காதல் கொண்டேனடி-30

காதல் கொண்டேனடி-30


அன்று இரவு செழியன் அவந்திகாவிற்கு போன் செய்து, தான் ஷாலினியிடம் சொல்லி விட்டதாகவும், இனி அவந்திகா அதை பற்றி கவலை பட தேவை இல்லை என்றும் கூறினான்.
சரி என்று கேட்டுக்கொண்ட அவந்திகா மேற்கொண்டு அதைப்பற்றி எதுவும் கேட்காமல் வேறு பேச்சுக்கு தாவினாள்.
அவள் பேச்சை பாதியில் நிறுத்தி, ஏன் அம்மு இப்போதும் என்கிட்டே, நான் எதுக்கு அப்படி சொன்னேன்னு காரணம் கேட்க மாட்டியா? என்று கேட்டான் செழியன்.
மாமா காரணம் சொல்ற மாதிரி இருந்த முதலில் நீங்க அதைத்தான் சொல்லி இருப்பீங்க, அப்படி சொல்லாம நீங்க அவாய்ட் பண்றீங்கனா அதுக்கு ஏதாவது காரணம் இருக்கும் அதை வேற நான் எதுக்கு உங்களை கேட்டு கஷ்டப்படுத்தனும் என்றாள் அவந்திகா.
நான் உன்னை கண்ட்ரோல் பன்றேன்னு உனக்கு தோணலையா என்று கேட்டான் செழியன்.
அவன் கூறியதை கேட்டு சிரித்த அவந்திகா ஏன் மாமா இப்போ நான் உங்க கிட்ட இனி ஷாலினிகிட்ட பேசக்கூடாதுனு சொன்னா கேட்பீங்களா, மாட்டீங்களா, என்றாள்.
என்ன கேள்வி இது கண்டிப்பா கேட்பேன் என்றான் செழியன்.
அவ்வளவு தான் இது பரஸ்பரம் அன்பு, நம்பிக்கை இதுல கண்ட்ரோல் எங்க இருந்து வந்தது என்று கேட்டாள் அவந்திகா.
அவள் கேட்டதற்கு லவ் யூ டா என்று பதில் சொன்னான் செழியன்.
பாருடா டாக்டர் சார் நல்ல மூட்ல இருக்காரு போல என்று அவனை கேலி செய்தாள், அவந்திகா.
அதன் பின் இருவரும் வெகு நேரம் பேசிக்கொண்டிருந்தனர்.
இதமான மனநிலையில் அந்த வாரம் சென்றது. வார இறுதியில் இடியென அந்த செய்தி வந்தது.
செழியனின் அம்மாவிற்கு ஆக்ஸிடென்ட் ஆகி ஹாஸ்பிடலில் அட்மிட் செய்திருந்தனர். செழியன் அந்த செய்தி கேட்டு இடிந்து போனான்.
மூன்று மாதங்களில் வேலையை ரிசைன் செய்து விட்டு கிளம்புவதாக ஏற்கனவே ஜேசனிடம் சொல்லியிருந்தான். இப்போது நிலைமையை சொல்லி இனி தான் திரும்ப வர இயலாது என்று கூறிவிட்டு கிளம்பினான்.
அவந்திகா ரிசைன் செய்ய ஏற்கனவே பேப்பர் கொடுத்திருந்தாள். இந்த நிலையில் அவளால் ஒரு நாள் கூட விடுப்பு எடுக்க இயலாது என்பதாலும், செழியனின் வீட்டை விற்க வேண்டி இருப்பதாலும் அவளை அங்கேயே விட்டுவிட்டு செழியன் மட்டும் இந்தியாவிற்கு சென்றான். செழியன் கிளம்பிய பிறகு அவந்திகா மிகவும் சோர்ந்து போனாள். மாலினியும், ராஜும் தான் அவளை சமாதானம் செய்தனர்.
செழியன் இந்தியா போய் சேரும் வரை அவந்திகா மற்றும் தாமரையின் குடும்பம் தான் கோயம்பத்தூரில் தங்கி அன்னபூரணியை பார்த்துக்கொண்டனர்.
அன்னபூரணிக்கு கால் உடைந்து சர்ஜரி செய்திருந்தனர். அதை தவிர வேறு எதுவும் பெரிய அடி இல்லை. அனைத்திற்கும் ஒரு பெண் துணை தேவை என்பதால், செழியன் வீட்டோடு ஒரு நர்ஸ் ஏற்பாடு செய்திருந்தான்.
மீனாட்சியும், தாமரையும், தாமரையின் அம்மா பார்வதியும் ஒரு வாரம் மாற்றி ஒரு வாரம் செழியன் வீட்டிலேயே தங்கி இருந்து அன்னபூரணியை பார்த்துக்கொண்டனர்.
அந்த சம்பவம் நடந்து ஒரு மாதம் இருக்கும், கனகவள்ளி ஒரு நாள் பக்கத்து ஊர் கோயிலுக்கு போக வேண்டும் என்று கூறி வெற்றியை கூட்டி கொண்டு கிளம்பினார். ஊர் எல்லையை தாண்டியதும் மதுரைக்கு வண்டியை விட சொன்னார்.
அப்பத்தா மதுரை கோயிலுக்கா போறோம் என்றான் வெற்றி.
இல்லை என்று மறுத்த கனகவள்ளி, ஜோசியரை பார்க்க போகிறோம் என்றார்.
இப்போ எதற்கு என்று வெற்றி கேட்க,
வெற்றி ஏதோ சரி இல்லை, அவந்தியை சுற்றி எல்லாம் தப்பா நடக்குது,அதனால் தான் வேற ஜோசியரை பார்க்க போகிறோம். வீட்டில் எதுவும் சொல்ல வேண்டாம் இது எனக்கு தோன்றுன ஒரு சந்தேகம் தான் என்றார் கனகவள்ளி.
வெற்றிக்கும் அந்த சந்தேகம் இருந்ததோ என்னவோ அவன் அமைதியாக கனகவள்ளியுடன் சென்றான்.
கனகவள்ளியின் சந்தேகம் உண்மை என்று உறுதி செய்தார் அந்த ஜோசியர். தாமரைக்கு ஜாதகத்தில் எந்த பிரச்னையும் இல்லை என்றும், அவந்திகாவிற்கு மூன்று மாதங்களுக்கு முன்பே திருமணத்தை நடத்தியிருக்க வேண்டும் என்றும், இனி அவளும் குடும்பமும், நிறைய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்றும் கூறினார்.
அவரை சந்தித்து விட்டு வெளியில் வந்த இருவரும் குழம்பி போய் இருந்தனர். கனகவள்ளி வெற்றியிடம் தங்களது குடும்ப ஜோசியரை விசாரிக்க சொன்னார்.
கனகவள்ளியை வீட்டில் இறக்கிவிட்ட கையோடு குடும்ப ஜோசியரை பார்க்க சென்றான் வெற்றி. வெற்றியை பார்த்தவர் தலைகுனிந்து நின்றார். அய்யா நீங்க ரொம்போ காலமா எங்க குடும்பத்துக்கு ஜோசியம் பார்க்குறீங்க உங்கமேல நிறைய மரியாதையை இருக்கு, இப்ப அதேஅளவுக்கு கோவமும் இருக்கு. எதுக்காக கல்யாண விசயத்துல பொய் சொன்னீங்கனு நீங்களே சொல்லிடுங்க என்று பொறுமையோடு ஆனால் அழுத்தமாக கேட்டான்.
அவன் அப்படி கேட்டதும் அவன் முன் கைகூப்பியவர் தம்பி என்ன மன்னிச்சுடுங்க பணத்துக்கு ஆசைப்பட்டு அப்படி பண்ணிட்டேன். யாரோ ரெண்டு பேர் வந்தாங்க என்ன மிரட்டி பணத்தை வாங்கிகிட்டு பொய் சொல்ல சொன்னாங்க. நான் மாட்டேன்னு சொன்ன, நான் செய்யலைன்னா என்ன அடிச்சுப்போட்டுட்டு வேற ஆள் வெச்சு சொல்ல வைப்போனு சொன்னாங்க, என்னோட பொண்ணு கல்யாணத்துக்கு எனக்கும் பணம் தேவைபட்டுச்சு, யாரோ சொல்றதுக்கு நானே சொல்லிடலானு நினைச்சு ஒத்துக்கிட்டேன். ஆனா தம்பி அந்த பணத்தால் தன்னோட கல்யாணம் நடக்கக்கூடாதுனு என் பொண்ணு சொல்லிட்டு என்கிட்ட பேசுறதேயில்லை.
நம்பிக்கை வெச்ச குடும்பத்துக்கு துரோகம் செஞ்சுட்டேனு சொல்லி என்னோட பொண்டாட்டியும் என்கிட்ட பேசுறதில்லை. நான் செஞ்சது தப்புனு எனக்கு புரிஞ்சுது அதனாலதான் என்னோட தொழிலையே விட்டுட்டேன். தம்பி நான் செஞ்சது பெரிய தப்புதான் என்ன மன்னிச்சுடுங்க என்று மன்றாடினார்.
வெற்றிக்கு என்ன சொல்லுவது என்று தெரியவில்லை. சிறுது நேரம் அமைதியாக இருந்தவன், உங்கள மிரட்டுனது யாருனு உங்களுக்கு தெரியுமா என்று கேட்டான் வெற்றி,
இல்லை தம்பி சென்னைக்காரங்க மாதிரி இருந்தாங்க, அவங்களும் யாருக்கோ வேலை செய்ற மாதிரிதான் தெரிஞ்சுது, ஆனா தம்பி அவங்க அவந்திகா ஜாதகத்தில பிரச்சனைன்னு தான் சொல்ல சொன்னாங்க, நான்தான் பதட்டத்துல தாமரை பெயரை மாற்றி சொல்லிட்டேன் என்றார் ஜோசியர்.
தனக்கு ஏற்பட்ட அதிர்ச்சியை மறைத்து கொண்டு அவரிடம் விடைபெற்ற வெற்றி நேராக கனகவள்ளியிடம் சென்று நடந்ததை சொன்னான்.
நான் தான் சொன்னனே வெற்றி இதெல்லாம் நம்ப அவந்தியை சுற்றி தான் நடக்குது, இப்ப என்ன பண்றது ஜோசியருக்கு ஆள் யாருனு தெரியலையே என்று கனகவள்ளி புலம்ப,
அப்பத்தா என்கூட படிச்ச பசங்க இப்ப சென்னையில வேலையில இருக்காங்க நான் போய் அவங்கமூலமா விசாரிச்சுட்டு வரேன் என்றான் வெற்றி.
முதல்ல அதை செய் என்று கூறி வெற்றியை சென்னை கிளம்ப சொன்னார் கனகவள்ளி.
வெற்றியும் கனகவள்ளியும் உண்மையை கண்டறிவார்களா, என்று அறிய தொடர்ந்து வாசியுங்கள் …….


-நறுமுகை

No Responses

Write a response