காதல் கொண்டேனடி-21

காதல் கொண்டேனடி-21

அதற்குள் ஜோசியர் வந்துவிட, நால்வர் ஜாதகத்தையும் பார்க்க சொல்லி கொடுத்தனர். நால்வர் ஜாதகத்தையும் பார்த்தவர் தாமரை ஜாதகத்தில் இப்போது திருமண யோகம் இல்லை என்றும், ஆறு மாத காலம் கழித்து திருமணத்தை நடத்துவது நல்லது என்று கூறினார்.

அதைக்கேட்டு வெற்றிக்கு வருத்தமாக இருந்தது. ஆனால் எதுவும் காட்டிக்கொள்ளாமல் இருந்தான்.

அப்போ அவந்திகா கல்யாணத்தை முடிச்சிட்டு வெற்றி கல்யாணத்தை வச்சிக்கலாம் என்றார் வீரபாண்டி.

அதை கேட்டதும் ஜோசியருக்கு என்ன சொல்வது என்று புரியவில்லை. அவந்திகா திருமணத்தை தள்ளி போடா சொல்லி தான் மிரட்டி  அவருக்கு அளவுக்கு அதிகமாக பணம் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர் பதட்டத்தில் அவந்திகா பேருக்கு பதிலாக தாமரை பெயரை கூறிவிட்டார். இப்போது என்ன செய்வது என்று அவர் யோசித்து கொண்டிருக்க,

செழியனோ ஐயா, உங்களை மீறி பேசுறேன்னு நினைக்காதீங்க வெற்றி, இவ்வளவு நாள் அவந்திக்காக தான் கல்யாணத்தை தள்ளி போட்டார், இப்போ ஒண்ணா செய்யலாம்னு பேசிட்டு எங்க திருமணத்தை மட்டும் நடத்துறதுல எனக்கு விருப்பம் இல்லை. ஆறு மாதம் தானே வெய்ட் பண்ணி ரெண்டு கல்யாணத்தையும் சேர்த்து வச்சிக்கலாம்.

வெற்றியை கல்யாணம் பண்ணிக்கிட்டா தாமரையும் எனக்கு தங்கச்சி தானே அப்போ நான் மட்டும் எப்படி என் தங்கை கல்யாணத்துக்கு முன்னாடி கல்யாணம் செய்துக்க முடியும், என்று செழியன் கேட்க.

அன்னபூரணிக்கு மகனை நினைத்து பெருமையாக இருந்தது. மகன் இல்லாத சிவகுமார் பார்வதி தம்பதியினர், செழியன் தான் நம் மூத்த மகன் என்று     முடிவே செய்துவிட்டனர்.

அவந்தி இவரை காதலிக்காம இருந்திருந்தா தான் ஆச்சர்யம், என்று நினைத்தான் வெற்றி. அவந்திகா காதலோடு அவனை பார்த்தாள். இப்படி ஒவ்வொருவரும் ஒரு சிந்தனையில் இருக்க, வீரபாண்டியன் குரல் அதை கலைத்தது.

ஹ்ம்ம்ம் அதான் பேரனே சொல்லிட்டாரே அப்புறம் என்ன ஜோசியரே இந்த மாசத்துல நிச்சயத்துக்கு நாள் பாருங்க, கல்யாண நாள் ஆறு மாதம் கழித்து பார்த்துக்கலாம் என்று முடிவாக கூறினார்.

ஜோசியர் தப்பிச்சிட்டோம்டா சாமி என்று நினைத்தார். அன்றிலிருந்து  இரு வாரங்கள் கழித்து நிச்சய தேதி குறிக்கப்பட்டது. அடுத்து செய்ய  வேண்டியதை பேசி விட்டு தாமரை அப்பா அம்மா, செழியன் அவர் அம்மாவும் கிளம்பினர்.

அன்று மாலை  வீட்டு முன் திண்ணையில்  கட்டியிருந்த ஊஞ்சலில் அமர்ந்திருந்தார் வீரபாண்டி, அவருடன் வந்து அமர்ந்த  அவந்திகா, தாத்தா இன்னும் என்மேல் கோபமா தான் இருக்கீங்களா என்றாள்,

 உன்மேல என்ன தாயீ கோபம் யாரோ திடீர்னு நம்ம வீட்டு பொண்ண தப்பா சொன்னா எப்படி இருக்கும், அந்த பதட்டத்துல தான் உன்கிட்ட முழுசா கூட விசாரிக்காம பொண்ணு பார்க்க ஏற்பாடு செய்தேன். நீ அப்படி ஒரு முடிவு எடுக்கவும் தான் உன்கிட்ட பேசியிருக்கணும்னு தோணுச்சு. என்ன செய்ய வயசாயிடிச்சி, கடல் கடந்து இருக்கிற பொண்ணு தப்பா யார்கிட்டயும் மாட்டிகிடுச்சோன்னு பயத்துல வேற எதையும் யோசிக்க தோணலை. உனக்கு ஒன்னும் தாத்தா மேல  வருத்தம்  இல்லையே என்று கேட்ட்டார் வீரபாண்டி.

என்ன தாத்தா, நீங்க, நான் தான் எல்லாரையும் காயப்படுத்திட்டேன் என்னை மன்னிச்சிடுங்க, என்றவள் தன் தாத்தாவை கட்டிக்கொண்டாள். பாசமாக பேத்தி  தலையை வருடிக்கொடுத்தார் வீரபாண்டி.

அப்போது  அங்கு வந்த வெற்றி தாத்தா, அன்னைக்கு தானே மாப்பிளை இப்படியே குட்டிமானு கொஞ்சிட்டே இருக்காதீங்கன்னு சொன்னார் என்று தங்கையை வம்பிழுக்க, யார் சொன்னாலும் அவ இந்த வீட்டுக்கு குழந்தை தான்டா என்று கூறிக்கொண்டே வந்தார் கனகவள்ளி.

அது சரி, பியூட்டி  நான் இப்போ அந்த குழந்தையை கோயிலுக்கு கூட்டிட்டு போகப்போறேன் என்று கனகவள்ளி கன்னத்தை பிடித்து கிள்ளினான்.

போடா முரட்டுப்பயலே என்று பேரனை விரட்டியவர், அவந்திகாவிடம் பூ கட்டி வச்சிருக்கேன் வச்சிட்டு போ மா என்று கூறினார். காதல் கை கூடிய சந்தோஷத்தில் அண்ணனோடு கோயிலுக்கு கிளம்பினாள் அவந்திகா.

கோயிலில் அவர்களுக்காக தாமரை காத்துக்கொண்டிருந்தாள். தாமரையை பார்த்ததும் அண்ணி என்று ஓடிச்சென்று கட்டிக்கொண்டாள் அவந்திகா, அவந்தி என்று தாமரையும் அவளை கட்டிக்கொண்டாள்.

போதும் போதும், ரெண்டு பேரும் சாமி கும்பிட்டுட்டு வந்து உங்க கொஞ்சலை தொடருங்க என்றான் வெற்றி. அண்ணி நான், உங்களை ஹக் பண்ணிட்டேன்னு உங்க மச்சானுக்கு பொறாமை என்று கேலி செய்ய போடி அரட்டை என்றாள் தாமரை.

மூவரும் சாமி கும்பிட்டுவிட்டு மனநிறைவோடு அருகிலிருந்த ஆற்றங்கரை படித்துறையில் வந்து அமர்ந்தனர்.

இவர்கள் மகிழ்ச்சி நிலைக்குமா? அறிய தொடர்ந்து வாசியுங்கள்…………………

                                                                                              -நறுமுகை

No Responses

Write a response