனடி-32

காதல் கொண்டேனடி-32

செழியன் வெளியேறிய பிறகு யாரும் யாருடனும் பேசாமல் அவரவர் அறைக்கு சென்றனர்.

 எப்போதும் தன் பேத்தி என்ன செய்தாலும் அது சரியாக தான் இருக்கும் என்று வாதாடும் கனகவள்ளி கூட அவந்திகா இப்படி சொன்னதற்கு என்ன காரணம் என்று பிடிபடாமல், அவளிடம் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார்.

செழியனை மதுரை ஏர்போர்ட்டில் விட்டுவிட்டு வந்த வெற்றியோ வீட்டில் இருக்க முடியாமல் தோட்டத்திற்கு சென்றான்.

இங்கு மீனாட்சியோ இந்த பொண்ண நான் நல்லாதானே வளர்த்தேன், பொண்ண வளர்த்தினா மீனாட்சி மாதிரி வளர்த்தனும்னு எல்லாரும் பெருமையா பேசும் அளவிற்கு தானே வளர்த்தினேன். என்ன ஆச்சு இந்த பொண்ணுக்கு, இந்த ரெண்டு வருசமா எல்லாத்தையும் முன்னுக்கு பின் முரணாகவே செய்துக்கிட்டிருக்கா என்று தன் கணவரிடம் புலம்பிக்கொண்டிருந்தாள்.

மகளின் நடவடிக்கைகளில் மிகவும் குழம்பி போய் இருந்த ராஜபாண்டிக்கோ  தன் மனைவியை என்ன சொல்லி  சமாளிப்பது என்று தெரியவில்லை.

இப்படி அனைவரும் அவரவர் எண்ணத்தில் மூழ்கியிருக்க, வீரபாண்டி திருமணத்தை பற்றி பேசி முடிவெடுக்க தாமரையின் வீட்டிற்கு சென்றார்.

அங்கு சென்றவர், தாமரையின் பெற்றோரிடம், அவந்திகா திருமணத்தை நிறுத்த சொல்லிவிட்டதாகவும் ஆனால் பேசியபடி  தாமரை மற்றும் வெற்றியின் திருமணத்தை நடத்திவிடலாம் என்றும் கூறினார்.

அவர் இப்படி சொல்லவும் என்ன சொல்வது என்று தெரியாமல் தாமரையின் பெற்றோர் யோசித்துக்கொண்டிருக்க,

அங்கு வந்த தாமரை, அவந்திகா செழியன் அண்ணா திருமணம் நடக்காமல் எங்களுக்கு திருமணம் நடக்காது. எங்களுக்காக தானே செழியன் அண்ணா திருமணத்தை தள்ளி போட்டார். ஒரு வேளை என் ஜாதகத்தில் பிரச்சனை இல்லாமல் இருந்திருந்தால் ஆறு மாதத்திற்கு முன்பே திருமணம் நடந்திருக்கும் இல்லையா இப்போது எப்படி அவர்களை விட்டுவிட்டு எங்கள் திருமணத்தை மட்டும் நடத்துவது வேண்டாம் தாத்தா என்று கூறிவிட்டாள்.

 அவர் எவ்வளவோ சொல்லியும்…

 யாருமே சந்தோசமா இல்லாம வருத்தத்தில் இருக்கும்போது இப்போ இந்த கல்யாணம் எங்களுக்கு தேவையா, வேண்டாம். அவந்திகா கல்யாணத்தோடு சேர்த்து எங்களது திருமணத்தையும் நிறுத்திவிடுங்ககள் என்று தாமரை முடிவாக கூறிவிட்டாள்.

அங்கிருந்து வீட்டிற்கு வந்தவர், யாரிடமும் எதுவும் சொல்லாமல் தன் அறைக்கு சென்று முடங்கினார்.

தோட்டத்தில் இருந்த வெற்றிக்கு போன் செய்த தாமரை என்ன நடந்தது என்று கேட்க அதுவரை யாரிடம் சொல்வது என்று தெரியாமல் இருந்தவன்,

கனகவள்ளிக்கும் தனக்கும் ஏற்பட்ட சந்தேகம் அவர்கள் இருவரும் ஜோசியரை சென்று பார்த்தது, அதன் பின் குடும்ப ஜோசியரை விசாரித்தது, சென்னை சென்று தன் நண்பனை பார்த்தது, இப்போது அவந்திகா திருமணத்தை நிறுத்த சொன்னது, அதை செழியனின் முன்னிலையில் சொன்னது என்று அனைத்தையும் அவளிடம் ஒன்று விடாமல் ஒப்பித்தான்.

தனக்கு தெரியாமல் இத்தனை நடந்திருக்கிறதா  என்று தாமரை மலைத்து போனாள். எல்லோரிடமும் அன்பாக பேசி பழகி எப்போதும் சிரித்த முகத்தோடு இருக்கும் அவந்திகாவை இத்தனை தூரத்திற்கு கஷ்டப்படுத்தும் அந்த நபர் யார்?  யாருக்கு அவந்திகா மீது இவ்வளவு கோபம்  என்று தாமரைக்கு புரியவேயில்லை.

அதன்பின் வந்த நாட்களில் வீட்டில் யாரும் அவந்திகாவிடம் பேசவில்லை. அவந்திகாவும் தனது அறையை விட்டு வெளியேவராமல் அங்கையே முடங்கிக்கிடந்தாள்.

தாமரையின் முடிவை கேட்டு செழியன் போன் செய்து தாமரையிடம் எங்களுக்காக உங்கள் திருமணத்தை நிறுத்தவேண்டாம், உங்கள் திருமணமாவது நடக்கட்டும் என்று  எவ்வளவு தூரம் எடுத்துசொல்லியும் தாமரை முடியவே முடியாது என்று கூறிவிட்டாள்.

தாமரை  மூலமாக விஷயத்தை கேள்விப்பட்ட மாலினி, அவந்திகாவிற்கு போன் செய்து சத்தம்போட்டாள்,

 யார் என்ன சொன்னாலும் தன் முடிவில் எந்த மாற்றமும் இல்லை, என்று கூறிவிட்டு தன் போனை அணைத்துவைத்துவிட்டாள் அவந்திகா.

மாலினியால் அவந்திகா கூறியதை நம்பவே முடியவில்லை, விடாமல் ராஜிடம் புலம்பிகொண்டே இருந்தாள்.

தாமரையும்  திருமணத்தை நிறுத்த சொன்னதால் ஊரில் உள்ள அனைவருக்கும், ஜாதகத்தில் பிரச்சனை பரிகாரம் செய்யவேண்டும் என்று கூறி சமாளித்தனர்.

அன்னபூரணி இப்போதுதான் உடம்பு தேறிக்கொண்டிருப்பதால் அவருக்கும் அதே காரணத்தை சொல்லுமாறு செழியன் கூற, அவந்திகாவின் குடும்பத்திற்கும் அதுவே சரியாகபட்டது.

வீரபாண்டி மீதும், கனகவள்ளி மீதும்,  பெரிய மரியாதை வைத்திருந்த அன்னபூரணி அவர்கள் கூறியதை சிறிதும் சந்தேகப்படவில்லை.

அதற்குபின் சில நாட்கள் அவரவர் யோசனையில் கழித்தனர்.

வேலை வேலை என்று எந்தநேரமும் மருத்துவமனையிலேயே இருக்க தொடங்கினான் செழியன். வீட்டில் தாய்க்கு துணையாய் வேலைக்கு ஆள் வைத்தான், அவ்வப்போது அவன் பெரியம்மாவும் வந்து பார்த்துக்கொண்டார்.

செழியனுக்கோ எப்படி இத்தனை நாட்கள் ஆகியும் தன் அம்மா அவந்திகா வந்து பார்க்காதது பற்றியோ, போன் செய்து பேசாதது பற்றியோ தன்னிடம் எதுவும் கேட்காமல் இருக்கிறார் என்று புரியவில்லை. அவனாக எதையும் கேட்டு மாட்டிக்கவேண்டாமென்று எண்ணி அமைதியாக இருந்துவிட்டான்.

ஒருநாள்,  அன்னப்பூரணியை பார்த்துக்கொள்ளும் பெண் சீக்கிரம் வீட்டிற்கு செல்லவேண்டும் என்று சொல்லிருந்ததால், அன்று செழியன் நேரமாக வீட்டிற்கு வந்தான்.

யாரிடமோ போனில் பேசிகொண்டிருந்த அன்னபூரணி, அவன் வருவதை பார்த்ததும், அவந்தி செழியன் வந்திட்டான் இந்தாம்மா அவன்கிட்ட பேசு என்று போனை கொடுத்தார்.

ஒரு நிமிடம் அதிர்ந்துபோய் நின்றான்செழியன், தன் அன்னை முன் எதுவும் காட்டிக்கொள்ளாமல் போனை வாங்கி காதில் வைத்தவன் ஹலோ, ஹலோ, என்று இருமுறை அழைத்துவிட்டு லைன் கட்டாகிவிட்டதாக சொல்லி போனை கட் செய்தான்.

அந்தபுறம் அவந்திகாவிற்கோ ஒருமாதம் கழித்து செழியனின் குரல் கேட்டதில் அவளை மீறி கண்களில் கண்ணீர் வழிந்தது.

இங்கு செழியனோ குழம்பிபோயிருந்தான். அவள் தன் அன்னையிடம் பேசிக்கொண்டு தான் இருக்கிறாளா….. என்று ஆச்சர்யமாக இருந்தது.

பேச்சுவாக்கில் தன் அன்னையிடம் கேட்க, என்னடா தினம் தினம் அவந்தி என்கிட்ட பேசிட்டு தான் இருக்கிறாள். ஏன் உன்கிட்ட அவள் சொல்லவில்லையா, நீ தான் எந்தநேரமும் ஹாஸ்பிடலையே கட்டிட்டுஅழறயே, அவகிட்ட ஒழுங்கா போன் பண்ணியாவது பேசுகிறாயா இல்லையா, என்று அவனையே அவன் அன்னை திருப்பி கேட்க,

ஒருநிமிடம் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தவன், இல்லை அம்மா பேசிட்டு தான் இருக்கேன், சும்மாதான் கேட்டேன் என்று எதையோ சொல்லி மழுப்பிவிட்டு அங்கிருந்து எழுந்து சென்றுவிட்டான்.

தன் அறைக்கு வந்தவன் யாருக்கோ போன்செய்து பேசினான். இனி நடக்கவேண்டியதை தீர்மானிக்க வேண்டிய நேரம்வந்துவிட்டது என்றுதன் மனதில் நினைத்துகொண்டான் செழியன். அவன் பேசியது யாரிடம், அடுத்து நடக்கபோறது என்ன? அறிய தொடர்ந்து வாசியுங்கள்………

-நறுமுகை

No Responses

Write a response