என் வானவில்-40

என் வானவில்-40

தன் தாத்தா வீட்டில் இருந்த மித்ரா மூன்று மாத காலமும் தெய்வநாயகியிடம் தொடர்ந்து பேசிக்கொண்டு தான் இருந்தாள். ஆனால் சிறிது சிறிதாக அவள் பிரகாஷிடம் பேசுவது முற்றிலுமாக குறைந்து போனது.

தெய்வநாயகியின் மூலமாக மட்டுமே பிரகாஷிற்கு மித்ரா எப்படி இருக்கிறாள்? என்ன செய்கிறாள்? போன்ற விஷயங்கள் தெரிந்தது. அங்கு என்ன நடக்கிறது ஏன் மித்ரா இப்படி மாறிப்போனாள் என்று எதையும் அறிய முடியாமல் பிரகாஷ் மிகவும் குழப்பத்தில் இருந்தான். தான் குழம்பி போய் இருந்தாலோ, அல்லது கவலையாக இருந்தாலோ தெய்வநாயகி அதைக் கண்டுபிடித்து கேள்வி கேட்பார் என்று உணர்ந்து அவர் முன் எதையும் காட்டிக்கொள்ளாமல் சுற்றிவந்தான்.

இந்த மூன்று மாத காலத்தில் பிரகாஷ் தனது வேலை போன விஷயத்தை தன் பெற்றோரிடம் கூறியிருந்தான். அவர்களிடம் முன்னரே சொன்னால் அவர்கள் கஷ்டப்படுவார்கள் என்று தான் எதுவும் கூறவில்லை என்றும், தற்போது தெய்வநாயகிக்கு உதவியாக எஸ்டேட்டில் இருப்பதாகவும் அவன் கூறியிருந்தான்.

அவர்களுக்கு அது மிகவும் வருத்தமாக இருந்தபோதிலும்  ஏற்கனவே அவனே வருத்தப்பட்டு தான் தங்களிடம் சொல்லாமல் இருந்திருக்கிறான், மேலும்  தாங்களும் வருத்தப்பட்டு அவனைக் கஷ்டப்படுத்த வேண்டாம் என்று அதனை அவர்கள் அவனிடம் காட்டிக்கொள்ளவில்லை.

அனைத்து குழப்பத்திற்கும் ஒரு முடிவு உண்டு.

மித்ரா தன் தாத்தா வீட்டில் இருக்க வேண்டிய மூன்று மாதங்கள் முடிந்து தெய்வநாயகியைப் பார்க்க வால்பாறைக்கு வந்தாள். வருவதற்கு முன் தெய்வநாயகிக்கு போன் செய்தவள்,

பாட்டி நான் நாளை இங்கிருந்து வால்பாறை வரேன், மூணு மாசமா உங்களை பார்க்காம எனக்கு எப்படியோ இருந்தது, எப்படா வருவோம்னு இருக்கு,  நான் இந்த வார கடைசியில் வந்துடுவேன் நம்ம வீட்ல கெஸ்ட் ரூமை மட்டும் ரெடி பண்ணி வைக்கிறீங்களா? ரோஹித் அத்தானும் என்கூட வராரு என்று சொல்ல,

தெய்வநாயகியோ மித்ராவா பேசுறது என்று  ஒரு நிமிடம் சந்தேகப்பட்டார்.

நீ இப்போ என்ன சொன்ன மித்ரா என்று மீண்டும் கேட்க?

இல்ல பாட்டி, ரோஹித் அத்தானும் என்கூட வராரு அங்கு வந்து என்கூட ஒரு வாரம் தங்கி இருப்பாரு அதுக்கு தான் அந்த கெஸ்ட் ரூமை ரெடி பண்ணி வைக்கிறீங்களான்னு கேட்டேன் என்று கேட்க

தெய்வநாயகிக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. 

சரிம்மா அப்படியே செஞ்சுடறேன் என்று கூறிவிட்டு போனை வைத்தவர், பிரகாஷிடம் இந்த விஷயத்தை கூறினார்.

ஏற்கனவே மித்ரா ரோஹித்துடன் நல்ல முறையில் பேசி பழகுவது தெரிந்திருந்த பிரகாஷ் அதை தெய்வநாயகியிடம் கூறாமல் இருந்தான். தற்போது தெய்வநாயகியே தன்னிடம் வந்து கேட்கவும் அவன் பொதுப்படையாக அங்கு அவ மூணு மாசம் இருந்துருக்கா இல்ல பாட்டி எல்லாரும் அவகிட்ட நல்லபடியா பேசியிருப்பாங்க வந்து தங்கட்டுமே, அவ கூட்டிட்டு வரேன்னு சொல்றப்போ நாம வேண்டாம்னு சொல்ல முடியாது இல்ல என்று சொல்ல,

சரிதான்பா, அந்த வீட்டில் இருந்து வேற யாரு வந்தாலும் பரவாயில்ல இருந்திருந்து இவனா வரணும்? எனக்கென்னவோ அவனை பார்த்தாலே பிடிக்கல என்று தெய்வநாயகி கூற,

இப்படி தான் உங்க பேத்தியும் சொல்லிட்டு இருந்தா இப்போ அவனையே கூட்டிட்டு வரா. நாளைக்கு உங்களுக்கும் பிடிக்குமோ என்னவோ என்று பிரகாஷ் கூற,

பிரகாஷை ஆழ்ந்து பார்த்தார் தெய்வநாயகி

என்ன பாட்டி அப்படி பார்க்குறீங்க? என்று பிரகாஷ் கேட்க,

உனக்கு சங்கடமா இல்லையா பிரகாஷ் என்று கேட்டார்?

எதுக்கு? என்று கேட்டான் பிரகாஷ்.

இல்ல மித்ரா ரோஹித்துடன் வருவது,

இதென்ன பாட்டி ரோஹித் மித்ராவின் சொந்த அத்தை பையன் அவ கூட அவன் வரதுக்கு நான் ஏன் சங்கடப்படணும்? என்று சொல்ல.

சுஜி சொல்றது மாதிரி நீ ரோபோவொ என்னவோ? எந்த உணர்ச்சியும் இருக்கிறது இல்லையா? இல்ல…… நீ எங்க கிட்ட காட்டுறது இல்லையா? நான் சொல்றதை கேளு மித்ரா வந்தவுடனே அவகிட்ட மனசுவிட்டு பேசிடு இப்படியே உள்ள வச்சிகிட்டு எல்லாத்துக்கும் வெளியில சிரிக்காத, அது தான் எங்களுக்கு ரொம்போ கஷ்டமா இருக்கு என்று கூற,

பாட்டி நான் நல்லா தான் இருக்கேன் மித்ரா ரோஹித் கூட நல்லா பேசுறா, சரி தான் அவ என்ன  அவனை கல்யாணம் பண்ணிக்கிறேனா சொல்றா, நீங்க எல்லாம் தான் தேவை இல்லாமல் பயப்படுறீங்க என்று கூறியவன், எனக்கு வேலை இருக்கு நான் கிளம்புறேன் நீங்க சாப்பிட்டுவிட்டு ரெஸ்ட் எடுங்க, இன்னைக்கு ஈவினிங் உங்களுக்கு மீட்டிங் இருக்கு என்று கூறியவன் அங்கிருந்து வேகமாக வெளியேறினான்.

வீட்டில் இருந்து புறப்பட்டவன் நேராக எஸ்டேட்டிற்கு செல்லாமல் காரை ஓரமாக நிறுத்திவிட்டு ஸ்டியரிங் வீல் மீது தலை கவிழ்ந்து படுத்திருந்தான் அவனுக்கு ஓ…. என்று கத்தி அழவேண்டும் போல இருந்தது. பாட்டி சுஜி எல்லாம் கூறுவது போல அவன் ரோபோ இல்லை, அவன் மனதில் மித்ரா மீது அளவு கடந்த காதல் இருக்கிறது. அந்த காதலை அவன் உணர்ந்த போது மித்ரா மிகவும் சிறிய பெண் உலகமே அறியாமல் எதைக்கண்டாலும் பயந்து நடுங்கும் சின்ன பெண்ணாக இருந்தாள். அப்போது அவளிடம் காதல் பேசுவது சரியில்லை என்று நினைத்து தனக்குள் மறைத்துக்கொண்டான்.

பின்னர் அவள் பெரிய இடத்து வாரிசு என்று தன் காதலை தன்னோடு வைத்துக்கொண்டான். என்றாவது ஒருநாள் இதை மித்ராவிடம் சொல்லும் நேரம் வரும் என்று அவன் நினைத்திருக்க நடப்பவை எல்லாம் பார்த்தால் இனி அதற்கான வாய்ப்பு தனக்கு கிடைக்க போவதில்லை என்பதுபோல் அவனுக்கு தோன்றியது. இதை யாரிடமும் கட்டிகொள்ளாமல் தனக்குள்ளையே வைத்து வேதனை படுவது அவனுக்கு இன்னும் கஷ்டமாக இருந்தது, யாரிடமாவது பேசவேண்டும் என்று நினைத்தவன் சுஜிக்கு போன் செய்தான்.

அவனது கெட்ட நேரம் சுஜி போனை எடுக்கவில்லை, சரி இந்த வாரம் தான் மித்ரா வருவதாக கூறியிருக்கிறாளே பாட்டி சொன்னதுபோல் ஏன் மித்ராவிடம் சொல்லக்கூடாது என்று நினைத்தவன் அது தான் சரி, அக்கா மாமா பாட்டி எல்லாரும் கூறுவது போல யார் என்ன நினைத்தால் என்ன? மித்ரா என்னை புரிந்து கொண்டால் சரி, என்று நினைத்தவன் வந்தவுடன் மித்ராவிடம் இதை பற்றி பேச வேண்டும் என்று முடிவு செய்தான். அதன் பின்னே அவனுக்கு சற்று பாரம் விலகியது போல இருந்தது.

தெய்வநாயகியும் பிரகாஷும் ஆவலாக மித்ராவின் வரவுக்காக காத்திருந்தனர்,  அந்த வார இறுதியில் மித்ரா ரோஹித்துடன் வால்பாறை வந்து சேர்ந்தாள்.  வந்து இறங்கிய சில நிமிடங்களிலேயே இது பழைய மித்ரா இல்லை என்பது தெய்வநாயகிக்கும் பிரகாஷிற்கும் தெளிவாக புரிந்தது.

வந்த மித்ரா தெய்வநாயகியிடம் ஆசீர்வாதம் வாங்கிக்கொண்டு  அவரை கட்டி அணைத்துக்கொண்டாள். அதன் பின் பாட்டி உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும், என்னோட யு.ஜி ரிஸல்ட்ஸ்  வந்துடுச்சி, எம்.பி.ஏ. படிக்கலாம்னு இருக்கேன். ரோஹித் அத்தான் படிச்ச காலேஜ்ல சென்னைலேயே எனக்கு சீட் அரேஞ் பண்ணியிருக்கார், இன்னும் ஒரு மாசத்துல நான் கிளம்பனும். அங்கையே ஹாஸ்டல் எல்லாம் பார்த்தாச்சு. நீங்க எப்படி என்னை ரொம்ப மிஸ் பண்றிங்களோ அதே மாதிரி தான் தாத்தாவும் என்னை ரொம்போ மிஸ் பண்றாரு.

சென்னை போய் சேர்ந்தபிறகு ரெண்டு வாரத்திற்கு ஒரு முறை இங்கேயும் ரெண்டு வாரத்திற்கு ஒரு முறை தேனிக்கும் போயிட்டு வரலாம்னு இருக்கேன் என்று அவள் கூறிக்கொண்டிருக்க, 

பிரகாஷிற்கு இது தன் மித்ரா தானா என்று ஆச்சர்யமாக இருந்தது. அவனை கேட்காமல் ஒரு போன் பாஸ்வேர்ட் கூட மாற்றமாட்டாள். ஆனால் இன்று காலேஜில் சீட் வாங்கி ஹாஸ்டல் முதல் கொண்டு அனைத்தையும் பார்த்துவிட்டு வந்து தகவல் மட்டும் சொல்கிறாள், அதுவும் அவனிடம் இல்லை பாட்டியிடம் மட்டும். அவனுக்கு அங்கு இருக்கவே பிடிக்கவில்லை, ஆனால் எழுந்து சென்றால் பாட்டி வருத்தப்படுவார்கள் என்று அமைதியாக அமர்ந்திருந்தான்.

தெய்வநாயகிக்கும் அந்த வித்தியாசம் புரிந்தது, ஆனால்  அதை காட்டிக்கொள்ள முடியாமல், சரிம்மா ஆனால், தங்கும் இடம் காலேஜ் எல்லாம் நல்ல இடம் தானா, எதுவும் நாம ஒருமுறை விசாரிச்சுக்கலாம் அட்ரஸ் சொல்லு என்று கேட்க,

அதெல்லாம் ஒன்னும் பிரச்னை இல்லை பாட்டி, போன வாரம் தான் நானும் அத்தானும் போய்  பார்த்துட்டு வந்தோம். மாமாவும் கூட வந்தார், தங்கும் இடம் எல்லாம் சேஃப் தான் நீங்க ஒன்னும் கவலை படாதீங்க என்று கூறினாள்.

ரோஹித்தோ, மித்து அது தான் பாட்டி கவலைப்படுறாங்க இல்ல, அட்ரெஸ் கொடுப்போம் பாட்டி ஒருமுறை விசாரிச்சுக்கட்டும், அப்போ தான் அவங்களுக்கும் திருப்தியா இருக்கும் என்று கூறினான்,  

தனது பெயரை  மித்ரா என்று சுருக்கி கூப்பிட்டாளே அவனிடம் அப்படி சண்டையிடுபவள் இன்று மித்ராவையும் சுருக்கி மித்து என்று அழைக்க அமைதியாக இருப்பதைப் பார்த்து, பிரகாஷிற்கு இனி மித்ரா தனக்கில்லை என்று தோன்றியது.

அதற்குள் அவனுக்கு போன் வர, பாட்டி எஸ்டேட்டில் இருந்து போன் வருது நான் கிளம்புறேன் நீங்க இன்னைக்கு வரவேண்டாம் எதாவது தேவை என்றால் நான் போன் பண்றேன் என்று கூறியவன் அங்கிருந்து வெளியேறினான்.

ரோஹித்திற்கு அதை பார்க்க மிகவும் திருப்தியாக இருந்தது.

தெய்வநாயகி வள்ளியைக் கூப்பிட்டு ரோஹித்திற்கு அவனது அறையை காட்ட சொல்லிவிட்டு தனது பேத்தியிடம் பேச தொடங்கினாள்.

ரோஹித் அங்கிருந்து விலகியதும், தெய்வநாயகி மித்ராவிடம் நீ எம்.பி.ஏ ஜாயின் பண்றது எல்லாம் எனக்கு சந்தோசம் தான். ஆனால் ஒரு வார்த்தை பிரகாஷ் கிட்ட முன்னாடியே கேட்டிருக்கலாம் இல்லையா? என்று கேட்க.

எப்படி இருந்தாலும் சத்யா எனக்கு எம்.பி.ஏ சீட் பார்க்கலாம்னு தான் இருந்தார் பாட்டி. என்ன காலேஜ் மட்டும் தான் நானே டிசைட் பண்ணிட்டேன் என்று கூறினாள். நான் மேல படிச்சா சத்யா எதுவும் சொல்ல மாட்டார் பாட்டி அவரே அது தான் எதிர்பார்க்கிறார் என்று கூற,

தெய்வநாயகிக்கு வேற என்ன சொல்வதென்று தெரியவில்லை.

இவள் தனது பழைய பேத்தி மித்ரா அல்ல என்று தெய்வநாயகிக்கு புரிந்தது. அதனால் மேற்கொண்டு அவளிடம் எந்த பேச்சையும் வளர்க்கவில்லை.

மேலே தனது அறைக்கு சென்ற ரோஹித் தனது தந்தைக்கு போன் செய்து தாங்கள் இங்கு வந்து சேர்ந்துவிட்டதை கூறினான். கூடவே அப்பா, நீங்க இருந்து பார்த்திருக்கணும் அந்த பிரகாஷ் மூஞ்சியை மித்ரா அவன்கிட்ட எதுவுமே சொல்லாம எல்லா முடிவையும் அவளா எடுத்துட்டு வந்ததில் அவனுக்கு அவ்வளவு வருத்தம், அப்போ அவன் முகத்தை பார்க்கவே முடியல, எனக்கு அதை பார்க்கும்போது அவ்வளவு திருப்தியா இருந்தது.

இவனை பேரை சொல்லி கூப்பிடாலே மித்ரா என்ன குதி குதிப்பா, அப்படி இருக்குறப்போ இன்னைக்கு அவனை ஒரு பொருட்டாவே மதிக்கல என்று கூற,

விஸ்வநாதனோ அதுக்கு தான் நான் அன்னைக்கே சொன்னேன் பொறுமையா இரு எல்லாம் நல்லபடியா நடக்கும்னு இப்போ  மித்ரா முழுக்க முழுக்க நம்ம கண்ட்ரோல்ல இருக்கா, அங்க பிரகாஷ் கிட்டையோ இல்ல பாட்டிகிட்டயோ அவசரப்பட்டு நீ கோவப்பட்டுறாத இப்போ இருக்கிற பொறுமையை நீ அப்படியே கடைபிடிச்சின்னா மித்ரா என்னைக்கும் நம்ம கையை விட்டு போக மாட்டா என்றார் விஸ்வநாதன்,

தெரியும் பா நீங்க இவ்வளவு தூரம் எனக்கு சொல்ல வேண்டிய அவசியம் இல்ல, மித்ராவை நான் பத்திரமா பார்த்துப்பேன், நீங்க கவலைப்படாதீங்க என்று கூறி போனை வைத்துவன், பிரகாஷ் இனி நீ உன் லைஃப் லாங் மித்ரா கிட்ட நெருங்கவே முடியாது என்று எண்ணி கருவிக்கொண்டான்.

மித்ரா இப்படி மாறிபோனதன் காரணம் என்ன? என்று அறிய தொடர்ந்து வாசியுங்கள் என் வானவில்…..

                      -நறுமுகை

5

No Responses

Write a response