காதல் கொண்டேனடி- 19

காதல் கொண்டேனடி- 19

வெற்றி சொன்னதை கேட்டு இப்படியும் காதலிப்பாங்களா மச்சான் என்று வியந்து கொண்டிருந்தாள் தாமரை. வெற்றியின்  மாமன் மகள். சிறுவயதிலேயே வெற்றிக்குத்தான் தாமரை என்று முடிவானது. வெற்றி தங்கையின்  திருமணத்திற்கு பிறகு தான் தன்  திருமணம் என்று தீர்மானமாக சொல்லிவிட்டான். இன்னும் அவர்களது திருமணம் பேச்சளவிலே இருக்கிறது. ஆனால் வெற்றிக்கும், தாமரைக்கும், ஒருவரை ஒருவர் மிகவும் பிடிக்கும். ஒரே ஊரில் இருந்தாலும் தாமரை வெற்றியின் வீட்டிற்கு வர மாட்டாள். வெற்றி தான் எப்போதாவது மாமா வீட்டிற்கு செல்வான். வாரம் ஒருமுறை ஊர் கோவிலில் சந்தித்து கொள்வார்கள்.

இன்று வெற்றியே அவளை போன் செய்து வரச்சொல்லி, அவந்திகா வந்ததிலிருந்து நடந்தவற்றை சொல்லி கொண்டிருந்தான். அவன் கூறியதை கேட்டு வியந்தவள், ஆனால் மச்சான் நீங்க அவந்திய அப்படி கேட்டிருக்க கூடாது. இப்போ நாம கூட  15 வருசமா காதலிச்சிட்டு இருக்கோம் வார வாரம் சந்திக்கிறோம், நாம என்ன குடும்பமா நடத்திட்டு இருக்கோம். அவந்திகா நம்ம வீட்டு பொண்ணு மச்சான், இப்படி ஒரு வார்த்தை நீங்க கேட்கலாமா, என்று தாமரை அவனை கடிந்து கொள்ள, தப்பு பண்ணிட்டோமோ என்று யோசித்துக் கொண்டிருந்தவனுக்கு, எப்படியாவது தங்கையிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தோன்றியது. பின் தாமரையுடன்  சிறிது நேரம் பேசிவிட்டு வீட்டிற்கு வந்தான்.

 நேராக அவந்திகாவின் அறைக்கு சென்றவன், அவந்திம்மா  என்னை என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே அவந்திகா அறையை விட்டு வெளியேறினாள். விக்கித்து போய் நின்றான் வெற்றி.

ஒரு மூன்று வாரம் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் அமைதியாக சென்றது. அவந்திகா வீட்டில் இருந்தே வேலை செய்ய  தொடங்கியிருந்தாள். விஷயம் கேள்விப்பட்டு போன் செய்து சத்தம் போட்ட மாலினிக்கும் அவந்திகா செழியனிடம் கூறிய பதிலையே கூறினாள்.

ஒரு மதிய வேளையில் அவந்திகா தவிர அவள் குடும்பத்தை சேர்ந்த அனைவரும் அவர்கள் தென்னந்தோப்பில் அமர்ந்திருந்தனர். அந்த பையன் பத்தி விசாரிச்சேன்,அப்பா சின்ன வயசுலயே தவறிட்டார், அம்மா தான் வளர்த்து ஆளாக்கியது. அவங்களும் நம்மள மாதிரி பொள்ளாச்சி பக்கம் நிலம் புலன் வச்சி விவசாயம் தான் பண்ங்றாங்க, ஊருக்குள்ள விசாரிச்ச வரைக்கும் எல்லோரும் பொறுப்பான பையன்னு சொல்றாங்க என்றார் வீரபாண்டி.

என்ன பொறுப்பு இருந்து என்ன, பிள்ளையை கை  நீட்டி நம்ம முன்னாடியே அடிக்கிறார் என்று ஆதங்கபட்டார் மீனாட்சி.

ஆமா, செஞ்ச காரியத்துக்கு எனக்கே நாலு அப்பு அப்பலாம்னு தோணுச்சு எனக்கு பதிலா அவரு அடிச்சிட்டாரு அவ்வளவுதான் என்றான் வெற்றி.

அப்போ உனக்கு அந்த பயனை பிடிச்சிருக்குனு சொல்லு என்றார் வீரபாண்டி.

ஆமா, தாத்தா என் தங்கச்சியை அவர் நல்லா பார்த்துப்பார், நான் தான் அவர்கூட ஹாஸ்பிடல் போனேன், போற வழி முழுக்கஅவருக்கு கண்ணீர் நிற்கவே இல்லை. பார்க்கவே பாவமா இருந்தது, என்றான் வெற்றி.

வெற்றி சொல்றது சரி தான் அப்பா, ஹாஸ்பிடல்ல நாம கூட கொஞ்சம் கண் அசந்தோம், அந்த பையன் உட்கார்ந்த இடத்தில அப்படியே சிலை மாதிரி இல்ல உட்கார்ந்து இருந்தான். என்றார் ராஜபாண்டி.

ஹ்ம்ம்ம் ….பையனை  பார்க்கறதுக்கு முன்னாடியே  நான் இதை தான் சொன்னேன், என் பேத்தி ஒரு முடிவு எடுத்தா அது சரியாக தான் இருக்கும்னு யாரு கேட்டீங்க, இப்போ வந்து பையன் நல்ல பையன்னு சொல்லுங்க என்று நொடிந்தார், கனகவல்லி.

வீரபாண்டி, மீனாட்சியை பார்த்து அம்மாடி யாரு என்ன சொன்னாலும் நீ தான் பெத்தவ உன் விருப்பம் தான் முக்கியம் என்றார்,

மாமா அவ சந்தோசம் தான் எனக்கு முக்கியம். அந்த பையனை தவிர வேற யார் முன்னாடியும் நிற்க கூட மாட்டேன்னு கையை புண்ணாக்கிட்டு உட்கார்ந்து இருக்கா, இவ வேற யார் கூடவும் வாழ மாட்டா மாமா. அந்த பையனையே பேசி முடிச்சிடலாம். ஆனால் பிள்ளையை அடிக்க கூடாதுனு கண்டிப்பா சொல்லிடுங்க என்றார், மீனாட்சி.

அடுத்த நாள் காலை அவந்திகா குடும்பம் முழுவது பிளைட் ஏறி கோயம்பத்தூர் சென்று இறங்கினர். அங்கு தெரிந்தவர் மூலம், செழியன் அம்மாவோடு பண்ணை வீட்டில் இருக்கிறான் என்று தெரிந்து கொண்டு அங்கு சென்றனர்.

புதிதாக கார் வரவும் யாரென்று வெளியில் வந்து பார்த்தார் அன்னபூரணி. வந்தவர்களை வாங்க என்று வரவேற்றவர், ஐயா யாருனு தெரியலை என்றார்.

நாங்க மதுரையில் இருந்து வரோம்மா என்று வீரபாண்டி சொல்ல, அவந்திகா குடும்பமா என்று வேகமாக கேட்டார் அன்னபூரணி,

ஆமா தாயீ உன்கிட்ட பேசிட்டு போகலாம்னு வந்தோம், என்றார் கனகவல்லி.

ரொம்போ சந்தோசம் வாங்க என்று உள்ளே அழைத்து சென்றவர், அங்கு வேலை செய்து கொண்டிருந்த பையனை அனுப்பி வயலில் இருந்து செழியனை அழைத்து வர சொன்னார்.

வந்தவர்களுக்கு குடிக்க மோர் கொடுத்து உபசரித்தவர், செழியன் இருந்தா இங்க தான் இருப்போம் அவனுக்கு வயலில் இறங்கி வேலை செய்ய ரொம்போ பிடிக்கும் என்றவர்,மீனாட்சியிடம், மன்னிச்சிடுங்க அன்னைக்கு உங்க முன்னாடியே புள்ளையை அடிச்சிட்டானு சொன்னான், நல்லா திட்டி விட்டேன் இந்த காலத்து பசங்களுக்கு எல்லாத்துலயும் அவசரம் என்ன செய்றோம்னு யோசிக்குறது இல்லை என்று கூறி வருத்தப்பட்டார்.

மீனாட்சிக்கு இருந்த கொஞ்ச நஞ்ச தயக்கமும் காணாமல் போனது. அன்னபூரணி அவந்திகாவை பற்றி விசாரிக்க இப்போ பரவாயில்லை என்றார் மீனாட்சி, அதற்குள் செழியன் உள்ளே வர, அனைவர் கவனமும், அவனிடம் சென்றது.

அனைவருக்கும் பொதுவாக வணக்கம் சொன்னான். வயலில் இறங்கி வேலை செய்து கொண்டிருந்திருக்கிறான் என்பது அவன் சட்டையும் வேஷ்டியும் பார்த்தாலே தெரிந்தது. வீரபாண்டிக்கும் ராஜபாண்டிக்கும் திருப்தியாக இருந்தது.

சோபாவில் அமராமல் சேரை இழுத்துப்போட்டு அமர்ந்தவன், பொதுவாக நலம் விசாரித்தான். பின் மெதுவான குரலில் அவந்திகா……….. என்று இழுத்தான்…

அது என்ன இழுத்துகிட்டு அவந்திகா எப்படி இருக்கானு நல்லாவே கேளுப்பா என்றார், கனகவல்லி.

அவர் கூறியதை கேட்டு மெதுவாக சிரித்தவன், இப்போ அவளுக்கு கை பரவாயில்லையா என்றான். இப்போ பரவாயில்லை, மேடம் வீட்டில் இருந்து திரும்ப வேலை செய்ய ஆரம்பிச்சுட்டாங்க, என்றான் வெற்றி.

அவனா தன்னிடம் பேசுவது என்று செழியன் ஆச்சர்யமாக பார்க்க,

நாங்க வந்த விஷயத்தை  சொல்லிடறோம் எங்க வீட்டு பொண்ணை உங்க பையனுக்கு கொடுக்க எங்களுக்கு முழு சம்மதம். உங்க முடிவை சொன்னால் மேற்கொண்டு ஆக வேண்டிய காரியத்தை பார்க்கலாம் என்று நேரடியாக பேசினார் வீரபாண்டி.

இதுல முடிவு எடுக்க என்ன அய்யா இருக்கு அவந்திகா தான் இந்த வீட்டு மருமகள்னு நான் எப்போவோ முடிவு செய்தது தான். என்ன பண்ணனும் எப்படி பண்ணனும்னு சொல்லுங்க செஞ்சிடலாம் என்றார் அன்னபூரணி.

செழியனுக்கு தன் காதல் இவ்வளவு எளிதாக கை  கூடியது நம்பவே முடியவில்லை. அவனுக்கு உடனே அவந்திகாவை பார்க்க வேண்டும்போல் இருந்தது. அன்னபூரணி இன்னும் அவந்திகாவை நேரில் பார்த்ததில்லை எனவே இந்த வெள்ளிக்கிழமை அவர்கள் அவந்திகா வீட்டிற்கு செல்வது என முடிவானது.

அதன்பின் அனைவரும் செழியனின் வயல் தோப்புகளை சுற்றி பார்த்தனர். பெரியவர்கள் விவசாயத்தை பற்றி பேசிக்கொண்டே நின்றுவிட, செழியனும், வெற்றியும்  தனித்துவிடப்பட்டனர்.

முதலில் தயங்கிய வெற்றி பின்னர் செழியனிடம், சாரி அன்னைக்கு கோபத்துல உங்க சட்டையை பிடிச்சுட்டேன் என்றார்.

நல்லா சொன்னீங்க போங்க நீங்க என்னை அடிக்காம விட்டதே பெரிய விஷயம். யாருக்குத்தான் தங்கச்சியை கண் முன்னாடி அடிச்சா கோபம் வராது. அதுவும் அவந்திகா என்னை மிரட்டணும்னா எப்போதும் உங்க பேரை தான் சொல்லுவா, என்று கூறி சிரித்தான் செழியன்.

என்னை பத்தி எல்லாம் பேசுவாளா என்று வெற்றி கேட்க,

அது சரி என்ன இப்படி கேட்குறீங்க, ஒரு நாளைக்கு பத்து முறையாவது எங்க அண்ணா, இந்த வெற்றி இருக்கானே, அப்படினு சொல்லாம உங்க தங்கச்சிக்கு தூக்கமே வராது.அவ உங்க வீட்டுலயே அதிகம் பேசுனது உங்களை பற்றிதான். அதுக்கப்புறம் அவளோட சுவீட் ஹார்ட்னா அப்பத்தாதான் என்றான் செழியன்.

ஒரு நிமிடம் அமைதியாக நின்றான் வெற்றி. பின் அப்படி இருந்தவளை நான் தான் காயப்படுத்திட்டேன். இனி என்கிட்ட பேசுவாளானே தெரியலை என்றான் வருத்தத்தோடு,

என்ன நடந்தது என்று செழியன் கேட்க, வெற்றி நடந்ததை கூறினான்.

 செழியனுக்கு வெற்றி கூறியதை கேட்டு கோபம் வந்தது. சிரமப்பட்டு கோபத்தை அடக்கியவன். உங்களை பற்றி யாராவது உங்க தங்கச்சிக்கிட்ட இப்படி சொல்லியிருந்தா அதை அவ நம்பியிருப்பானு நினைக்குறீங்களா என்று அடக்கப்பட்ட கோபத்தோடு கேட்டான் செழியன்

இல்லை, என்னும் விதமாக தலை ஆட்டிய வெற்றி, சொன்னவங்களை உண்டு இல்லைனு பண்ணியிருப்பா, என்றவன் குற்ற உணர்வோடு தலை குனிந்து கொண்டான்.

செய்த தப்புக்கு வருந்துபவனை, மேலும் நோகடிக்க விரும்பாமல், வெற்றி ஒரு பொண்ணு காதலிச்சிட்டாலே அவளை விரோதி மாதிரி நினைக்குறீங்க, அவ உங்க எல்லோரையும் மறந்துட்டான்னு நினைக்கறீங்க, அவந்தி எப்போதும் உங்களை மறந்ததே கிடையாது. அவ இப்போதும் உங்க வீட்டு பொண்ணு தான், வெற்றியோட தங்கச்சி தான், நீங்க தான் அவ அண்ணனா யோசிக்காம விட்டுடீங்க,

சரி தான் ஆனால் இந்த தப்பை எப்படி சரி செய்றதுன்னு தெரியலை என்றான் வெற்றி.

அவந்தியால உங்க கிட்ட ரொம்ப நாள் பேசாம இருக்க முடியாது. கவலை படாதீங்க சீக்கிரமே என்னை மிரட்டவாவது உங்க கிட்ட பேசுவா, என்று செழியன் கூற இருவரும் இணைந்து  நகைத்தனர். கோபம் இருந்தபோதும் அதை காட்டிக்கொள்ளாமல் தன்னிடம் பேசும் செழியனை வெற்றிக்கு மிகவும் பிடித்தது.

செழியன் நினைத்தது போல அவர்களது காதல் எளிதாக கைகூடிவிடுமா ? அறிய தொடர்ந்து வாசியுங்கள்…………

-நறுமுகை

No Responses

Write a response