காதல் கொண்டேனடி-15

காதல் கொண்டேனடி-15

அதன் பின் இரு தினங்கள்  கழித்து செழியனை பார்க்க மருத்துவமனைக்கு சென்றாள் ஷாலினி.

ஹலோ அத்தான், ஷாலினி பேசுறேன் எங்க இருக்கீங்க, ஹாஸ்பிடலில் தான் இருக்கேன் ஷாலினி என்ன விஷயம், உங்களை பார்க்க தான் ஹாஸ்பிடல் வந்தேன். அதுதான் போன் பண்ணினேன்,

என்னுடைய ரூம்ல தான் இருக்கேன் என்று கூறி போனை வைத்தவன், இப்போ இவ எதுக்கு இங்க வரான்னு தெரியலையே சரி சமாளிப்போம் என்று நினைத்தான் செழியன்.

அவன் அறைக்கு வந்த ஷாலினி, பரவாயில்லை அத்தான்  நான் பிசியா இருக்கேன் பார்க்க முடியாதுனு சொல்லி அனுப்பிடுவீங்கனு நினைத்தேன் என்றாள்.

நான் ஏன்  அப்படி சொல்லணும் என்று அவன் புரியாமல் கேட்க

இல்லை  தாத்தா உங்க கிட்ட மேரேஜ் விஷயமா பேசினது, நீங்க எனக்கு அப்படி எண்ணம் இல்லைனு சொன்னது, ரியலி சாரி தாத்தா என்கிட்டே முதலில் கேட்டிருந்தா நானே வேண்டாம்னு சொல்லிருப்பேன் அவரு அவசரப்பட்டு உங்க கிட்ட பேசிட்டாரு என்று ஒன்றுமே தெரியாதது போல் பேசினாள்.

இதுக்கு எதுக்கு நீ சாரி சொல்ற, தாத்தா  அவர் விருப்பத்தை சொன்னார், நான் என்னுடைய எண்ணத்தை சொன்னேன், அதுல நான் தான் சாரி சொல்லணும் உங்க மனசை எல்லாம் கஷ்டப்படுத்தினத்துக்கு, என்றான் செழியன். 

ஓகே ஓகே மாற்றி மாற்றி சாரி சொன்னது போதும். அதுக்காக வருத்தப்பட்டுக்கிட்டு வீட்டிற்கு வராமல் இருந்துடாதீங்க எப்போதும் போல் வரணும் என்று பச்சப்புள்ள போல் கண்சிமிட்டி கேட்டவளிடம் தப்பு காண செழியனுக்கு தோன்ற வில்லை. அதன் பின் பொதுவாக பேசிக்கொண்டிருந்த ஷாலினி கண்களில் செழியனின் டேபிள் மீது இருந்த அவந்திகாவின் புகைப்படம் பட்டது. ஷாலினிக்கு உடம்பெல்லாம் மிளகாயை அரைத்து பூசியது போல இருந்தது.

ஆனால் வெளியில் அதை காட்டிக்கொள்ளாமல் போலி வியப்பு காட்டி வாவ்!! யாரு அத்தான் இது என்றாள், அவள் கேட்டதும் அந்த புகைப்படத்தை பார்த்தவன் முகத்தில் தானாக குறுநகை தோன்ற மை கேர்ள் என்று காதலோடு சொன்னான்.

ஷாலினிக்கு இப்போதே அவந்திகாவை கொன்றுவிட்டால் என்ன என்று தோன்றியது  தன் முகத்தில் எதுவும் காட்டாமல் இருக்க அவள் மிகவும் போராட வேண்டியிருந்தது.  ஓ, இப்போ இல்ல தெரியுது தாத்தா கல்யாண பேச்சை எடுத்ததும் அந்த ஓட்டம் ஓடுனீங்கனு, என்று அவனை கேலி செய்தவள் சிறிது நேரத்தில் அங்கிருந்து கிளம்பிவிட்டாள்.

 வெளியில் வந்து யாரிடமோ போனில் பேசியவள் அவந்திகா நீயாவே அத்தான்  வாழ்க்கையை விட்டு போவ, போக வைப்பேன் என்று தனக்குள்ளாகவே  பேசிக்கொண்டு அங்கிருந்து சென்றாள்.

மாலினியும் அவந்திகாவும் துணியை பேக் செய்துகொண்டே பேசிக்கொண்டிருந்தனர். அவந்தி அண்ணனுக்கு இந்த மண்டே தான் உன் பர்த் டேனு தெரியுமா, தெரியாதா என்று கேட்டாள் மாலினி.

 தெரியல மாலு நாங்க பேச ஆரம்பிச்ச புதுசுல ஒரு நாள் சொன்னேன் அவருக்கு நியாபகம் இருக்கானு தெரியல திடீர்னு போன  வாரம் , நெக்ஸ்ட் வீக் நாலு நாள் என்னுடைய பிரெண்ட்ஸ் கூட கேபின் போறோம் அவங்க எல்லாம் முக்கியமா உன்னை பார்க்க தான் வராங்க, நீ கண்டிப்பா வரணும் நான் ராஜ் அண்ணாகிட்ட பேசிட்டேனு சொன்னார். நானும் ஓகே னு சொல்லிட்டேன். டாக்டர் சாரை வந்து கவனிச்சிக்கிறேன் இப்போ பிரெண்ட்ஸ் கூட போற குஷியில் இருக்கிற, சோ போனா போகுதுனு விட்டுருக்கேன் என்றாள்  அவந்திகா.

அவள் கூறியதை கேட்டு சிரித்த மாலினி பாவம் அண்ணா என்றாள், கூடவே நாங்க தான் பர்த் டே அன்னைக்கு உன்ன மிஸ் பண்ணுவோம். ஆமா எனக்கும் அப்படி தான் இருக்கு ஹ்ம்ம்ம்…. வந்த பிறகு நாம சேர்ந்து டின்னர் போகலாம் என்று அவந்திகா கூற கண்டிப்பா போகலாம் என்றாள் மாலினி. அன்று மதியம் செழியன் வந்து மாலினி, பூஜாவிடம் பேசிவிட்டு அவந்திகாவை அழைத்துக்கொண்டு கிளம்பினான்.

காரில் செல்லும்போது செழியன், இரு வாரங்களுக்கு முன் ஷாலினி தன்னை வந்து சந்தித்ததை சொன்னான். எதுவும் கூறாமல் அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தாள் அவந்திகா.

என்ன அம்மு பெரிய அளவுல சண்டை எதிர்பார்த்தேன் இப்படி அமைதியா இருக்குற என்று அவளை வம்புக்கிழுத்தான். எதுக்கு சண்டை போடணும், அவங்க தான் அதுக்கு சாரி  சொல்லிட்டு போய்ட்டாங்களே என்று அவந்திகா கேட்க,

ஹ்ம்ம்ம்….. அதுவும் சரிதான் என்றவன், பின் வேற விஷயங்கள் பேச தொடங்கினான், அன்று இரவு அவர்கள் புக் பண்ணியிருந்த கேபினை அடைந்தனர். அவர்களுக்கு முன்னரே அவனது தோழர்கள் அவர்களுக்காக காத்திருந்தனர்.

 அனைவரும் செழியனுடன் ஒன்றாக படித்துவிட்டு வேறு வேறு இடங்களில் வேலை பார்க்கின்றனர். அதில் சங்கர் மட்டும் சென்னையில் இருந்து செழியனோடு ஒன்றாக படித்தவன்.

சங்கரோடு சேர்த்து ஹரிணி அன்வர் மற்றும் அமர்சிங் மூவரும் வந்திருந்தனர். ஹரிணி ஆந்திரா பொண்ணு, அன்வர் டெல்லியை சேர்ந்தவன், அமர் சிங் பஞ்சாபி, அறிமுகப்படலம் முடித்து அனைவரும் அரட்டை அடித்துக்கொண்டே சாப்பிட்டுவிட்டு உறங்க சென்றனர். பெண்கள் இருவரும் ஒரு அறையை எடுத்துக்கொள்ள ஆண்கள் மீதி இருந்த அறையில் தங்கி கொண்டனர்.

புது இடம் என்பதால் அவந்திகா நேரமாக விழித்துக்கொண்டாள். அனைவரும் நன்றாக உறங்கி கொண்டிருந்தனர். சத்தமில்லாமல் எழுந்தவள் தனக்கு காபி போட்டுகொண்டு பால்கனியில் வந்து நின்றாள். கண்ணுக்கு எட்டிய தூரங்கள் வரை அடர்ந்து வளர்ந்த மரங்கள், அங்கிருந்து சூரிய உதயத்தை பார்க்க சூரியன் மரங்களுக்கு இடையில் இருந்து உதிப்பது போல இருந்தது.

கலவையான பறவை ஒலிகளும், சுத்தமான காற்றும், விடிந்தும் விடியாத விடியலை மேலும் ரம்யமாக்கியது. தன்னை மறந்து லயித்துப்போய் இயற்கை அழகை ரசித்துக்கொண்டிருந்தவள் காதுகளில் மிக மெதுவாக குட் மார்னிங் என்றான் செழியன், வெரி குட் மார்னிங் மாமா என்று கூறி அவனை பார்த்து புன்னகைத்தவள் இங்க பாருங்க இந்த வியூ எவ்வளவு அழகா இருக்கு என்று மீண்டும் ரசிக்க தொடங்க, அவன் அவளை பார்த்துக்கொண்டிருந்தான்.

தூங்கி எழுந்து எந்த ஒரு ஒப்பனையும் இல்லாமல் விரித்து விட்ட கூந்தலோடு, இயற்கை அழகோடு இருந்தவளை விட்டு அவனால் பார்வையை திருப்ப முடியவில்லை. சிறிது நேரம் எதுவும் பேசாமல் இருக்க அவந்திகா திரும்பி அவனை பார்த்தாள். அவனது பார்வை அவளுக்கு வெட்கத்தை கொடுக்க கன்னம் சிவக்க பார்வையை திருப்பி கொண்டாள். என்ன பார்வை இது புதுசா பார்க்குற மாதிரி என்று அவந்திகா கேட்க,காடு அழகா இருக்குனு நீ ரசிக்கிற, நீ அழகா இருக்கனு நான் ரசிக்கிறேன் என்றான் செழியன்.

டாக்டர் சாருக்கு இப்போ தான் காலேஜ் படிக்கிறதா நினைப்பா, சைட்டு அடிச்சிட்டு இருக்கீங்க என்று கிண்டல் செய்தாள் அவந்திகா,இன்னும் இருபது வருஷம் கழித்தும் நான் உன்னை இப்படி தான் சைட்டு அடிப்பேன் என்னை யாரு கேட்பா, என்றான் செழியன்.

ஹ்ம்ம்ம்… கேட்க நல்லா தான் இருக்கு என்று அவந்திகா கூற பார்க்கவும் நல்லாத்தான் இருக்கும் என்று கூறி அவள் நெற்றியில் முட்டினான். என்னை விட்டுட்டு காபி குடிக்கிறது ரொம்ப தப்பு அம்மு என்று கூறி அவள் கப்பை வாங்கி மீதி காபியை குடிக்க தொடங்கினான்.

சுவாரசியமான திருப்பங்களோடு காதல் கொண்டேனடி தொடர்ந்து வாசியுங்கள்.

-நறுமுகை

No Responses

Write a response