காதல் கொண்டேனடி-29

காதல் கொண்டேனடி-29

தோழிகள் இருவரும் சிறிது நேரம் பேசிவிட்டு தூங்க சென்றனர்.

தன் அறைக்குச் சென்ற மாலினி அங்கு ராஜை கண்டதும் வியப்பாக பார்த்தாள். அவன் இந்த நேரத்திற்கெல்லாம் தூங்க வந்தே பல மாதங்கள் ஆகி விட்டது.

வேகமாக அவன் அருகில் சென்றவள், என்னாச்சுப்பா, உடம்புக்கு ஏதும் சரி இல்லையா? என்று கேட்டுக்கொண்டே அவன் நெற்றியில் கை வைத்து பார்த்தாள்.

அவன் அதெல்லாம் ஒன்று இல்லை என்று மறுக்க, அவன் அருகில் அமர்ந்தவள் ஏதும் பிரச்சனையா என்று கேட்டாள்.

அவள் கையை எடுத்து தன் கைகளுக்குள் வைத்துக் கொண்டவன், ஏன் மாலு நான் சீக்கிரம் தூங்க வந்தா ஒன்னு எனக்கு உடம்பு சரி இல்லாம இருக்கணும் இல்லை ஏதாவது பிரச்சனையா இருக்கணும், அப்படி நீ நினைக்கிற அளவுக்கு நான் விட்டுட்டேன் சாரி டா, என்றான் ராஜ்.

தானும் அவந்திகாவும் பேசினதை இவர் கேட்டிருப்பாரோ, என்று மாலினி நினைக்க, அவன் அடுத்து பேசியது அதை உறுதி செய்தது.

நாம் காதலிக்கும்போது நீ எவ்வளவு துறுதுறுனு இருப்ப, எப்போதும் ஏதாவது பேசிகிட்டு, வாயே ஓயாதா உனக்கு, என்று நானே உன்னை கிண்டல் செய்திருக்கிறேன்.

ஆனா இப்போ எல்லாம் நீ பேசுறது ரொம்போ குறைவாயிடுச்சி. உண்மை என்னனா நீ பேசுறத கேட்க நான் இல்லை. அப்போ எல்லாம் வேலை இருக்கு மாலுனு சொன்னா சட்டையை பிடிச்சு என்கிட்டே சண்டை போடுவ, இப்போ எல்லாம் ஏன் மாலு என்கிட்டே சண்டை போடுறது இல்லை என்று கேட்டான் ராஜ்.

உங்களுக்கு என்ன ஆச்சு இப்போ ஏன் இதெல்லாம் பேசிட்டு இருக்கீங்க, அப்போ காலேஜ் படிச்சிட்டு இருந்தேன் பொறுப்பில்லாமல் இருந்தேன். இப்போ நமக்கே ஐந்து வயசுல ஒரு பொண்ணு இருக்கா, இன்னும் அப்படியேவா இருப்பாங்க என்றவள்,

அப்புறம் என்ன கேட்டீங்க சண்டை போடவா, நீங்க என்ன போய்  பார்,கிளப்னா  சுத்திட்டு வரீங்க உங்க கிட்ட சண்டை போடறதுக்கு. தேவை இல்லாம எதையும் யோசிக்காம போய்  படுத்து தூங்குங்க என்றாள்  மாலினி.

இல்லை மாலு நாம ரெண்டு பேரும் உட்கார்ந்து பேசி கூட ரொம்ப நாள் ஆச்சு பேசிட்டு இருக்கலாம் என்றவனை காதலோடு பார்த்தாள் மாலினி.

அடுத்த நாள் காலை அவந்திகா காபி குடித்துக் கொண்டிருக்கும்போதே அவர்கள் வீட்டிற்கு வந்தான் செழியன்.

அவனை அவ்வளவு காலையில் அங்கு எதிர்பார்க்காத அவந்திகா, மாமா என்ன இவ்வளவு காலையில் என்று ஆச்சர்யமாக கேட்டக,

சும்மா ஒரு வாக் போகலாமா என்றான் செழியன்.

சரி என்றவள் மாலினியிடம் சொல்லிக்கொண்டு கிளம்பினாள்.

வீட்டை தாண்டி வெளியில் வந்ததும் என்ன மாமா, எதாவது முக்கியமான விசயமா என்று கேட்டாள் அவந்திகா.

அம்மு இனி நீ ஷாலினி கூட வெளியில போக வேண்டாம், அதாவது ஷாலினி ஆபீஸ் இன்டீரியர் ஒர்க் இனி நீ செய்ய வேண்டாம் என்றான் செழியன்.

மாமா அது முடியுற லெவல்ல இருக்கு இப்போ எப்படி…. என்று இழுத்தாள் அவந்திகா.

அம்மு இனி நீ செய்ய வேண்டாம், நான் வேற ஏதாவது விளக்கம் சொல்லனுமா, என்றவனை  கை காட்டி தடுத்தவள்,

ஷாலினிகிட்ட இனி நான் செய்ய முடியாது என்று அவங்க ஹர்ட் ஆகாத மாதிரி சொல்லிடுங்க என்றாள் அவந்திகா.

அதன் பின் எதும்  நடக்காதது போல் பேச்சை மாற்றினாள். அவளுடன் வீட்டிற்கு வந்தவன் மாலினி கொடுத்த காபியை குடித்துவிட்டு கிளம்பினான்.

காரில் செல்லும்போது ஷாலினியிடம் எப்படி கூறுவது என்று யோசித்து கொண்டிருந்தான் செழியன்.

நேற்று இரவு அவந்திகா இருவரும் ஒரே மாதிரி என்று சொன்னவுடன் தோன்றிய சந்தேகம், என்னவென்று உறுதியாக சொல்லமுடியாதபோதும் இனி ஷாலினி அவந்திகாவை சந்திப்பது நல்லதல்ல என்று தோன்றியது.

வேறு எதையும் யோசிக்காமல் காலை நேராக வந்து அவந்திகாவிடம் சொல்லிவிட்டான் செழியன்.

அவந்திகா விளக்கம் கேட்டிருந்தால் சொல்வதற்கு அவனிடம்  எந்த விளக்கமும் இல்லை. ஆனால் தனக்கு அந்த நிலையை ஏற்படுத்தாமல் தான் கூறியதை அப்படியே ஏற்றுக்கொண்ட அவளது தன்மை அவனுக்கு இதமாக இருந்தது. அவளுக்காக எதுவும் செய்யலாம் என்று நினைத்தான் செழியன்.

வீட்டிற்கு சென்ற செழியன் ஷாலினிக்கு போன் செய்தான்.

ஹாய் அத்தான்  வாட் எ சர்ப்ரைஸ் என்னோட நம்பர் எல்லாம் வச்சிருக்கீங்களா, என்றாள் ஷாலினி.

எப்படி இருக்க ஷாலினி என்று கேட்டான் செழியன்.

நல்லா இருக்கேன் அத்தான்,

ஷாலினி நான் ஒரு முக்கியமான விஷயமா கால் பண்ணினேன், உன்னோட ஆபிஸ் இன்டீரியர் ஒர்க்குக்கு இனி அவந்தியால ஹெல்ப் பண்ண முடியாது. அவ ஆல்ரெடி ரொம்போ வீக்கா இருக்கா, இப்போ ஒரு மாசமா ஆபீஸ் ஒர்க் அப்புறம் உன்னுடைய இன்டீரியர் வொர்க்குனு அலையறதுனால அவளோட ஹெல்த் இன்னும் வீக் ஆயிடுச்சு. சோ, நீ பினிஷிங் ஒர்க் மட்டும் வேற யாரையாவது வச்சு செய்துகிட்டா  பெட்டராயிருக்கும் என்றான் செழியன்.

இதை சொல்ல ஏன் அத்தான் இவ்வளவு தயங்குறீங்க ஒன்னும் பிரச்சனை இல்லை, நான் பார்த்துக்குறேன் இனி அவந்தியை நான் டிஸ்டர்ப் பண்ண மாட்டேன் ஓகே வா என்றவள், சிறிது நேரம் பொதுவாக பேசிவிட்டு போனை வைத்தாள்.  

போனை வைத்த  ஷாலினி தன் கையில் கிடைத்ததை எல்லாம் போட்டு உடைத்தாள, எவ்வளவு தெளிவாக பிளான் செய்திருந்தாள். இப்படி செழியன் திடீரென குறுக்கே வருவான் என்று அவள் நினைக்கவே இல்லை.

அத்தான், தப்பு பண்ணீட்டிங்க இதுக்கு நீங்க தண்டனை அனுபவித்து  தான் ஆகனும் என்று கறுவினாள் ஷாலினி.

ஷாலினி அடுத்து செய்யப்போவது என்ன அறிய தொடர்ந்து வாசியங்கள் …….

                                                                                           -நறுமுகை

No Responses

Write a response